Monday, March 31, 2014

திருக்குறள் - இன்சொல்

திருக்குறள் - இன்சொல் 


இனிய சொல் என்றால் என்ன ?

ஒருவரை பற்றி புகழ்வதா ? நல்லதை கூறுவதா ? அறிவுரை சொல்லுவதா ? ஆறுதல் மொழி கூறுவதா ?

எது இனிய சொல் ?

மிக மிக சிக்கலான கேள்வி.

அதற்கு விடை அளிக்கிறார் வள்ளுவர்.....

இன்சொல் என்பது

- ஈரம் அளவி
- பொய் கலக்காமல்
- உண்மை அறிந்தவர்களின் வாயில் இருந்து வரும் சொல்

பாடல்

இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

சீர் பிரித்த பின்

இன் சொல்  ஈரம் அளவி படிறு இல்லாவாம் 
செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்


பொருள்

இன் சொல் = இன் சொல் என்பது

 ஈரம் அளவி = அன்பும் கருணையும் கலந்து

படிறு இல்லாவாம் = குற்றம் இல்லாத, பொய் கலக்காத

செம்பொருள் = உயர்ந்த பொருளை

கண்டார் = அறிந்தவர்கள்

வாய்ச் சொல் = வாயிலிருந்து வரும் சொல்


செம்பொருள் என்பதற்கு உண்மையான பொருள் அர்த்தம் கொள்ள வேண்டும். எல்லோராலும், எந்த காலத்திலும் உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

அப்படிப்பட்ட சான்றோர்கள் வாயிலிருந்து வரும் சொற்களே இனிய சொற்கள்.

இனிய சொற்களை சொல்ல வேண்டும் என்றால் முதலில் செம்பொருளை கண்டறியுங்கள்.

உண்மையை அறியாமல் பேசும் எந்த சொல்லும் இனிய சொல் ஆகாது.

உண்மை அறியாமல் பேசும் போது அது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும்  அது பின்னால் துன்பத்தையே தரும்.


நீங்கள் கண்ட மெய் பொருள் எந்த துறையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.....

மருத்துவம், பொருளாதாரம், கலை, இலக்கியம், குழந்தை வளர்ப்பு, உளவியல்   என்று எதுவாக வேண்டுமானாலும்  இருக்கட்டும்.

அந்தத் துறையில் உள்ள உண்மைகளை கண்டறிந்து, அது சம்பந்தமாக  உங்களிடம் யாராவது  யோசனை கேட்டால், அன்போடு, கருணையோடு, வஞ்சனை இல்லாமல் நீங்கள் சொல் இனிய சொல்.

அதே போல், இனிய சொல்லை நீங்கள் கேட்க வேண்டும் என்றால் அப்படிப் பட்டவரிடம் சென்று கேளுங்கள்.

மற்றவர்களிடம் நீங்கள் கேட்பது , கேட்கும் அந்த நேரத்தில் சுகமாக இருந்தாலும் அவை நிச்சயமாக இனிய சொற்கள் அல்ல.

இனிய சொற்கள் என்றால் என்ன , அதை யாரிடம் கேட்டுப் பெறலாம், எப்படி அதை மற்றவர்களுக்குத் தரலாம் என்று புரிகிறது அல்லவா ? 

Sunday, March 30, 2014

இராமாயணம் - இராவணனின் இறை பக்தி

இராமாயணம் - இராவணனின் இறை பக்தி 


போருக்கு இராவணன் தயாராகிறான்.

போருக்கு முன்னால்  அவன் அடைந்த இழப்புகள் ஏராளம்.

ஒரு தம்பி எதிரியிடம் சென்று விட்டான் (வீடணன்)
ஒரு தம்பி போர்க்களத்தில் மாண்டு விட்டான் (கும்பகர்ணன்)
மூத்த மகன் போரில் இறந்து விட்டான் (இந்திரஜித்து )
மாமன் மற்றும் பல உறவினர்களை இழந்து விட்டான்.

ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம், அவன் நிலையில் நாம் இருந்தால் நம் மன நிலை எப்படி இருக்கும்.

கவலை - துக்கம், அடக்க முடியாத துக்கம், எல்லோர் மேலும் கோபம், வெறுப்பு, ஏமாற்றம், என்று எல்லாம் இருக்கும்.

