Sunday, June 29, 2014

அச்சோ பத்து - சித்த மலம் அறுவித்து

அச்சோ பத்து - சித்த மலம் அறுவித்து


நாம் யாரோடு சேர்ந்து இருக்கிறோமோ அவர்களின் குணம், எண்ணம் போன்றவை நம்மை கட்டாயம் பாதிக்கும்.

நம் நண்பர்கள் எப்படிப்  பட்டவர்கள்?  நம் உறவினர்கள் எப்படிப  பட்டவர்கள் ? நம்மோடு வேலை செய்பவர்கள் எப்படிப் பட்டவர்கள் ?.... சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

முக்தி நெறியை அறியாத மூர்கர்களோடு சேர்ந்து  கொண்டு முக்தி அடைய வேண்டும் என்று  நினைத்தால் எப்படி நடக்கும் ?

மூர்க்கர் என்றால் பிடிவாதக்காரன் என்று அர்த்தம்.

மூர்கர்களோடு சேர்ந்து கொண்டு முக்தி நெறியில் செல்ல முடியுமா ?

அப்படி, கண்ட மூர்கர்களோடு  சேர்ந்த அலைந்த எனக்கும் பக்தி நெறியை காட்டி, என் பழைய வினைகள் அறுந்து போகும்படி செய்தாய்.

நம் மனம் எவ்வளவு குப்பைகளுக்கு இடமாக இருக்கிறது.

காமம், கோபம், பொறாமை, பேராசை, மதம், மாச்சரியம், ஆணவம்,  இப்படி ஆயிரம் குப்பைகள். கசடுகள். மலங்கள்.

இந்த மலங்களை நீக்கி....

நீக்கினால் என்ன ஆகும் ?

மலம் நீங்கினால் சீவன் சிவன் ஆகும்.

"சித்த மலம் தெளிவித்து சிவமாக்கி எனை ஆண்ட "

நீ எனக்கு அருள் செய்த மாதிரி வேறு யார் எனக்கு செய்வார்கள் என்று ஆச்சரியப் படுகிறார் மணிவாசகர்

பாடல்

முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,
பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,
சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

பொருள்

முத்தி நெறி  = முக்தி அடையும் வழி

அறியாத = அறியாத

மூர்க்கரொடும் முயல்வேனை = மூர்கர்களோடு சேர்ந்து சேர்ந்து அலையும் என்னை


பத்தி நெறி அறிவித்து = பக்தி நெறி என்ன என்பதை நான் அறியும் படி செய்து

பழ வினைகள் பாறும்வண்ணம் = என் பழைய வினைகள் அழியும்படி

சித்த மலம் அறுவித்து = என் சித்தத்தின் மலங்களை நீக்கி

சிவம் ஆக்கி = என்னை சிவமாக்கி

எனை ஆண்ட = என்னை ஆட் கொண்ட

அத்தன் எனக்கு அருளிய ஆறு = அத்தன் எனக்கு அருள் செய்தவாறு

ஆர் பெறுவார்? அச்சோவே! = யார் பெறுவார்கள், அச்சோவே



இராமாயணம் - வினை அறு நோன்பினாள்

இராமாயணம் - வினை அறு நோன்பினாள் 


நோய், பிணி என்று இரண்டு சொல் உண்டு.

நோய் என்றால் வரும், மருந்து உட்கொண்டால் போய் விடும்.

பிணி, போகவே போகாது. அதனால் தான் நம் முன்னவர்கள் பசிப் பிணி, பிறவிப் பிணி என்றார்கள்.

எவ்வளவு சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் மீண்டும் பசிக்கும்.

பிறவியும் அப்படித்தான்....

நல்ல வினை செய்தாலும் அதை அனுபவிக்க மறு பிறவி உண்டு.

தீ வினை செய்தாலும் அதை அனுபவிக்க மறு பிறவி உண்டு.

அறம் பாவம் என்னும் அருங்கையிற்றால் கட்டி என்பார் மணிவாசகர்.

அறமும், பாவமும் நம்மை இந்த பிறவியோடு சேர்த்து கட்டும் கயிறுகள்.

தவம் இரண்டில் இருந்தும் நம்மை விடுவிக்கும்.

வினை அறு நோன்பினாள்  .என்றான் கம்பன்.

