Showing posts with label muththollaayiram. Show all posts
Showing posts with label muththollaayiram. Show all posts

Saturday, May 2, 2020

முத்தொள்ளாயிரம் - வெறுங்கூடு காவல்கொண் டாள்

முத்தொள்ளாயிரம் - வெறுங்கூடு காவல்கொண் டாள்


அவளுக்கு அவன் மேல் காதல். அவளின் தாய்க்கு அது பிடிக்கவில்லை. அவளை வெளியே போகக் கூடாது, போனாலும் துணைக்கு ஆளை அனுப்புகிறாள்.

ஆனால், அவள் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறாள்...."இந்த அம்மா எதை பாதுகாக்கிறாள்? என் மனம் அவன் பின்னால் எப்போதோ சென்று விட்டது. இங்கே இருப்பது வெறும் உடம்பு மட்டும் தான். இதை காவல் செய்து என்ன செய்யப் போகிறாள்" என்று.

பாடல்


கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள். 


பொருள்

கோட்டெங்கு = கொளுத்த (பெரிய) தெங்கு (தேங்காய்)

சூழ் = நிறைந்த (தென்னை மரம் சூழ்ந்த)

கூடற் = கூடல் மாநகரின்

கோமானைக் = அரசனை

கூடவென = கூட வேண்டும் என்று

வேட்டங்குச் = வேட்கையுடன் அங்கு

சென்றெவன் = சென்ற என்

நெஞ்சறியாள் = நெஞ்சத்தை அறிய மாட்டாள் (என் அன்னை)

கூட்டே = கூட்டை விட்டு

குறும்பூழ் = சிறிய பறவை

பறப்பித்த = பறந்து போன பின் , வெறும் கூட்டை பாதுகாக்கும்

வேட்டுவன்போல்  = வேடனைப் போல

அன்னை = என் அன்னை

வெறுங்கூடு =  வெறும் கூட்டை

காவல்கொண் டாள்.  = காவல் காத்துக் கொண்டு இருக்கிறாள்


காதலிப்பதும், பெற்றோர் அதை எதிர்ப்பதும், அந்தக் காலம் தொட்டு இருந்து இருக்கிறது.

இதே பாடலின் கருத்தை பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு புதுக் கவிதை ...

வேலிக்கு மேலே செல்லும் கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே  
வேலிக்கு கீழே செல்லும் என் வேர்களை என்ன செய்வாய் ?

செடி பூக்கிறது. கிளை நீண்டு பக்கத்து வீட்டுக்கு செல்கிறது. நமக்குத் தெரிவது கிளை மட்டும் தான். உயிர் தாகம் கொண்டு, நீர் தேடி வேலிக்கு கீழே செல்லும் வேர் கண்ணுக்குத் தெரிவதில்லை.  தெரிந்தால் கூட என்ன செய்ய முடியும்? வேரை வெட்டவா முடியும்?

காலங்கள் மாறிக் கொண்டு இருக்கிறது.  காதலுக்கு பெரிதாக எந்தப் பெற்றோரும்  எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை என்றே நினைக்கிறேன்.

எது எப்படியோ,  இலக்கியம் என்பது காலக் கண்ணாடி. அன்று நடந்ததை அது இன்றும்  நமக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறது.

காதலன் பின்னே மனதை போக விட்டு விட்டு, தனிமையில் மெலியும் அந்தப்  பெண்ணின் மெல்லிய  சோகம், நம் மனதையும் ஏதோ செய்யத்தான் செய்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_2.html




Thursday, August 15, 2019

முத்தொள்ளாயிரம் - காணிய சென்று கதவுஅடைத்தேன்

முத்தொள்ளாயிரம் -  காணிய சென்று கதவுஅடைத்தேன்


ஒருவரிடம் சென்று உதவி கேட்பது என்றால் உடம்பு கூசித்தான் போகிறது.

நமக்கு கூசுவது இருக்கட்டும், உலகளந்த பெருமாளே மூன்றடி மண் கேட்க வாமன உருவமாய் குறுகித்தானே போனார். நாம் எம்மாத்திரம்.

