Tuesday, June 3, 2014

கலிங்கத்துப் பரணி - நிறை கவசமற்று

கலிங்கத்துப் பரணி - நிறை கவசமற்று 


பெண்ணுக்கு அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்று இயற்கை குணங்கள் உண்டு. அவையே அவளுக்குக் காவல். அவளுக்கு கவசம். அந்த கவசத்தை அவள் இழந்து நிற்கும் நேரமும் உண்டு. அதில் அவளுக்கு வருத்தம் இல்லை. மாறாக புன்னகை பூக்கிறாள். அது , அவள் கணவனோடு இருக்கும் நேரம்.  அந்த நேரத்தில் அந்த கவசங்களை சற்று விலக்கி வைத்து விட்டு அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

பாடல்

அவசமுற் றுளம்நெகத்  துயில்நெகப் பவளவாய்
     அணிசிவப்  பறவிழிக் கடைசிவப் புறநிறைக் 
கவசமற்று இளநகைக் களிவரக் களிவரும் 
   கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ.

சீர் பிரித்த பின்

அவசம் உற்று உள்ளம் நெகத்  துயில் நெகப் பவளவாய்
அணி சிவப்பு அற விழிக் கடைசிவப்பு உற நிறைக் 
கவச மற்று இளநகைக் களிவரக் களிவரும் 
கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ.

பொருள் 

அவசம் = மகிழ்ச்சி

உற்று  = அடைந்து

உள்ளம் நெகத் = உள்ளம் நெகிழ

 துயில் நெகப் = தூக்கம் நெகிழ

பவள வாய் = பவளம் போன்ற வாய்

அணி சிவப்பு அற = இரண்டு இதழ்களும் சிவப்பை இழக்க

விழிக் கடை = விழியின் ஓரம்

சிவப்பு உற = சிவப்பு ஏற 

நிறைக்  = பெண்ணின் நிறையான அச்சம், மடம் போன்ற குணங்கள்

கவச மற்று = கவசம் இல்லாமல்

இளநகைக் = இளமையான புன்னகை

களிவரக் = மகிழ்வோடு வர

களிவரும் = இன்பத்தோடு வரும்

கணவரைப் = கணவரை

புணருவீர் = ஒன்று சேருவீர்

கடைதிறந் திடுமினோ = கதவைத் திறவுங்கள்



நீத்தல் விண்ணப்பம் - பிழைக்கே குழைந்து

நீத்தல் விண்ணப்பம் - பிழைக்கே குழைந்து 


எவ்வளவோ பிழைகள் செய்கிறோம்.

தெரிந்து சில. தெரியாமல் சில.

சில பிழைகளை மறக்கிறோம். சில பிழைகளை ஞாயப்படுத்துக்றோம். சில பிழைகளால் வருந்துகிறோம்.

மாணிக்க வாசகர் சொல்லுகிறார்.

பிழைக்கே குழைந்து...தான் செய்த பிழைகளை நினைத்து அப்படியே உருகி குழைந்து  போகிறாராம்.

இறைவா , நான் உன்னை  புகழ்ந்தாலும்,இகழ்ந்தாலும், என் குற்றங்களை நினைத்து நான் வருந்துகிறேன். என்னை கை விட்டு விடாதே. சிவந்த மேனி உடையவனே, என்னை ஆள்பவனே. சிறிய உயிர்களுக்கு இரங்கி அவை அமுது உண்ண நீ ஆலகால நஞ்சை உண்டாய். கடையவனான எனக்கும் அருள் புரி என்று உருகுகிறார் அடிகள்.

பாடல்

ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக் கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக் கடையவனே.


