Wednesday, April 4, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருப் பேரூர்

இறைவனை பக்தியால் கட்டிப் போட முடியும் என்று பலப் பல பாடல்களில் நம்
பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.


--------------------------------------------------------------------------------------------
பேரே யுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே
-------------------------------------------------------------------------------------------------


சீர் பிரித்தபின்


-------------------------------------------------------------------------------------------------
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரென் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும் உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

-----------------------------------------------------------------------------------------------------


பொருள்:


பேரே = திருப் பேரூர் என்ற ஊரில்

உறைகின்ற பிரான் = இருக்கின்ற பிரான்

இன்று வந்து = இன்று வந்து

பேரென் என்று = பெயர்ந்து போக மாட்டேன் என்று (என் கிட்ட ஒரு சல்லி பேராது
என்று சொல்லக் கேள்வி பட்டு இருக்கீர்களா)

நெஞ்சு நிறையப் புகுந்தான் = என் மனத்தில் நிறைய புகுந்தான்

கார் ஏழ் = ஏழு மேகங்கள்

கடல் ஏழ் = ஏழு கடலும்

மலை ஏழ் = ஏழு மலைகளையும்

உலகும் = இந்த உலகை எல்லாம்

உண்டும் = உண்டும் , சாப்பிட்ட பின்னும்

ஆரா வயிற்றானை = பசி ஆறாத வயிற்றானை

அடங்கப் பிடித்தேனே = வேறு எங்கும் போகாதபடி அடங்கும் படி பிடித்தேனே

Tuesday, April 3, 2012

கந்தர் அநுபூதி - மணம் கமழும் திருவடி

அம்மா மடியில தல வச்சு படுத்து இருக்கீங்களா ?
சின்ன பிள்ளையா இருக்கும் போது மடில போட்டு தூங்க பண்ணி இருப்பாங்க.

அது இல்ல நான் சொல்றது.

விவரம் தெரிந்த பின், அம்மா மடில தல வச்சு படுத்தது உண்டா ?

அம்மா மடிக்கே ஒரு வாசம் உண்டு.

அனுபவித்தவர்களுக்கு தெரியும்..

அது மாதிரி, முருகன் காலடி பட்ட இடம் எல்லாம் மணம் கமழ்கிறது.

எங்கெல்லாம் அவன் திருவடி பட்டது ?

சொர்கத்தில அவன் காலடி பட்டது.

அப்புறம் ?

தேவர்களின் தலையில்

அப்புறம் ?

வேதங்களின் மேல்

அப்புறம் ?

வள்ளியை மணக்க வேண்டி காடும் மேடும் சுத்திக் கொண்டு திரிந்ததனால், அந்த காட்டிலும், மேட்டிலும் அவன் காலடி பட்டது .

அப்படி பட்ட திருவடி தனக்கு கிடைத்தது என்கிறார் அருணகிரி.

"சரிங்க, கிடைச்சது அப்படிங்கறீங்க, சரி, அதுனால என்ன பிரயோஜனம்"

அப்படின்னு கேட்டா அவரால சொல்ல முடியல. அனுபவிச்சால் தான் தெரியும்.

அந்த சுகத்தை சொல்ல முடியுமா என்று நம்மை திருப்பி கேட்கிறார் ?

----------------------------------------------------------------------
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே

------------------------------------------------------------------------

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே
---------------------------------------------------------------------------

சாடும் = அழிக்கும். விரைந்து சென்று அழிக்கும்.

தனி வேல் = என் வழி தனி வழி மாதிரி , அது ஒரு தனி வேல். எல்லார் கிட்டயும்
இருக்காது.

முருகன் சரணம் = அவனுடைய சரணார விந்தங்கள், திருவடி

சூடும் படி தந்தது = தலையில் படும் படி தந்தது

சொல்லுமதோ ? = சொல்ல முடியுமா ?

வீடும் = வீடாகிய மோக்ஷத்தையும்

சுரர் மாமுடி = சுரர்ணா தேவர்கள். அ-சுரர் அப்படினா அரக்கர்கள். தேவர்களின்
முடி மேலும்

வேதமும் = வேதத்தின் மேலும்

வெங் காடும் = வெம்மையான காடும்

புனமும் = புனை தினம் வளரும் அந்த இடங்களும் (எல்லாம் வள்ளியை செட் up பண்ணத் தான் )

கமழும் = மனம் வீசும்

கழலே = திருவடிகளே

திரு முருகாற்றுப் படை - கடவுளின் கடமை

நமக்கு சில கடமைகள் இருப்பதைப் போல, கடவுளுக்கும் ஏதாவது கடமைகள் இருக்குமா ?