ஒரு பக்கம் பணத்தேவை. வறுமை. குடும்பம் பசியால் தவிக்கிறது. உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

இருந்தாலும், மானம் தடுக்கிறது. இப்படி ஒரு நிலைமை நமக்கு வந்து விட்டதே இரக்கம் மேலிடுகிறது.

வறுமை வாய்ப்பட்டவன் இரண்டுக்கும் நடுவில் கிடந்து உழல்வான்.

இது எப்படி இருக்கிறது என்றால், பெண் ஆசைக்கும், நாணத்துக்கும் நடுவில் கிடந்து தவிப்பதைப் போல இருக்கிறது என்கிறார் கவிஞர்.

வறுமைக்கு காதலை உதாரணம் காட்டுகிறார்.

அவள் ஒரு இளம் பெண். சேர மன்னன் மேல் காதல் கொண்டாள். சேரன் வீதி உலா வரும்போது அவனை காண நினைத்தாள். வாசல் வரை சென்றாள். நாணம் மேலிட. சீ சீ...நான் போய் எப்படி அவனைப் பார்ப்பது என்று வெட்கப்பட்டு கதவை சாத்திவிட்டு வந்து விட்டாள்.

பார்க்கவே இல்லை. அவ்வளவு நாணம், வெட்கம்.

உதவி கேட்பதா வேண்டாமா என்று தவிக்கும் ஒரு ஏழையைப் போல, சேரனை பார்ப்பதா வேண்டாமா   என்று அவள் தவிக்கிறாள்.

பாடல்

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவுஅடைத்தேன் நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேரும்என் நெஞ்சு.


பொருள்

ஆய்மணிப் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட

பைம் = பசுமையான, இங்கே புதிய

பூண் = பூண் பொதிந்த ஆபரணம்

அலங்கு = ஆடும்

தார்க் = மாலை

கோதையைக் = அணிந்த அரசனை (கோ = அரசன்)

காணிய = காண்பதற்கு

சென்று  = சென்று

கதவுஅடைத்தேன் = கதவை அடைத்தேன்

நாணிப் = நாணத்தால்

பெருஞ்செல்வர் = பெரிய  செல்வர்

இல்லத்து = வீட்டில்

நல்கூர்ந்தார் = ஏழை

போல  = போல

வரும் = வரும்

செல்லும் = செல்லும்

பேரும் = நகரும்

என் நெஞ்சு= என் மனம்

எளிய தமிழ்.  மனித மனத்தின் உணர்ச்சிகளை தெள்ளத் தெளிவாக படம் பிடிக்கும் பாடல்.

நல்லா இருக்குல ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_15.html


Wednesday, December 20, 2017

முத்தொள்ளாயிரம் - பெண்ணின் நாணம் கலந்த காதல்

முத்தொள்ளாயிரம் - பெண்ணின் நாணம் கலந்த காதல் 


பெண்கள் , தங்கள் உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிப் படுத்துவது இல்லை. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஆண்கள் மண்டையை பிய்த்துக் கொள்கிறார்கள்.

பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிக் காட்டக் கூடாது என்று இல்லை. ஏதோ ஒரு நாணம், வெட்கம் அவர்களை தடுக்கிறது. அதையும் மீறி அவர்கள் தங்கள் காதல் மற்றும் காமத்தை வெளிப் படுத்தும் போது அது மிக அழகாக இருக்கிறது.

வெட்கம் கலந்த காதல் ஒரு அழகு தான்.

ஆணைப் போல அவளும் முரட்டுத் தனமாய் இருந்தால் , நல்லாவா இருக்கும் ?

ஆணுக்கு எல்லாம் வெட்டு ஒன்றும் துண்டு இரண்டுதான். பெண்ணிடம் தயக்கம் இருக்கும், பயம் இருக்கும், கூச்சம் இருக்கும், நாணம் இருக்கும், வெட்கம் இருக்கும்....இவற்றிற்கு நடுவில் அவர்கள் தங்கள் காதலையும் சொல்லியாக வேண்டும்.

இந்த பிரச்சனை இன்று நேற்று அல்ல....தொன்று தொட்டு வருகிறது.

பாண்டிய மன்னன் விதி உலா போகிறான். அவள் ஒரு சாதாரண குடும்பப் பெண். பாண்டியன் மேல் காதல். சொல்லவா முடியும் ? அவனை கொஞ்சம் பார்கவாவது செய்யலாம் என்றால் அவனை சுமந்து வரும் அந்த பட்டத்து பெண்  யானை வேக வேகமாக நடந்து சென்று விடுகிறது.


யானையிடம் தலைவி சொல்கிறாள்..."ஏய் யானை, கொஞ்சம் மெதுவா தான் போயேன்...என்ன அவசரம் .." என்று சொல்ல வேண்டும்.  யானை கேட்குமே , "ஏன் என்னை மெதுவாக போகச் சொல்கிறாய் " என்று . பாண்டிய மன்னனை சைட் அடிக்கணும் என்று சொல்லவா முடியும் ?

அவள் அந்த பட்டத்து பெண் யானையிடம் சொல்கிறாள் " நீ இப்படி தங்கு தங்கு என்று வேகமாய் நடந்து போனால், ஊரில் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள். இப்படி ஒரு அடக்கம் இல்லாமல் , ஒரு பெண் இருக்கலாமா என்று உன்னைப் பற்றி பழி பேசுவார்கள். எனவே , மெல்லமா போ " என்கிறாள். என்னவோ , அந்த யானை மேல் ரொம்ப கரிசனம் உள்ளவள் போல.

பாடல்

எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான்
புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால்
பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை
ஐயப் படுவது உடைத்து

பொருள்

எலா = ஏய் என்று அழைப்பதைப் போன்ற ஒரு விளிச் சொல்

அ = அந்த

மடப் பிடியே = பெண் யானையே

எங்கூடல்க் கோமான் = எங்கள் கூடல் நகரத்து கோமான்

புலா அல்  = எதிரிகளின் புலால் இருக்கும்

நெடு நல் வேல்  = நீண்ட நல்ல வேலைக் கொண்ட

மாறன் = பாண்டிய மன்னன்

உலாங்கால் = உலா வரும் போது

பைய நடக்கவும் = மெல்ல நடக்கவும்

தேற்றாயால் = தெளிந்து செய்யவில்லை என்றால்

நின் பெண்மை = உன்னுடைய பெண் தன்மை

ஐயப் படுவது உடைத்து = சந்தேகத்துக்கு இடமாகும்

பைய நடந்து போ என்று சொல்கிறாள். அவ்வளவு நேரம் அவனை பார்க்கலாமே என்ற ஏக்கம்.

பேருந்து நிலையத்திலும் , டீ கடையிலும் காதலிக்காக மணிக் கணக்கில் காத்து கிடைக்கும்  காதலர்களுக்குத் தெரியும்...அந்த வேதனை. அவள் வருவாள். வந்த நேரம் இருக்காது, நடந்து போய் விடுவாள்.

அது போல, இவள் வீட்டில், கதவுக்குப் பின்னே காத்து கிடக்கிறாள். அவன் வருகிறான். வந்த நேரம் இல்லை, போய் விட்டான்.

ஏய் , யானையே, கொஞ்சம் மெல்ல போனால் என்ன ?

எவ்வளவு நளினமாக, மென்மையாக, விரசம் கலக்காமல் தன் காதலை வெளிப் படுத்துகிறாள்.

நடுவே,இழையோடும் நகைச்சுவை வேறு....

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post_20.html

Wednesday, February 8, 2017

முத்தொள்ளாயிரம் - யானையே , பைய நட

முத்தொள்ளாயிரம் - யானையே , பைய நட


பாண்டிய மன்னன் மேல் அவளுக்கு காதல். அவ்வப்போது பாண்டியன் நகர் வலம்  வருவான். அப்போது அவனை பார்த்து இரசிப்பாள் அவள்.  சாதாரணப் பெண். மன்னன் மேல் காதல் கொண்டாள் . நேரில் சென்று பேசவா முடியும் ? வெளியில் சொல்லவா முடியும்.

பாண்டியன் அமர்ந்து வரும் பெண் யானையிடம் சொல்லுகிறாள்....

"ஏய் , யானையே...உனக்கு என்ன  அவசரம்.ஏன் இவ்வளவு வேக வேகமாக போகிறாய். ஒரு பெண்ணா , இலட்சணமா மெல்ல நடந்து போகக் கூடாது ? இப்படி விசுக் விசுக்கென்று வேகமாக நடந்து போனால் , பாக்குறவங்க நீ ஒரு பெண் தானா என்று சந்தேகப்  படுவார்கள்.மெல்லமா நடந்து போ...என்ன ?"

என்று அந்த பெண் யானையிடம் மெல்ல போகச் சொல்லுகிறாள்.

அப்படி மெதுவாகப் போனால் , அவள் பாண்டியனை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் அல்லவா ...அதுக்குத்தான்.

நேரடியா சொல்ல முடியுமா ? நாணம்.


பாடல்

எலாஅ மடப்பிடியே! எங்கூடல்க் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன், உலா அங்கால்ப்
பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவ(து) உடைத்து!


பொருள்


எலாஅ மடப்பிடியே! = ஏய் , பெண் யானையே

எங்கூடல்க் = எம்முடைய கூடல் (மதுரை) மாநகரத்து

கோமான் = மன்னன்

புலாஅல் = எப்போதும் புலால் இருக்கும்

நெடுநல்வேல் = பெரிய நல்ல வேலைக் கொண்ட (அவனுடைய வேலில் எதிரிகளின் உடல் சதை ஒட்டிக் கொண்டிருக்குமாம். எப்போதும் புலால் இருக்கும் நல்ல வேல்)

மாறன் =மன்மதன்  போன்ற அழகு உடையவன்

உலா அங்கால்ப் = உலா வரும் அந்த வேளையில்

பைய = மெல்ல

நடக்கவுந் தேற்றாயால் = நடக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா

நின்பெண்மை = உன்னுடைய பெண் தன்மையை

ஐயப் படுவ(து) உடைத்து = சந்தேகப் படும்படி இருக்கிறது !


மெல்ல நடக்காமல் வேகமாக நடப்பதால் ஒரு சந்தேகம்.

ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்று சொல்வார்கள். என் மனம் உனக்குத் தெரியாததால் , நீ ஒரு ஒரு பெண் தானா என்று  சந்தேகம்.

ஒரு தலைக் காதல்தான். அதன் சோகம் தெரியாமல், நகைச் சுவையாக சொல்லும் அந்தப்  பெண் நம் கண் முன் வந்து போகிறாள்.

இலக்கியம் ஒரு கால இயந்திரம். நம்மை வேறு ஒரு கால கட்டத்துக்கு கொண்டு சென்று  விடும்.

மதுரை வீதி, மன்னன் மேல் காதல் கொண்ட சாதாரணப் பெண், அவளின் மன  ஏக்கங்கள், உலாப் போகும் மன்னன், மதுரையின் வீதிகள் எல்லாம் நம் கண்  முன்னே விரிகின்றன - இந்த நாலு  வரியில்.


Tuesday, June 7, 2016

முத்தொள்ளாயிரம் - பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்

முத்தொள்ளாயிரம் - பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்



ஊரில் விவசாயம் செய்வார்கள். நிலத்தை உழுது, அதில் உளுத்தம் செடியை பயிரிடுவார்கள். அந்த ஊரில் சில ஊர் கன்றுகள் திரியும். யாருக்கும் சொந்தம் இல்லாத கன்றுகள். கோவில் காளை மாதிரி திரிந்து கொண்டு இருக்கும். அந்த ஊர் கன்றுகள்  , இரவில் வயலில் நுழைந்து அங்கு வளர்ந்து இருக்கும் உழுதஞ் செடிகளை மேய்ந்து விடும். காலையில் வயலுக்கு வரும் உழவன், பயிர்கள் நாசமானதைக் கண்டு, கோபம் கொண்டு, இந்த கழுதை தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என்று நினைத்து, அதன் காதை அறுத்து விடுவான்.

