Wednesday, September 4, 2013

இராமாயணம் - தொடரும் நரை முடி

இராமாயணம் - தொடரும் நரை முடி 


இராவணன் இழைத்த தீமையால் தரசதனுக்கு நரை முடி  வந்தது என்று போன ப்ளாகில் பார்த்தோம்.

அந்த நரை முடியை வைத்து கம்பன் இன்னும் காவியம் பண்ணுகிறான்.


மன்னனே! அவனியை மகனுக்கு ஈந்துநீ
பன்னரும் தவம்புரி பருவம் ஈது' எனக்
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்

முதன் முதலில் நரை முடி எங்கு வரும் என்றால்,  பொதுவாக,காதோரம் வரும்.

அந்த இடத்திற்கு கன்ன மூலம் என்று  பெயர்.

ஏன் காதோரம் வருகிறது ?

நம்மிடம் ஏதோ ஒரு இரகசியம் சொல்ல வருகிறதாம். காதோடுதான் நான் பேசுவேன் என்று காதோரம் வருகிறதாம்.

காதோடு சொல்லும் விஷயங்கள் இரகசியமான விஷயங்கள். மற்றவர்களுக்குத்  தெரியாமல் நம்மிடம் மட்டும் சொல்ல அந்த காதோரம் ஒரு நரை மயிர் வருகிறது.

அது என்ன இரகசியம் சொல்லுகிறது ?

"உனக்கு வயதாகிக் கொண்டே வருகிறது. இன்னும்  எத்தனை நாள்தான் இப்படி  இருக்கப் போகிறாய்...இரை தேடியது போதும், இறை .தேடு...பொறுப்புகளை  உன் பிள்ளைகளிடம் கொடு...வேகத்தை குறை....இனிப்பை, எண்ணையை, மாவு பொருட்களை விலக்கு ...உண்டது போதும் ....போகும் இடத்திற்கு வழி தேடு ..."என்று பல விஷயங்களை நமக்குச் சொல்லுகிறது.

கேட்டால்தானே !

முதல் காரியமாக ஒரு கத்தரி கோலை எடுத்து அந்த நரை முடியை வெட்டி எறிந்துவிட்டுத்தான்  மறு வேலை.

மீண்டும் வந்தால், டை அடித்து அதை மறைப்பது.

நம் உடல் நமக்கு பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது. நாம் தான் கேட்பதே இல்லை.

தசரதனிடம் அந்த நரை முடி சொல்லியதாம்...

 "மன்னனே, இந்த அரசை மகனிடம் கொடுத்துவிட்டு நீ தவம் செய்யும் காலம் இது என்று  கன்ன மூலத்தில் வந்த வெளுத்த அந்த ஒற்றை நரை முடி கூறியதாம் "

பொருள்

மன்னனே! = மன்னனே என்று அவனை இரகசியமாக கூப்பிடுகிறது

அவனியை = இந்த உலகை

மகனுக்கு ஈந்து = மகனிடம் கொடுத்துவிட்டு

நீ = நீ

பன்னரும் =  பண்ணுவதற்கு அறிய

தவம்புரி = தவம் புரிகின்ற

பருவம் ஈது' எனக் = காலம் இது என

கன்ன மூலத்தினில் = கன்னத்தின் ஓரத்தில்

கழற வந்தென = சொல்ல வந்தது என

மின்னெனக் = மின்னலைப் போல

 கருமைபோய் வெளுத்த தோர்மயிர் = கருமை போய் வெளுத்தது ஒரு மயிர்.

மின்னல் மேகத்தில் இருந்து வரும். மழை மேகம் மின்னலைத் தரும். மழை மேகம் கருத்து இருக்கும். அதில் வரும் மின்னல் வெளுப்பாக இருக்கும். அது போல்  கருத்த முடிகளுக்கு நடுவே ஒரே ஒரு வெள்ளை மயிர் தோன்றிற்று என்றான் கம்பன்.

நரை முடிக்கு பின்னால் இவ்வளவு கதை சொல்ல கம்பனால் மட்டுமே முடியும்.



இராமாயணம் - நரைக்கு ஒரு பாடல்

இராமாயணம் - நரைக்கு ஒரு பாடல் 


ஒரு பெரிய காப்பியம் எழுதிக் கொண்டு போகும் கம்பன், ஒரு நரை முடிக்கு ஒரு பாடல்  எழுதுகிறான்.

அதிலும் எவ்வளவு ஆழம், அர்த்தம்.


தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையது ஆய் அணுகிற் றாம் எனப்
பாங்கில்வந்து இடுநரை படிமக் கண்ணாடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்.

