Monday, December 9, 2013

வில்லி பாரதம் - கர்ணன் கேட்ட வரம்

வில்லி பாரதம் - கர்ணன் கேட்ட வரம் 


போர்க்களத்தில், அர்ஜுனனின் அம்பு பட்டு, இரத்தம் பெருக்கெடுக்க, தளர்ந்து கீழே விழுந்து விடுகிறான் கர்ணன்.

அப்போது, அங்கே வேதியர் வடிவில் வந்த கண்ணன் எனக்கு நீ  ஏதாவது தர்மம் தரவேண்டும் என்று கேட்கிறான்.

அப்போது, கர்ணன் அந்த வேதியரிடம் ஒரு வரம் கேட்கிறான்.

"நான் இதுவரை என்னிடம் வேண்டும் என்று கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லமால் வழங்கி இருக்கிறேன். இன்று, இந்த யுத்த களத்தில், நீங்கள் ஏதாவது கேட்டு நான் தர முடியாத நிலையை உண்டாக்கி விடாதீர்கள்...என்னால் என்ன தரமுடியுமோ அதையே தயவு செய்து கேளுங்கள் " என்று தன்னிடம் தானம் வேண்டி வந்த வேதியரிடம் கர்ணன்  வேண்டினான்.

அதை கேட்ட அந்த வேதியனும், "நீ சேர்த்து வைத்திருந்த புண்ணியம் அத்தனையும் தருக " என்று கேட்டான்.

பாடல்

என்று கொண்டு, அந்த அந்தணன் உரைப்ப, இரு செவிக்கு அமுது 
                                எனக் கேட்டு, 
வென்றி கொள் விசயன் விசய வெங் கணையால் மெய் தளர்ந்து 
                                இரதமேல் விழுவோன், 
'நன்று!' என நகைத்து, 'தரத் தகு பொருள் நீ நவில்க!' என, 
                                நான் மறையவனும், 
'ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!' என்றலும், 
                                உளம் மகிழ்ந்தான்.

பொருள்


என்று கொண்டு = என்று கொண்டு

அந்த அந்தணன் உரைப்ப = அந்த வேதியன் சொன்னதும்

இரு செவிக்கு அமுது எனக் கேட்டு = இரண்டு காதிலும் அமுதம் பாய்ந்தது போல உணர்ந்து

வென்றி கொள் = வெற்றி பெறும் 

 விசயன் = அர்ஜுனனின்

விசய வெங் கணையால் = பலமான அம்புகளால்

மெய் தளர்ந்து = உடல் தளர்ந்து

இரதமேல் விழுவோன் = இரதத்தின் மேல் விழுகின்ற கர்ணன்
,
'நன்று!' என நகைத்து = நன்று என மகிழ்ந்து

 'தரத் தகு பொருள் நீ நவில்க!' என = என்னால் தரக் கூடிய பொருளை நீ கேள் என்றான்

நான் மறையவனும் = அந்த வேதியனும்

'ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!' என்றலும் = நீ சேர்த்து வைத்த புண்ணியம் அத்தனையும் தருக என்ற கேட்டான் ; அதைக் கேட்டதும்

உளம் மகிழ்ந்தான்.= கர்ணன் உள்ளம் மகிழ்ந்தான்

வாழ் நாள் எல்லாம் சேர்த்து வைத்த புண்ணியம் அத்தனையும் போய் விடும். இனி புண்ணியம்  செய்யவும் வழி இல்லை. இருந்த போதும், அவன் மனம் மகிழ்ந்தது.

என்ன ஒரு மனம் அவனுக்கு...



Sunday, December 8, 2013

திருக்குறள் - நினைப்புதான் பொழப்ப கெடுக்கும்

திருக்குறள் - நினைப்புதான் பொழப்ப கெடுக்கும் 


சில பேருக்கு எதையாவது கேட்டால் , பார்த்தால் உடனே அதை செய்ய வேண்டும் என்று தோன்றும்.

மற்றவன் சட்டம் படித்தால், தானும் படிக்க வேண்டும் என்று நினைப்பது.

மற்றவன் கராத்தே படித்தால் , தானும் அதை படிக்க வேண்டும் என்று நினைப்பது.

உலகில் யார் யார் என்ன என்ன செய்கிறார்களோ அதை எல்லாம் தானும் செய்ய நினைப்பது மதியீனம்.

நம்மால் என்ன செய்ய முடியும், நமக்கு என்ன வலிமை இருக்கிறது, என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.

அப்படி, தன் வலிமை என்ன என்று அறியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டு எடுத்த காரியத்தை முடிக்காமல் பாதியில் விட்டு நட்டப் பட்டவர்கள் பலர்.

பாடல்


உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.


சீர் பிரித்த பின்

உடைத் தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி 
இடைக் கண் முரிந்தார் பலர்.

பொருள் 

உடைத் தம் வலி = தம்முடைய வலிமையை

அறியார் = அறியாமல்

ஊக்கத்தின் = ஆர்வத்தால்

ஊக்கி = முனைந்து

இடைக் கண்  = பாதியில்

முரிந்தார் பலர் = தொடங்கிய காரியத்தை கை விட்டவர்கள் பலர்

வெறும் ஆர்வம் மட்டும் போதாது. செய்து முடிக்கும் வலிமை வேண்டும்.

அது என்ன வலிமை ?

வலிமை பற்றி பின்னொரு குறளில் தனியாக சொல்கிறார்  வள்ளுவர். அதை இன்னொரு ப்ளாகில்  பார்ப்போம்.

இரண்டாவது, வள்ளுவர் அப்படி காரியம் செய்யத் தொடங்கியவர்கள் எல்லோரும் தோல்வி அடைவார்கள் என்று சொல்லவில்லை. அப்படி தோற்றவர்கள் "பலர்"  என்கிறார். ஆர்வத்தை மட்டுமே கொண்டு சிலர் வெற்றி அடைந்திருக்கலாம்... ஆனால் பெரும்பாலும் அது தோல்வியில் தான் முடியும். 




Saturday, December 7, 2013

நன்னெறி - சொல்லும், சொல்பவரும்

நன்னெறி - சொல்லும், சொல்பவரும் 


பிள்ளைகளுக்கு பெற்றோரும் பெரியவர்களும் சொல்லும் அறிவுரைகள் மற்றும் நல்ல செய்திகள் பிடிக்காது. "இந்த வயசானவங்க எப்ப பார்த்தாலும் இப்படித்தான் எதையவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்" என்று அலுத்துக் கொள்வார்கள்.

ஆசிரியரோ, பெற்றோரோ சொல்லும் கடினமான சொற்கள் அவர்களுக்குப் பிடிக்காது. அதே சமயம் உடன் படிக்கும் மாணவர்கள் "சினிமாவுக்குப் போகலாம், தம் அடிக்கலாம்" என்று சொன்னால் ஆஹா இவன் அல்லவோ என் நலம் விரும்பி என்று அவன் பின்னே செல்வார்கள்.

பிள்ளைகள் மட்டும் அல்ல, நாமும் அப்படித்தான்.

நம் நலம் விரும்புவர்கள் சொல்லும் வன் சொற்கள் பிடிக்காது. மற்றவர்களின் இனிய சொற்கள் பிடிக்கும்.

அப்படி இருக்கக் கூடாது.

சிவ பெருமானை , அர்ஜுனன் வில்லை எறிந்து  தாக்கினான். அது சிவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மன்மதன் மலர் அம்பை சிவன் மேல் எறிந்தான். அதை கண்டு பொறுக்காமல், சிவன் அவனை நெற்றிக் கண்ணால் எரித்து விட்டார். 


பாடல்

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு 
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு. 

பொருள்

மாசற்ற = குற்றம் அற்ற
நெஞ்சுடையார் = மனம் உள்ளவர்கள்
வன்சொலினிது = வன் சொல் இனிது = அவர்கள் சொல்லும் சொற்கள் கடினமாய் இருந்தாலும் நல்லது

ஏனையவர் = மற்றவர்கள்
பேசுற்ற = சொல்லிய
இன்சொல் = இனிமையான சொல்
பிறிதென்க = இனிமாயில் இல்லாதவை என்று உணர்க

ஈசற்கு = சிவனுக்கு
நல்லோன் = நல்லவனான
எறி சிலையோ = எறிந்த வில்லா ?
நன்னுதால் = அழகிய நெற்றியை கொண்ட பெண்ணே
ஓண்கருப்பு = உயர்ந்த கரும்பு
வில்லோன் = மன்மதன்
மலரோ விருப்பு = மலரா விரும்புதல் தரக் கூடியது ?


Friday, December 6, 2013

இராமாயணம் - இன் உரை நல்கு நாவால்

இராமாயணம் - இன் உரை நல்கு நாவால் 


சுக்ரீவனுக்கு அரசை அளித்த பின், இராமன் அவனுக்கு சில அறிவுரைகள் கூறுகிரான்.

குரங்குக்கு கூறிய அறிவுரை என்றாலும் நமக்கும் அது பொருந்தும் தானே.

இந்த உலகம் ஒன்றை பலவாக எண்ணி பொருள் கொள்ளும். புகை இருந்தால் அங்கே நெருப்பு இருக்கும் என்று யூகிக்கும். மற்றவர்களுக்குத் தெரியாது என்று எண்ணி தவறைச் செய்யாதே. உன்னை சுற்றி பகைவர்கள் இருப்பார்கள். அவர்களாலும் சில பயன்கள் விளையும். யார் மேலும் கோபத்தை காட்டாதே. எப்போதும் சிரித்த முகத்துடன் இரு. மனதில் அன்பு இல்லாவிட்டாலும், பகைவர்களிடமும் இனிய சொற்களை நாவால் கூறு.



பாடல்


''புகை உடைத்து என்னின், உண்டுபொங்கு
      அனல் அங்கு'' என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்;
     நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே;
பகையுடைச் சிந்தையார்க்கும், பயன்
      உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி, இன்

      உரை நல்கு, நாவால்.


பொருள்

'புகை உடைத்து என்னின் = புகை இருந்தால்
உண்டு = இருக்கும்

பொங்கு அனல் அங்கு = கொதிக்கும் நெருப்பு அங்கு

என்று உன்னும் என்று நினைக்கும்

மிகை உடைத்து உலகம் = அறிவை உடையது இந்த உலகம். அதாவது கண்ணால் காண்பது மட்டும் அல்ல, அனுமானமாக யூகித்து அறியும் அறிவும் உண்டு. "மிகை" என்றால் அதிகமான. காண்பதற்கு மேலும் உள்ள அறிவு. புகை என்றால் புகை மட்டும் அல்ல. அங்கு நெருப்பும் இருக்கும் என்று உணரும் அறிவு மிகை அறிவு.

நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே = நூலோர் சொன்ன வினயங்களும் வேண்டும்.  வினையும் என்றால் சூழ்ச்சி. அரசர்க்கு கொஞ்சம் சூழ்ச்சியும் வேண்டும். அனுபவ அறிவோடு, புத்தக அறிவும் சேர வேண்டும்.


பகையுடைச் சிந்தையார்க்கும் = உன் மேல் பகை உணர்வு கொண்டவர்களுக்கும்

 பயன் உறு பண்பின் = அவர்களால் பெற்ற பயன்களுக்கு ஏற்ப

தீரா நகையுடை = எப்போதும் சிரிப்பை கொண்ட

முகத்தை ஆகி = முகத்துடன்

இன் உரை நல்கு, நாவால் = நாக்கால் நல்ல சொற்களை கூறு.

மனதில் இல்லாவிட்டாலும், வாயால் சொல்லு.

சொல்லுவது அறத்தின் நாயகன்.

நம் மேல் பகை உணர்வு கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களாலும் சில பயனிருக்கும்.  

எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் இனிய சொற்களை கூறு.


