Saturday, January 12, 2013

இராமனுஜ நூற்றந்தாதி - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


இராமனுஜ நூற்றந்தாதி - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


பெண்களுக்கு பிறந்த வீட்டை வருவது கடினமான செயல். என்னதான் புகுந்த வீட்டுக்குப் போக ஆசை இருந்தாலும், பிறந்த வீட்டை சந்தோஷமாக விட்டு விட்டு போக மாட்டார்கள். ஆனால் திருமகள் கதை வேறு. அவள் தன் பிறந்த இடமான தாமரை மலரை விட்டு, திருமாலின் மார்பில் வந்து வாழ சந்தோஷமாக வந்தாளாம். நிறைய பெண்கள் கணவன் வீட்டில் இருப்பார்கள். மனம் எல்லாம் பிறந்த வீட்டிலேயே இருக்கும். புகுந்த வீட்டில் பொருந்தாது. திருமகள் வந்து பொருந்திய மார்பன் திருமால்.

புகழ் கிடைப்பதற்கு அரிதான ஒன்று. கிடைப்பது அரிது. கிடைத்த பின் அதை தக்க வைத்துக் கொள்வது அதனினும் அரிது. அப்படிப்பட்ட புகழ் நம்மாழ்வார்க்கும் அவர் பாடல்களிலும் மலிந்து கிடந்தது. அவ்வளவு புகழ்.

அப்படி பட்ட நம்மாழ்வாரின் பாதம் பணிந்து  வாழ்தவர் பல கலைகளை கற்று தேர்ந்த இராமானுஜர்.

அப்படிப் பட்ட இராமனுஜரின் பாதரா விந்தங்களில் நாம் வாழ அவன் நாமங்களையே சொல்லுவோம். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொன்னது போல, அவன் நாமங்களைக் ஜெபித்து, அவன் திருவடிகளை அடைவோம்.

 
பாடல்



பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.



பொருள்



பூமன்னு = (தாமரை) பூவில் நிரந்தரமாக வசிக்கும்

மாது = திருமகள்

பொருந்திய மார்பன் = எல்லாவிதத்திலும் பொருந்திய மார்பன் (made for each other)

புகழ்மலிந்த = புகழ் நிறைந்த

பாமன்னு = நீண்டு நிலைக்கும் பாசுரங்களை தந்த

மாற னடிபணிந் து = மாறன் (நம்மாழ்வார்) அடி பணிந்து

உய்ந்தவன் = வாழ்ந்து வந்தவன்

பல்கலையோர் = பல கலைகளும்

தாம்மன்ன வந்த = அவைகளே அவனிடம் வந்து நிலை பெற்று இருக்க

ராமாநுசன் = இராமானுஜன்

சரணாரவிந்தம் = பாதார விந்தங்களை

நாம்மன்னிவாழ = நாம் அடைந்து வாழ

நெஞ்சே = என் மனமே

சொல்லுவோமவன் நாமங்களே = சொல்லுவோம் அவன் நாமங்களே

பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில் எல்லாம் இருக்கிறது. தனிமையில் இருக்கும் போது நீங்கள் நேசிப்பவரின் பெயரை மெல்ல உச்சரித்துப் பாருங்கள்...பெயர் இனிக்கும்.

இராமா உன் நாமம் எவ்வளவு ருசியாக இருக்கிறது என்கிறார் தியாகராஜர்

(
ஓ ராம நீநாம ஏமி ருசிரா
ஓ ராம நீநாம ஏமி ருசிரா
ஸ்ரீராம நீநாம எந்த ருசிரா || )


முதலில் அவன் பெயரைக் கேட்டாள், பின் அவன் குணங்களை கேட்டாள், பின் அவன் இருக்கும் ஊரைக் கேட்டாள்..பின் அவன் மேல் பைத்தியமாய் ஆனாள் என்று உருகுகிறார் நாவுக்கரசர்....

