Wednesday, June 7, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - தீவினை எனும் செருக்கு

 திருக்குறள் - தீவினையச்சம் - தீவினை எனும் செருக்கு 


பயனிலசொல்லாமை பற்றி முந்தைய அதிகாரத்தில் கூறினார். 


அடுத்தது, உடலால் ஏற்படும் குற்றங்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறுகிறார். 


தீவினையச்சம் என்றால், தீய செயல்கள் செய்ய அச்சப் படுதல். 


தீவினை ஏன் செய்யாமல் இருக்கிறோம், என்றால் அதைச் செய்வதில் உள்ள அச்சம். 


மாட்டிக் கொண்டால், தண்டனை கிடைக்கும். வெளியில் தெரிந்தால் அசிங்கம், அவமானம் என்றெல்லாம் அச்சம் வருவதால் தீவினை செய்ய பயப்படுகிறோம். 


அந்த பயம் இல்லை என்றால், துணிந்து தீய செயல்களை செய்ய முடியும். 


பாடல் 

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post_7.html


(Pl click the above link to continue reading)


தீவினையார் = தீய செயல்களை செய்பவர்கள் 


அஞ்சார் = அச்சம் கொள்ள மாட்டார்கள் 


 விழுமியார் = அந்த அச்சம் இல்லாத நல்லவர்கள் 


அஞ்சுவர் = பயப்படுவார்கள்  


தீவினை = தீயவினை 


என்னும்  = என்று சொல்லப்படும் 


செருக்கு = மயக்கம். 


கெட்டவர்கள் தீய செயல்களை செய்ய அஞ்ச மாட்டார்கள். நல்லவர்கள் அஞ்சுவார்கள். 


இது மிக மேலோட்டாமான பொருள். 


இதற்கு பரிமேலழகர் செய்திருக்கும் உரை பிரமிப்பைத் தரக்கூடியது. 


நம்மால் சிந்தித்தும் பார்க்க முடியாத ஒன்று. 


ஒன்று செய்யுங்கள். ஒரு நிமிடம் மீண்டும் ஒரு முறை இந்தக் குறளைப் படியுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் சிந்தித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு சிந்தியுங்கள். பின் பரிமேலழகர் உரையைப் படியுங்கள். அவர் உரையின் ஆழம் அப்போது புரியும். 


முதலாவது, "தீவினை என்னும் செருக்கு". செருக்கு என்றால் பெருமிதம், ஒரு தன் மதிப்பு என்று நாம் பொருள் சொல்வோம். ஒரு தீவினையை செய்து விட்டு மாட்டிக் கொள்ளவில்லை என்றால் அது ஏதோ பெரிய சாமர்த்தியம் போல காண்பித்துக் கொள்கிறோம். நினைக்கிறோம்.   பரிமேலழகர் சொல்கிறார். அது பெருமிதம் அல்ல, அது ஒரு பெருமை போன்ற ஒரு மயக்கம். அதில் எல்லாம் ஒரு பெருமையும் கிடையாது. மயங்காதே என்கிறார்.


இரண்டாவது, நாம் ஒரு செயலை செய்யும் போது அச்சம் வருகிறது என்றால் என்ன அர்த்தம்? அதை முன்ன பின்ன செய்து பழக்கம் இல்லை என்று அர்த்தம். முதன் முதலாக கார் ஓட்டும் போது ஒரு பயம் வரும் அல்லவா. போகப் போக பழகி விடும். ஒருவன் பயம் இல்லாமல் தீ வினை செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்?  அவனுக்கு அதில் நல்ல பழக்கம் என்று அர்த்தம். 


பரிமேல் அழகர் சொல்கிறார், இந்தப் பிறவியில் பழகியது மட்டும் அல்ல, முன் பிறவிகளிலும் ஒருவன் தீய செயல் செய்து பழகி இருப்பான். அதனால் இந்தப் பிறவியில் அவ்வளவு எளிதாக செய்ய முடிகிறது என்கிறார்.


நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நள்ளிரவில், ஒரு பெண்ணை, ஒரு பேருந்தில் மிருகத்தை விட கேவலமாக நடத்தி இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு பெரிய தீய செயலை இந்தப் பிறவியில் செய்து பழகி இருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. 


இதில் இருந்து நாம் சில பாடங்களை படித்துக் கொள்ள முடியும். 


முதலில், சிறு சிறு தவறுகளை செய்வதை நிறுத்த வேண்டும். ஏன் என்றால் அது செய்யப் பழகிவிட்டால் பயம் போய் விடும். அதை விட கொஞ்சம் அதிகம் செய்தால் என்ன என்ற தைரியம் வரும்.  அலுவகலத்தில் இருந்து பேனா, பென்சில், பேப்பர் எடுத்து வருவது, அலுவலக xexrox இயந்திரத்தை சுய உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்வது என்று ஆரம்பித்து பெரிய அளவில் போய் முடியும். 


இரண்டாவது, இந்தப் பிறவியில் தீ செயல் செய்து பழகினால் அது அடுத்த பிறவிக்கும் வரும். இன்று அதிகாரம் இருக்கிறது, பணம் இருக்கிறது என்று தீய செயல் செய்ய ஆரம்பித்தால், அடுத்த பிறவியில் தீய செயல் செய்ய எளிதாக வரும். ஆனால், அதிகாரமும், பணமும் இல்லாமல் போகலாம். தண்டனை அங்கு கிடைக்கும். 


மூன்றாவது, ஒரு சிகரெட் தானே, ஒரு peg தானே என்று ஆரம்பித்து பின் அதில் உள்ள பயமும், கூச்சமும் விட்டுப் போய் விடும். ஒன்று பலதாக மாறி, பெரிய துன்பத்தில் தள்ளி விடும். 


தீவினை செய்ய அச்சப் பட வேண்டும் என்கிறார். 








1 comment: