Tuesday, November 5, 2013

கந்தர் அநுபூதி - இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ?

கந்தர் அநுபூதி - இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ?


மனைவியுடனோ, காதலியிடமோ பத்து பேர் முன்னிலையில் இருந்து பேசினால் இனிமை இருக்குமா ? தனிமையில் அவளோடு பேசினால் இனிமை இருக்குமா ? 

தனிமையில் பேசுவதில் தான்  சுகம்.

மனைவி மற்றும் காதலிக்கே அப்படி என்றால் இறைவனுக்கு எப்படி ?

இலட்சம் பேருக்கு நடுவில், கோவிலில், கும்பலுக்கு , கோஷத்துக்கு நடுவில் இறைவனோடு ஒன்ற முடியுமா ?

தனிமையில் இருந்து சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அது என்ன என்று தெரிய வரும். நண்பர்களிடம் விவாதித்து அறிய முடியாது. 

இறை அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். 

பாடல் 

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே

சீர் பிரித்த பின் 

தன்னந் தனி நின்று  அது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

பொருள் 

தன்னந் தனி நின்று = தனியாக நின்று, தனியாக இருந்து 

அது = அதனை 

தான் அறிய = தான் அறிந்து கொள்ள, அறிந்து கொண்டதை  

இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? = மற்றவர்களிடம் சொல்லித் தெரிய வைக்க முடியுமா 

மின்னும் கதிர் வேல் = மின்னல் ஒளி வீசும் 

விகிர்தா =  உருவம் மாறுபவன்  

நினைவார் = நினைப்பவர்கள் 

கின்னம் = இன்னல்கள் 

களையும் = களையும் 

க்ருபை = அன்பு 

சூழ் சுடரே = சூழும் சுடரே 




Monday, November 4, 2013

கந்தர் அநுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ?

கந்தர் அநுபூதி -  அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ?


எல்லாவற்றையும் அறிவால் அறிந்து  கொள்ள முடியுமா ? எல்லாம் தர்க்கத்தில் அடங்குமா ? அறிவால் அறிய முடியாதது என்று ஒன்று இருக்குமா ? அப்படி ஒன்று இருக்கும் என்பதை அறிவு அறியுமா ?

அதை அறிந்து கொள்ள முடியும் என்றால் அப்படி அறிவது எது ? அறிவா ?

வெறும் அறிவை மட்டும் கொண்டு அறியமுடியாது அது. அவன் அருள் இன்றி அவனை அறிய முடியாது என்கிறார்  அருணகிரி நாதர்.

பாடல்

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13

சீர் பிரித்த பின்

முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,

இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.


பொருள்

முருகன் = முருகன்

தனிவேல் முனி = தனித்துவமான வேலைக் கொண்ட முனிவன்

நம் குரு = அவன் நமது குரு. நமக்குத் சொல்லித் தரும் யாருமே குரு தான். என்னை கேட்டால் google  ம், விக்கி பீடியாவும் நமக்கு குருதான். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் அருணகிரி. குருவாய் வந்து ஆண்டு கொண்டார் மணிவாசகரை.

என்று = என்று


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ = அருளின் மூலமே அறிந்து கொள்ள முடியும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்

மிகச் சிறிய பொருள்களை சாதாரண கண்ணால் காண முடியாது. நுண்ணோக்கி (microscope ) வேண்டும். தூரத்தில் உள்ள பொருள்களை அறிய தொலை நோக்கி வேண்டும். அவனை அறிய அவன் அருள் வேண்டும். அததை அறிய அதற்குரிய உபகரணங்கள் வேண்டும்.


உரு அன்று = அது உருவம் உள்ளது அன்று. அப்படி என்றால் படங்களும், சிலைகளும் காண்பிப்பது அவன் உருவை அன்று. அவனுக்கு உருவம் இல்லை.

அரு அன்று = உருவம் இல்லாதது அருவம். அது அருவமும் அன்று.

உளது அன்று = உள்ளது அன்று

இலது அன்று = இல்லாததும் அன்று



இருள் அன்று, ஒளி அன்று = இருளும் அன்று, ஒளியும் அன்று

என நின்றதுவே = என நின்றது.

அது என்ன உரு அன்று, அரு அன்று, ஒளி அன்று, இருள் அன்று ...ஒரே குழப்பமாக  இருக்கறதே...

ஒரு குழப்பமும் இல்லை...ரொம்ப எளிதானது....

நம் உடலில் இடம் வலம் என்று இரண்டு பகுதிகள் இருக்கிறது அல்லவா ? அதில் குழப்பம் இல்லையே .

வலது எங்கே முடிகிறது ? இடது எங்கே ஆரம்பிக்கிறது ?

கை எங்கே முடிகிறது , விரல் எங்கே ஆரம்பிக்கிறது ?

நம்மால் சொல்ல முடியாது.

பகல் எந்த நொடியில் முடிந்து இரவு எந்த நொடியில் ஆரம்பிக்கிறது ?

சொல்ல முடியாது.

ஏன் சொல்ல முடியாது ?

வாழ்வில் நாம் காணும் பிரிவுகள் எல்லாம் பிரிவுகளே அல்ல. முழுமையான ஒன்றின் தொடர்ச்சிதான். நம் வசதிக்கு நாம் ஒன்றிற்கு வலது என்றும் மற்றதற்கு  இடது என்றும் பெயர் இட்டிருக்கிறோம். உடல் ஒன்று தான்.

நீங்கள் வலதும் இல்லை, இடதும் இல்லை. முன்னும் இல்லை பின்னும் இல்லை. நீங்கள் ஒன்றுதான்.

அருவமும், உருவமும் ஏதோ ஒன்றின் இரண்டு  முனைகள்.ஒரு முனை அருவம். ஒரு முனை உருவம்.

இரண்டும் இல்லை. இரண்டும் தான்.

உருவமும், அருவமும் ஏதோ ஒன்றின் வெளிப்பாடு.

அது வரை புரிகிறது.

அதற்கு மேல் புரிய அவன் அருள் வேண்டும் என்கிறார் அருணகிரி....


என்ன செய்யலாம் ?




பெரிய புராணம் - இறைவனைக் காண எத்தனை காலம் ஆகும்

பெரிய புராணம்  - இறைவனைக் காண எத்தனை காலம் ஆகும் 


இறைவன் இருக்கிறானா இல்லையா என்று வாதித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவன் இருக்கிறான் என்று வைத்துக் கொண்டால் அவனை காண எத்தனை ஆகும் ?

ஒரு பிறவி ? பல பிறவி ?

அவனைக் காண என்ன என்ன செய்ய வேண்டும் ?

ஞானம் வளர்க்க வேண்டும் ? தான தருமங்கள் செய்ய வேண்டும் ? பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும் ? தவம் செய்ய வேண்டும் ?


அவ்வளவு எல்லாம் வேண்டாம்...

ஆறே நாள்...தொடங்கிய ஆறே நாளில் இறைவனை கண்டார் கண்ணப்ப நாயனார்.

பெரிய ஞானி இல்லை. தானமும் தவமும் செய்யவில்லை. படிப்பறிவு கிடையாது.

புலால் உண்பார்.

உயர் குலப் பிறப்பு கிடையாது.

நாவுகரசருக்கும், மணிவாசகருக்கும் நாள் ஆனது.

கண்ணப்ப நாயனார் ஆறே நாளில் இறைவனை அடைந்தார்.

அவர் இறைவனை அடைந்தார் என்பதை விட இறைவன் அவரை வந்து அடைந்தார்.

கண்ணப்ப நாயனார் வாழ்க்கையைப் பற்றி தெய்வப் புலவர் சேக்கிழார் சொல்கிறார். அதில் இருந்து சில பாடல்கள்.

கண்ணப்ப நாயனாரின் பெட்ரோர் பற்றிய பாடல்

பாடல்


பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
 குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான் 
 வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்

 மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்

பொருள் உரை

தவம் முற்பிறப்பில் செய்தவனாயினும் (கண்ணப்ப நாயனாரின் தந்தை நாகன்), இந்தப் பிறவியின் சார்பால் குற்றம் செய்வதையே குணமாகக் கொண்டு வாழ்ந்தான். சிங்கம் போல கோபம் உள்ளவன். விற் தொழிலில் வல்லவன். அவன் மனைவி தத்தை என்பவள்.

பொருள்


பெற்றியால் = தன்மையால்

தவமுன் செய்தான் ஆயினும் = முற் பிறப்பில் தவம் செய்தவனாயினும். ஏன் முற்பிறப்பில் தவம் செய்தான் என்று கூறுகிறார் ? இந்தப் பிறவியில் ஒன்றும் செய்ய வில்லை என்று தெரிகிறது. ஆனால், கண்ணப்ப நாயனார் போன்ற சிறந்த மகனை பெற்று எடுத்ததால் அவன் முற்பிறப்பில் தவம் செய்திருக்க வேண்டும் என்று கொள்கிறார் சேக்கிழார்.

பேற்றைத் தவம் சற்றும் செய்யாத என்னை, பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா  என்பார் அருணகிரி


பிறப்பின் சார்பால் = (வேடுவர் குலத்தில் வந்து பிறந்த ) பிறப்பின் சார்பால்


குற்றமே குணமா வாழ்வான் = குற்றங்கள் செய்வதையே குணமாகக் கொண்டு வாழ்வான். உயிர் கொலை புரிவது குற்றம்.

கொடுமையே தலை நின்றுள்ளான் = கொடுமை செய்வதில் சிறந்து விளங்கினான்

வில் தொழில் விறலின் மிக்கான் = வில் தொழில் சிறந்து வெற்றி பெற்று நின்றான்

வெஞ்சின = வெம்மையான சினம் கொண்ட 

மடங்கல் = சிங்கம்

போல்வான் = போன்றவன்


மற்றவன் = அவனுடைய

குறிச்சி = குறிஞ்சி

வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் = வாழ்க்கை மனைவியும் தத்தை என்று சொல்பவள்.





Saturday, November 2, 2013

பெரிய புராணம் - நா அடங்கா முன்னம்

பெரிய புராணம்  - நா அடங்கா முன்னம் 



தாத்தா படுக்கையில் படுத்திருக்கிறார்.  ரொம்ப முடியவில்லை. தாகமாக இருக்கிறது. பசிக்கிறது. வயதாகி விட்டது என்பதற்காக பசியும் தாகமும் போயா விடுகிறது.

கொஞ்சம் கஞ்சி கொடு, தவிக்கிறது கொஞ்சம் தண்ணி தா என்று கேட்க்க நினைக்கிறார்...நாக்கு நடுங்குகிறது. பேச்சு வரவில்லை. எப்படி சொல்லி, என்ன கேட்பார். கேட்டால் கிடைக்கும். கேட்க முடியவில்லை.

பேசிய நாக்குதான்...இன்று பேச்சு வரவில்லை....

அப்படி ஒரு நாள் வருவதற்கு முன், அவன் பெயரை சொல்லிக் கொண்டிரு. பின்னாளில் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தால் தண்ணி கேட்க்கக் கூட நாக்கு உதவாமல் போகலாம்...அவன் பெயரை எங்கே சொல்வது....

 அப்போதைக்கு இப்போதே சொல்லி வையுங்கள்

பாடல்

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்றுநடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்தபாழ்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

பொருள்

கடுவடுத்த நீர்கொடுவா = கடுக்காய் என்று ஒரு காய் உண்டு. அதை தண்ணீரில் போட்டு வைப்பார்கள். அதற்க்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. அந்தத் தண்ணீரை கொண்டு வா

 காடி தா = காடி என்றால் புளித்த கஞ்சி. அதை கொண்டு வா 

என்று = என்று

நடுநடுத்து நாவடங்கா முன்னம் = சொல்லுவதற்குள், நாக்கு நடுங்கி சொல்ல முடியாமல் போவதற்கு முன்


பொடியடுத்த = பொடி என்றால் சாம்பல். சாம்பல் நிறைந்த

பாழ் கோட்டஞ் = பாழடைந்த கோட்டை (இடு காடு )

சேரா முன் = சேர்வதற்கு முன்னால்

பன் மாடத் = பல மாடங்கள் கொண்ட

 தென் குடந்தைக் = குடந்தைக்கு தென் புறம் உள்ள

கீழ்க்கோட்டஞ் = கீழ் கோட்டம் என்ற ஊரில் உள்ள அவன் பெயரை 

செப்பிக் கிட = சொல்லிக் கொண்டிரு

என்னடா இவன், நாளும் கிழமையுமாய் இந்த மாதிரி பாடலை எழுதுகிறானே என்று நினைப்பவர்களுக்கு ....

பயத்தில் பெரிய பயம் மரண பயம்.

அந்த பயத்தை வென்று விட்டால் வாழ்வில் வேறு எந்த பயமும் வராது.

பயப்படும் விஷயத்தை கண்டு ஓடினால் பயம் மேலும் அதிகம் ஆகும்.

இந்த நன் நாளில், எல்லா பயன்களும் உங்களை விட்டு ஓட, இந்த பாடல் அடிகோலட்டும்

"நாமங்கள் நவின்றேலோர் எம்பாவாய்"



நல்வழி - உரைத்தாலும் தோன்றாது உணர்வு

நல்வழி - உரைத்தாலும் தோன்றாது உணர்வு


பூக்காமலே காய்க்கும் மரங்கள் உண்டு. அது போல சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள். சில சமயம் நல்ல விதையை விதைத்தாலும், விதைத்த இடம் பழுதாக இருந்தால் செடி முளைக்காது. அது போல முட்டால்களிடமும்,  தீயவர்களிடமும் நல்லததை சொன்னாலும் அவர்களுக்கு மண்டையில் ஏறாது. அவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்...நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று.


பாடல்

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலுந் தோன்றா துணர்வு.


பொருள்


இராமாயணம் - நோக்கியதும் கண்டதும்

இராமாயணம் - நோக்கியதும் கண்டதும் 


இராமனும் சீதையும் கானகதில் போய் கொண்டிருக்கிறார்கள். நாட்டுப் பிரச்னை இல்லை, வீட்டுப் பிரச்சனை இல்லை. அவனும் அவளும் மட்டும். துணைக்கு இலக்குவன்.

அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று கம்பன் காட்டுகிறான்.

அன்புள்ளவர்கள் அருகில் இருந்தால் கானகம் கூட சொர்க்கம் தான்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு பெரிய ஏரி. அந்த ஏரியில் நிறைய தாமரை மலர்கள் பூத்து இருக்கின்றன. அந்த ஏரியில் சக்கர வாகம் என்ற பறவைகள் தங்களுடைய வளைந்த கழுத்துகளை வளைத்து கண் மூடி உறங்கிக் கொண்டிருகின்றன. அதன் அந்த வளைந்த உருவத்தை பார்க்கும் போது இராமனுக்கு சீதையின் மார்புகளை பார்க்கும் எண்ணம் வருகிறது. அங்கிருந்த பெரிய குன்றுகளை பார்க்கும் போது சீதைக்கு இராமனின் உயர்ந்த தோள்கள் நினைவுக்கு வருகிறது. அந்த தோள்களின் மேல் தன் கண்ணை வைத்தாள் ....

தலைவனும் தலைவியும், தனிமையில் ஒருவரை ஒருவர் கண்டு இரசித்து இன்புற்றதை கம்பன் எவ்வளவு அழகாகச் சொல்கிறான்....


பாடல்



நாளம்கொள் நளினப் பள்ளி, 
     நயனங்கள் அமைய, நேமி 
வாளங்கள் உறைவ கண்டு, 
     மங்கைதன் கொங்கை நோக்கும், 
நீளம்கொள் நிலையோன்; மற்றை 
     நேரிழை, நெடியநம்பி 
தோளின்கண் நயனம் வைத்தாள், 

     சுடர்மணித் தடங்கள் கண்டாள்.