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

Friday, January 11, 2013

இராமாயணம் - அருளின் வாழ்வே


இராமாயணம் - அருளின் வாழ்வே


அருள் என்றால் மற்ற உயிர்களின் மேல் அன்பு கொள்வது, அவற்றின் துன்பத்தை துடைத்தல், அவற்றின் மேல் கருணை கொள்ளுதல். சீதை, அனுமனை அருளின் வாழ்வே என்று அழைத்தாள். அருளை வாழ்விப்பவன், அருளே அவன் வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். 

அவள், அனுமனை நீ என் தாய், என் தந்தை, என் தெய்வம் என்று கூப்பிடுகிறாள். சீதையால் தாய், தந்தை மற்றும் கடவுள் என்று அழைக்கப் பட்டவன் அனுமன். 

நீ செய்த உதவிக்கு நான் என்ன கை மாறு செய்ய முடியும் என்று பிராட்டி கரைகிறாள். 

பாடல் 



மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
                            தூது ஆய்,
செம்மையால்உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால்
                            எளியது உண்டே ?
அம்மை ஆய்,அப்பன் ஆய அத்தனே ! அருளின்
                            வாழ்வே !
இம்மையேமறுமைதானும் நல்கினை, இசையோடு’
                            என்றாள்.

பொருள்

Thursday, January 10, 2013

இராமனுஜ நூற்றந்தாதி - என்ன செய்தால் மரண பயம் வராது


இராமனுஜ நூற்றந்தாதி - தனியன் 1 

என்ன செய்தால் மரண பயம் வராது ?


தனியன் என்பது வைணவ இலக்கியங்களில் ஒரு ஆழ்வாரையோ அல்லது ஒரு சமயப் பெரியவரை பற்றியோ கூறும் முன்னர் அவரைப் பற்றி போற்றி துதிக்கும் பாடல்கள். 

தனியன் என்றே ஏன் பேர் வந்தது ?

தனித்து நிற்பதால் தனியன் என்று வந்து இருக்கலாம். 

இறைவனைப் பாடாமல் தனி மனிதனைப் பாடியதால் அதற்க்கு தனியன் என்று பெயர் வந்து இருக்கலாம். 

இராமனுஜ நூற்றந்தாதியில் மூன்று தனியன்கள் உள்ளன. 

முதல் தனியனை இயற்றியது வேதப் பிரான் பட்டர் என்பவர்.  

நல்லா படிச்சிருக்கேன், நான் ஏன் fail  ஆகப் போகிறேன் ? நல்லா வேலை செஞ்சிருக்கேன், எனக்கு ஏன் இந்த வருடம் பதவி உயர்வு கிடைக்காது ? என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். 

என்ன செய்தால் மரண பயம் வராது ? 

மரண பயம் இல்லாதவர் யார் ? மரணம் தவிர்க்க முடியாது தான் என்றாலும், தொடர்ந்து வரும் பாவ புண்ணியம் இவற்றின் பலன்களை எப்படி தவிர்ப்பது ?

வேதப் பிரான் கூறுகிறார் 

பாடல் 

Wednesday, January 9, 2013

திருக்குறள் - தீயதை கூடச் சொல்லலாம்


திருக்குறள் - தீயதை கூடச் சொல்லலாம் 


நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று.

தீயதை சொல்லக் கூடாது என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள். 

ஆனால் வள்ளுவர், தீயதை சொன்னால் கூடப் பரவாயில்லை ஆனால் பயனிலாத சொற்களை சொல்லமால் இருப்பது நல்லது என்கிறார். 

கொஞ்சம் பொறுங்கள். தீயவை என்று வள்ளுவர் நேரடியாக சொல்லவில்லை. நலம் பயக்காத சொற்கள் என்று கூறுகிறார். நல்லது இல்லாததை சொன்னாலும் சொல்லுங்கள், பயனில்லாததை சொல்லாதீர்கள் என்கிறார்.

இல்லையே...எங்கேயோ இடிக்குதே. அது எப்படி வள்ளுவர் நல்லது இல்லாத சொல்லலி சொல்லச் சொல்லுவார் ? சரியா இல்லையே என்று நினைத்தால்...பரிமேல் அழகர் இந்த குறளுக்கு சற்று வேறு விதமாக விளக்கம் தருகிறார். 


