Thursday, August 1, 2013

நல்வழி - பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை

நல்வழி - பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை




பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

யாருக்குப் பயம் வரும் ? யாரிடம் தேவை அதிகமாய் இருக்கிறதோ அவர்களுக்கு பயம் அதிகம் இருக்கும். 

தேவைகள் அதிகம் ஆகும்போது, அதற்கு நிறைய பணம் வேண்டும். பணம்  சம்பாதிக்க யார்  யாரை எல்லாமோ பார்த்து பல்லை காண்பிக்க வேண்டி இருக்கிறது, எல்லோரிடமும் பயப் பட வேண்டி இருக்கிறது, யார் என்ன செய்வானோ என்ற பயம் பிடித்து ஆட்டும். 

மனதிற்குள் வைத்தாலும் வெளியில் ஆசை ஆசையாகப் பேச வேண்டி இருக்கிறது. 

யாரிடம் என்ன உதவி கேட்கலாம் என்று மனம் கணக்கு போட்டுக் கொண்டே இருக்கிறது. 

அவ்வையார் சொன்னார்....

பிச்சை எடுப்பது கேவலம்.

அதை விட கேவலமான ஒன்று இருக்கிறது. 

அது தான், மற்றவர்களிடம் ஆசை வார்த்தை சொல்லி , அவர்களிடம் பலன் பெற்று உயிர் வாழ்வது.  அதை விட சாகலாம் என்கிறார் 

 பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்


பொருள் 

Tuesday, July 30, 2013

பிரபந்தம் - நீதி அல்லாதன செய்தாய்

பிரபந்தம் - நீதி அல்லாதன செய்தாய் 


நாம் ஏதேனும் ஒரு பொருளை இழந்து விட்டால் ரொம்ப துக்கப் படுவோம். அதுவும் இழந்தது உயிர் என்றால் இன்னும் துக்கம் அதிகமாகும்.

எது இழப்பு ? நாம் வரும்போது ஏதாவது கொண்டு வந்தோமா ? கொண்டு வந்ததை இழப்பதற்கு ? வெறும் கையோடு  வந்தோம்....வெறும் கையோடு போகப் போகிறோம். நடுவில் வந்தது கொஞ்சம். போனது கொஞ்சம்.

நமது சமயப் பெரியவர்கள் இறைவனின் வேலைகள் என்று சொல்லும்போது ....படைத்தல், காத்தல், மறைத்தல், அருளுதல், அழித்தல் என்று  சொல்கிறார்கள்.

மறைத்தல் என்றால் நம்மிடம் இருந்ததை எடுத்து மறைத்து வைத்து விடுவது.

பொருள் அழிவது இல்லை...நம் கண்ணில் இருந்து மறைந்து விடுகிறது.

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நற் றில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்

என்பார் மணிவாசகர். கரத்தல் மறைத்தல்.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள்  பாடுகிறாள்.

பெண்கள் எல்லோரும் குளிக்க குளத்தில் இறங்கி இருக்கிறார்கள். கண்ணன் அவர்கள் உடைகளை எடுத்துக் கொண்டான். வெளியே வர முடியவில்லை. வேண்டும் என்றால் ஊருக்குள் போய்  சொல்லிக் கொள்ளுங்கள் என்கிறான் கண்ணன். எப்படி வெளியே போவது ? கண்ணா எங்கள் உடையைக் கொடு. நீ எங்கள் உடையை எடுத்துக் கொண்டாலும், உன் மேல் உள்ள ஆர்வம் குறையாது எங்களுக்கு என்று கெஞ்சுகிறாள், கொஞ்சுகிறாள் கோதை.

அவன் தந்தான்.

அவன் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டான்.

அவன் தருவான்.

இது சேலையை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ளும் சிற்றின்ப விளையாட்டு அல்ல. வாழ்க்கையை விளக்கும் தத்துவம். கொண்டு வந்ததும் இல்லை. கொண்டு போகப்  .போவதும் இல்லை. எல்லாம் ஒரு விளையாட்டுதான்.