பொருள்

ஏசினும் = உன்னை இகழ்ந்தாலும்

யான் உன்னை ஏத்தினும் = நான் உன்னை புகழ்ந்தாலும்

என் பிழைக்கே குழைந்து = என்னுடைய பிழைக்கு குழைந்து (வருந்தி)

வேசறு வேனை  = துன்பப்படுவேனை

விடுதிகண் டாய் = விட்டு விடாதே

செம் பவள = சிவந்த பவளம் போன்ற

வெற்பின் = மலையின் தோற்றம் போல

தேசுடை யாய் = தேகம் கொண்டவனே

என்னை ஆளுடை யாய் = என்னை ஆள்பவனே 

சிற் றுயிர்க்கிரங்கிக் = சிறிய உயிர்களுக்கு இரங்கி

காய்சின  = காய்கின்ற சினம் போன்ற

ஆலமுண் டாய் = நஞ்சை உண்டாய்

அமு துண்ணக் = மற்றவர்கள் அமுது உண்ணக்

கடையவனே = கடையவனான எனக்கும் அருள் புரி

கடையவனே என்று ஆரம்பித்து கடையவனே என்று முடித்து வைக்கிறார் நீத்தல் விண்ணபத்தை. அருமையான பாடல்  தொகுதி. ஒரு சில பாடலகளைத் தவிர்த்து அனைத்து பாடல்களையும் தந்து இருக்கிறேன்.

சமயம் கிடைக்கும் போது விடுபட்ட பாடல்களையும் மூல நூலில் இருந்து படித்துப் பாருங்கள்.

இதுவரை இவற்றை பொறுமையாக படித்தமைக்கு நன்றி.


இராமாயணம் - நினைத்தது எல்லாம் தருமம்

இராமாயணம் - நினைத்தது எல்லாம் தருமம் 


இலக்குவனிடம் மூக்கு அறுபட்டு சூர்பனகை இலங்கை வருகிறாள். வருவதற்கு முன், பலப் பல பாடல்களில் தான் எவ்வாறு இராமனுக்கு உதவி செய்ய முடியும் என்று பட்டியல் இட்டுத் தருக்கிறாள். இராவணனைப் பற்றி கூறி பயமுறுத்துகிறாள். ஆசையும், பயமும் இராமனிடம் பலிக்கவில்லை. அவர்கள் இருந்த இடம் விட்டு இலங்கை வருகிறாள்.

வருவதற்கு முன் சூர்பனகை கூறிய பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டும் பாடல்கள். என்றேனும் நேரம் இருப்பின், அவற்றைப் படித்துப் பாருங்கள். மிக மிக அருமையான பாடல்கள்.

இலங்கையில் இராவணன் மணி மண்டபத்தில் அமர்ந்து இருக்கிறான். அந்த மண்டபம் எப்படி இருக்கிறது ?

இந்த உலகில் நிற்பன, நடப்பன என்று அனைத்தையும் படைத்த பிரமனுக்கும் படைக்க முடியாத அளவுக்கு சிறந்த மண்டபம். எப்படி தருமம் (அறம் ) செய்பவர்களுக்கு கேட்டது எல்லாம் கிடைக்குமோ அது போலவேண்டியதை எல்லாம் தேவ தச்சன் ஒருங்கிணைத்து செய்த மண்டபம்.  அந்த அரசவையில் இராவணன் இருந்தான்.


பாடல்

நிலை இலா உலகினிடை நிற்பனவும் 
     நடப்பனவும் நெறியின் ஈந்த 
மலரின்மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது, 
     நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல் 
உலைவு இலா வகை இழைத்த தருமம் என, 
     நினைந்த எலாம் உதவும் தச்சன் 
புலன் எலாம் தெரிப்பது, ஒரு புனை மணி 
     மண்டபம் அதனில் பொலிய மன்னோ,

பொருள்

நிலை இலா  = நிலைத்து இருக்கும் இயல்பு இல்லாத

உலகினிடை =உலகத்தில்

நிற்பனவும் = அசையாமல் நிற்பனவும் (உயிர் அற்ற பொருள்கள்)

நடப்பனவும் = அசைபனவும் (உயிர் உள்ளவை )