நயம் என்ற சொல்லுக்கு நிறைய பொருள் உண்டு. ஈரம், இன்பம் என்று எல்லாம் கூட பொருள் உண்டு. 

கமாவை, சான்றோருக்கு அப்புறம் போடுங்கள் 

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்,  
பயனில சொல்லாமை நன்று.

அதாவது, சான்றோர் எப்போதும் நமக்கு இனிமையான சொற்களையே கூறிக் கொண்டு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சில சமயம் நம் மனதிற்கு கசப்பான விஷயத்தை கூட சொல்லலாம் ஆனால் அவர்கள் பயனில்லாத விஷயங்களை கூறக் கூடாது என்று அர்த்தம் கொள்ளலாம். 

இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால், சான்றோர் எனப்படுபவர் எப்போதும் நமக்கு பயனுள்ள சொற்களையே சொல்வார்கள். அவர்கள் சொல்வது நமக்கு பிடிக்கா விட்டாலும், அந்த சொற்கள் நமக்கு பயனுள்ளவை  என்று நாம்  அறிந்து  கொள்ள  வேண்டும்.

அவர்கள் சொல்வதில்  உள்ள  விஷயங்களை நாம்  எடுத்துக் கொண்டு, அவற்றை  நல்ல  வழியில்  பயன்  படுத்த  வேண்டும். 

 வள்ளுவர் மட்டும் அல்ல, நமக்கு பரிமேல் அழகர் போன்ற உரை ஆசிரியர்களும் வேண்டும்...இவற்றைப் புரிந்து கொள்ள.

Tuesday, January 8, 2013

இராமாயணம் - சிரஞ்சீவி அனுமன்


இராமாயணம் - சிரஞ்சீவி அனுமன் 


சீதை அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுத்தாள். இந்த ஏழேழு உலகம் வீழ்ந்த போதும் நீ இருப்பாய் என்று அவனை வாழ்த்தினாள். அதாவது சிரஞ்சீவியாக இரு என்ற வரம் தந்தாள். 

வீரம் நிறைந்த பனை மரம் போன்ற உறுதியான தோள்களை உடையவனே, நான் எந்த துணையும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த போது வந்து என் துயர் தீர்த்த வள்ளலே, நான் குற்றமற்ற மனம் உள்ளவள் என்பது உண்மையானால், ஓர் ஊழிக் காலம் ஒரு பகலாய் மாறி , இந்த உலகம் அத்தனையும் அழிந்த போதிலும் இன்று போல் நீ இருப்பாய் என வாழ்த்தினாள் 

பாடல் 

திருக்குறள் - அறத்தின் பயன்


திருக்குறள் - அறத்தின் பயன் 



அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைப்
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அறத்தின் பயன் இது என்று சொல்ல வேண்டாம். பல்லக்கில் செல்பவனையும் அதை தூக்குபவனையும் பாத்தாலே புரியும். 

இந்த குறள் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. 

அது என்ன பல்லக்கு தூக்குவது பாவமா ? பல்லக்கில் செல்பவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்களா (அறத்தின் வழி நிர்ப்பவர்களா ?). பல்லக்கில் போவது என்பது எப்போதும் நிரந்தரமாய் இருக்குமா ? அது எப்படி வள்ளுவர் அப்படி சொல்லலாம் என்று ஒரு கோஷ்டி. 

இல்லை இல்லை அவர் அப்படி சொல்லி இருக்க மாட்டார். 

அறத்தாறு என்றால் அறத்து + ஆறு அதாவது அறத்தின் வழி என்று தான் பொருள் வருமே தவிர அறத்தின் பயன் என்று பொருள் வராது. 

அப்படி பார்த்தால் மீதி உள்ள பாடல் பொருள் சரியாக வரவில்லையே என்றால் அதற்க்கு குரலை சற்றே மாற்றி சொல்கிறார்கள்:

அறத்தாறு இதுவென வேண்டா  செவிகைப்ப 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

செவி கைப்ப என்றால் காது போருக்க முடியாத படி பேசுவது. அர்த்தம் இல்லாமல் கத்தும் ஒருவனுக்கும் அதை பொறுத்து போகும் மற்றோருவனுக்கும் இடையில் போய் எது சரி எது தவறு என்று சொல்ல வேண்டாம் என்று அர்த்தம் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். 