தவறு செய்தது என்னவோ ஊர் கன்று. தண்டனை பெற்றது கழுதை.

அது போல,

தலைவி , தலைவனை கண்டு காதல் கொள்கிறாள். அவர்களுக்குள் பிரிவு நிகழ்கிறது. பிரிவினால் அவள் தோள் மெலிகிறது. காதல் கொண்டது கண்கள், மெலிவதோ தோள்கள்.

பாடல்

உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவி அரிந்தற்றால் - வழுதியைக்
கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு

பொருள்

உழுத = உழப்பட்ட

உழுத்தஞ்செய் = உளுந்து வளர்ந்த நிலத்தில்

ஊர்க்கன்று மேயக் = ஊரில் உடையவன் இல்லாத கன்று மேய

கழுதை செவி  = கழுதையின் காதை

அரிந்தற்றால் = அறுத்தது போல

வழுதியைக் = தலைவனை

கண்ட நம் கண்கள் இருப்பப் = கண்டு காதல் கொண்ட என்னுடைய கண்கள் இருக்க

பெரும் பணைத்தோள் = நீண்ட , பனை மரம் போன்ற தோள்கள்

கொண்டன மன்னோ பசப்பு = பசலை நிறம் படர்ந்தது

சரி, இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. இந்த கண்கள் காதல் கொள்வதும் , இடை மெலிவதும் , வளை நெகிழ்வதும் எப்போதும் கவிஞர்கள் சொல்லுவதுதானே. இதில் என்ன இருக்கிறது ?

பேரின்பம், சொர்க்கம், கைலாயம், வைகுண்டம், இறைவன் திருவடி நீழல் என்று மனிதன் தேடிக் கொண்டு இருக்கிறான். எங்கெங்கோ  தேடுகிறான்.தவம் இருக்கிறான்.

ஒரு வேளை அந்த பேரின்பம் கிடைத்துவிட்டால், இது தான் அவன் தேடிய  பேரின்பம் என்று அவனுக்கு எப்படித் தெரியும் ? இதற்கு முன்னால் அனுபவித்து இருந்தால், தெரியும். ஆனால், அப்படி ஒரு இன்பத்தை அனுபவித்ததே கிடையாது. பேரின்பம் கிடைத்தால் கூட அது பேரின்பம் என்று அறிய முடியாது.

அறிவு என்பது தெரிந்ததில் இருந்து தெரியாதை அறிந்து கொள்வது.

புலி எப்படி இருக்கும் என்றால், பூனை மாதிரி இருக்கும் என்று சொல்வதைப் போல.

சிற்றின்பத்தை அறிந்தால் தான், பேரின்பம் என்பது என்ன என்று அறிய முடியும்.

அது தான் வாசல்.

அதன் வழியாகத்தான் போக வேண்டும் .

இதை அறிந்துதான் நம் முன்னவர்கள் சிற்றின்பத்தை தள்ளி வைக்காமல் அதை இலக்கியத்தோடு, பக்தியோடு இணைத்தார்கள்.

நாயக நாயகி பாவம் என்பது சிற்றின்பத்தை தொட்டுக் காட்டி, அதில் இருந்து பேரின்பம் எப்படி இருக்கும் என்று அறிய வைக்கும் ஒரு உத்தி.

கோவில் சிற்பங்களிலும், கதைகளிலும், காவியங்களிலும், பக்தியிலும் சிற்றின்பத்தை வைத்தார்கள்.

அறம்  - பொருள்  - இன்பம் - வீடு என்று வைத்தார்கள்.

காமமும் காதலும் தவறு என்றால், அறம் பொருள் வீடு என்று வைத்திருக்கலாம் தானே ?

பின்னாளில், ஏதோ சிற்றின்பம் என்றால் வெறுக்கத்தக்கது என்ற ஒரு மனோபாவம் வந்து விட்டது.

சிற்றின்பம் என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல.

