Wednesday, March 5, 2014

திருப்புகழ் - திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே.

திருப்புகழ் - திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.


நம்ம திருப்பரங்குன்றம் !

சண்டைக்கு வந்த அசுரர்களை வேல் படையால் அழித்தவனே. திறமை மிக்கவனே. அறிவில் சிறந்தவனே. முத்துக்கள் நிரம்பிய சோலைகள் உள்ள திருப்பரங்குன்றத்தில் எழுந்து அருளிய பெருமாளே

பாடல்

திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற்கொ டும்படை விடுசர வணபவ
    திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே
   செழித்த தண்டலை தொறுமில கியகுட
    வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
    திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.

சீர் பிரித்த பின்

திடத்து எதிர்த்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற் கொடும் படை விடும் சரவணபவ
    திறல் குகன் குருபரன் என வரும் ஒரு முருகோனே
   செழித்த தண்டலை தோறும் இலகிய  குட
    வளைக் குலம் தரு தரளமும்  மிகு உயர் 
    திருப்பரங் கிரி வளநகர் மருவிய பெருமாளே.


பொருள்

திடத்து = உறுதியுடன்

எதிர்த்திடும் = எதிர்த்து நிற்கும்

அசுரர்கள் பொடிபட = அசுரர்கள் பொடிப் பொடியாகும் படி 

அயிற் = வேல்

கொடும் படை = சக்தி வாயிந்த படையை

விடும் = விடும்

சரவணபவ = சரவண பொய்கையில் அவதரித்தவனே  (பவ என்றால் பிறப்பு. "என் பவம் தீர்பவனே" என்பார் மணிவாசகர் )

 திறல் குகன் = திறமையான குகப் பெருமாளே

குருபரன் = அனைவர்க்கும் ஞான குருவானவனே

என வரும் = என்று வரும்

ஒரு முருகோனே = முருகப் பெருமானே

செழித்த= செழித்து

தண்டலை தோறும் = குளிர்ந்த சோலைகள் தோறும்

 இலகிய = விளங்கும்

 குட வளைக் = வளைந்த 

 குலம் தரு தரளமும் = சங்குகள் தரும் முத்துகள்

மிகு = மிகுந்த

உயர் = உயர்வான

திருப்பரங் கிரி = திருபரங்குன்றம் என்ற மலையில்

வளநகர் =  வளமையான நகரில்

மருவிய பெருமாளே = இருக்கும் பெருமாளே

அடுத்த முறை திருபரங்குன்றம் பக்கம் போகும் போது, அருண கிரி நாதர் அங்கு நடந்திருக்கிறார் என்று நினைத்துப் பாருங்கள்.




Tuesday, March 4, 2014

நீத்தல் விண்ணப்பம் - இன்னும் காட்டு

நீத்தல் விண்ணப்பம் - இன்னும் காட்டு 


நம்மிடம் பல வேண்டாத கொள்கைகள், செயல்கள், பழக்கங்கள் இருக்கின்றன. வேண்டாத என்றால் நம் இன்பத்திற்கு இடையுரான, நம் முன்னேற்றத்திற்கு தடையானவை.

இவற்றை எப்படி விடுவது, எப்படி நலனவற்றை ஏற்பது ?

நல்லன அல்லாதவற்றை விட்டு நல்லவற்றை எப்படி கைக் கொள்வது ?


வாழ்க்கையின் மிகப் பெரிய சிக்கல் இது.

மாணிக்க வாசகர் வழி காட்டுகிறார்.

முதலில் தவறுகள் செய்யும் இடத்தை விட்டு விலக வேண்டும். கள்ளுக் கடையில் நின்று கொண்டு சாராயத்தை எப்படி விடுவது என்று யோசித்தால் நடக்குமா ?

சரி, தவறான சூழ்நிலையை விட்டு விலகி ஆயிற்று....அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

நல்லவர்கள் மத்தியில் போய் இருக்க வேண்டும். அவர்களோடு பழக வேண்டும். அவர்கள் செய்யும் செயல்களை, சொல்லுவதை கேட்க வேண்டும்.

நாள் ஆக நாள் ஆக நம்மை அறியாமலேயே கெட்டவை விலகி, நல்லன நிகழத் தொடங்கும்.


பாடல்

கொழு மணி ஏர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று, குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய்? மெய்ம் முழுதும் கம்பித்து,
அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து, ஆட்கொண்டருளி, என்னைக்
கழு மணியே, இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே.