நெறியின் ஈந்த = முறைப்படி படைத்த

மலரின்மேல் = தாமரை மலரின் மேல் இருக்கும்

 நான்முகற்கும் =நான்கு முகம் கொண்ட பிரமனுக்கும்

வகுப்பு அரிது = செய்ய முடியாத

நுனிப்பது = கூர்மையான , நுண்மையான

ஒரு வரம்பு இல் ஆற்றல் = அளவில்லா ஆற்றல் கொண்ட

உலைவு இலா= தீமை செய்யாத

வகை = வகையில்

இழைத்த = செய்த

தருமம் என = தருமம் என

நினைந்த எலாம் உதவும் தச்சன் = மனதில் நினைத்ததை அப்படியே கொண்டு வரும் தச்சன்

புலன் எலாம் தெரிப்பது = தன்னுடைய திறமை எல்லாம் சேர்த்து

ஒரு புனை மணி = செய்த ஒரு அழகான

மண்டபம் = மண்டபம்

அதனில் பொலிய மன்னோ = அதில் பொலிவுடன் இருந்தான் இராவணன்


ஒருவன் அற வழியில் நின்றால் அவன் நினைத்தது எல்லாம் நடக்கும். அதிலும் கூட  சில சமயம் நம் நினைவுகள் நம்மை அறியாமல் நமக்கோ பிறருக்கோ தீமை  நினைத்து  விடலாம்.நல்லது என்று நினைத்து வேண்டுவோம், அது தீமையாக முடிந்து விடலாம். 

தருமம் நமக்கு ஒரு போதும் தீங்கு செய்யாது என்று சொல்ல வந்த கம்பன் ஒரு வார்த்தையைப்  போடுகிறான் 

"உலைவு இலா வகை இழைத்த தருமம்" 

உலைவு என்றால் (தமக்கும் பிறருக்கும்) தீமை  என்று அர்த்தம். அந்த தீமை தராத  தருமம் எப்படி நாம் மனதில் வேண்டியதைத் தருமோ அது போல அந்த தேவ  தச்சன் மனதில் நினைத்ததை அப்படியே நேரில் செய்து கொண்டு வந்தான்.

என்ன ஒரு உவமை. எதற்கு எது உவமை. 

இராவணன் இருந்த மணி மண்டபத்தை பற்றி சொல்ல வந்த கம்பன், அறத்தை கொண்டு வருகிறான். இராவணனுக்கும் அந்த மண்டபத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், நம் மனதில் அறம் பற்றிய ஒரு எண்ணத்தை இராவணனோடு சேர்த்து  விடுகிறது. 

 

Monday, June 2, 2014

தேவாரம் - அஞ்சினால் உய்க்கும் வண்ணம்

தேவாரம் - அஞ்சினால் உய்க்கும் வண்ணம்


 இந்த உடம்பு ஐந்து பூதங்களால் ஆனது.

இந்த உடம்பு ஐந்து புலன்களால் நடத்தபடுகிறது.

இந்த வாழ்க்கை நாளும் அச்சம் தருவதாய் இருக்கிறது. இன்று என்ன நேருமோ , நாளை என்ன நேருமோ என்று நாளும் அச்சம்தான்.

இப்படிப் பட்ட வாழ்க்கையில் இருந்து , திரு ஐந்து எழுத்தை ஒதி, அச்சத்தில் இருந்து விடுபட, பஞ்ச கவ்யம் என்று சொல்லப் படும் பசுவில் இருந்து வரும் ஐந்து பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அழகுடன் விளங்கும்  சிவனே என்று சிவனை நினைக்கும் போது, வாழ்வின் நிலையையும் எடுத்துச் சொல்கிறார் நாவுக்கரசர்.

பாடல் 


அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று, அதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப்பட்டு, இங்கு உழிதரும் ஆதனேனை,
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே! அம்மானே.


பொருள்

அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று = ஐந்து பூதங்களால் இயற்றப் பெற்ற உடலைப் பெற்று


அதனுள் வாழும் = அந்த உடம்பினுள் வாழும்

அஞ்சினால் = ஐந்து புலன்களால்

அடர்க்கப்பட்டு = வருத்தப் பட்டு

,இங்கு = இங்கு

உழிதரும் ஆதனேனை = உழலும் அறிவற்ற என்னை

அஞ்சினால் உய்க்கும் வண்ணம்  = திரு ஐந்து எழுத்தால் பிழைக்கும் வழியைக்

காட்டினாய்க்கு = காட்டினாய்

அச்சம் தீர்ந்தேன் = என் பயம் தீர்ந்தது

அஞ்சினால் = பஞ்ச கவ்யங்களால்

பொலிந்த சென்னி = அழகுடன் விளங்கும் தலையைக் கொண்ட

அதிகைவீரட்டனீரே! அம்மானே = திருஅதிகை என்ற திருத்தலத்தில் எழுந்து அருளி இருக்கும் என் அம்மானே



கலிங்கத்துப் பரணி - முத்தம் இட வந்தால், கண்ணில் நீரா?