இதன் நடுவில் இறைவனை வழிபடத் தோன்றுமா ? மற்றவர்களுக்கு உதவத் தோன்றுமா ?

இராவணன் செய்தான்

ஈசனை வழிபடுகிறான். வேண்டுபவர்களுக்கு வேண்டியபொருள்களை தானம் தருகிறான். பின் போருக்குப் புறப்படுகிறான்.

பாடல்


ஈசனை, இமையா முக் கண் இறைவனை, இருமைக்கு ஏற்ற 
பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற தானம் 
வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோ ர்க்கு எல்லாம் 
ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான் 


பொருள்

ஈசனை = சிவனை

இமையா முக் கண் இறைவனை = இமைக்காத மூன்று கண்களை கொண்ட இறைவனை

இருமைக்கு = இம்மைக்கும் மறுமைக்கும்

ஏற்ற = ஏற்புடைய

பூசனை முறையின் செய்து = பூசைகளை முறையாகச் செய்து

திரு மறை = உயர்ந்த மறைகளில்

புகன்ற தானம் = சொல்லப்பட்ட தானங்களை

வீசினன் இயற்றி = எல்லோருக்கும் கொடுத்து


மற்றும் = மேலும்

வேட்டன  = ஆசைப்பட்டதை

வேட்டோ ர்க்கு எல்லாம் = ஆசைப் பட்டவர்களுக்கு எல்லாம்

ஆசு அற நல்கி = குற்றம் இல்லாமல் கொடுத்து

ஒல்காப் = தளராத

போர்த் தொழிற்கு அமைவது ஆனான் = போர் தொழிலுக்குப் புறப்பட்டான்



Saturday, March 29, 2014

சுந்தர காண்டம் - செயலைத் தொடங்குங்கள், உதவி உடனே வரும்

சுந்தர காண்டம் - செயலைத் தொடங்குங்கள், உதவி உடனே வரும்  


"Until one is committed, there is hesitancy, the chance to draw back-- Concerning all acts of initiative (and creation), there is one elementary truth that ignorance of which kills countless ideas and splendid plans: that the moment one definitely commits oneself, then Providence moves too. All sorts of things occur to help one that would never otherwise have occurred. A whole stream of events issues from the decision, raising in one's favor all manner of unforeseen incidents and meetings and material assistance, which no man could have dreamed would have come his way. Whatever you can do, or dream you can do, begin it. Boldness has genius, power, and magic in it. Begin it now."

~Goethe

சுந்தர காண்டம் படித்தால் துன்பம் விலகும் என்று ஏன் சொல்கிறார்கள் ?

எதையும் படித்தால் மட்டும் போதாது. படித்ததின் படி நடக்கவும் வேண்டும். 

சுந்தர காண்டம், கவலையில் சோர்ந்து போய் , உட்கார்ந்து விட்டவர்களை தட்டிக் கொடுத்து வேலை செய்ய ஊக்குவிக்கிறது. 

அனுமன், மகேந்தர மலையில் இருந்து  கிளம்பி விட்டான். தேவர்கள் கூட அவனை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். அவர்களின் அனுக்ரஹம் அவனுக்கு உண்டு என்று அவர்கள் உணர்த்தினார்கள். 

ஒரு நல்ல காரியத்தை தொடங்கிவிட்டால், இந்த உலகமே உங்களுக்கு உதவி செய்யத் தயாராகி விடும். 

இந்த உலகம் மட்டும் அல்ல, விண்ணுலகும் உங்களுக்கு துணை நிற்கும். 

துன்பத்திற்கு காரணம், முயற்சி இன்மை. முயற்சி குறைவு.

உற்சாகத்தோடு தொடங்குகள். நீங்கள் எதிர் பார்க்காத இடத்தில் இருந்தெல்லாம் உதவி தானாக வந்து சேரும். 

என்னால் எப்படி முடியும், இது எல்லாம் நடக்கிற காரியமா, எவ்வளவு பெரிய வேலை என்றெல்லாம் சோர்ந்து விடாதீர்கள். 

தொடங்குகள். உதவி வரும். 