காதல், கனிவு, அன்பு, பாசம், கருணை, தன்னை மறப்பது, தன்னில் தான் கரைவது, நெகிழ்வது என்று அத்தனையும்  உண்டு.

இந்தப் படியில் கால் வைக்காமல் அடுத்த படிக்கு போக முடியாது.

சிற்றின்பத்தை அனுபவியுங்கள். ஒரு நாள் அது உங்களை பேரின்பத்திற்கு இட்டுச் செல்லும்.

(மேலும் படிக்க

http://interestingtamilpoems.blogspot.in/2016/06/blog-post.html

)

Monday, November 10, 2014

முத்தொள்ளாயிரம் - ஒற்றைக் காலில் தவம்

முத்தொள்ளாயிரம் - ஒற்றைக் காலில் தவம் 


அது ஒரு பெரிய குளம்.

அது ஒரு கார் காலம்.

அந்த குளத்தின் நடுவில் ஒரு குவளை மலர் மலர்ந்து நிற்கிறது. கழுத்தளவு நீரில் நின்று கொண்டு என்ன இது தவம் ?

யாருக்காக இந்த தவம் ?

ஓ ....புரிந்து விட்டது....கூர்மையான வேலைக் கொண்ட, வண்டுகள் ரீங்காரம் இடும், குதிரையின் மேல் செல்லும் பாண்டிய மன்னனின் மார்பில் மாலையாக மாற இந்த குவளை மலர் ஒற்றைக் காலில் இந்த குளிர்ந்த நீரில் தவம் இருக்கிறது.

பாடல்

கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்
வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்
கொண்டு இருக்கப் பெற்ற குணம்

பொருள்

கார் = கார் காலத்தில்

நறு = நறு மணம் பொருந்திய

நீலம் = குவளை மலர்

கடிக் = பெரிய

கயத்து = குளத்தில்

வைகலும் = தினமும்

நீர்நிலை நின்ற = நீர் நிலையில் நின்று

தவம்கொலோ = எதற்க்காக தவம் செய்கிறாய்

கூர் நுனை வேல் = கூர்மையான முனை கொண்ட வேலைக் கொண்ட

வண்டு இருக்கும் = வண்டு இருக்கும்

நக்க தார் = மலர்ந்த மாலையைக் கொண்ட (நக்க = மலர்ந்த; தார் = மாலை )

வாமான் = தாவி செல்லும் குதிரை

வழுதியால் = பாண்டிய மன்னனால்

கொண்டு இருக்கப் பெற்ற குணம் = அவனோடு இருக்க வேண்டி


இன்னும் கொஞ்சம் விரித்துச் சொல்வதனால், அந்த மாதிரி தவம் இருந்ததால், அவன் மார்பில் இருக்கப் பெற்றது.



Sunday, April 28, 2013

முத்தொள்ளாயிரம் - பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம்


முத்தொள்ளாயிரம் - பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம் 


அவனைப் பார்த்தது என் கண்கள்.

அவனோடு கலந்தது என் நெஞ்சம்.

தவறு செய்தது எல்லாம் இந்த கண்ணும் தோளும்...ஆனால் தண்டனை பெறுவது என்னவோ மெலியும் என் தோள்கள்.அது என்ன பாவம் செய்தது ?

தவறு செய்தவர்களை விட்டு விட்டு தவறு செய்யாதவர்களை தண்டிப்பது இந்த உறையூர் வளவனுக்கு முறை போலும்

பாடல்

கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம்
தண்டப் படுவ தடமென்தோள்-கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு.


பொருள்


Friday, November 9, 2012

முத்தொள்ளாயிரம் - மாலை வராமல் இருக்க


முத்தொள்ளாயிரம் - மாலை வராமல் இருக்க


யார் சொல்லி கேட்கிறது இந்த மாலை வேளை. வந்து பாடாய் படுத்துகிறது. வந்தால் சட்டென்று போகவும் மாட்டேன் என்கிறது. மாலை மட்டும் வந்தால் பரவாயில்லை, அதோடு கூட இந்த ஆயர்கள் வாசிக்கும் புல்லாங்குழல் ஒலியும் சேர்ந்து அல்லவா வருகிறது. 