இருக்கும் என்கிறார் நக்கீரர் திரு முருகாற்றுப் படையில்.

அது என்ன கடவுளின் கடமை ?

நம்மை காப்பது தான். வேறு என்ன?

நம்ம குழந்தைகள் என்ன தப்பு செய்தாலும், அவர்களை காப்பது நம் கடமை அல்லவா ?

அது போல நாம் என்ன செய்தாலும், நம்மை காப்பது இறைவனின் கடமை.

-------------------------------------------------------------------------------
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்கு பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி
--------------------------------------------------------------------------------

கொஞ்சம் பதம் பிரிக்கலாம்

--------------------------------------------------------------------------------------

காக்க கடவிய நீ காவாது இருந்த கால்
யாருக்கு பரமாம் ? அறு முகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிவேலா நல்ல
இடம் காண் இரங்காய் இனி

------------------------------------------------------------------------

பொருள்:

காக்க கடவிய நீ = என்னை காக்க வேண்டிய கடமை உள்ள நீ

காவாது இருந்த கால் = காப்பாற்றாமல் இருந்து

விட்டால். உன் கடமையில் இருந்து தவறி விட்டால்

யாருக்கு பரமாம் ? = அது யாருக்கு பாரம் ? யார் குற்றம் ?

அறு முகவா = ஆறு முகம் கொண்டவனே

பூக்கும் கடம்பா = கடம்ப பூ பூக்கும் வனத்தில் உள்ளவனே

முருகா = முருகா

கதிர்வேலா = ஒளி வீசும் வேலை உடையவனே

நல்ல இடம் காண் = இப்ப இது நல்ல இடம் தான்

இரங்காய் இனி = கொஞ்சம் இறங்கி வாப்பா

கம்ப ராமாயணம் - லக்ஷ்மண சேவை

லக்ஷ்மணன், எப்படி இராமனுக்கும் சீதைக்கும் பணிவிடை செய்தான் என்பதை கம்பர் சொல்வதை படிக்கும் போது நம் கண்கள் பணிக்கும்.
-----------------------------------------------------------------------------------------
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும், வெய்து உயிர்ப்போடும், வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!- கண்கள் நீர் சொரிய, கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்; இமைப்பிலன் நயனம்’ என்றான்
----------------------------------------------------------------------------------------

பொருள்:

அல்லை = இருளை

ஆண்டு அமைந்த மேனி அழகனும் = விஞ்சும் கருமை நிறம் கொண்ட அழகனான இராமனும்

அவளும் = அவளும். இராமனுக்கு மட்டும் பெரிய அடை மொழி. சீதைக்கு ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான். அதுதான் மரியாதை. சொல்பவன் குகன். கேட்டவன் பரதன். இராமனின் மனைவியை மூன்றாம் மனிதனான குகன், பரதனிடம் சொல்லும் போது மிக சுருக்கமாக "அவள்" என்று முடித்துக் கொள்கிறான்.

துஞ்ச = தூங்க

வில்லை ஊன்றிய கையோடும் = வில்லை ஊன்றிய கையோடு காவல் காத்தான் என்பது ஒரு பொருள். நாட்கணக்கில், மாத கணக்கில் நின்றதால், சோர்ந்து விழாமல் இருக்கு "வில்லை ஊன்றி" நின்றான் என்பது மற்றொரு பொருள்.

வெய்து உயிர்ப்போடும் = சூடான மூச்சோடும்

வீரன் = வீரனான லக்ஷ்மணன்

கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்! = மலையை விட உயர்ந்த தோள்களை கொண்டவன்

கண்கள் நீர் சொரிய, = இரு கண்களிலும் நீர் வழிய (ஏன் நீர் வழிந்தது என்று அடுத்த வரியில் சொல்கிறான்)

கங்குல் = இரவின்

எல்லை காண்பு அளவும் நின்றான் = எல்லை காணும் அளவும் நின்றான். இருட்டில் ஒண்ணும் தெரியாது. இருட்டில் ஏதாவது ஆபத்து வருகிறதா என்று பார்ப்பது அந்த இருட்டின் எல்லை எங்கே இருக்கிறது என்று தேடுவதை போல இருக்கிறதாம்.