பாடல்


நீரிலே நின்று அயர்க்கின்றோம்,
நீதி அல்லாதன செய்தாய்,
ஊர் அகம் சாலவும் சேய்த்துஆல்.
ஊழி எல்லாம் உணர்வானே!
ஆர்வம் உனக்கே உடையோம்
அம்மனைமார் காணில் ஒட்டார்
போரவிடாய் எங்கள் பட்டைப்
பூங்குருத்து ஏறி இராதே


பொருள்


நீரிலே நின்று அயர்க்கின்றோம் = குளத்திலே நின்று சோர்வடைகிறோம்

நீதி அல்லாதன செய்தாய் = நீதி இல்லாதவற்றை செய்தாய்

ஊர் அகம் = ஊருக்குள் உள்ள வீடு

சாலவும் சேய்த்துஆல். = ரொம்பவும் தூரத்தில் இருக்கிறது

ஊழி எல்லாம் உணர்வானே! = ஊழிக் காலம் வரை எல்லாம் அறிந்தவனே

ஆர்வம் உனக்கே உடையோம் = உன்மேல் மட்டுமே ஆர்வம் உடையோம். ஆர்வம் என்பது அருமையான சொல். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், ஆசை. curiosity என்று சொல்லுவார்களே. ஒன்றை முழுவதுமாக அறிந்து விட்டால் ஆர்வம் போய்  விடும்.இறைவனை என்றுமே முற்றும் அறிய முடியாது என்பதால் "ஆர்வம் உடையோம்"


அம்மனைமார் காணில் ஒட்டார் = எங்க அம்மாக்கள் பார்த்தால் எங்களை உள்ளே சேர்க்க மாட்டார்கள்

போரவிடாய் எங்கள் பட்டைப் = எங்கள் துணிகளை எங்களிடம் கொடுத்து விடு

பூங்குருத்து ஏறி இராதே = பூ மரத்தின் மேல் ஏறி நிற்காதே.

தின்ன பழம் கொண்டு தருவான்
பாதி தின்கின்ற போதில் தட்டிப் பறிப்பான்


என்ற கோபால கிருஷ்ண பாரதியின் பாடலும் சொல்லுவது இதைத்தான். தருவான், அவனே எடுத்துக் கொள்வான்.

நாம் இழக்க இங்கு ஒன்றும் இல்லை. அவன் தந்தான். அவன் கொண்டான். அவன் தருவான் என்று இருங்கள்.




இராமாயணம் - ஆசைக் கடல் , அன்பு அலை

இராமாயணம் - ஆசைக் கடல் , அன்பு அலை 




வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன்,
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன்,
பொற்பினுக்கு அணியினை, புகழின் சேக்கையை,
கற்பினுக்கு அரசியை, கண்ணின் நோக்கினான்.

சீதையை  முதன் முதலாகப் பார்க்கிறான் இராவணன்.

காட்டில், குடிசையில், தனிமையில்.

மலை போல் பெரிய கரிய யானைக்கு மத நீர் சுரக்கும். அது போல இராவணனுக்கு ஆறாக வியர்க்கிறது.

சீதை மேல் ஆசை கடல் அலை போல புரள்கிறது. ஒன்றை அடுத்து ஒன்றாக அலை அலையாக வருகிறது.

எல்லோரும் அழகாய் இருக்க அணிகலன்  அணிவார்கள். ஆனால் சீதையோ அந்த அழகுக்கு அணிகலனாய் இருக்கிறாள். எல்லா புகழும் ஒன்றாய் கொண்டவளை, கற்பினுக்கு அரசியை கண்ணால் கண்டான்.

எல்லோரும் கண்ணாலதான் காண்பார்கள். அது என்ன கண்ணால் கண்டான் ?

இது வரை மனதால் கண்டான். சூர்பனகை சொன்ன குறிப்புகளை வைத்து சீதை இப்படித்தான்  இருப்பாள் என்று மனதில் ஒரு வடிவம் வரைந்து வைத்து இருந்தான்.

இப்போது நேரில் நிற்கிறாள். அவளைக் கண்ணால் கண்டான்.

பொருள்

வெற்பிடை = வெற்பு என்றால் மலை. மலை போன்ற யானைகளிடம்

மதம் என = அதிகமாக சுரக்கும் மதன நீர் போல

வெயர்க்கும் மேனியன் = வியர்வை பொங்கும் மேனியன்

அற்பின் = அன்பினால்

நல் திரை  = நல்ல அலை

புரள் = புரண்டு புரண்டு வரும்

ஆசை வேலையன் = ஆசையைக்  கடல் போல் கொண்டவன் (வேலை என்றால்  கடல்). ஆசை எனும் கடல், அதில் அன்பு எனும் அலை....கடல் தனது அலை எனும் கரங்களால் தொட முயல்வது போல

பொற்பினுக்கு அணியினை = அழகுக்கு அணியினை

புகழின் சேக்கையை = புகழின் தொகுப்பை

கற்பினுக்கு அரசியை = கற்புக்கு அரசியை

கண்ணின் நோக்கினான் = கண்ணால் கண்டான். முதன் முதலாக கண்ணால் கண்டான். 