தீங்கு செய்த இராவணன் தீமை தான், அங்கு ஒரு நரை முடியாக வந்தது. அந்த நரை முடியை கண்ணாடியில் தசரதன் கண்டான்.

பாடல் என்னவோ அவ்வளவு தான் - மேலோட்டமாகப் பார்த்தால்.

கம்பன் அதில் எவ்வளவு செய்திகள் சொல்ல வருகிறான் என்று பார்ப்போம்.

முதலாவது, கவலையால், மிகுந்த மன அழுத்தத்தால் நரை வரும். ஏவா மக்கள் மூவா மருந்து.  தசரதனுக்கு ஒரு கவலையும் இல்லை. 60000 + 3 மனைவிகள், சக்கரவர்த்தி,  எதிரிகள் என்று யாரும் இல்லை. நாட்டில் குழப்பம் இல்லை. நாட்டில் வறுமை இல்லை.  அருமையான பிள்ளைகள். இருந்தும் நரை வந்தது. மிக நீண்ட நாட்களாக அரசாண்டவன். இப்போது நரை வரக் காரணம் என்ன ?

இராவணன் செய்த தீமையால் தசரதனுக்கு நரை வந்தது.  இராவண சம்ஹாரம்  நடக்க வேண்டும் என்றால் இராமன் அங்கே போக வேண்டும், நிறைய நிகழ்சிகள் நடக்க  வேண்டும்...எல்லாவற்றையும் தொடங்கி வைத்தது அந்த நரை முடி.

இரண்டாவது, அந்த நரை முடி, பாங்கில் வந்தது என்றான். பாங்கில் என்றால் அழகாக என்று அர்த்தம். மூப்பு என்பது ஒரு அழகு.  அது ஒரு இயற்கை. பல பேர் மூப்பு என்பது ஏதோ நோய் போல் அதை குணப் படுத்த வேண்டும் என்று அதோடு  போராடுகிறார்கள். அறுவை சிகிச்சை, முடிக்கு சாயம் பூசுவது, பௌடர்கள் , கிரீம்கள் என்று என்னனவோ செய்து எப்படியாவது மூப்பை மறைக்க முயற்சி  செய்கிறார்கள். கம்பன் சொல்கிறான், நரை முடியும் ஒரு அழகு என்று.  இயற்கையோடு ஒன்றிப் போக வேண்டும்.


தெய்வப் புலவர்  சேக்கிழார் சொல்வார் , "வடிவுரு மூப்பு வந்து" என்று. அழகான மூப்பு என்று.  காயை விட கனி அழகு.  கனிவதும் ஒரு  அழகுதான். ஆனால் நாம் பார்க்கும் போது , வயதானவர்கள் அழகாக இல்லை. இளையவர்கள்தான் அழகாக இருக்கிறார்கள். அது எப்படி.

காய் கனிந்தால் அழகு. வெம்பினால் அழகு இல்லை.

ஆசை சூட்டில், பொறாமையில், ஏமாற்றத்தில், கோபத்தில் மனிதர்கள் வெம்புகிறார்கள் . கனிவது இல்லை. நான் பார்த்தவரை வயதாக வயதாக மனிதனுக்கு ஆசை மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே போகிறது. எங்கே இன்னும் ரொம்ப நாள் இருக்க மாட்டோமோ, இருக்கும் போதே எல்லாவற்றையும்  அனுபவித்து விட வேண்டும் என்று பறக்கிறார்கள். எனவே தான் அழகாய் இல்லை. ஆண்டு அனுபவித்து, போதும், வேண்டாம் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் ?

மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பது இல்லை.

இந்த நரை முடியை பற்றி கம்பன் மேலும் சொல்லுகிறான்.



Tuesday, September 3, 2013

திருக்குறள் - அறம் 


அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

வாழ்வின் நோக்கம் எல்லை இல்லாத இன்பம், அழிவு இல்லாத வீடு பேறு , இறைவன் திருவடி நிழல். 

இந்த மூன்றையும் அடைய அற வழியில் நடக்க வேண்டும். 

வெறுமனே அறம் , அறம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மனிதனுக்கு வெறுத்து விடும்.  யாரும் செய்ய  மாட்டார்கள். "போய்யா , வேற வேலை இல்லை ..." என்று எழுந்து போய் விடுவார்கள். 