இராமனும், இலக்குவனும் அன்று இரவு அவளுடைய ஆசிரமத்தில் தங்கி இருந்தார்கள். அது மதங்க முனிவரின் ஆசிரமம்.

அது வரை தனக்கு வேண்டி தவம் செய்த சவரி , இனி இராம இலக்குவனர்களுக்கு எது நல்லது என்று நினைப்பதற்கு கடினமானதும், ஆராய்ந்து அறிந்தால் மட்டுமே அறியக் கூடியதுமான வழிகளை ஆராய்ந்து சொன்னாள். அந்த வழி சுக்ரீவன் இருக்கும் ரிஷ்ய முகம் என்ற மலைக்கு செல்லும் வழி.

பாடல்

அனகனும் இளைய கோவும் அன்று 
     அவண் உறைந்தபின்றை, 
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் 
     நோக்கி, வெய்ய 
துனை பரித் தேரோன் மைந்தன் இருந்த 
     அத் துளக்கு இல் குன்றம் 
நினைவு அரிது ஆயற்கு ஒத்த 
     நெறி எலாம் நினைந்து சொன்னாள்.

பொருள்


அனகனும் = குற்றம் இல்லாத இராமனும்

இளைய கோவும் = இலக்குவனும்

அன்று = அன்று

அவண்  = அங்கு

உறைந்தபின்றை = இருந்த பின்

வினை அறு நோன்பினாளும் = வினைகளை அறுக்கும் தவத்தினை கொண்ட சவரி 

மெய்ம்மையின் நோக்கி = உண்மையை ஆராய்ந்து

வெய்ய = வெப்பம் உள்ள

துனை பரித் தேரோன் மைந்தன் = குதிரைகளை கொண்ட தேரை கொண்டவனின் மைந்தன். (சூர்ய குமாரன் சுக்ரீவன் )

 இருந்த = வாழும்

அத் துளக்கு இல் குன்றம் = அந்த குற்றமற்ற மலை

நினைவு அரிது = நினைவுக்கு எட்டாத

ஆயற்கு ஒத்த = ஆய்ந்து அறியக் கூடிய

நெறி எலாம் நினைந்து சொன்னாள். = வழிகளை நினைந்து சொன்னாள்.நெறி என்றால் நல்ல நெறி மட்டும் தான் என்று பெரியவர்கள் கொள்வார்கள். நெறி என்று தானே சொல்லி இருக்கிறது.....நல்ல நெறியா தீய நெறியா என்று சொல்லவில்லையே என்று நினைக்கக் கூடாது. பெரியவர்கள் நல்லதையே நினைப்பார்கள்.

நெறி அல்லா நெறி தன்னை நெறியாகக் கொள்வேனை என்பார் மணிவாசகர்.

"நெறி அல்லா நெறி" என்றால் தீய நெறி.

நெறி என்றாலே நல்ல நெறிதான்.


நான் நினைத்தது உண்டு....ஏன் இராமன் வாலியின் துணையை நாடாமல் அவனிடம்  தோத்துப் போன சுக்ரீவனின் துணையை நாடினான் என்று ?

வாலி , இராவணனை விட பலசாலி.

பின் ஏன் இராமன் சுக்ரீவனிடம் போனான் ?

சவரி சொல்லித் தான் இராமன் சுக்ரீவன் துணையைப் பெற்றான்.

ஏன் அவ்வாறு செய்தான் ?

அது நம் நினைவுக்கு எட்டாத ஒன்று.  ஆராய்ந்து அறிய வேண்டிய ஒன்று என்கிறான்  கம்பன்....

நினைவு அரிது ஆயற்கு ஒத்த
     நெறி எலாம் நினைந்து சொன்னாள்.

நீங்களும் நானும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. 

இராமனின் அவதார நோக்கம் நிறைவேற எது சிறந்த வழியோ அதை நினைந்து சொன்னாள். 

பெரியவர்கள் சொல்லியதை அப்படியே கேட்டு நடக்கிறான் இராமன்.

ஆகமப் பிரமாணம். பெரியவர்கள் சொல்லியதில் நம்பிக்கை. 

சவரி வழி நடத்தாவிட்டால் இராமன் வேறு எங்கோ போய் இருப்பான். காப்பியத்தின் போக்கு மாறி இருக்கும். 

கதையின் போக்கை, அவதார நோக்கை நிறைவேற்றினாள் சவரி.

இதை இன்னொரு கோணத்தில் யோசித்துப் பார்ப்போம்.


இராவணன் தீங்கு செய்கிறான். அவன் தீமையின் உச்சம் மாற்றான் மனைவியை கவர்ந்தது. அவன் அழிக்கப் பட வேண்டியவன். அதற்கு வழி கோல எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து தவம்  செய்த சவரி உதவுகிறாள். 

தீமை பிறக்கும் போதே அதை அழிக்க ஒரு நல்லதும் எங்கோ தோன்றுகிறது. 

சவரியின் நோக்கம் இராவணனை அழிப்பது  அல்ல.ஆனால் அவள் உதவினாள். 

அறம் ஒரு மிகப் பெரிய சக்தி. தீமை அழிந்தே தீரும். 

தசரதனின் கன்னத்தில் தோன்றிய ஒரு நரை மயிர், கூனியின் கோபம், கைகேயின் வரம், சூற்பனகையின் காமம், சீதையின் அழகு, சவரியின் அறிவு என்று ஒன்றோடு  ஒன்று தொடர்பில்லாதவை எல்லாம் ஒன்று சேர்ந்து இராவணன் என்ற  தீமையை அழிக்க துணை நின்றன. 

அறம் வெல்லும். மறம் தோற்கும். 

நம் இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான். 

Saturday, June 28, 2014

திருக்குறள் - அவர்கள் அறியாதது என் பாக்கியம்

திருக்குறள் - அவர்கள் அறியாதது என் பாக்கியம்

"நீயும் தான் அவள விடாம சுத்துறா , அவ உன்ன திரும்பிக் கூட பாக்க மாட்டேங்குறா...அவள விட்டுட்டு வேற வேலையைப் பார்ரா " என்று அவன் நண்பர்கள் அவனுக்கு அட்வைஸ் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

அவனுக்கோ அவளை விட மனமில்லை.

அவள் மேல் உயிரையே வைத்து இருக்கிறான்.

அவ அந்த பக்கம் இந்த பக்கம் வரும் போதும் போகும் போதும் , "மச்சி உன் ஆளு வர்றாடா " என்று நண்பர்கள் சொல்லும் போது சிலிர்த்துப் போவான்.

இப்படி, இவன் காதல் குறுகிய நண்பர்கள் வட்டத்தில் இருந்தது கொஞ்ச கொஞ்சமாக கசிந்து அவளின் தோழிகள் மத்தியிலும் பரவியது. "ஏண்டி , அவன் தான் கிடந்து இப்படி உருகுரான்ல ...சரின்னு சொல்ல வேண்டியது தானே ... உனக்கு என்ன அவ்வளவு ராங்கி " என்று அவளிடம் சொல்லத் தலைப் பட்டார்கள்.

இந்த விவகாரம் இவர்களின் வட்டத்தையும் தாண்டி இன்னும் வெளியில் செல்ல ஆரம்பித்து விட்டது.

இப்படி எல்லோரும் தன் காதலைப் பற்றிப் பேசுவது அவனுக்கு உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷம். இதனால், நாளடைவில் அவள் மனமும் இளகும் , தன் மேல் ஒரு கருணை பிறக்கும்,  அது அன்பாகக் கனியும், காதலாக மாறும்  என்று அவன்  நம்பத் தொடங்கினான்.

இப்படி ஊர் பேசுவதற்குப் பெயர் - அலர் தூற்றல் என்று பெயர்.

இப்படி, அந்த  ஊர், அவர்கள் அறியாமலேயே , அவனுடைய காதலுக்கு உதவி செய்தது. அது என் பாக்கியம் என்கிறான் அவன்.

பாடல்

அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் 
பலரறியார் பாக்கியத் தால்.

சீர் பிரித்த பின்

அலர் எழு ஆருயிர் நிற்கும் அதனை 
பலர் அறியார் பாக்கியத்தால் 

பொருள்

அலர் எழு  = காதலைப் பற்றி ஊர் பேசுவது

ஆருயிர் நிற்கும் = அதனால் என் காதல் பலப் பட்டு,  என் உயிர் என்னை விட்டு பிரியாமல் நிற்கும். இங்கே உயிர் என்பதை காதலி என்றும் கொள்ளலாம்...அல்லது காதல் கை கூட இருப்பதால் அவன் உயிர் அவனை விட்டு போகாமல் இருப்பதாகவும் கொள்ளல்லாம்.