பொருள் 

கொழு மணி = சிறந்த மணிகள் போன்ற 

ஏர் நகையார் = அழகிய சிரிப்பை கொண்ட பெண்கள் . ஏர் என்பதற்கு கூரிமையான, ஆழமாக மனதை உழும் என்று பொருள் கொள்ளலாமோ?


(மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் 
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் 
நாராயணனே நமக்கே பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்)

கொங்கைக் = மார்புகள் என்ற 

குன்றிடைச் சென்று = இரண்டு குன்றுகள் இடையே சென்று

குன்றி = துவண்டு (பலம் குன்றி )

விழும் அடியேனை  = விழும் அடியவனாகிய என்னை

விடுதி கண்டாய்?  = விட்டு விடுவாயா

மெய்ம் முழுதும் கம்பித்து = உடல் முழுதும் நடுங்கி

அழும் = கண்ணில் நீர் ஆறாக பெருக்கெடுக்கும்

அடியாரிடை = அடியவர்கள் மத்தியில்

ஆர்த்து வைத்து = என்னை வைத்து

ஆட்கொண்டருளி என்னை = என்னை ஆட் கொண்டு அருளி

கழு மணியே = தூய்மையான மணி போன்றவனே 

இன்னும் காட்டு = மேலும் காட்டுவாய்

கண்டாய் நின் புலன் கழலே = நான் முன்பு கண்ட உன் திருவடிகளை

இறைவன், மாணிக்க வாசகருக்கு தன் திருவடிகளை முதலில் காட்டி அருளினார். அதை மீண்டும் காட்டு என்கிறார்.

பெண் சுகம் என்ற சிற்றின்பத்தில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடியை அடைய  அடியார்கள் மத்தியில் இருக்க வேண்டும். 

நீங்கள் இறைவனை நம்புகிறீர்களோ இல்லையோ. 

நீங்கள் அடியவர்களை நம்புகிறீர்களோ இல்லையோ.

ஒரு புறம் பெண் சுகம் என்ற சிற்றின்பம். மறு புறம் இறைவன் திருவடி என்ற பேரின்பம். 

இரண்டையும் இணைப்பது நல்லவர்களின் கூட்டு.

அல்லனவற்றை தாண்டி நல்லனவற்றை அடைய நல்லவர்களின் கூட்டு உதவும்  என்ற வரையில் நீங்கள் இந்தப் பாடலை எடுத்துக் கொள்ளலாம். 

தவறு செய்து பின் தன் காலைப் பிடித்த சந்திரனை இறைவன் தன் தலை மேல் தூக்கி  வைத்தான். 

யார் அறிவார், நீங்கள் பற்றித் தொடரும் நல்லவர்கள் உங்களை , நீங்களே எண்ணிப் பார்க்காத  இடத்திற்கு உங்களை கொண்டு ஏற்றி விடக் கூடும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை என்பார் வள்ளுவர். 


Monday, March 3, 2014

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி



குடத்தை வென்றிடு கிரியென எழில்தள
    தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
    குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு வடிவேலா
   குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
    அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
    குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி  மருகோனே

சீர் பிரித்த பின் 

குடத்தை வென்றிடும் கிரியென எழில் தள தளத்த 
கொங்கைகள் மணி வடம் அணி சிறு குறத்தி 
கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடிவேலா 
குரை கருங்கடல் திரு அணை என முன்னம் 
அடைத்து இலங்கையின் அதிபதி நிசி சரர் 
குலத்தோடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே 


வள்ளியை அணைக்கும் போது முருகனுக்கு அவன் தோள்கள் துவளுகிறது. 

அந்த வள்ளி எப்படி இருக்கிறாள் ?

குடத்தை வென்றிடும் மலை போன்ற மார்புகள். அதில் மணிகள் கோர்த்த சங்கிலியை  அணிந்து இருக்கிறாள். அவளின் சொல் கரும்பைப் போல இனிக்கிறது. அவளை அணைக்கும் போது தோள்கள் வலுவிழந்து துவளும்  அந்த முருகன் யார் ?

அன்று அலை கடலை அணைகட்டி கடந்த திருமாலின் மருமகனே.

