Wednesday, May 24, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - சூழ்வு இலா மாயம் செய்து

 

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - சூழ்வு இலா மாயம் செய்து


(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


பல சந்தர்ப்பங்களில் நாம் நமக்கு வேறு வழியே இல்லை, ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம். இருப்பது ஒரே ஒரு வழிதான் என்றால் அதைச் செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். 


அது ஒரு மிகத் தவறான பாதை. 


தற்கொலை செய்து கொள்பவர்களை பற்றி சிந்திப்போம். அவர்கள் நினைக்கிறார்கள் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று நினைக்கிறார்கள். தற்கொலை முயற்சி செய்து, அதில் பிழைத்துக் கொண்டவர்களை கேட்டால் சொல்வார்கள், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று. 


தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, தொழிலில் தோல்வி என்று வந்துவிட்டால் பலர் உடைத்து போய் விடுகிறார்கள். 


கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை, விசா கிடைக்கவிலை, என்றால் ஏதோ உலகமே  இருண்டு போன மாதிரி நினைத்துக் கொள்கிறார்கள். 


கணவன் மனைவி மனத் தாங்கல், அதிகாரிகளுடன்  சண்டை, விபத்தில் அங்கம் குறைவு, நெருங்கிய உறவினரின் மரணம்   என்று வந்தால், என்ன செய்வது, அவ்வளவுதான் வாழக்கை என்று நினைத்துக் கொள்கிறார்கள். 


இன்றெல்லாம் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தி விடுகிறார்கள். வேலையை இழந்தவர்கள் மனம்  ஒடிந்து எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. 


எந்த சூழ்நிலையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் நமக்கு உண்டு. 


மனைவியை ஒருவன் கவர்ந்து சென்றுவிட்டான், காப்பாற்ற சென்ற பெரிய தந்தையை கொன்று விட்டான். அவனை என்ன செய்யலாம்?


இலக்குவன் நினைக்கிறான், வேறு வழியே இல்லை, அவனை போர் செய்து அழிக்க வேண்டியதுதான். வேறு என்ன செய்வது  என்று நினைக்கிறான். 


இராமன் அப்படி நினைக்கவில்லை. 



பாடல் 


‘வாழியாய்! நின்னை அன்று

    வரம்பு அறு துயரின் வைக,

சூழ்வு இலா மாயம் செய்து, உன்

    தேவியைப் பிரிவு சூழ்ந்தான்;

ஏழைபால் இரக்கம் நோக்கி,

    ஒரு தனி இகல் மேல் சென்ற,

ஊழி காண்கிற்கும் வாழ்நாள்

    உந்தையை உயிர் பண்டு உண்டான்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_24.html


(pl click the above link to continue reading)




‘வாழியாய்!  = என்றும் வாழ்பவனே, முடிவு இல்லாதவனே 


நின்னை = உன்னை 


அன்று = அன்றொருநாள் 


வரம்பு அறு = வரம்பு இல்லாத, எல்லை இல்லாத 


துயரின் வைக = துன்பத்தில் மூழ்க வைக்க 


சூழ்வு இலா = இதுவரை கேட்டிராத சூழ்ச்சி 


மாயம் செய்து = மாயம் செய்து  


உன் = உன்னுடைய 


தேவியைப் = மனைவியை (சீதையை)  


பிரிவு சூழ்ந்தான் = பிரிக்க நினைத்தான் 


ஏழைபால் = அந்த சீதையின் மேல் 


இரக்கம் நோக்கி = இரக்கம் கொண்டு 


ஒரு தனி = ஒரு பெரிய 


இகல் = போர், சண்டை 


மேல் சென்ற = செய்யச் சென்ற 


ஊழி காண்கிற்கும் வாழ்நாள் = நீண்ட வாழ் நாளை உடைய 


உந்தையை = உன் தந்தைக்கு நிகரான ஜடாயுவின்  


உயிர் = உயிரை 


பண்டு உண்டான் = முன்பு பறித்தான் 


என்று இலக்குவன் கூறினான்.


இவ்வளவு செய்த இராவணனை கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்பது அவன் எண்ணம். நாமும் அப்படித்தான் நினைப்போம். 


இராமன் அப்படி நினைக்கவில்லை. 


எந்த சிக்கலான சூழ்நிலையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. 


அதை அறிய அறிவும், தெளிவும், தெளிவான சிந்தனையும் வேண்டும்.  



[ ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html

கருணையின் நிலையம் அன்னான்


]


No comments:

Post a Comment