Friday, August 5, 2022

கந்தரனுபூதி - பணியாய் அருள்வாய்

 

 கந்தரனுபூதி -  பணியாய் அருள்வாய் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html




)

வருமான வரி கணக்கை எல்லோரும் தாக்கல் செய்ய வேண்டும். எப்போது முடியுமோ அப்போது செய்தால் போதும் என்று சொன்னால், எத்தனை பேர் தாக்கல் செய்வார்கள்?


தாக்கல் செய்யக் கூடாது என்று அல்ல. அல்லது ஏதோ வருமான வரியில் குழப்பம், தவறு இருக்கும் என்பதால் அல்ல. "அப்புறம் செய்வோம்", "நாளைக்கு செய்வோம்" என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். இல்லையா?


மாறாக  வருமான வரி கணக்கை 31 Jul 22 தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டால்,  ஏறக்குறைய எல்லோரும் தாக்கல் செய்து விடுவார்கள். 


அது மனித இயல்பு. 


நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமா, அதை உங்களுக்கு நெருங்கியவர்களிடம் சொல்லி விடுங்கள். 


"நான் இன்றில் இருந்து புகை பிடிப்பது இல்லை"


"மது அருந்துவது இல்லை"


"வாரத்துக்கு நாலு தடவையாவது உடற் பயிற்சி செய்வேன்"


அது எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். வெளியில் சொல்லுங்கள். உங்களை நீங்களே ஒரு பொறுப்புக்குள் கொண்டுவருவது மாதிரி. யாரிடமும் சொல்லாவிட்டால், "நாம் தானே நினைத்தோம், மாற்றிவிட்டால் போகிறது" என்று அதைச் செய்ய மாட்டோம். 


அது சரி, அதுக்கும், இந்த கந்தரனுபூதிக்கும் என்ன சம்பந்தம்? 


இறைவனை வணங்க வேண்டும் என்று எல்லாம் தெரியும். ஆனாலும் செய்வது இல்லை. ஏதாவது நடுவில் வந்து விடுகிறது. 


அருணகிரிநாதர் முருகனிடம் சொல்கிறார் 



"முருகா, நானா நினைத்து இதை எல்லாம் செய்யமாட்டேன். ஒண்ணு செய், நீ எனக்கு ஒரு கட்டளை போடு. இப்படி பாடு, இப்படி வழிபாடு செய் நு. நீ சொல்லிட்டா, முருகன் கட்டளை என்று நான் அதை ஒழுங்காகச் செய்து விடுவேன். உன் கட்டளையை மீற முடியுமா? " என்கிறார்.ர் 



பாடல் 


ஆடும் பரிவேலணி சேவ லெனப் 

பாடும் பணியே பணியா வருள்வாய் 

தேடும் கயமா முகனைச் செருவிற் 

சாடும் தனியானை சகோ தரனே .. 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


(Pl click the above link to continue reading) 


ஆடும்  = ஆடுகின்ற 


பரி = பரி என்றால் குதிரை. இங்கே வாகனம், ஆடுகின்ற வாகனம் அதாவது மயில் 


வேலணி சேவ லெனப்  = வேல் + அணி சேவல் என = வேல், சேவல் என்று 


பாடும் பணியே = பாடுகின்ற வேலையை 


பணியா வருள்வாய்  = எனக்கு விதித்த வேலையாக நீ எனக்கு அருள் செய்வாய் 


தேடும் = தேடிச் செல்லும் 


கயமா முகனைச் = கயமாமுகன் என்ற அரக்கனை 


செருவிற்  = போரில் 


சாடும் = வெல்லும் 


தனியானை சகோ தரனே = தனித்துவம் மிக்க விநாயகப் பெருமானின் சகோதரனே 


இது காப்புச் செய்யுள். 


"பாடும் பணியே பணியாய் அருள்வாய்"


அதை எனக்கு ஒரு வேலையாக நீ சொல்லு. நீ சொன்னா நான் மறுக்கமாட்டேன். எனக்கு நானே சொல்லிக் கொண்டால் நான் சில சமயம் மீறி விடுவேன். எனவே, நீயே சொல்லு என்கிறார். 


உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்றாலும், நீங்கள் எடுத்த முடிவை உங்களுக்கு நெருங்கியவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் மதிப்பில் நீங்கள் தாழ விரும்பாதவர்களாக இருக்க வேண்டும். 


"ஆமா, நீ இப்படித் தான் சொல்லுவ..பின்ன ஒண்ணும் செய்ய மாட்ட" என்று அவர்கள் உங்களை சொல்லுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்க வேண்டும். அவர்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கை உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். 


மயில், வேல், சேவல் என்று பாடுகிரீர்களோ இல்லையோ, மேலே சொன்னதைச் செய்து பாருங்கள். 


இன்று ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டு அதை உங்களுக்கு நெருங்கியவர்களிடம் சொல்லிவிட்டு செய்து பாருங்கள். உங்களால் அது முடியும். 


"இன்று ஒரு நாள் whatsapp பார்பதில்லை" என்று சொல்லி விடுங்கள். கட்டாயம் செய்வீர்கள். 


நான் இதை என் அனுபவ பூர்வமாக் உணர்ந்து இருக்கிறேன். 


கந்தரநுபூதி நம்மை மேம்படுத்த உதவும் ஒரு கருவி. 


இன்று ஏதோ ஒரு வேலையில் ஆரம்பித்து, படிப்படியாக முன்னேறி பெரிய நோக்கங்களை அடைய அது வழி வகுக்கும். 




No comments:

Post a Comment