சத்தம் போடுபவன் ஒன்று periya அதிகாரியாய் இருக்க வேண்டும், அல்லது பணம் படைத்தவனாய் இருக்க வேண்டும். அந்த சுடு சொற்களை பொறுத்து கொள்பவன்  ஒன்று உண்மையிலேயே தவறு செய்திருக்க வேண்டும் அல்லது பதில் பேச முடியாத பலவீனனாய் இருக்க வேண்டும். எப்படி இருப்பினும் அவர்கள் இடையே சென்று அறம் இது என்று சொல்வது எந்த பயனையும் தரப் போவது இல்லை என்று வாதிடுகிறார்கள்.

செவிகைப்ப என்ற சொல்லை வள்ளுவர் இன்னொரு குறளிலும் பயன் படுத்தி இருக்கிறார். 

சிவிகை என்ற சொல்லை எங்குமே பயன் படுத்தவில்லை 

முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன். எது சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் .

பிரபந்தம் - எவன் அவன் ?


பிரபந்தம் - எவன் அவன் ?


நம்மாழ்வார் இறைவனை பற்றி சொல்ல வருகிறார். 

அவன் உயர்ந்த குணங்களை உடையவன் என்று சொல்லலாம். ஆனால் உயர்ந்த என்று சொன்னால் எதை விட உயர்ந்த என்ற கேள்வி வரும். ஏதோ ஒன்றை அல்லது யாரோ உருவரை காட்டி அதை விட அல்லது அவரை விட உயர்ந்த குணங்கள் உள்ளவன் இறைவன் என்று சொல்லலாம். அது சரியாக இருக்குமா ? மனிதர்களோடு வைத்து இறைவனின் குணங்களை எடை போட முடியுமா ? எனவே,  இறைவன் உயர்வு என்று எதை எல்லாம் சொல்கிறோமோ அதையும் விட உயர்ந்த குணங்களை உடையவன். உயர்வு + அற , உயர்வு என்ற ஒன்றே அற்றுப் போகும் படி உயர்ந்த குணங்களை உடையவன். உயர்வு என்று சொல்லே அவனுக்கு பொருந்தாது. அவ்வளவு உயர்ந்தவன். உயர்வு என்ற எந்த ஒன்றோடும் ஒப்பிட்டு கூற முடியாத அளவிற்கு உயர்ந்தவன் அவன்.  

நாம் பல சமயம் எது சரி, எது தவறு, எது நல்லது எது கெட்டது என்று அறியாமல் குழம்புகிறோம். அறிவு மயக்கம் கொள்கிறது. அந்த மயக்கம் அற்றுப் போகும் படி நமக்கு நல்ல புத்தியையை அருளுபவன் அவன்.

அயர்வு என்றால் மறதி. யார் இதற்க்கெல்லாம் மூல காரணம் என்பதை சில சமயம் மறந்து நாம் தான் எல்லாம் என்று நினைக்கத் தலைப் படுகிறோம். என்னால் தான் எல்லாம், என்னை விட்டால் யார் இருக்கிறார்கள் இங்கே என்று ஆணவம் சில சமயம் தலைக்கு ஏறலாம். நாம் எப்படி இருந்தோம், எங்கிருந்து வந்தோம், என்ன ஆவோம் என்று தெரிந்து இருந்தாலும் அவற்றை மறந்து விடுகிறோம். அந்த மறதியையை போக்குபவன் அவன்.    

வாழ்வில் எத்தனை துயர் வந்தாலும் அவற்றை அறுத்து நமக்கு ஆறுதல் தரும் அவனுடைய ஜோதிமயமான திருவடிகளை தொழு என் மனமே 

என்று தன் மனதிற்கு சொல்கிறார் நம்மாழ்வார். 

(யாரை தொழும்படி நம்மாழ்வார் தன் மனதிற்கு கட்டளை இடுகிறார் - +2 வினாத்தாள் - 5 மதிப்பெண்கள் ...:))

பாடல்