இளவளவன் என்ற இந்த நாட்டு இராஜா இருந்து என்ன பிரயோஜனம். இந்த மாலை பொழுது வரக்கூடாது என்று ஒரு கட்டளை போட்டா என்னவாம். அப்படி ஒரு கட்டளை போட்டு , மாலை பொழுது வராமால் தடுத்து என் உயிரை காப்பாற்ற முடியலை, இவன் தான் இந்த உலகை எல்லாம் காப்பாற்றப் போறானாக்கும்...ஹும்.....

பாடல் 

Wednesday, September 5, 2012

முத்தொள்ளாயிரம் - அழகு திருடன்


 முத்தொள்ளாயிரம் - அழகு திருடன்


அவன் அந்த நாட்டின் தலைவன். அரசன். 

அந்த ஊரில் பெண்கள் எல்லாம் மிக அழகாக இருக்கிறார்கள். (ஜொள்ளு).

கொப்பும் குலையும், மப்பும் மந்தாரமுமாய் இருக்கிறார்கள். 

அவர்கள் ஒரு முறை அவனைப் பார்த்தால் போதும், காதல் வயப் பட்டு, சோறு தண்ணி இல்லாமல், தூக்கம் இல்லாமல் மெலிந்து துவண்டு பொலிவிழந்து போகிறார்கள். 

ஏதோ அவன் வந்து அவர்கள் அழகை கவர்ந்து கொண்டு போன மாதிரி இருக்கிறது. அவனைப் பார்த்த பின் அவர்கள் அழகு காணாமல் போய் விடுகிறது. அப்ப அவன் தான திருடிக் கொண்டு போய் இருக்க வேண்டும் ? 

அப்படி அழகை திருடி கொண்டு போகும் மன்னன் எப்படி ஒரு நல்ல செங்கோல் செலுத்தும் அரசனாக இருக்க முடியும் ?

Thursday, August 9, 2012

முத்தொள்ளாயிரம் - கூடு காத்த அன்னை


முத்தொள்ளாயிரம் - கூடு காத்த அன்னை


ஒரு வேடன் காடை என்ற பறவையை பிடிக்க அதனை துரத்தி சென்றான்.

அந்தப் பறவை அங்கு எங்கு அவனை அலைக்கழித்து கடைசியில் ஒரு மரப் பொந்தில் நுழைந்து கொண்டது.

வேடன் விடவில்லை. எப்படியும் வெளியே தானே வரணும்..வரும் போது பிடித்துக் கொள்ளாலாம் என்று இருந்தான்.

ஆனால் அந்தப் பறவையோ வேறு வழியில் சென்று விட்டது. அது போல....

அவளுக்கு அவன் மேல் ரொம்ப காதல். அவனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறாள்.

ஆனால் அவளுடைய தாயோ அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைக்கிறாள். 

அவளுக்குத் தெரியாது, அவள் பூட்டி வைத்தது வெறும் உடம்பை மட்டும் தான், மனம் எப்பவோ அவனிடம் சென்று விட்டது.

Friday, July 20, 2012

முத்தொள்ளாயிரம் - விழியில் விழுந்து இதயம் நுழைந்து


முத்தொள்ளாயிரம் - விழியில் விழுந்து இதயம் நுழைந்து


தோழி: "சரி, என்ன வெட்கம்...கொஞ்சம் நிமிந்து பாரு என்ன...அடடா...ரொம்ப தான் வெட்கப்படுறா"
அவள்: ம்ம்ம்ம் 
தோழி: சரி கண்ணை திற ... வெட்கப் படுற உன் கண்ண நான் பாக்கட்டும்
அவள்: ம்ம்ம்ம்
தோழி: அட இது என்ன புது ஸ்டைல்...முகத்த கையால மறைச்சிகிட்டு...சினிமா கதாநயாகி மாதிரி...
அவள்: கைய எடுக்க மாட்டேன்...எடுத்தா கண் வழியா என் நெஞ்சுக்குள் போன அவன் அதே மாதிரி வெளிய போயிருவான்...
தோழி: சரி தான் ... ரொம்ப தான் முத்தி போச்சு காதல் பைத்தியம்...இன்னைக்கே உங்க அம்மா கிட்ட சொல்லிற வேண்டியது தான்......