எனவே, மனிதனுக்கு அறத்தோடு சேர்த்து இன்பமும் வேண்டும்.  அந்த இன்பத்தை அனுபவிக்க பொருள் வேண்டும்.  அப்படி பொருளும் இன்பும் அடையும் வழிகளும் அற வழிகளாக இருக்க வேண்டும். 

சரி, இந்த அறம் என்றால் என்ன ? 

அதைத்தான் மேலே பரிமேல் அழகர் சொல்கிறார். 

அறம் என்பது மனு முதலிய நூல்களில் சொன்னதை செய்தாலும், அது செய்யக்கூடாது என்று சொன்னவற்றை   செய்யாமல் இருப்பதும். 

அதாவது கற்று அறிந்தவர் சொன்ன வழி நிற்பது. 

இன்று எப்படி நடக்கிறது ? ஆழ்ந்த அறிவும், தெளிவும் இல்லாதாவர்கள் சொல்வதை எல்லாம்  கேட்டு மக்கள் திசை தெரியாமல் அலைகிறார்கள். 

யார் சொல்வதை கேட்கிறோம், யார் வழியை பின் பற்றுகிறோம், சொல்பவனின்  தன்மை என்ன என்று அறிய வேண்டும். சொல்பவன் எதற்காக சொல்கிறான் என்று   அறிய வேண்டும். 

அந்த அறம் மூன்று கூறுகளை உடையது.  அவை ஒழுக்கம் , வழக்கு, தண்டனை எனப்படும். 

வழக்கு , தண்டனை என்றால் என்ன ? 

இன்று தண்டனை பற்றி எவ்வளவோ சர்ச்சைகள் நடந்து கொண்டு இருக்கிறது ? தூக்கு தண்டனை விதிக்கலாமா , கூடாதா என்று எல்லாம் விவாதம் நடக்கிறது. 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவற்றை பற்றி சிந்தித்து ஒரே வரியில் அவற்றைப் பற்றி பரிமேல் அழகர் சொல்கிறார். 

வள்ளுவர் வழக்கு, தண்டனை இவற்றைப் பற்றியும் கூறி இருக்கிறாரா என்றால் , இல்லை. பின் எப்படி அறம் சொல்ல முடியும் ? 

ஏன் அவற்றை விட்டு விட்டார் ? 

அவற்றை அடுத்த ப்ளாகில் பார்ப்போம். 




வில்லி பாரதம் - கண்டவை

வில்லி பாரதம் - கண்டவை 


தருமன் சமாதனமாகப் போவோம் என்று சொன்னது  பீமனுக்கு  பிடிக்கவில்லை.

மலை போன்ற என் கதாயுதத்தை கண்டும், அர்ஜுனனின் வில்லை  கண்டும், நகுல சகாதேவர்களின் திறமைகளை கண்டும், நமக்காக நிற்கும் கண்ணனின் நிலை கண்டும், திரௌபதியின் விரித்த குழல் கண்டும், எதிரிகளை கொலை  செய்து அதைக் கண்டு மகிழாமல் அவன் குடைக் கீழ் உயிர் வாழ நினைக்கிறாயே என்று தருமனை பார்த்து இகழ்ந்து  கூறுகிறான்.

பாடல்

'மலை கண்டதென என் கைம் மறத் தண்டின் வலி 
                  கண்டும், மகவான் மைந்தன் 
சிலை கண்டும், இருவர் பொரும் திறல் கண்டும், 
                  எமக்காகத் திருமால் நின்ற 
நிலை கண்டும், இவள் விரித்த குழல் கண்டும், 
                  இமைப்பொழுதில் நேரார்தம்மைக் 
கொலைகண்டு மகிழாமல், அவன் குடைக் கீழ் உயிர் 
                  வாழக் குறிக்கின்றாயே!'

பொருள்

மலை கண்டதென = மலையை போன்ற உறுதியான

என் கைம் = என்  கையில் உள்ள

மறத் தண்டின் = வீரமான கதாயுதத்தின்

வலி கண்டும் = வலிமையைக்  கண்டும்

மகவான் மைந்தன் = இந்திரன் மைந்தன் (மகம்  என்றால் யாகம்.  இந்திர பதவி   என்பது நிறைய யாகங்கள் செய்து கிடைப்பது)  அர்ஜுனனின்

சிலை கண்டும் = வில்லைக் கண்டும்

இருவர் பொரும் திறல் கண்டும் = நகுல சகாதேவர்களின் போர் ஆற்றலைக் கண்டும்

எமக்காகத் = எங்களுக்காக

திருமால் நின்ற நிலை கண்டும் = திருமால் நிற்கும் நிலை கண்டும்

இவள் விரித்த குழல் கண்டும் = திரௌபதியின் விரித்த குழலை கண்டும்

இமைப்பொழுதில் = கண்ணிமைக்கும் நேரத்தில்

நேரார்தம்மைக் = எதிரிகளை 

கொலைகண்டு மகிழாமல் = கொலை செய்து மகிழாமல்

அவன் குடைக் கீழ் உயிர் வாழக் குறிக்கின்றாயே! = அவன் குடைக் கீழ் உயிர் வாழ நினைகின்றாயே

என்று  குமுறுகிறான்.