Monday, July 29, 2013

பிரபந்தம் - காதல் அன்றி வேறெதுவும் இல்லை

பிரபந்தம் - காதல் அன்றி வேறெதுவும் இல்லை 


உலகம் முழுதும் காதல் அன்றி  வேறில்லை. அன்புதான்,காதல்தான் எங்கும் பொங்கி வழிந்து  கொண்டிருக்கிறது.

இங்கே அன்பின்றி வேறொன்றும் இல்லை.

அன்பே சிவம்.

பூதத்தாழ்வார் திருவேங்கிட மலைக்குப்  போகிறார்.  போகிற வழியில் ஒரு ஆண் யானையும் பெண் யானையும் காதல் வயப்பட்டு  நிற்கின்றன.

ஆண்  யானை, பெண் யானை மேல் காதல் கொண்டு அருகில் இருந்த மூங்கில் மரத்தில் இருந்து மூங்கிலை முறித்து,  அதை அப்படியே உண்டால் சுவைக்காது என்று, அருகில் உள்ள தேன் அடையில் அதை நனைத்து பெண் யானைக்கு ஊட்டுகிறது. வானின்  நிறம் கொண்ட திருமாலின் மலை அப்படிப் பட்டது.

நாவுக்கரசரும் இதைப்  பற்றி சொல்லி இருக்கிறார்....


காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

ஆண்  யானையும் பெண் யானையும் ஒன்றாக வருவதைப் பார்த்தேன், அவனுடைய பாதங்களைப் பார்த்தேன், இதுவரை காணாத ஒன்றை கண்டேன்  என்கிறார்.

காதல் ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக  இருக்கிறது ? இதை ஏன் பூதத்தாழ்வார் பெரிதாக  சொல்கிறார் ?

இறை அனுபவத்திற்கு முந்தைய அனுபவம் காதல் அனுபவம்.

நான் என்பது அற்றுப் போகும் அனுபவம்.

நான் என்பது கரைந்து, ஆனந்தமான ஒரு புள்ளியில் நிறுத்தும் அனுபவம் காதல் அனுபவம்.

 நாயகன் நாயகி பாவம் பக்தி இலக்கியத்தில் எங்கும் காணக் கிடைக்கிறது. அது ஏதோ சிற்றன்ப உணர்சிகளை தூண்ட எழுதப் எழுதப் பட்டவை அல்ல.

ஆண்  பெண் கலந்த அந்த உணர்ச்சி இறை சன்னிதானத்திற்கு இட்டுச்    செல்லும்.

போகத்தின் உச்சியில் யோகம் பிறக்கும்.

உடலின்பத்தை மறக்கவோ மறுக்கவோ  முடியாது.ஆனால் அதைத் தாண்டி போக  முடியும்.

பாடல்


பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இளமூங்கில் வாங்கி, அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை


பொருள்


திருவாசகம் - நாம் யார் ? நம்முடையது எது ?

திருவாசகம் - நாம் யார் ? நம்முடையது எது ? 




தாமே தமக்குச் சுற்றமுந்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

நான் என்பது என்ன ? என் உடலா ? அதில் உள்ள ஞாபகங்களா ? என் அறிவா ? என் அறிவீனமா ? 

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் இந்த வாழ்க்கையில்  - எது என்னை செலுத்துகிறது ? எதற்க்காக நான் காரியங்களை செய்கிறேன் ? எந்த விதிகளை நான் கடை பிடிக்கிறேன் ?

எனக்கு சொந்தமானது எவை ? நான் சம்பாதித்த பொருள்களா ? என் மனைவி, மக்களா ? என் நண்பர்களா ? என் உறவினர்களா ? எது எனது ?

இவற்றிற்கு எல்லாம் ஒரு விடை உங்களுக்கு கிடைக்கலாம். 

அந்த விடைகளை காலம் மாற்றிப் போடும். உங்களது என்று நீங்கள் நினைத்தவை உங்களதாக இல்லாமல் போகலாம். உங்கள் பிள்ளைகள் உங்களை விட்டு அவர்கள் வாழ்க்கையில் போய்  கொண்டிருக்கலாம். 

உங்கள் விடைகள் எல்லாம் ஒரு மாயையே. இன்றிருப்பது நாளை மாறலாம். மாறும். 

இறைவனின் குறிப்பை அறிந்து, அவன் தொண்டரோடு சேர்ந்து , பொய்யானவை எல்லாம் நீங்கி அவன் திருவடி சேரப் பாருங்கள் என்கிறார் மணிவாசகர். 

பொருள் 


தாமே தமக்குச் சுற்றமுந் = நமக்கு நாமே சொந்தக் காரர்கள். வேறு யாரும் நமக்கு கிடையாது

தாமே தமக்கு விதிவகையும் = நம் வாழ்க்கையை செலுத்தும் விதிவகைகளை நிர்ணயிப்பதும் நாம் தான். வேறு யாரும் அல்ல.


