Friday, May 20, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 2

 

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை கீழ் காணும் வலை தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html)


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராவணன் அடிக்கடி வந்து துன்பம் செய்கிறான். மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து சேருகிறான். 


மேலே தொடர்வோம் 


"உலக நாயகனான இராமனின் தூதுவன் நான் என்று சீதையை தொழுது நின்றான் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். 


சீதைக்கு மனதில் ஆயிரம் கேள்வி எழும் அல்லவா? இது உண்மையா, அல்லது அரக்கர்கள் செய்யும் மாயமா என்று குழப்பம் வருவது இயல்பு.  அவள் குழப்பத்தை தீர்த்து நம்பிக்கை வரும் படி பேச வேண்டும். 


இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி யோசியுங்கள். 


நீங்கள் அனுமன் இடத்தில் இருந்தால் என்ன சொல்லுவீர்கள் என்று. 


என் பெயர் அனுமன். இராமன் என்னை அனுப்பினான். இனி நீங்கள் இருக்கும் இடம் தெரிந்து விட்டதால், இதைப் போய் இராமனிடம் சொல்வேன். இராமனிடம் வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா ?" என்று நாம் கேட்போம். 


அனுமன் சொல்கிறான் 


"இராமன் ஆணையால் நான் இங்கு வந்து சேர்ந்தேன். இந்த உலகம் முழுவதையும் தேடி, அலசி ஆராய்ந்து உங்களை கண்டு பிடிக்கும் நோக்கத்தோடு சென்றவர்கள் பலர். நான் ஒருவன் மட்டும் அல்ல.  என் தவப் பயனால், உங்கள் திருவடியை தரிசிக்கும் பேறு பெற்றேன்"


என்றான். 


பாடல் 


அடைந்தனென் அடியனேன்; இராமன் ஆணையால்

குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்

மிடைந்தவர் உலப்பிலர்; தவத்தை மேவலால்

மடந்தை! நின் சேவடி வந்து நோக்கினேன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


(pl click the above link to continue reading)


அடைந்தனென்  = இங்கு வந்து சேர்ந்தேன் 


அடியனேன் = அடியவனாகிய நான் 


இராமன் ஆணையால் = இராம பிரானின் ஆணையால் 


குடைந்து = தோண்டி துருவி 


உலகு அனைத்தையும் = இந்த உலகம் முழுவதும் 


நாடும் = உங்களை நாடி கண்டு பிடிக்க வேண்டும் என்ற வேட்கையால் 


கொட்பினால் = முடிவினால் 


மிடைந்தவர் = சென்றவர்கள், புறப்பட்டவர்கள் 


உலப்பிலர் = கணக்கில் அடங்காதவர்கள் 


தவத்தை மேவலால் = தவப் பயனால் 


மடந்தை!  = பெருமாட்டியே 


நின் சேவடி வந்து நோக்கினேன். = உங்கள் திருவடிகளை வந்து காணும் பேறு பெற்றேன் 


எவ்வளவு ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகள். 


முதலில், தன்னை அடியவன் என்று கூறி பணிவு  காட்டுகிறான். அடக்கம் ஒருவனின் பெருமையை காட்டும். 


இரண்டாவது, இராமன் ஆணையால் என்று கூறிய போது இரண்டு விடயங்களை உணரச் செய்கிறான். முதலாவது, இராமன் தான் அனுப்பினான் என்ற செய்தி. இரண்டாவது, "ஆணையால்" என்றதால் அவன் அதிகாரம், வலிமை உள்ளவனாக இருக்கிறான் என்று தெரிகிறது. அது மட்டும் அல்ல, இராமன் தன் மேல் அன்பு கொண்டு, தேடி கண்டு வர ஆட்களை அனுப்பி இருக்கிறான் என்றும் அவள் உணர்ந்து கொள்கிறாள். 


மூன்றாவது, மிக முக்கியமான செய்தி. ஏதோ ஒரு ஆளை அனுப்பினான், அவன் நேரே இங்கு வந்துவிட்டான் என்றால் நம்ப முடியாது. ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று சீதை ஐயம் கொள்ளலாம். எனவே, இந்த உலகம் பூராவும் உங்களை தேடி கண்டு பிடிக்க கணக்கில் அடங்காத ஆட்களை இராமன் அனுப்பி இருக்கிறான் என்று சொல்வதின் மூலம் அந்த சந்தேகத்தை தீர்க்கிறான். 


அது மட்டும் அல்ல, எனக்காக என் கணவன் எவ்வளவு பாடு படுகிறான் என்ற எண்ணம் ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமான ஒன்று. என் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் உலகம் பூராவும் என்னை தேட ஆள் அனுப்பி இருப்பான் என்ற பெருமிதம் ஒரு பெண்ணுக்குத் தான் புரியும். 


நான்காவது, அது என்ன உலகம் பூராவும் ஆட்கள் அனுப்பினார் என்கிறாய். நீ மட்டும் எப்படி இங்கே வந்தாய் என்ற கேள்வி வரும் அல்லவா? அதற்கு விடை அளிக்கிறான். "நான் செய்த தவப் பயன்" என்று. இது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு சுகமான் ஒன்று? தன்னை காண்பது தவப் பயன் என்று சொல்கிறானே என்று சீதை ஒரு கணம் பெருமிதமும் அமைதியும் அடைந்திருப்பாள். காரணம், இதுவரை இராவணன் வந்து மிரட்டி விட்டு போனதைத்தான்  அவள் கேட்டு இருக்கிறாள். தன் மேல் இவ்வளவு மரியாதையாக, தன்னிடம் இவ்வளவு பணிவாக ஒருவன் பேசுவதை நீண்ட நாட்களுக்குப் பின் அன்று தான் கேட்டிருப்பாள்.


எந்தப் பெண்ணும், தான் போற்றப் படுவதை, மதிக்கப் படுவதை விரும்பாமல் இருக்க மாட்டாள். "இந்த சேலையில் நீ ரொம்ப அழாக இருக்க" என்று மனைவியிடம் சொல்லிப் பாருங்கள். மகிழ்ச்சியான ஒரு புன்னகை அவள் முகத்தில் மலர்வதைக் காண்பீர்கள். அவளுக்கு எத்தனை வயது என்று கணக்கு இல்லை. எந்த வயதிலும் தான் போற்றப் படுவதும், மதிக்கப் படுவதும் ஒரு பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியது. 


அவளுக்கு தன் மனதில் உள்ள சந்தேகங்கள் போக வேண்டும். 


தன்னபிக்கை பிறக்க வேண்டும். 


ஒரு மகிழ்ச்சியும் மன நிறைவும் வர வேண்டும். 


இவை அத்தனனயும் இந்தப் பாடல் அவளுக்கு தருமா இல்லையா? 






1 comment:

  1. சாதாரணமாக நாம் பேசி முடிந்த பின்னர்,அப்படி பேசி இருக்கலாமோ இப்படி பேசி இருந்தால் நன்றாக இருக்குமோ என்கிற குழப்பம் வரத்தான் செய்யும்.பேசசு ஒரு கலை.அனுமனை பார்த்துதான் கற்று கொள்ள வேண்டும். சுற்றி வளைக்காமல் நறுக்கென்று விஷயத்தை குழப்பமில்லாமல் அனுகூலமாக சொல்ல வேண்டும்.

    ReplyDelete