Monday, September 2, 2013

திருக்குறள் - பரிமேலழகர் உரைக்கு உரை

திருக்குறள் - பரிமேலழகர் உரைக்கு உரை

இந்திரன் முதலிய இறைவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகலின், துறவறம் ஆகிய காரண வகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே ஆம்.

மேலே கூறப் பட்டது பரிமேலழகர் திருக்குறளுக்கு எழுதிய முன்னுரையின் .
ஒரு பகுதி. ஏதாவது புரிகிறதா ? ஆராய்ச்சியாளர்களுக்கு எழுதப் பட்டது பரிமேல் அழகர் உரை.  கொஞ்சம் எளிமை படுத்திப்  பார்க்கலாம்.

வாழ்வின் நோக்கம் என்ன ?

முடிவே இல்லாத இன்பம் பெறுவது, அழிவே இல்லாத முக்தி பெறுவது, இறைவனின் திருவடியை  அடைவது....இதுதானே  உயிர்களின் நோக்கமாகவும்  இருக்கும் ?

இதை அடைவதற்கு, பெரியவர்கள் நான்கு உறுதியான வழிகளை  சொல்லுகிறார்கள்.அது அறம் , பொருள், இன்பம், மேலும் வீடு  ஆகும்.

இதில் அறம் , பொருள் மற்றும் இன்பம் என்பது நமக்குப்  புரிகிறது. அது என்ன வீடு ?

வீடு என்பது நம் சிந்தனையும், மொழியும் செல்லாத  இடம். நம்மால் அதை பற்றி  சிந்திக்கவோ, சொல்லவோ முடியாது.  சிந்திக்க முடியாத ஒன்றைப் பற்றி எப்படி சொல்லுவது ?

ஒரு உதாரணம் சொல்லி விட்டு பின் விளக்கம்  அறியலாம்.

நீங்கள் புதிதாக ஒரு ஊருக்குப் போய்  இருகிறீர்கள். உங்கள் நண்பரை      
பார்க்கலாம் என்ற ஆவலோடு  சென்று இருகிறீர்கள். நண்பரும் வீட்டு  விலாசம், அருகில் உள்ள முக்கிய இடங்கள் இவற்றை எல்லாம் சொல்லி இருக்கிறார்.  நீங்களும் அவர் இருக்கும் இடம் வரை வந்து  விட்டீர்கள்.ஆனால் வீட்டை கண்டு பிடிக்க  முடியவில்லை.

அந்தப் பக்கம் வந்த ஒருவரிடம் உங்கள் நண்பரின் விலாசத்தைக் காட்டி அந்த வீடு எங்கே இருக்கிறது என்று  கேட்கிறீர்கள்.

அவர், "ஓ , இந்த  வீடா, இப்படியே நேராகப் போய் , இடது புறம் திரும்பினால் ஒரு பலசரக்கு கடை வரும்,  அங்கிருந்து நாலாவது வீடு இந்த விலாசம்" என்று  சொல்கிறார்.

நீங்களும் "என் நண்பரின் வீட்டை காண்பித்ததற்கு ரொம்ப நன்றி " என்று சொல்லிவிட்டு   கிளம்புகிறீர்கள்.

 வந்தவர்,வீட்டை காட்டவில்லை, நண்பரின் வீட்டுக்குப் போகும் வழியை  சொன்னார். அந்த வழியில் போனால் நண்பரின் வீடு வரும்.  நண்பரின் வீடு எப்படி இருக்கும்,  பெரிதா, சின்னதா, தனி வீடா, அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒரு வீடா .... கிழக்கே பார்த்ததா, மேற்க்கே பார்த்ததா ....ஒன்றும்   தெரியாது.ஆனால்,  நண்பரின் வீட்டை கண்டு பிடித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை உங்களுக்கு  இருக்கிறது.

அதே போல


அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகலின், துறவறம் ஆகிய காரண வகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே ஆம்.


அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமை உடையதால் , துறவறம் ஆகிய காரண வகையால் அதை கூற முடியுமே அன்றி  அதை இலக்கணம் மாதிரி எடுத்து உரைக்க முடியாது. அறம் ,பொருள் , இன்பம் என்று சொல்லி விட்டு அடுத்து துறவறம் பற்றி  சொல்லுகிறார்.துறவறம் வீடு பேறு பெரும் வழி.  அந்த வழியே போனால் வீடு பேற்றை  அடையலாம். 

எனவே,திருக்குறளில் அறம் , பொருள், இன்பம் உண்டு அதன் பின் துறவறம் இருக்கிறது. 

எங்கே இருக்கிறது ? அறம் , பொருள், இன்பம் இந்த மூன்று பால் தானே இருக்கிறது.  துறவறப் பால் என்று ஒன்று இருக்கிறதா என்ன ? 

 பார்ப்போம்.



Sunday, September 1, 2013

நன்னூல் - பாடம் பயிலும் முறை

நன்னூல் - பாடம் பயிலும் முறை 


எப்படி பாடம்  படிக்க வேண்டும் ?

பாடம் பயிலும் முறையை சொல்கிறது நன்னூல்


பாடல்

நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை
கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்

பொருள்


இராமாயணம் - மானை எடுக்கும் யானை

இராமாயணம் - மானை எடுக்கும் யானை 


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியை சொல்ல தசரதன் கைகேயின் மாளிகை நோக்கி வருகிறான். அங்கே கைகேயி தன் அலங்காரங்களை எல்லாம் அழித்துவிட்டு தரையில் கிடக்கிறாள்.

பதறிப் போனான் தசரதன்.

பெண்ணே உனக்கு என்ன வந்தது என்று கவலையோடு கேட்டு அவளை ஒரு மானை , யானை தூக்குவதை போலத் தூக்கினான்.

யானை தன் தும்பிக்கையால் தூக்கும். ஒரு கையால். அது போல தசரதன் அவளை  அத்தனை எளிதாகத் தூக்கினான். 

யானையின் வலு என்ன ? பெரிய பெரிய மரங்களை தூக்கும் வலு கொண்டது.  மானின் பாரம் என்ன? மானைத் தூக்குவது யானைக்கு ஒன்றும் பாரம் அல்ல. அவ்வளவு எளிதாக தூக்கும். அது போல தசரதன் அவளை தூக்கினான்.

தசரதனுக்கு எத்தனை வயது இருக்கும் ? ஒரு அறுபது  அல்லது அறுபத்து ஐந்து வயது இருக்கலாம்.  அந்த வயதிலும் அவன் உடல் உரம் மனைவியை அவ்வளவு எளிதாகத் தூக்கும்படி இருந்தது. ..

அது மட்டும் அல்ல, கைகேயி அவ்வளவு மென்மையாக, எடை போடாமல் இருந்தாள் . சக்ரவர்த்தினி...வேண்டுமானால் எவ்வளவும் சாப்பிடலாம். ஒரு வேலையும் செய்ய வேண்டாம். எல்லாவற்றிற்கும் வேலை ஆட்கள் உண்டு. பணிப் பெண்கள் உண்டு. இருந்தும் அவள் உடலை எடை போடாமல்  பாதுகாத்து வைத்து இருக்கிறாள்.

நமக்கெல்லாம் பாடம்.

பாடல்

அடைந்து, அவண் நோக்கி, 'அரந்தை என்கொல் வந்து
தொடர்ந்து?' எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன்,
மடந்தையை, மானை எடுக்கும் ஆனையே போல்,
தடங்கைகள் கொண்டு தழீஇ, எடுக்கலுற்றான்


பொருள்

அடைந்து = கைகேயின் மாளிகை அடைந்து

அவண் நோக்கி = அங்கிருந்த நிலையை நோக்கி

அரந்தை = பெண்ணே

என்கொல் வந்து தொடர்ந்து = உனக்கு என்ன நேர்ந்தது ?

எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன் = என்று துயர் கொண்டு சோர்ந்த நெஞ்சினன்

மடந்தையை = கைகேயியை

மானை எடுக்கும் ஆனையே போல் = மானை எடுக்கும் யானையைப் போல்

தடங்கைகள் கொண்டு = தன்னுடைய பெரிய கைகளால்

 தழீஇ, எடுக்கலுற்றான் =தழுவி எடுத்தான்


அந்த நள்ளிரவு நேரத்திலும், தசரதன்  கோசலையைப்  பார்க்காமல், கைகேயியை பார்க்க வந்ததன்  காரணம் புரிகிறதா ?