யாமார் = யாம் யார் ? நாம யார் ?

எமதார் = என்னுடையது எது ?

பாசமார் = பாசம் என்பது என்ன ?

என்ன மாயம் = இது எல்லாம் என்ன மாயம்

இவைபோகக் = இவை எல்லாம் போக

கோமான் = கோமகன், அரசன்

பண்டைத் தொண்டரொடும் = பழைய தொண்டர்களோடும்

அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு = அவனுடைய குறிப்பே இலக்காகக் கொண்டு

போமா றமைமின் = போகும்படி அமையுங்கள்

பொய்நீக்கிப் = பொய் நீங்கி

புயங்கன் = பாம்பை தோளில் சுமந்தவன்

ஆள்வான் பொன்னடிக்கே. = எல்லோரையும் ஆள்பவன் பொன் போன்ற பாதங்களுக்கே


அங்க போறத விட்டுட்டு எங்கெங்கேயோ சுத்திக்  கொண்டு இருகிறீர்கள் என்கிறார் மணிவாசகர் 

இராமாயணம் - எழுதல் ஆகலாச் சுந்தரன்

இராமாயணம் - எழுதல் ஆகலாச் சுந்தரன் 


வந்த இராவணனை அமரச் சொன்னாள் சீதை. இருவரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் யார், இங்கே என்ன செய்கிறீர்கள் என்று சீதை கேட்கிறாள்.

சந்நியாசி வேடத்தில் இருக்கும் இராவணன் சொல்கிறான்...."நான் இராவணன் வாழும் இலங்கையில் இருந்து வருகிறேன். அந்த இராவணன் எப்படி பட்டவன் தெரியுமா " என்று அவனே அவன் பெருமை பற்றி பேசுகிறான்.....

பாடல்

இந்திரற்கு இந்திரன்; எழுதல் ஆகலாச்
சுந்தரன்; நான்முகன் மரபில் தோன்றினான்;
அந்தரத்தோடும் எவ் உலகும் ஆள்கின்றான்;
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான். 


பொருள்


திருக்குறள் - அளவுக்கு மீறினால்

திருக்குறள் - அளவுக்கு மீறினால் 


பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

மயில் தோகையே (மயில் பீலி) ஆனாலும் அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு முறிந்து விடும்.

இது என்னங்க குறள்  ? ரொம்ப லோடு ஏத்தினா வண்டியோட அக்சில் (axil ) உடையும்னு சொல்றதுக்கு வள்ளுவர் வேணுமா ? இது யாருக்குத்தான் தெரியாது என்று நாம் நினைப்போம்.

வள்ளுவரை அவ்வளவு எளிதாக எடை (!) போட்டு விடாதீர்கள்.

நம்ம வாழ்க்கையில நமக்கு எரிச்சலும் கோபமும் வருவது இயற்கை. அந்த சமயத்தில் ஏதாவது சொல்லி விடுவோம். நல்லவர்களையும் பகைத்துக் கொள்வோம். பின்னாடி யோச்க்கும் போது , "ஆமா, அவனோட நட்பு / உறவு இல்லாட்டி என்ன ஆகி விடும்....போனா போறான்..." என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்வோம்.

இப்படி கொஞ்ச கொஞ்சமாய் எல்லோரையும் பகைத்துக் கொண்டாள், ஒரு நாள் அது நம் வாழ்க்கை என்ற தேரின் அச்சையே முறித்து விடும்.

சின்ன பகைதானே, என்று அலட்சியாமாக இருக்கக் கூடாது. சின்ன சின்ன பகைகள்  சேர்ந்துவிடும் ஒருநாள்.

அது போலத்தான் சின்ன சின்ன கெட்ட பழக்கங்கள்....

ஒரு சிகரெட் தானே, ஒரு நாளைக்கு இரண்டு கப் காப்பிதானே, வாரம் ஒரு ஐஸ் கிரீம் தானே, மத்தியானம் ஒரு மணிநேர தூக்கம் தானே என்று ஆரம்பிக்கும் சின்ன பழக்கங்கள் நாளடைவில் நம்மை கெடுக்கும்.


பல கெட்ட பழக்கங்கள் ஒன்று சேரும்போது அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். ஒவ்வொரு மயில் இறகும் மென்மையானது தான். ஆனால், மொத்தமாக சேரும்போது வண்டியையே முறிக்கும்.

அது போல பல கெட்ட குணங்கள் சேர்ந்து வாழ்கையை முறிக்கும்.

ஒரே ஒரு கெட்ட  பழக்கம் தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.