அதனை = அதனை

பலர் அறியார் = பலர் அறிய மாட்டார்கள்

பாக்கியத்தால் = நான் செய்த புண்ணியத்தால்


இராமாயணம் - ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது

இராமாயணம் - ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது

இராமனிடம் சவரி சொல்கிறாள்...."இராமா, நீ வருவதற்கு முன்னால் ஈசனும், பிரமனும், எல்லா தேவர்களும் , இந்திரனும் இங்கு வந்து இருந்தார்கள். வந்தவர்கள் என்னிடம் உன் குற்றமற்ற தவத்தின் பலன் உனக்கு கிடைக்கப் போகிறது. இராமனுக்கு வேண்டிய பூசைகளை செய்து நீ எம்மிடம் வந்து சேர்வாயாக என்று கூறிச் சென்றனர் என்றார்.

பாடல்

ஈசனும், கமலத்தோனும், இமையவர் 
     யாரும், எந்தை! 
வாசவன் தானும், ஈண்டு வந்தனர் 
     மகிழ்ந்து நோக்கி, 
"ஆசு அறு தவத்திற்கு எல்லை 
     அணுகியது; இராமற்கு ஆய 
பூசனை விரும்பி, எம்பால் 
    போதுதி" என்று, போனார்.

பொருள்

ஈசனும் = சிவனும்

கமலத்தோனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

இமையவர் யாரும் = தேவர்கள் எல்லோரும்

எந்தை! = எம் தந்தை போன்ற

வாசவன் தானும் = இந்திரன் தானும்

ஈண்டு வந்தனர் = இங்கு வந்தனர்

மகிழ்ந்து நோக்கி = என்னை மகிழ்ந்து நோக்கி

"ஆசு அறு தவத்திற்கு = குற்றம் அற்ற தவத்திற்கு

 எல்லை அணுகியது = பலன் கிடைக்கப் போகிறது

இராமற்கு = இராமனுக்கு

ஆய பூசனை விரும்பி = செய்ய வேண்டிய பூஜைகளை எல்லாம் செய்து

எம்பால் போதுதி" என்று, போனார் = எம்மிடம் வந்து சேர்வாயாக என்று கூறிச் சென்றார்


கம்பன் காட்டிய கடவுள் என்று தனியாக எழுதலாம். 

இராமனை திருமாலின் அவதாரம் என்று சொல்லாமல் சொல்லிய இன்னொரு பாடல் இது. 

சிவனும், பிரமனும், இந்திரனும் மற்ற எல்லா தேவர்களும் வந்தார்கள் ஆனால்  அந்த வரிசையில் திருமால் இல்லை . ஏன் ?

திருமால் தான் இராமனாக அவதரித்து இருக்கிறான் என்று சொல்லாமல் சொல்லிய  பாடல் இது. 

சவரியின் குற்றமற்ற நீண்ட கால தவப் பயன் இராமன் அவளிடம் வந்தான். 

தவம் , கடவுளை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தும். 

வருகிறவன் இராமன் என்று அவளுக்குத் தெரியாது. சிவனும், பிரமனும் , இந்திரனும், மற்றைய தேவர்களும் அவளிடம் வந்து சொல்கிறார்கள்...

தவத்தின் பெருமையை என்ன என்று சொல்லுவது. 

 

Friday, June 27, 2014

இராமாயணம் - மாண்டது என் மாயப் பாசம்

இராமாயணம் - மாண்டது என் மாயப் பாசம் 


இராமனை நினைத்து பன்னெடுங்காலம் தவம் இருந்தாள் சவரி .

இறுதியில்,  அவளின் தவத்தின் பயனாய் , இராமன் நேரில் அவள் முன் தோன்றினான்.

அவளின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

அவனை பார்க்க பார்க்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல  கொட்டுகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றது மாதிரி.