Tuesday, December 3, 2013

நன்னெறி - கதிர் வரவால் பொங்கும் கடல்

நன்னெறி - கதிர் வரவால் பொங்கும் கடல் 


கடுமையாக பேசி காரியம் சாதிக்க முடியாது. கோபப் பட்டு, கடுமையான சொற்களை கூறி , மிரட்டி காரியம்  சாதிக்க முடியாது.

சூரியன் மிகப் பெரியதுதான், மிகுந்த சக்தி வாய்ந்ததுதான் ஆனால் கடல் சூரியனின் கதிருக்கு பொங்காது. குளிர்ந்த கதிரை வீசும் நிலவின் கதிருக்கு கடல் பொங்கும்.

மக்கள் இனிய சொல்லுக்கு தலை சாய்ப்பார்கள்.....


பாடல்

இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய் 
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல். 

பொருள் 

இன்சொலா லன்றி = இன் சொல்லால் அன்றி
இருநீர் வியனுலகம் = இரண்டு நீரைக் கொண்ட இந்த பெரிய உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே = வன்மையான சொற்களால் என்றும் மகிழாது
பொன்செய் = பொன்னால் செய்யப்பட்ட
அதிர்வளையாய் = அதிரும் வளையலை அணிந்த பெண்ணே
பொங்காது  அழல் கதிரால் = அனல் வீசும் கதிரால் பொங்காது
தண்ணென் = குளிர்ந்த
கதிர்வரவால் = கதிர்களை வீசும் நிலவின் வரவால்
பொங்குங் கடல் = பொங்கும் கடல்

இனிய சொற்களை பேசிப் பழகுங்கள். உலகம் உங்கள் சொல்லுக்கு தலை ஆட்டும்.

(மூணாபில் படித்த பாடல்...ஞாபகம் இருக்கிறதா ?...:))


Sunday, December 1, 2013

இராமாயணம் - காமம் இல்லை எனின்

இராமாயணம் - காமம் இல்லை எனின் 


துன்பம் என்ற சொல்லே இல்லாமல் போய் விடும் எப்போது என்றால் பெண்கள் மேல் கொள்ளும் காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால். அந்த காமம் இல்லாவிட்டால் நரகமும் இல்லை.

அப்படி என்றால் உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காமமே காரணம். இந்த உலகில் மட்டும் அல்ல, இறந்த பின் நரகம் செல்வதற்கும் காமமே காரணம்.

தூம கேது என்பது ஒரு வால் நட்சத்திரம். அது தோன்றும் போதெல்லாம் பூமியில் பெரிய அழிவு தோன்றியிருக்கிறது. அது போல மங்கையர் மேல் காமம் கொள்ளும் போதெலாம் பேரழிவு தோன்றுகிறது.

பாடல்

தூமகேது புவிக்கு எனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனின், கடுங் கேடு எனும்
நாமம் இல்லை; நரகமும் இல்லையே.’

பொருள்


நன்னெறி - வாழ்க்கை என்னும் அதிசயம்

நன்னெறி - வாழ்க்கை என்னும் அதிசயம் 


வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு மிகப் பெரிய அதிசயம்.

வெளியில் விட்ட மூச்சு மீண்டும் உள்ளே வருமா ? உள்ளே வரும் என்று என்ன உத்தரவாதம்.

போன நொடி துடித்த இதயம் அடுத்த நொடி அடிக்குமா ? அடிக்க வேண்டும் என்ற என்ன கட்டாயம் ?

யாரைக் கேட்டு இது எல்லாம் நடக்கிறது ? நாம் சொல்லித்தான் நடக்கிறது என்றால் கடைசியில் விட்ட மூச்சை ஏன் மீண்டும் இழுக்க முடியவில்லை ?

ஒவ்வொரு வினாடியும் இந்த உடலில் உயிர் உலவுவது மிகப் பெரிய அதிசயம்.

இந்த உடலை விட்டு உயிர்  போவது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை.

ஒன்பது வாயில்கள் இந்த உடலில். ஒன்றுக்கும் பூட்டு கிடையாது. இந்த ஓட்டை பலூனில் காற்று நிற்பது அதிசயமா , காற்று இறங்கிப் போவது அதிசயமா ?

பாடல்

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில் 
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.