பாடல்: 

Monday, June 11, 2012

முத்தொள்ளாயிரம் - வரியா ? திருட்டா?


முத்தொள்ளாயிரம் - வரியா ? திருட்டா?

முத்தொள்ளாயிரத்தில் உள்ள பாடல்கள் எல்லாம் மிக மிக இனிமையான பாடல்கள்.

காதலை மிக அழகாக சொல்லும் பாடல்கள்.

இங்கே ஒரு பெண் தன் தோழியிடம் கூறுகிறாள்....

அரசன் என்பவன் தன் குடி மக்களிடம் ஆறில் ஒரு பங்கைத்தானே வரியாக வாங்க வேண்டும்...

ஆனால் இந்த மன்னனோ என் மனமும், என் நாணத்தையும், என் பெண் நலன்கள் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டானே..இது எந்த விதத்தில் தர்மம் என்று கேட்கிறாள்.

Sunday, June 3, 2012

முத்தொள்ளாயிரம் - காதலும் நாணமும்


முத்தொள்ளாயிரம் - காதலும் நாணமும்


அவன் இப்ப இந்த வழியாகத்தான் போவான்.

வாசல்ல போய் நின்னா பாக்கலாம்.

ஆனா, எவ்வளவு நேரம் நிக்கிறது. யாராவது பார்த்தா என்னை என்ன நினைப்பாங்க?

இப்ப பாக்காட்டி, அப்புறம் சாயந்தரம் அவன் திரும்பி வரும் வரை பார்க்க முடியாது.

அவனை பாக்கனும்னு ஆசையா இருக்கு, ஆனா இன்னொரு பக்கம் தயக்கம்மாவும், வெட்கமாவும் இருக்கு...

இப்ப நான் போகட்டா ? இல்ல போகாம இருக்கட்டா?

இப்படி, காதலுக்கும், நாணத்திற்கும் நடக்கும் போராட்டத்தை படம் பிடிக்கிறது, முத்தொள்ளாயிரம்.

ஒரு ஏழை. மானஸ்த்தன். வறுமை அவனை வாட்டுகிறது. யாரிடமாவது உதவி கேட்டே ஆகவேண்டும். ஆனால் கேட்க தயக்கம். கேட்காமலும் முடியாது.

அப்படி அந்த ஏழை படும் மனநிலையை, காதலுக்கும், நாணத்திற்கும் உள்ள போராட்டத்தோடு ஒப்பிடுகிறார் முத்தொளாயிரக் கவிஞர்.

Saturday, June 2, 2012

முத்தொள்ளாயிரம் - ஊர் அறிந்த கனவு


முத்தொள்ளாயிரம் - ஊர் அறிந்த கனவு


அவளுக்கு அவன் மேல் அப்படி ஒரு காதல்.

இரவும் பகலும் அவன் நினைவாகவே இருக்கிறாள்.

அவள் கனவில் அவன் வருகிறான். 

இருவரும் கனவில் சந்தோஷமாக பேசி, சிரித்து மகிழ்ந்து இருக்கின்றனர்.

மறு நாள் காலை. அவளுடைய தோழிகள் அவளைப் பார்க்க வருகின்றனர்.

"என்னடி, ரொம்ப சந்தோஷமா இருக்காப்ல இருக்கு? என்ன விஷயம்?  வாயெல்லாம் பல்லா இருக்கு....நேத்து உன் ஆளு கனவுல வந்தானா ? ஏதாவது சில்மிஷம் பண்ணினானா? என்ன விஷயம் சொல்லு. " என்று அவளை கிண்டல் பண்ணினர்.

"என் கனவுல அவன் வந்ததது இவளுகளுக்கு எப்படி தெரியும்" என்று அவள் யோசிக்கிறாள்...