சவரி சொல்கிறாள்

"என் மாயப் பாசம் மாண்டது. கணக்கில்கணக்கில்லா காலம் நான் செய்த தவத்தின் செல்வம்  வந்தது. என் பிறவிப் பிணி போய் விட்டது "

பின் அவர்களுக்கு வேண்டிய விருந்தினை செய்தாள்

 பாடல்

ஆண்டு, அவள் அன்பின்
     ஏத்தி, அழுது இழி அருவிக்கண்ணள், 
'மாண்டது என் மாயப் பாசம்; 
     வந்தது, வரம்பு இல் காலம் 
பூண்ட மா தவத்தின் செல்வம்; 
     போயது பிறவி' என்பாள் 
வேண்டிய கொணர்ந்து நல்க, 
     விருந்துசெய்து இருந்த வேலை,

பொருள்

ஆண்டு = அப்போது

அவள் அன்பின் ஏத்தி = அவள் அன்பினால் இராமனை புகழ்ந்து

அழுது = அழுது

இழி அருவிக்கண்ணள் = அருவி போல நீர் விழும் கண்களோடு

'மாண்டது என் மாயப் பாசம் = இறந்தது என் மாயமான பாசம்

வந்தது, வரம்பு இல் காலம்  பூண்ட மா தவத்தின் செல்வம் = வந்தது இத்தனை காலம் செய்த  தவத்தின் பயன்

போயது பிறவி' என்பாள் = போனது என் பிறவி என்றாள்

வேண்டிய கொணர்ந்து நல்க = வேண்டியதை கொண்டு வந்து தந்து

விருந்துசெய்து இருந்த வேளை = விருந்து செய்து இருந்த போது

இது என்ன பெரிய விஷயம் ...ஒரு பக்தை அவளின் இறைவனை கண்டபோது கண்ணீர் ததும்புவதும், விருந்து செய்வதும் பெரிய விஷயமா என்றால்...இல்லைதான்.  ஆனால்,கம்பர் இதில் பல ஆழமான விஷயங்களை சொல்கிறார்.

முதலில், இராமன் அவளுக்கு ஒரு வரமும் தரவில்லை. அவளே சொல்லிக் கொள்கிறாள். மாண்டது என் மாயப் பாசம், வந்தது செல்வம், போயது பிறவி என்று.  அவளுக்குத் தெரிகிறது. இது எல்லாம் தந்து பெறுவது அல்ல. அவை நிகழும்போது தெரியும்.  தவத்தின் பயன் இயல்பான ஒன்று.

இரண்டாவது, அவளின் மகிழ்ச்சி எல்லை கடந்து நிற்கிறது. மாயப் பாசம் மாண்டது என்று தான் சொல்ல வேண்டும். தவத்தின் பயன் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.   ஆனால், அவள் மாண்டது மாயப் பாசம் என்று மாண்டதை முதலில்  சொல்கிறாள். அவ்வளவு அவசரம். அவ்வளவு மகிழ்ச்சி.
மாண்டது, வந்தது, போயது என்று முதலில் நடந்ததை சொல்லி பின் என்ன நடந்தது என்று சொல்கிறாள்.

மூன்றாவது, கிடைத்தது தவத்தின் பயன் என்று சொல்லவில்லை. "வந்தது, வரம்பு இல் காலம்  பூண்ட மா தவத்தின் செல்வம்  ". இராமன் வந்ததை தவத்தின் பயனாகச் சொல்கிறாள்.

நான்காவது, நாம் எல்லாம் செல்வம் என்றால் ஏதோ காசு பணம், வீடு, நகை, நட்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது அல்ல. தவத்தின் பயனாக கிடைபதுதான் செல்வம்.

ஐந்தாவது, ஏதோ கொஞ்ச காலம் செய்த தவம் அல்ல. வரம்பு இல் காலம் செய்த தவத்தின் பயன் இராமன் வந்தான் என்கிறாள். நமக்குதான் எவ்வளவு அவசரம். ஒரு பூஜை, ஒரு கோவிலுக்கு போவது, ஒரு வேண்டுதல்...உடனே பலன் கிடைக்க  வேண்டும் என்று நினைக்கிறோம். கிடைக்காவிட்டால் சந்தேகம் வருகிறது. இந்த பூஜை புனஸ்காரங்களை தொடர வேண்டுமா என்று. சவரி வரம்பு இல் காலம் தவம் செய்து இராமனை காணப் பெற்றாள். இறைவனை காண, தவத்தின் பலனைப் பெற பொறுமை, விடா முயற்சி வேண்டும். வரம்பு இல் காலம்.