கலிங்கத்துப் பரணி - முத்தம் இட வந்தால், கண்ணில் நீரா?


கண்ணில் நீர் துக்கத்தில் வரும்.

அளவு கடந்த இன்பத்திலும் வரும்.

அவள் முதலில் ஊடல் கொள்ள நினைக்கிறாள். முடியவில்லை. தன்னுடைய பொய் கோபத்தைக் கண்டு, அவளையும் தாண்டி, அவளுக்கு ஒரு புன்னகை பிறக்கிறது. ஆஹா, அவள் சிரித்து விட்டாள் என்று அவன், அவளை முத்தம் இட நெருங்குகிறான். என் மீது அவனுக்கு இவ்வளவு காதலா என்று அவள் மனத்திலும் அன்பு பெருக்கெடுக்கிறது, ஆனந்தம் பொங்குகிறது...அதனால் அவள் கண் ஓரம் இரண்டு கண்ணீர்த் துளிகள் முத்து போல உதிர்கின்றன.


பாடல்

முனிபவர் ஒத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே
     முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர்ம ணித்துவர்வாய் 
கனிபவ ளத்தருகே வருதலும் முத்துதிரும் 
    கயல்களி ரண்டுடையீர் கடைதிற மின்திறமின்.


சீர் பிரித்த பின் 

முனிபவர் ஒத்து, இலராய்,  முறுவல் கிளைத்தலுமே
      முகிழ் நகை பெற்றமெனா மகிழ்நர் மணித்துவர் வாய் 
கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும்  
    கயல்கள் இரண்டு உடையீர் கடை திறமின் திறமின்.


பொருள்


முனிபவர் = கோபம் கொள்பவர்களைப் போல

ஒத்திலராய் = ஒத்து + இலராய். முதலில் அப்படி ஒத்து  இருந்தாலும்,பின்னால் முடியாமல்

முறுவல் = புன்னகை 

கிளைத்தலுமே = புறப்பட்டதும்

முகிழ்நகை = மலர்கிண்ட புன்னகையைப்

பெற்றமெனா = பெற்றோம் என்று

மகிழ்நர் = மகிழும் காதலர்கள்

மணித்துவர்வாய் = அழகிய இதழ்களை

கனி = கனிந்த

பவளத்தருகே = பவளம் போன்ற இதழ்களின் அருகே

வருதலும் = வரும்போது

முத்துதிரும் = முத்து உதிரும்

கயல்களி ரண்டுடையீர் = கயல்கள் இரண்டு உடையீர். கயல் என்றால் மீன். முத்துப் போல நீர்த் துளிகள் தெறிக்கும் இரண்டு மீன் போன்ற கண்களை உடையவர்களே 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்றார்  வள்ளுவர். அன்பு மிகும் போது கண்ணீர் வரும்.

 கடைதிற மின்திறமின் = கதவைத் திறவுங்கள், திறவுங்கள்

அன்பையும், காதலையும், ஆனந்தத்தையும், அதில் விழையும் அன்யோன்யத்தையும்  இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா என்ன ?



இராமாயணம் - என் மூக்கை அல்ல, உம் குலத்தை அரிந்தீர்

இராமாயணம் - என் மூக்கை அல்ல, உம் குலத்தை அரிந்தீர் 


இந்த காட்டை விட்டு ஓடிப் போ என்று இராமன் சொன்ன பின், சூர்பனகை சொல்கிறாள்.