பாடல் 


இத் திறம் நிகழும் வேலை, இமையவர், முனிவர், மற்றும்
முத் திறத்து உலகத்தாரும், முறை முறை விரைவில் மொய்த்தார்,
தொத்து உறு மலரும், சாந்தும், சுண்ணமும், இனைய தூவி,
'வித்தக! சேறி' என்றார்; வீரனும், விரைவது ஆனான். 

Thursday, March 27, 2014

சுந்தர காண்டம் - ஊடல் தீர்வுற்று

 சுந்தர காண்டம் - ஊடல் தீர்வுற்று 


அனுமன் மகேந்தர மலையில் இருந்து புறப்பட்டு விட்டான். அவன் கிளம்பிய நேரத்தில் மலை கிடுகிடுத்தது.

அந்த அதிர்வு விண்ணுலகம் வரை எட்டியது.

அங்கே......

தேவ மாதர்கள், மது அருந்தி தங்கள் துணைவர்களோடு ஊடல் கொண்டு இருந்தனர். இந்த அதிர்வினால், அவர்கள் பயந்து போய் , ஊடலை விட்டு, தங்கள் தங்கள் துணைவர்களை கட்டி பிடித்துக் கொண்டனர். அந்த நேரத்தில், அவர்கள் , தாங்கள் கூண்டில் இருந்து வெளியில் விட்ட கிளி என்ன ஆயிற்றோ என்று கவலைப் பட்டனர்.

பாடல்

ஊறியநறவும் உற்ற
     குற்றமும்உணர்வை உண்ண,
சீறிய மனத்தர்,தெய்வ
     மடந்தையர்ஊடல் தீர்வுற்று
ஆறினர்,அஞ்சுகின்றார்,
     அன்பரைத்தழுவி உம்பர்
ஏறினர், இட்டு,நீத்த
    பைங்கிளிக்கு இரங்குகின்றார்.

பொருள்

ஊறியநறவும் = நறவு என்றால் மது. ஊறிய நறவு - நாட்பட்ட மது.

உற்ற குற்றமும் = அதனால் எழுந்த குற்றமும்

உணர்வை உண்ண = உணர்வை அழிக்க

சீறிய மனத்தர் = சிறந்த மனத்தை உடைய

தெய்வ மடந்தையர் = தேவ லோகப் பெண்கள்


ஊடல் தீர்வுற்று = ஊடல் தீர்ந்து

ஆறினர் = உடலும், உள்ளமும் ஆறுதல் கொண்டனர்.

,அஞ்சுகின்றார் = அச்சம் கொண்டனர்

அன்பரைத்தழுவி = அவர்கள் தத்தம் துணைவர்களைத் தழுவி

 உம்பர் ஏறினர் = விண்ணோர் தங்கள் இடம் சென்றனர்

, இட்டு,நீத்த = கூண்டில் முன்பு போட்டு வைத்து , பின் வெளியில் விட்ட

பைங்கிளிக்கு இரங்குகின்றார். = கிளி என்ன ஆயிற்றோ என்று அதற்காக வருந்தினர்.

அச்சம் ஒரு ஊடல் தீர்க்கும் வாயில்.

ஊடல். ஊடல் தீர்ந்து கூடல். அந்த கூடல் நேரத்திலும் தாங்கள் வளர்த்த கிளி என்ன ஆயிற்றோ என்று கவலைப் படும் உயிர்களின் மேல் நேசம்.

கிளிக்காக கவலைப் படும் எவ்வளவு மென்மையான மனமாக  இருக்க வேண்டும் ?



Wednesday, March 26, 2014

ஐங்குறுநூறு - பைங்கிளி எடுத்த பைங்கிளி

ஐங்குறுநூறு - பைங்கிளி எடுத்த பைங்கிளி 



மகளுக்கும் தாய்க்கும் இடையில் காதலன்.

மகள் தாயை மறந்து காதலன் பின் சென்று விட்டாள்.

தலைவி, தலைவனோடு சென்று விட்டாள் .

தாய் கிடந்து தவிக்கிறாள்.  எல்லா இடத்திலும் தேடிவிட்டாள் . எங்கும் காணவில்லை.

என்னை விட்டு போய் விட்டாளா என்று கலங்குகிறாள்.