பக்தியின் உச்சம். தவத்தின் உச்சம்.









Thursday, June 26, 2014

இராமாயணம் - சவரி - ஓர் மூலம் இல்லான்

இராமாயணம் - சவரி -  ஓர் மூலம் இல்லான் 


ஆரண்ய காண்டத்தின் கடைசிப் பகுதி சவரி  மோட்சம்.  வெகு சில பாடல்களே உள்ள படலம்.

இராமனும், இலக்குவனும் சவரியைப் பார்த்தார்கள். சவரி அவர்களை உபசரித்தாள். அவர்களை சுக்ரீவன் இருக்கும் மலைக்குப் போகச் சொன்னாள். பின் இந்த உடலை விடுத்து விண்ணுலகம் சென்றாள் . அவ்வளவுதான்.

இராமனுக்கும் சவாரிக்கும் நடக்கும் உரையாடல் மிக மிகச்  சிறிய ஒன்று. இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் நீண்ட காலம் அறிந்தவர்களைப் போல பேசிக் கொள்கிறார்கள்.

நீண்ட நாள் கழித்து ஒரு நண்பனை சந்தித்தால் எப்படி இருக்குமோ, அந்த மன நிலையை கம்பர்  கட்டுகிறார்.

சவரி  இராமனின் வரவுக்காக நீண்ட நாள் காத்து இருக்கிறாள். அவன் வருவான் என்று அவளுக்குத் தெரியும்.

இராமன் அந்த கானகம் வர வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. அவன் முடி சூட்டிக் கொண்டு அயோத்தியில் இருந்து அரசாள இருந்தவன்.

விதி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு இராமனை இங்கு கொண்டு வந்து சேர்த்தது. ஆனால், எப்படியோ இராமன் வருவான் என்று சவரி நம்பினாள் .

அவன் நம்பிக்கை வீண் போகவில்லை.

இராமன் அவளைப் பார்த்து "ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறாய் போல் இருக்கிறது " என்று அன்புடன் வினவுகிறான்.

அப்படி கேட்டவன் யார் ?

அவனுக்கு முன்னால் ஏதோ ஒன்று இருந்தது என்று எண்ணக் கூட முடியாத அளவுக்கு எல்லாவற்றிற்கும் மூல காரணமாய் நின்ற இராமன்.

அவன் தான் ஆதி மூலம். அவனுக்கு முன்னால் எதுவம் கிடையாது.


எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் என்றால் இறைவனைப் படைத்தவன் யார் என்ற கேள்வி  எழும் . அப்படி இறைவனைப் படைத்தவன் அல்லது படைத்தது என்று ஒன்று உண்டா இல்லையா என்று தெரியாது. அப்படியே ஒன்று இருந்தாலும், அதை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்கிறார் கம்பர்.

"அவனுக்கு முன்னால் " எது என்பதை எண்ணிக் கூட பார்க்க முடியாது.


பாடல்

அன்னது ஆம் இருக்கை நண்ணி, 
     ஆண்டுநின்று, அளவு இல் காலம் 
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத் 
     தலைப்பட்டு, அன்னாட்கு 
இன்னுரை அருளி, 'தீது இன்று 
     இருந்தனைபோலும்' என்றான் - 
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது 
     ஓர் மூலம் இல்லான்.


பொருள்

அன்னது ஆம் இருக்கை நண்ணி = அப்படி அவள் இருந்த  இடத்தை அடைந்து

ஆண்டுநின்று = அங்கிருந்த

அளவு இல் காலம் = அளவில்லாத காலம். நீண்ட காலம்

தன்னையே நினைந்து = தன்னையே நினைந்து

நோற்கும் = நோன்பு இருக்கும். தவம் இருக்கும்

சவரியைத்  = சவரியை


தலைப்பட்டு,= நெருங்கி

அன்னாட்கு இன்னுரை அருளி, = அவளுக்கு பல இனிய உரைகளை நல்கி


'தீது இன்று  இருந்தனைபோலும்' என்றான் = ஒரு    தீமையும் உன்னை அண்டாமல் இருந்தாய் போலும் என்றான்

முன் இவற்கு இது = இவனுக்கு முன்னால் இது இருந்தது 

என்று எண்ணல் ஆவது = என்று எதையுமே எண்ண முடியாத

ஓர் மூலம் இல்லான்.= ஒரு  மூலப் பொருள் ஆனான்



Tuesday, June 24, 2014

இராமாயணம் - காமத்தை வெல்ல ....