குடத்தை வென்றிடும் = குடத்தை விட எடுப்பாக அழகாக 

கிரியென = மலையை போல 

எழில் = அழகுடன் 

தள தளத்த = தள தள என்று இருக்கும் 
 
கொங்கைகள் = மார்புகள் 

மணி = மணிகள் சேர்ந்த 

வடம் = மாலை 

 அணி = அணியும் 

சிறு குறத்தி = சிறிய குற மகள்
  
கரும்பின் = கரும்பை விட 

மெய் துவள் = மெய் துவள 

புயன் = புயங்களை கொண்ட 

என வரு வடிவேலா = என்று வருகின்ற வடி வேலனே 

குரை = அலை பாயும் 

கருங்கடல் = கடலை 

திரு அணை = பெரிய அணைகட்டி 

என முன்னம் = முன்பு 
 
அடைத்து = அடைந்து 

இலங்கையின் அதிபதி = இராவணனை 

நிசி சரர் = அரக்கர்   (?)
 
குலத்தோடும் பட = குலத்தோடு அழிய 

ஒரு கணை விடும் = ஒரு அம்பை விடும்  

அரி = ஹரி, திருமாலின்  

மருகோனே = மருமகனே 


நாலாயிர திவ்ய பிரபந்தம் - அறிவென்னும் தாழ் கொளுவி

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அறிவென்னும் தாழ் கொளுவி 


இறைவன் காண்பதற்கு அரியவன். அவனை கண்டவர் யாரும் இல்லை. அப்படியே அவனை அறிந்தாலும், அறிந்ததை சொல்லுவது ஒன்றும் அவ்வளவு எளிது அல்ல என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இப்படி பயமுறுத்தினால் யார் அந்த இறைவனைத் தேடித் போவார்கள் ?

நமக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. வேலை, பிள்ளைகளின் படிப்பு, தொழில்,  ஆரோக்கியம்,பணம், உறவுகளின் நெருக்கடி என்று பலப் பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு  தவிக்கிறோம்.

இதில், இப்படி ஒரு சிக்கலான கடவுளை யார் தேடித் போவார்கள் ?

பேயாழ்வார் சொல்கிறார்...

அவனை காண்பது அப்படி ஒன்றும் கடினமான செயல் அல்ல.

நம் புலன்கள் நாளும் நம் கட்டுப்பாட்டை விட்டு தறி கெட்டு ஓடுகின்றன.

அதை முதலில் கட்டுப் படுத்த வேண்டும்.

எப்படி ?

இரண்டு கருவிகளைச் சொல்கிறார்.

ஒன்று அடக்கம். இரண்டாவது அறிவு.

அடக்கம் என்ற கதவைச் சாத்தி, அறிவு என்ற தாழ்பாழை போட்டு விட்டால் புலன்கள் எப்படி  ஓடும்  ?

புலன்களை அப்படி கட்டுப் படுத்திய பின், வேதங்களை ன்று கற்று உணர்ந்தால் அவனை நாள் தோறும் காணலாம்  என்கிறார்.

புலன்களை கட்டுப் படுத்தாமல் வேதங்களை கற்று புண்ணியம் இல்லை.

பாடல்

அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,
செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் படி.

பொருள்

அறிவென்னும் = அறிவு என்கின்ற

தாள் = தாழ்பாழை

கொளுவி = மாட்டி.  கொளுவுதல் என்பது ஒரு அருமையான தமிழ் சொல். ஆடு மாடுகளுக்கு இல்லை பறிப்பவர்கள் கையில் ஒரு நீண்ட குச்சியும், அதன் முனையில் வளைந்த ஒரு சிறிய கத்தியும் இருக்கும். சிறு கிளைகளில் அவற்றை மாட்டி இழுத்தால், கிளை உடைந்து விழும். அந்த பொருளுக்குப் பெயர் "கொளு".  மாட்டுதல், அடைத்தல் .

ஐம்புலனும் தம்மில், = ஐந்து புலன்களையும் தனக்குள்

செறிவென்னும்= அடக்கம் என்ற

திண் கதவம் செம்மி = வலுவான கதவை அடைத்து

மறையென்றும் = மறை என்றும். வேதங்களை தினமும்

நன்கோதி = நன்கு ஓதி

நன்குணர்வார் = நன்றாக உணர்வார்

காண்பரே = காண்பார்களே

நாடோறும் = நாள் தோறும்

பைங்கோத வண்ணன் படி = அழகிய கடலின் நிறம் கொண்ட அவனை


போகும் ஊருக்கு வழி சொல்லியாகி விட்டது. 

போவதும் , போகாமல் மேலும் மேலும் வழி கேட்டுக் கொண்டிருப்பதும் உங்கள்  கையில் இருக்கிறது. 


திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி 


விலை மகளைப் பற்றி கூறும் அதே பாடலில் இறைவனையும் வணங்கும் கலை அருணகிரி நாதருக்கு கை வந்தது.




விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
    மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மையல்
    விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே
   விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
    மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
    விரைப்பதந்தனில் அருள்பெற நினைகுவ துளதோதான்

சீர் பிரித்த பின் :

விடத்தை வென்றிடும் படை விழி கொண்டு உளம் 
மருட்டி வண் பொருள் கவர் பொழுதில் மையல் 
விருப்பு எனும் படி மடி மிசையினில் விழு தொழில் தானே 
விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் 
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை 
விரைப் பதம் தனில் அருள் பெற நினைக்குவது உளதோ தான் 

அப்பாட, கொஞ்சம் மூச்சு  வருகிறது.

பொருள் 

விடத்தை  = விஷத்தை 

வென்றிடும் = வெற்றி கொண்டிடும் 

படை விழி  கொண்டு = படை போன்ற விழிகளை கொண்டு 

உளம் மருட்டி = (நம்) உள்ளத்தை மயக்கி 

வண் பொருள் கவர் பொழுதில் = நம்மிடமுள்ள பொருள்களை கவர்ந்து கொள்ளும் பொழுதில் 

மையல் = ஆசை, காமம் 

விருப்பு = விருப்பம் 

எனும் படி = என்றவற்றில் 

மடி = சோம்பிக் கிடத்தல் 

மிசையினில் விழு தொழில் தானே = கிடந்து அழுந்தி கிடப்பதே வாடிக்கையாய் கொண்ட 
 
விளைத்திடும் = அவற்றை விளைவிக்கும் 

பல கணிகையர் = பல விலை மகளிர் 

தமது பொய் மனத்தை = அவர்களின் பொய்யான மனதை 

நம்பிய = உண்மை என்று நம்பிய 

சிறியனை = அறிவில் சிறியவனை 

வெறியனை = சரி எது தவறு என்று அறியாத வெறி கொண்டவனை 

விரைப் பதம் தனில் = உன்னுடைய திருவடிகளில் 

அருள் பெற நினைக்குவது உளதோ தான் = அருளைப் பெற நினைப்பது எங்கே நடக்கிறது ?


Sunday, March 2, 2014

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி 


விலை மகளைப் பற்றி கூறும் அதே பாடலில் இறைவனையும் வணங்கும் கலை அருணகிரி நாதருக்கு கை வந்தது.



வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
    தன்னைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
    மயக்கி ஐங்கணை மதனனை ஒருமையினாலேஅரு
   வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
    நகைத்து நண்பொடு வருமிரும் எனவுரை
    வழுத்தி அங்கவரொடுசரு வியுமுடல் தொடுபோதே

விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
    மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மையல்
    விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே
   விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
    மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
    விரைப்பதந்தனில் அருள்பெற நினைகுவ துளதோதான்

குடத்தை வென்றிடு கிரியென எழில்தள
    தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
    குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு வடிவேலா
   குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
    அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
    குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி  மருகோனே

திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட 
    அயிற்கொ டும்படை விடுசர வணபவ
    திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே
   செழித்த தண்டலை தொறுமில கியகுட
    வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
    திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய     பெருமாளே.

கொஞ்சம் பெரிய பாடல் தான்....ஒவ்வொரு பகுதியாக பார்க்கலாம்.

பொருள்

வடத்தை = வடம் என்றால் கயறு. வடம் போல் தடித்த முத்து, பவளம், மலர்களால் ஆன மாலை இவற்றை அணிந்து

மிஞ்சிய = அதையும் மிஞ்சிய

புளகித = ஆண்களை கண்டவுடன் மகிழ்ச்சியால் இன்பம் அடைந்த

வனமுலை = அழாகான, வனப்பான முலைகள்

தன்னைத் = தன்னை (அந்த விலை மகளிரை)