தன் மகள் உபயோகப் படுத்திய பொருள்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்க்கிறாள். ஒவ்வொன்றும், அந்தத் தாய்க்கு தன் மகளை நினைவு படுத்துகிறது.

வருவோர் , போவோர் எல்லோரையும் பார்த்து கண் கலங்குகிறாள்....என் மகளைப் பார்த்தீர்களா, என் மகளை பார்த்தீர்களா என்று கேட்டு பரிதவிக்கிறாள்.

அந்தத் தாயின்  பரிதவிப்பை, வீட்டை விட்டுப் போன மகளின் பிரிவை இந்தப் பாடல் பதிவு  செய்கிறது.

பாடல்


இதுவென் பாவை பாவை யிதுவென் 
   அலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற் 
   பைங்கிளி யெடுத்த பைங்கிளி யென்றிவை 
   காண்டொறுங் காண்டொறுங் கலங்க 
   நீங்கின ளோவென் பூங்க ணோளே.


Tuesday, March 25, 2014

சுந்தர காண்டம் - பெண்ணின் அருகாமை துன்பம் துடைக்கும்

சுந்தர காண்டம் - பெண்ணின் அருகாமை துன்பம் துடைக்கும் 


அனுமன் மிகுந்த ஆற்றலோடு மகேந்திர மலையை உந்திக் கிளம்புகிறான்.

அப்போது என்னென்ன  நிகழ்ந்தது என்று கம்பர் பட்டியல்  இடுகிறார்.

பூமி மட்டும் அல்ல, வானமும் சும்மா அதிர்ந்துதுல்ல...

வானுலகப் பெண்கள் எல்லாம் பயந்து அருகில் உள்ள தேவர்களை கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். அதனால் அந்த தேவர்கள் அழகு மேலும் கூடி பொலிந்தனர்.

இருக்காத பின்ன...?

தேவலோகப் பெண்கள் கட்டிப் பிடித்தால் மகிழ்ச்சியில் முகம் பிரகாசிக்காதா என்ன ?

அப்படி ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு தேவனை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது எப்படி இருந்தது என்றால் ...

முன்பொரு நாள் , இராவணன் கைலாய மலையை தூக்க முயன்ற போது உமா தேவியார் சிவனைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்த மாதிரி இருந்தது.

பாடல்

வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும், நடுக்கம் எய்தி,
மயில் இயல் தளிர்க் கை மாதர் தழீஇக் கொளப் பொலிந்த வானோர்,
அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித் தனி கடுத்தல் செய்தார்


நீத்தல் விண்ணப்பம் - மலை போன்ற வல் வினைகள்

நீத்தல் விண்ணப்பம் - மலை போன்ற வல் வினைகள்  


நீங்கள் ஒரு பெரிய சம வெளியில் நிற்கிறீர்கள். உங்களைச் சுற்றி தூரத்தில் பெரிய மலைகள் இருக்கின்றன. திடீரென்று அந்த மலைகள் எல்லாம் ஒன்று சேர்த்து உங்கள் மேல் சண்டைக்கு வருகின்றன.

ஒரு மலையோடு சண்டை போட்டு வெல்வதே முடியாத காரியம். பல மலைகள் ஒன்று சேர்ந்து வந்தால் என்ன செய்வீர்கள் ?

ஓடவும் முடியாது. ஓரிடத்தில் நிற்கவும் முடியாது....

அது போல ....நீங்கள் இது வரை சேர்த்து வைத்த வினைப் பயன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வருகின்றன....மலை போல ....

கொஞ்சமாகவா செய்திருக்கிறோம்...

அப்படி மலைகள் ஒன்று சேர்ந்து வந்தால் எனக்கு பயமாக இருக்கிறது. என்னை "பயப்படாதே" என்று சொல்லி என்னை காப்பாற்று.

அந்த சமயத்தில் என்னை கை விட்டு விடாதே...என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று இறைவனை வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு `அஞ்சல்' என்னின் அல்லால்,
விரை சேர் முடியாய், விடுதி கண்டாய்? வெள் நகை, கரும் கண்,
திரை சேர் மடந்தை மணந்த திருப் பொன் பதப் புயங்கா,
வரை சேர்ந்து அடர்ந்து என்ன, வல் வினை தான் வந்து அடர்வனவே.