Sunday, May 22, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3

  

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3


(இதன் முந்தைய பதிவுகளை  கீழ் காணும் வலை தளங்களில்  காணலாம். 

பாகம் 1 - https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html)


பாகம் 2 - https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html

அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராவணன் அடிக்கடி வந்து துன்பம் செய்கிறான். மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து சேருகிறான். )


மேலே தொடர்வோம் 


அனுமன், சீதையிடம் "உங்களைத் தேட உலகமெல்லாம் இராமன் ஆட்களை அனுப்பி இருக்கிறான். நான் செய்த தவம், தங்களை காணும் பேறு பெற்றேன்" என்று கூறினான் என்பதை முந்தைய பதிவில் கண்டோம். 


இனி, 


அடுத்து சீதையின் மனதில் என்ன சந்தேகம் வரும் என்று அனுமன் யோசிக்கிறான். "இராமன் ஏன் வரவில்லை" என்று அவள் மனதில் ஒரு ஐயம் வரலாம் என்று நினைத்து, அவள் கேட்காமலேயே பதில் சொல்கிறான். 


"அரக்கர்கள் ஒரு செய்தியையும் வெளியே வரவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். எனவே, நீங்கள் இங்கே சிறை இருப்பது இராமனுக்குத் தெரிய வரவில்லை. அது தான் காரணமே அன்றி வேறு ஒன்றும் இல்லை " என்கிறான். 



பாடல் 


ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும்

ஆண்தகை அறிந்திலன் : அதற்குக் காரணம்

வேண்டுமே? அரக்கர்தம் வருக்கம் வேரொடு

மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ?



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3.html



(pl click the above link to continue reading)


ஈண்டு = இங்கு 


நீ  = நீங்கள் 


இருந்ததை = இருப்பதை 


இடரின் வைகுறும் = துன்பதில் வருந்தும் 


ஆண்தகை = ஆண்களில் சிறந்தவனான இராமன் 


அறிந்திலன் = அறியவில்லை 


அதற்குக் காரணம் = அதற்கு காரணம் 


வேண்டுமே? = தெரிய வேண்டுமா? 


அரக்கர் = அரக்கர்கள் 


தம் = தங்களுடைய 


வருக்கம் = இனம் 


வேரொடு = அடியோடு 


மாண்டில = இறந்து படவில்லை 


ஈது அலால் = அதைத் தவிர 


மாறு வேறு உண்டோ? = வேறு மாற்றுக் கருத்து இல்லை 


உலகில் நடக்கும் சம்பவங்களுக்கு நாமே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு கவலைப் படுகிறோம். 


உதாரணமாக, கணவன் வேலையில் இருந்து கொஞ்ச நாட்களாகவே தாமதமாக வீட்டுக்கு வருகிறான். 


இது ஒரு நிகழ்வு. 


மனைவி என்ன நினைக்கிறாள் ? "இவன் வேறு எங்கோ போகிறான். என் மீது அன்பு இல்லை. எனக்கு துரோகம் செய்கிறான்" என்று. இப்படி நினைத்துக் கொண்டு, அதை அவனிடம் நேரே கேட்க்கும் தைரியம் இல்லாமல் மனதுக்குள் வைத்துப் புளுங்குகிறாள். அவன் நடவடிக்கைகளை உன்னித்து பார்க்கத் தலைப்படுகிறாள். 


நேரில் அவனிடமே கேட்டு விட்டால் ஒரு நொடியில் இந்த சந்தேகம் தீர்ந்து விடும். 


அது போல, 


இராமன் வரவில்லை. அது ஒரு நிகழ்வு. சீதை என்ன நினைக்கலாம் ?


"இராமனுக்கு என் மேல் அன்பு இல்லை. அதனால்தான வரவில்லை. என்னைப் பற்றி கவலை இல்லை. அதனால் தான் இத்தனை நாள் ஆகிறது. நான் இலக்குவன் மேல் சொன்ன சுடு சொற்களை அவன் இராமனிடம் சொல்லி இருப்பான். அதனால் கோபம் கொண்டு இராமன் என்னைத் தேடி வரவில்லை. வேறு யாரோ ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பார்"


என்றெல்லாம் மனம் போக வாய்ப்பு இருக்கிறது அல்லவா?


அனுமன் அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால், அதை அப்படியே துடைத்து எறிகிறான். 


"நீ இருக்கும் இடம் பற்றிய செய்தியை அரக்கர்கள் அடியோடு மறைத்து விட்டடர்கள். அதுதான் காரணமே அன்றி வேறு எந்த ஒரு காரணமும் இல்லை" என்று உறுதியாகக் கூறுகிறான். 


எதிரில் இருப்பவர் மனம் அறிந்து பேச வேண்டும். 


எவ்வளவு நுட்பமான விடயங்களை கம்பன் சுட்டிக் காட்டுகிறான். 








1 comment:

  1. தான் நினைத்ததை எல்லாம் பேசாமல் எதிரில் இருப்பவரின் மன நிலை அறிந்து பேசுவது ஒரு கலை. எளிதில் வருவது இல்லை.அனுமனின் சிறப்பில் இது முக்கியமானது.
    பார்த்தசாரதி

    ReplyDelete