"உன் தங்கை அழகான மூக்கினை இழந்தாள்" என்று சொல்பவரின் நாக்கை அரியும் என் அண்ணன் இராவணன். நீங்கள் என் மூக்கை அறுக்கவில்லை, உங்கள் குலத்தின் வேரை அறுத்து விட்டீர்கள். இனி உங்களுக்கு புகலிடம் இல்லை. என்னுடைய இந்த அழகை எல்லாம், தரையில் வீசி விட்டீர்களே

என்று வீரம் பேசுகிறாள் சூர்பனகை.




பாடல்

"ஆக்க அரிய மூக்கு, உங்கை 
     அரியுண்டாள்" என்றாரை 
நாக்கு அரியும் தயமுகனார்; 
     நாகரிகர் அல்லாமை, 
மூக்கு அரிந்து, நும் குலத்தை 
     முதல் அரிந்தீர்; இனி, உமக்குப் 
போக்கு அரிது; இவ் அழகை எல்லாம் 
     புல்லிடையே உகுத்தீரே!'

பொருள்

"ஆக்க = ஆக்கத்திற்கு , அழகுக்கு

அரிய மூக்கு = அருமையான மூக்கை

உங்கை = உன் தங்கை

அரியுண்டாள்" = வெட்டுக் கொடுத்தாள்

என்றாரை  = என்று சொல்பவர்களை கூட

நாக்கு அரியும்= நாக்கை வெட்டுவான்

தயமுகனார் = தச (பத்து ) முகங்களைக் கொண்ட இராவணன். அப்படி சொன்னவர்களின் நாக்கை வெட்டுவான் என்றால், சூர்பனகையின் மூக்கை வெட்டியவர்களை அவன் என்ன செய்வான் ?


நாகரிகர் அல்லாமை = ஒரு நாகரிகம் இல்லாமல்

மூக்கு அரிந்து = என் மூக்கை வெட்டி

நும் குலத்தை = உங்கள் குலத்தின்

முதல் அரிந்தீர் = வேரை வெட்டி விட்டீர்கள். நீங்களே உங்கள் குலத்தின் கருவறுத்து விட்டீர்கள்

இனி, உமக்குப் = இனி உங்களுக்கு

போக்கு அரிது; = போகும் இடம் இல்லை

இவ் அழகை எல்லாம் = இந்த அழகை எல்லாம்

புல்லிடையே உகுத்தீரே!' = புல்லில் போட்டு விட்டீர்களே

கோபம் ஒரு புறம், வலி ஒரு புறம், வீரம் ஒரு புறம், அண்ணன்  மேல் கொண்ட பாசம் ஒரு புறம், அழகு போயிற்றே என்ற ஆதங்கம் ஒரு புறம், தன்னை ஏற்றுக் கொள்ளவில்லையே என்ற ஏக்கம் ஒரும் புறம்....

சூர்பனகை உணர்சிகளின் உச்சத்தில் இருக்கிறாள்...

கம்பனின் கவி அதை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது...

என்ன புண்ணியம் செய்தோமோ இதை எல்லாம் இரசிக்க !!




Sunday, June 1, 2014

இராமாயணம் - ஓடிப் போ

இராமாயணம் - ஓடிப் போ 


சீதையைத் தொடர்ந்து வந்தாள் இந்த சூர்பனகை , நல்லாள் பின் சென்றாள் பொல்லாள், சூர்பனகையால் சீதைக்கு ஏதேனும் துன்பம் வருமோ என்று எண்ணி அவளின் மூக்கையும், காதையும், முலையையும் நான் வெட்டினேன் என்றான் இலக்குவன், இராமனிடம்.

அவன் அப்படி சொல்லி முடிக்கக் கூட இல்லை, சூர்பனகை உடனே சொல்லுவாள், தன் கணவன் மற்றொரு பெண்ணுடன் இருந்தாள் எந்த பெண்ணுக்குத்தான் கோபம் வராது என்று.

இராமனைத்  தன் கணவனாகவே அவள் நினைத்துக் கொள்கிறாள்.

இராமன் திருமணம் ஆனவன் என்று சூர்பனகை அறிவாள் .