திறந்து = தெரிந்து எடுத்து

எதிர் வரும் = எதிரில் வரும்

 இளைஞர் = இளைய வாலிபர்களின்

உயிர் = உயிரை

மயக்கி = மயக்கி

ஐங்கணை = ஐந்து விதமான மலர்களை கொண்ட அம்பினை எய்யும்

மதனனை = மன்மதனை

ஒருமையினாலேஅரு ருத்தி = ஒப்பற்ற அவனை வரச் செய்து 

வஞ்சக நினைவொடு = வஞ்சக நினைவோடு

மெலமெல = மெல்ல மெல்ல
   
நகைத்து = புன்னகை புரிந்து

நண்பொடு = நட்பு உணர்வோடு

வருமிரும் = வரும், இரும்

எனவுரை வழுத்தி = என்று உரை  செய்து வாழ்த்தி 

அங்கவரொடு = அங்கு அவரோடு

சரு வியுமுடல் தொடுபோதே = பழகி உடல் தொடும் போது


Saturday, March 1, 2014

இராமாயணம் - ஏசுவான் இயம்பலுற்றான்

இராமாயணம் - ஏசுவான் இயம்பலுற்றான்


சில சமயம் மருத்துவர் நமக்கு மருத்துவம் செய்யும் போது, நமக்கு வலி தோன்றும். பல் பிடுங்கும் போது, எலும்பை சரி செய்யும் போது, அறுவை சிகிச்சை செய்யும் போது நமக்கு வலி இருக்கும். ஊசி குத்தும் போது வலிக்கும். வலிக்கும் போது மருத்துவர் மேல் கோபம் வரும். இருந்தாலும், அவர் நம் நன்மைக்கு செய்கிறார் என்ற நினைக்கும் போது அவர் மேல் அன்பும் பிறக்கும்.

வாளால் அறுத்து சுடினும் மருந்த்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் என்று பிரபந்தம் பேசுமே அது போல.

இராமன், வாலியை மறைந்து நின்று கொன்றான். இராமன் எய்த அம்பை வெளியே இழுத்து, அதில் "இராமன்"  என்ற பெயர் இருக்கக் கண்டான்.

நேரில் பார்க்கிறான். இராமன் நடந்து வருகிறான். அப்படி வந்தவனை " எண்ணுற்றாய்! என் செய்தாய்" என்று கேள்வி மேல் கேட்க ஆரம்பிக்கிறான்.

அந்த ஆரம்பத்தை கம்பன் சொல்லுகிறான்...."ஏசுவான் இயம்பலுற்றான்" என்றான்.

ஏசுதல் என்றால் திட்டுதல்.

அது என்ன இயம்புதல் ? ஏசுவான் , இயம்புவான் என்று இரண்டு சொல் போடுவானேன் ?

இயம்புதல் என்றால் பாராட்டுதல், போற்றுதல்,துதித்தல் என்று அர்த்தம்.

ஒரு புறம் போற்றுதல், மறு புறம் திட்டுகிறான்.

"ஐயோ, வலிக்குதே, உயிர் போகுதே " என்று ஒரு நோயாளி கத்துவதை பார்க்கும் போது என்னவோ மருத்துவர் அந்த நோயாளியை துன்பப் படுத்துவது போலத் தெரியும். அங்கு என்ன நடக்கிறது என்று முழுவதுமாக தெரிந்தவர்களுக்குத் தான் உண்மை புரியும்.  சிகிச்சை நடக்கிறது என்று தெரியாதவர்களுக்கு, ஏதோ தவறு நடப்பது மாதிரித்தான் தெரியும்.

பாடல்

கண்ணுற்றான் வாலி, நீலக் கார்
      முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில்
      ஏந்தி, வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனையசோரி
      பொறியொடும் பொடிப்ப, நோக்கி,
'எண்ணுற்றாய்! என் செய்தாய்!'
      என்று ஏசுவான் இயம்பலுற்றான்:

பொருள்

கண்ணுற்றான் வாலி = மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை கண்டான் வாலி

நீலக் = நீல நிற வானத்தில்  

கார் முகில் = கரிய மேகம் 

கமலம் பூத்து = தாமரை பூத்து

மண் உற்று = மண்ணில் வந்து

வரி வில் ஏந்தி = வில் ஏந்தி

வருவதே போலும் = வந்ததைப் போல

மாலை = திருமாலை

புண் உற்றது அனைய = உடம்பில் புண் ஏற்பட்டதைப் போல 

 சோரி = இரத்தம் பொங்கி வழிந்து

பொறியொடும் பொடிப்ப = கண்ணில் இருந்து பொறி பறக்க

நோக்கி = நோக்கி

'எண்ணுற்றாய்! = எண்ணத்தில் + உற்றாய் = எண்ணத்தில் நிறைந்தவனே 

என் செய்தாய்! = என்ன செய்து விட்டாய்

என்று = என்று

ஏசுவான் = திட்டுவான்

இயம்பலுற்றான் = போற்றி, துதித்து, சொல்லத் தொடங்கினான்.