Tuesday, July 31, 2012

கம்ப இராமாயணம் - இராமன் இன்னொரு பெண்ணை தீண்டினானா ?


கம்ப இராமாயணம் - இராமன்  இன்னொரு பெண்ணை தீண்டினானா  ?


இராமன் ஏக பத்தினி விரதம் பூண்டவன். 

'இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்" என்ற விரதம் பூண்டவன். 

அவன் இன்னொரு பெண்ணை தீண்டி இருப்பானா ? அதுவும் காலால் ?

அகலிகை சாப விமோசனம் பெற்றது இராமன் திருவடி தீண்டியதால் என்று வால்மீகி குறிப்பிடுகிறார். 

ஆனால், கம்பன் அப்படி சொல்லவில்லை. இராமனின் கால் இன்னொரு பெண்ணின் மேல் படுவதை அவனால் ஒப்பு கொள்ள முடியவில்லை. 

அவன் காலில் இருந்த ஒரு துகள் (தூசு) பட்டதால் அகலிகை சாப விமோசனம் பெற்றாள் என்று கூறுகிறான். 

கௌதமன் சாப விமோசனம் பெற அகலிகைக்கு சொன்ன பாடல் ...

Monday, July 30, 2012

கம்ப இராமாயணம் - பிறவிப் பெருங்கடலை தாண்ட


கம்ப இராமாயணம் - பிறவிப் பெருங்கடலை தாண்ட


சீதை அனுமனை கேட்கிறாள் "நீ எப்படி இந்த கடலை தாண்டினாய்"

அனுமன்: "அம்மா, உன் துணைவனின் (இராமனின்) திருவடிகளை ஒரு மனத்தோடு சிந்திப்பவர்கள், முடிவே இல்லாத மாயா என்ற கடலையே கடந்து விடுவார்கள். அது போல, அந்த திருவடியை மனத்தில் நினைத்துக் கொண்டு இந்த கடலை தாண்டினேன்

பிறவிப் பெருங்கடலையே தாண்டும் போது, இந்த கருங் கடல் எம்மாத்திரம் 

Sunday, July 29, 2012

கம்ப இராமாயணம் - கண்ணீர் கடல்


கம்ப இராமாயணம் - கண்ணீர் கடல் 


அசோக வனத்தில் சீதை சோகமே உருவாக இருக்கிறாள்.

அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருக்கிறது. 

அந்த கண்ணீர் கடல் போல் தேங்கி கிடக்கிறது.

அந்த கண்ணீர் கடலில், நீர் சுழல் வருகிறது. அந்த சுழலில் கிடந்து சுழன்று கரை காண முடியாமல் தவிக்கிறாள்.

அப்போது, அவளை அனுமன் சந்திக்கிறான். 

அனுமனுக்கும் சீதைக்கும் நடக்கும் உரையாடல் மிக மிக அருமையான இடம் கம்ப இராமாயணத்தில். 

அனுமனும் சீதையும் அதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கிடையாது.

இருவர் மனத்திலும் சந்தேகம் இழையோடுகிறது...அது சீதை தானா என்று அனுமன் மனத்திலும், இவன் இராமனின் தூதுவந்தானா என்று சீதையின் மனத்திலும் சந்தேகம் இல்லாமல் இல்லை.

அதே சமயம், அது சீதையாக இருக்க வேண்டும் என்று அனுமனும், இவன் இராம தூதுவனாக இருக்க வேண்டும் என்று சீதையின் மனத்திலும் ஒரு ஆதங்கமும் இருக்கிறது.

இப்படி சந்தேகத்திருக்கும் நம்பிக்கைக்கும் இடையே அவர்கள் உரையாடல் தொடர்கிறது.
படித்து இரசிக்க வேண்டிய இடம்.....

சீதை கேட்கிறாள், "இந்த கடல் ரொம்ப பெரியதாயிற்றே, நீ எப்படி அதை தாண்டி வந்தாய்" என்று.....

Friday, July 27, 2012

நந்திக் கலம்பகம் - தழுவாத போது....


நந்திக் கலம்பகம் - தழுவாத போது....


அவளை விட்டு நீங்கினால் சுடுகிறது, அவ கிட்ட போனால் குளிர்கிறது..இந்த வினோத தீயை இவள் எங்கு பெற்றாள் என்று வியக்கிறார் வள்ளுவர்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள்?

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை விட்டு தனியே கானகம் போகிறேன் என்று சொல்கிறாயே, அந்த ஊழிக் கால தீ கூட உன் பிரிவை விட அதிகமாக சுடாது, "நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?" என்று பிரிவினால் வரும் சூட்டினை சொல்கிறார் கம்பர்.

பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."