பொருள்



நாளம் கொள் = நாளம் என்றால் தண்டு. நீண்ட தண்டினை கொண்ட 

நளினப் = மென்மையான

பள்ளி = படுக்கை. தாமரை மலர்களால் ஆன படுக்கை.


நயனங்கள் = கண்கள்

அமைய = அமைதி உற ...அதாவது தூங்க

நேமி வாளங்கள் = சக்ர வாகம் என்ற ஒரு வகை நீர் பறவை

உறைவ கண்டு = இருப்பதைக் கண்டு

மங்கைதன் கொங்கை நோக்கும்  = சீதையின் மார்பை நோக்கினான் இராமன்

நீளம் கொள் நிலையோன் = நீண்ட வில்லை கொண்ட இராமன்

மற்றை நேரிழை = அப்போது சீதை

நெடிய நம்பி = உயர்ந்த இராமனின்

தோளின் கண் நயனம் வைத்தாள் = தன் பார்வையை அவன் மேல் வைத்தாள்

சுடர்மணித் = ஒளி வீசும்

தடங்கள்  = குன்றுகளை

கண்டாள் = பார்த்தாள் 


Friday, November 1, 2013

கந்தர் அலங்காரம் - புளித்த தேன்

கந்தர் அலங்காரம் - புளித்த தேன் 




பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!

சில சமயம் அல்வா,  குலோப் ஜாமூன் போன்ற இனிப்புகளை சாப்பிட்டபின் காப்பி குடித்தால் அது இனிப்பாக இருக்காது. காப்பியில் சர்க்கரை இருந்தாலும் அதற்கு முன் சாப்பிட்ட அதிக இனிப்பான பலகாரத்தால் காப்பி சுவை  குன்றுகிறது.

முருகன் அருள் பெற்ற பின், அருணகிரிக்கு இந்த உலகில் எல்லாமே சுவை குறைந்து விட்ட மாதிரி தெரிகிறது.

அதிக பட்ச இனிப்பு உள்ள தேனும் கரும்பும் அவருக்கு கசக்கிறது. அப்படி என்றால் முருகன் அருள் அவ்வளவு சுவை.


பொருள்

பெரும் = பெரிய

பைம் = பசுமையான

புனத்தினுள் = திணை புனத்தில்

சிற்றேனல் = ஏனல் என்றால் கம்பு. கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள் இவற்றை

காக்கின்ற = காவல் காக்கின்ற

பேதை = வெகுளிப் பென்னாணன வள்ளியின்

கொங்கை = மார்புகளை

விரும்பும் = விரும்பும்

குமரனை = குமாரனானான முருகனை

மெய் அன்பினால் = மெய் அன்பினால்

மெல்ல மெல்ல உள்ள = மெல்ல மெல்ல நினைக்க

அரும்பும் = ஒரு பூ அரும்பு மெல்ல மெல்ல அரும்புவதைப் போல, மலர்வதைப் போல

தனி = தனிச் சிறப்பான

பரமானந்தம்! = பரமானந்தம்

தித்தித்தது = தித்தித்தது

அறிந்தவன்றோ! = அறிந்த அன்றே

கரும்பும் துவர்த்து = கரும்பு துவர்த்து

செந்தேனும் புளித்து = சுவையான தேன் புளித்து

அற கைத்ததுவே = ரொம்ப கசந்து போனது

உலகத்தில் உள்ள பொருள்கள் மேல் , அனுபவங்களின் மேல் இன்பமும், சுவையும் இருந்தால்  இறை அருளின் சுவை இன்னும் அறியப் படவில்லை என்று அர்த்தம்.

இறை அனுபவம் வந்து விட்டால் இந்த உலகின் சுவைகள் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.

பற்றறுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை - பற்றற்றான் பற்றினை பற்றி விட்டால்.

பெரிய ஒன்று கிடைத்த பின் மற்றவை எல்லாம் சிறிதாகப் போய் விடும்.

சிந்திப்போம்