இராமாயணம் - காமத்தை வெல்ல ....


காமத்தை வெல்ல முடியுமா ?

சீதையின் நினைவால் உழன்ற இராவணன் அரண்மனை விடுத்து ஒரு சோலை சென்று அடைந்தான். அவன் போட்ட அதட்டலில் பருவ காலங்கள் எல்லாம் மாறிப் போயின. என்ன பருவ காலம் வந்து என்ன ? அவன் உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தான்.

காமம் இராவணனை மட்டும் வாட்டுவது அல்ல.

காமம் ஒரு உயிர்  சக்தி. அது எல்லா உயிர்களையும் பிடிக்கும். எல்லா உயிர்களுக்கும் அது பிடிக்கும். அது எல்லை மீறும் போது , வரம்பு மீறும் போது எல்லா சிக்கலும் வருகிறது.

காமத்தை எப்படி வெற்றிக் கொள்ளுவது.

காமம் விச்வாமித்திரனைப்  பற்றியது, பராசரரைப் பற்றியது, இந்திரனை, சந்திரனை, வியாரை, சந்தனுவை என்று எல்லோரையும் ஆட்டிப் படைத்தது.

காமத்தை வெல்ல கம்பர் வழி  சொல்லுகிறார்.அந்த ஒரு வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் காமத்தை வெல்ல முடியாது.

அது - ஒழுக்கம் என்ற வழி. ஒழுக்கத்துடன் நடந்தால் காமத்தை வெல்லலாம்.

பாடல்

கூலத்தார் உலகம் எல்லாம்
    குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க,
நீலத்து ஆர் அரக்கன் மேனி
    நெய் இன்றி எரிந்தது; அன்றே
காலத்தால் வருவது ஒன்றோ?
    காமத்தால் கனலும் வெம் தீச்
சீலத்தால் அவிவது அன்றிச்
    செய்யத்தான் ஆவது உண்டோ?


பொருள் 

கூலத்தார் = கடல் சூழ்ந்த

உலகம் எல்லாம் = இந்த உலகம் எல்லாம்

குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க = குளிரும் வெம்மையும் போயிற்று (இராவணனின் ஆணையினால் )

நீலத்து ஆர்  அரக்கன் மேனி = நீலம் சேர்ந்த அரக்கனின் உடல்

நெய் இன்றி எரிந்தது; = நெய் இன்றி எரிந்தது. காமம் உள்ளே எரிக்கிறது.

அன்றே = அல்லாமல்

காலத்தால் வருவது ஒன்றோ? = அந்த காம வெப்பம் காலத்தால் வருவது இல்லை

காமத்தால் கனலும் வெம் தீச் = காமத்தால் பொங்கும் அந்தத்  தீ

சீலத்தால் = ஒழுக்கத்தால் , நன்னடத்தையால்

அவிவது அன்றிச் = அழியுமே அன்றி

செய்யத்தான் ஆவது உண்டோ? = வேறு எதாலும் ஒன்றும் செய்ய முடியாது.

காமத்தை அறிவால் , ஆற்றலால்,  செல்வத்தால், அழகால்,அதிகாரத்தால் எதனாலும் வெற்றி கொள்ள முடியாது.

இராவணனிடம் இது எல்லாம்  இருந்தது. இருந்தும் அவனால் காமத்தை வெல்ல  முடியவில்லை.அழிந்தான். காரணம் அவனிடம் ஒழுக்கம் இல்லை. 

ஒழுக்கம் ஒன்றே காமத்தை வெல்லும் வழி. 

இந்த ஒரு பாடம் போதாதா ? இராமாயணத்தில் எவ்வளவோ அறிவுரைகள், புத்திமதிகள் இருக்கின்றன. 

இது அவற்றுள் நவரத்தினம்  போன்றது.