நந்திக் கலம்பகத்தில் காதலனை பிரிந்த காதலி, பிரிவின் வெம்மையால் தவிக்கிறாள். அவள் தோழிகள் அவள் மேல் கொஞ்சம் குளிர்ந்த சந்தனத்தை எடுத்து பூசுகிறார்கள். அது என்னவோ அவளுக்கு தீயை அள்ளி பூசிய மாதிரி இருக்கிறதாம்.....

அந்த இனிய பாடல், உங்களுக்காக...

Thursday, July 26, 2012

நந்தி கலம்பகம் - ஓடும் மேகங்களே


நந்தி கலம்பகம் - ஓடும் மேகங்களே


அவன் போர் முடிந்து அவன் காதலியை தேடி வருகிறான்.

அவன் உயிர் எல்லாம், மனம் எல்லாம் அவளிடம் ஏற்கனவே சென்று அடைந்து விட்டது.

அவன் தேர் எவ்வளவு வேகமாக சென்றாலும், அவனுக்கு என்னவோ அது ஓடாமல் ஒரே இடத்தில் நிற்பது மாதிரியே தெரிகிறது.

அவ்வளவு அவசரம்.

மேலே பார்க்கிறான். மேகங்கள் வேகமாக செல்வது போல் தெரிகிறது.

நமக்கு முன்னால் இந்த மேகங்கள் சென்று விடும் போல் இருக்கிறது, இந்த மேகங்களிடம் நாம் வரும் சேதியையை சொல்லி அனுப்பலாம் என்று அவைகளிடம் சொல்கிறான் 

"ஏய், மேகங்களே, ஓடாத தேரில் , ஒரு உயிர் இல்லாத வெறும் உடம்பு மட்டும் வருகிறது என்று என் காதலியிடம் சொல்லுங்கள்" .

அப்புறம் யோசிக்கிறான்.

இந்த மேகங்கள் எங்கே அவளை கண்டு பிடிக்கப் போகின்றன. அதுகளுக்கு ஆயிரம் வேலை, நம்ம வேலயத்தானா செய்யப் போகின்றன என்று ஒரு சந்தேகம் ..."அவளைப் பார்த்தால் சொல்லுங்கள்" என்று முடிக்கிறான். 

அந்த இனிமையான பாடல்....

Wednesday, July 25, 2012

கம்ப இராமயாணம் - ஆறாய் ஓடிய பூ அழுத கண்ணீர்


கம்ப இராமயாணம் - ஆறாய் ஓடிய பூ அழுத கண்ணீர்


கோதாவரி ஆற்றை "சான்றோர் கவி என கிடந்த கோதாவரி" என்று கூறிய கம்பன், அதில் எப்படி இவ்வளவு நீர் வந்தது என்றும் கூறுகிறான். 

இராம இலக்குவர்கள் கானகம் வந்த சோகத்தில், அந்த ஆற்றின் கரை ஓரம் உள்ள நீல மலர்கள் அழுத கண்ணீர் ஆறாய் ஓடியது என்கிறார் கம்பர்.

Monday, July 23, 2012

பழமொழி - அதுக்கு என்ன, செஞ்சுட்டா போச்சு !


பழமொழி - அதுக்கு என்ன, செஞ்சுட்டா போச்சு !


சில சமயம், நம் நண்பர்கள் நம்மிடம் உதவி கேட்கும் போது, நம்மால் முடியாவிட்டால் கூட "அதுக்கென்ன, செஞ்சுட்டா போச்சு" என்று நம்மால் முடியாத விஷயங்களில் கூட நாம் செய்து தருவதாய் உறுதி கூறி விடுவோம்.

அது போல், இல்லாத பொருளை கூட இருப்பதை போல சொல்லி தர்ம சங்கடத்தில் மாட்டி கொள்வது உண்டு.

"எனக்க அவனை தெரியும், இவனை தெரியும்...ஒரு போன் போட்டா போதும், காரியம் உடனே நடந்து விடும்..." என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே சொல்லுவது உண்டு.

நாம் நினைப்போம் அப்படி சொல்வது நம் மதிப்பையும், செல்வாக்கையும் உயர்த்தும் என்று நினைப்போம்.

மாறாக, சொன்ன விஷயங்களை செய்ய முடியாமல் போகும் போது, அது நம் மதிப்பை குறைத்து விடும்.

ஆட்டு இடையன், ஆடு மாட்டிற்கு வேண்டும் என்று மரத்தில் இருந்து கொஞ்சம் இல்லை தழைகளை பறிப்பான். ஏதோ கொஞ்சம் தானே என்று இருக்கும். ஆனால் நாளடைவில், அது முழு மரத்தையும் மொட்டையாக்கி விடும்.

அதுபோல், அளவுக்கு அதிகமாய் உறுதி மொழி தருவது, நாளடைவில் நம் புகழ் மற்றும் செல்வாக்கு அனைத்தையும் அழித்து விடும்.

"இடையன் எறிந்த மரம்"