என்ன ஒரு கற்பனை.

இமைப்பிலன் நயனம்’ என்றான் = இமைக்காத விழிகளை கொண்டவன்.

கண் இமைக்காமல் இருந்தால் நீர் வரும் தானே ?

அது மட்டும் அல்ல, இந்த "இமைப்பில் நாயனத்தை" பின்னால் ஒரு இடத்தில் கம்பன் மறக்காமல் கொண்டு வருகிறான். அது எங்க தெரியுமா ?...

திருக்குறள் - சைட் அடிப்பது

ஆம்பிளை பசங்க sight அடிகிறத பத்தி கேள்வி பட்டிருக்கோம் பொம்பள பிள்ளைங்க sight அடிப்பாங்களா?

அதுவும் வள்ளுவர் காலத்தில ? அடிச்சிருக்காங்களே...

நான் சொன்னா நம்ப மாட்டீங்க ...

இந்த குறளை படியுங்க அப்புறம் சொல்லுங்க
---------------------------------------------------------------------------------
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
-----------------------------------------------------------------------------------
கண்களவு கொள்ளும் = கண்ணால் களவு செய்வது. எதை களவு செய்வது ? ஆண்களின் மனதை தான்.

சிறுநோக்கம் = சின்ன பார்வை.

காமத்தில் = காதலில் செம்பாகம் அன்று = செம்மையான பாகம், பெரிய பாகம் அல்ல

பெரிது = அதைவிட பெரியது

எல்லாமே பார்வை தான் அப்படின்னு சொல்லறாரு.

sight அடிகிறதுக்கு ஒரு தமிழ் வார்த்தை வேற தர்றாரு .... "சிறுநோக்கம்"

திரு வாசகம் - திருச் சாழல்

கோவிலுக்குப் போகிறோம்.
கூட்ட நெரிசல் ஒரு புறம்.
பணம் பிடுங்கும் கூட்டம் மறுபுறம்.
வீடு நினைப்பு, வேலை, பிள்ளைகள், என்று ஆயிரம் கவலை.
இதில் பக்தி எங்கே வரும்.

ஏதோ பக்தி உள்ளவர்கள் போல நாமும் போகிறோம்.

இது நமக்கு மட்டும் அல்ல, மாணிக்க வாசகருக்கும் தான்..

-------------------------------------------------------------------------------
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்
ஆடகசீர் மணிக் குன்றே இடையறா அன்பு உனக்கு என்
ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள் எம் உடையானே
--------------------------------------------------------------------------------


நானும் உன் அடியார் போல நடித்து அவங்களுக்கு நடுவே நானும் சொர்க்கம் (வீடு )
புக எண்ணி ரொம்ப வேகமா வருகிறேன். உன் மேல் இடைவிடாத
அன்பு என் உள் இருக்க அருள் புரியேன் என்று வேண்டு கிறார்.

மணி வாசகருக்கே இந்தப் பாடு என்றால் நாம் எல்லாம் எம் மாத்திரம் ?

திருச் சாழல் என்ற திருவாசகத்தில் உள்ளது மேல் சொன்ன பாடல்.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - குலசேகரப் படி

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
------------------------------------------------------------------------------------------------
செடியாய வல்வினைகள் = செடி என்றால் பாவம் என்று ஒரு பொருள் உண்டு. செடி போன்ற, சிக்கல் நிறைந்த, ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கும் படியான வல் வினைகள்.

தீர்க்கும் திருமாலே = அந்த கொடிய வினைகளை தீர்க்கும் திருமாலே

நெடியானே! = உயர்ந்தவனே. உலகளந்த பெருமாள் அல்லவா அவன்.

வேங்கடவா! = திரு வேங்கட மலையின் மேல் உறைபவனே

நின்கோயி லின்வாசல் = உன்னுடைய கோயில் வாசலில்

அடியாரும் = அடியவர்களும்

வானவரு மரம்பையரும் = வானவரும், அரம்பையரும்

கிடந்தியங்கும் = கிடந்து இயங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே= படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே

இன்றும் கூட பெருமாள் கோயில் படிகளை "குலசேகரப் படி " என்று கூறும் வழக்கம் உள்ளது.