அதைக் கேட்ட பின் இராமன் சொல்கிறான்

"மாயப் போரில் வல்லவர்களான அரக்கர்களின் குலத்தை ஒரேயடியாக அழிக்க வந்திருக்கிறோம் நாங்கள். நீ தீய சொற்களை சொல்லி வீணாகப் போகாதே. இந்த காட்டை விட்டு ஓடிப் போ "

என்கிறான்.

பாடல்

'பேடிப் போர் வல் அரக்கர்
     பெருங் குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடிப் போந்தனம்; இன்று,
     தீ மாற்றம் சில விளம்பி,
வீடிப் போகாதே; இம்
     மெய் வனத்தை விட்டு அகல
ஓடிப் போ' என்று உரைத்த
     உரைகள் தந்தாற்கு, அவள் உரைப்பாள்:

பொருள்

'பேடிப் போர் = மாயப் போரில்

வல் அரக்கர் = வல்லவர்களான அரக்கர்களின்

பெருங் குலத்தை = பெரிய குலத்தை

ஒருங்கு அவிப்பான் = ஒரேயடியாக அழிப்பதற்கு

தேடிப் போந்தனம் = தேடி புறப்பட்டு வந்து இருக்கிறோம்

இன்று = இன்று

தீ மாற்றம் = தீ போன்ற மாற்று பேச்சுகளை

சில விளம்பி = சிலவற்றைச் சொல்லி

வீடிப் போகாதே = வீணாகப் போகாதே

இம்  = இந்த

மெய் வனத்தை விட்டு = உண்மையான வனத்தை விட்டு அல்லது உண்மை தேடும் முனிவர்கள் நிறைந்த வனத்தை விட்டு (வனம் = காடு )

அகல ஓடிப் போ' = விலகி (அகன்று ) ஓடிப் போ

என்று உரைத்த = என்று கூறிய

உரைகள் தந்தாற்கு, =வார்த்தைகளை சொன்ன இராமனுக்கு

அவள் உரைப்பாள் = அவள் (சூர்பனகை) பதில் சொல்லுவாள்

இலக்குவன் சந்தேகப் பட்டான். அதில் உண்மையும் இருந்தது. சீதைக்கு தீமை செய்யத்தான்  சூர்பனகை சென்றாள் . அதில் சந்தேகம் இல்லை.

மூக்கையும் , காதையும், முலையையும் வெட்ட வேண்டிய அளவுக்கு அது ஒரு பெரிய  தவறா ?

சூர்பனகை செய்த தவறுதான் என்ன ?

நான் படித்த உரைகளில் இரண்டு பெரிய தவறுகளைச் சொல்லுகிறார்கள்:

முதலலவது, சூர்பனகை இராமனையும் சீதையையும் பிரிக்க நினைத்தாள். இராமனையும்   சீதையையும் ஒன்றாகத்தான் சேர்த்துப் பார்க்க வேண்டும். சூர்பனகை இராமன் மட்டும் வேண்டும் என்றால். இராவணன், சீதை மட்டும் வேண்டும் என்றான். இது ஒரு பாவம் என்று சொல்கிறார்கள்.

அனுமன் சீதையையும் இராமனையும் சேர்க்க பாடு பட்டான். சிரஞ்சீவி ஆனான்.

இராவணனும் சூர்பனகையும் அவர்களை பிரிக்க முயன்றார்கள். அழிந்து போனார்கள்.

ஒரு படி   மேலே போனால், கணவன் மனைவியை பிரிப்பது பெரிய குற்றம்.

இன்னொரு குற்றம்,ஒரு பெண் தன் உணர்சிகளை, குறிப்பாக காம உணர்சிகளை  வெளிப்படையாக காட்டியது ஒரு தவறு என்கிறார்கள். பெண் அளவுக்கு அதிகமாக  காம வசப் பட்டால் அழிவு நேரும் என்கிறார்கள். அடக்கம் என்ற பெண்மை  குணம் இல்லாமல் காமத்தை கொட்டி தீர்த்தது  ஒரு குற்றம்  என்று ஒரு வாதம் இருக்கிறது.

உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்....