Sunday, August 3, 2014

சிலப்பதிகாரம் - சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்

சிலப்பதிகாரம் - சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்


கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கிறான். மனைவிக்கும் அது தெரியும். வீட்டில் உள்ள பொருள்களையெல்லாம் அந்த விலை மகளிடம் தருகிறான். எல்லாம் தீர்ந்த பின் ஒரு நாள் மனைவி முன் வந்து நிற்கிறான்.

இன்றைய சூழ்நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?

மனைவி என்ன சொல்லி இருப்பாள் ? கணவன் என்ன சொல்லி இருப்பான் ?

கோவலன் தவறு செய்தான். மாதவி வீட்டில் இருந்தான். செல்வங்களை எல்லாம் தொலைத்தான்.

பின் கண்ணகியிடம் வந்தான். அவளிடம் தான் தவறு செய்து விட்டதாகக் கூறவில்லை.

மன்னிப்பும் கேட்கவில்லை. எனக்கு வெட்கமாக இருக்கிறது என் செயலைக் கண்டால் என்று மட்டும் கூறுகிறான்.

கண்ணகி தன் கால் சிலம்பைத் தருகிறாள். என்னோடு வா என்று அவளை அழைத்துக் கொண்டு மதுரை வருகிறான்.

வரும் வழி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. மதுரை வந்து, மாதரி வீட்டில் தங்கும் போது, சொல்லுகிறான்.

கண்டவர்களோடு தங்கினேன். சிறு சொல் பேசும் கூட்டத்தாரோடு சேர்ந்தேன். பெரியவர்கள் சொன்ன வழியில் இருந்து விலகினேன். தாய் தந்தையர்க்கு செய்ய வேண்டிய கடமையையும் செய்ய வில்லை. சிறிய வயதில் பெரிய அறிவுடைய உனக்கும் தீமை செய்தேன். எனக்கு நல்ல கதி கிடைக்காது என்று வருந்தி சொல்கிறான்.


 பாடல்

வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்

நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென

பொருள்



வறுமொழியாளரொடு = வறுமையான மொழி உள்ளவர்கள். பயனில்லாத சொல் பேசுபவர்களோடும் 

வம்பப் பரத்தரொடு - வம்பு அளக்கும் பரத்தமை கொண்டோரோடும்

குறுமொழிக் கோட்டி = சிறுமையான மொழி பேசும்

நெடு நகை புக்கு - நகைப்புக்கு இடமாகி

பொச்சாப்பு உண்டு - மறதியும் கொண்டு

பொருள் உரையாளர் = பொருள் நிறைந்த மொழிகளை சொல்லும் பெரியவர்களின்


நச்சுக் கொன்றேற்கு - நல ஒழுக்கத்தை கொன்று

நன்னெறி உண்டோ - எனக்கு நல்ல கதி கிடைக்குமா ?

இருமுது குரவர் = பெற்றோர்கள்

 ஏவலும் பிழைத்தேன் - அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளையும் செய்யாமல் பிழை செய்து விட்டேன்

சிறுமுதுக் = சிறிய வயதில் முதிய அறிவைக் கொண்ட உனக்கும் 


குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் - குறை உண்டாகும்படி சிறுமை செய்தேன்

வழு வெனும் பாரேன் - தவறு என்றும் அறிய மாட்டேன்

மா நகர் = பெரிய ஊரான நம் ஊரை விட்டு

மருங்கு ஈண்டு எழுகென எழுந்தாய் - வா என்று சொன்னபோது உடனே என்னுடன் வந்தாய்

என் செய்தனை என - என்ன பெரிய காரியம் செய்தாய் ;

      

இராமாயணம் - உலகம் இன்று அழியும்

இராமாயணம் - உலகம் இன்று அழியும் 


இந்திரஜித்து போரில் மாண்டதை  தூதுவர்கள் வந்து இராவணனிடம் சொன்னார்கள்.

அதைக் கேட்ட அங்கிருத்த முனிவர்களும், தேவர்களும், நடனமாடும் பெண்களும் "இன்றோடு இந்த உலகம் அழியப் போகிறது " என்று அஞ்சி ஆளுக்கு ஒரு புறம் சிதறி ஓடினார்கள்.

மகன் இறந்ததைக் கேட்ட இராவணன் எவ்வளவு கோபப் படுவான்...இராவணனின் கோபம் இந்த உலகை அழித்து விடும் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

பாடல்


மாடு இருந்த வர மாதவர், வானவர்,
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும்,
'வீடும், இன்று, இவ் உலகு' என விம்முவார்,
ஓடி, எங்கணும் சிந்தி ஒளித்தனர்.

பொருள்

மாடு இருந்த = பக்கத்தில் இருந்த (இராவணனின்)

வர மாதவர் = வரம் பொருந்திய பெரிய தவம் செய்தவர்கள்  (முனிவர்கள்)

வானவர் = தேவர்கள்

ஆடல் நுண் இடையார் = ஆடலில் வல்ல சிறிய இடை உள்ள பெண்கள்  

மற்றும் யாவரும் = மற்ற அனைவரும்

'வீடும்,  = வீழும்

இன்று, = இன்று

இவ் உலகு' = இந்த உலகம்

என விம்முவார் = என் விம்மி

ஓடி, எங்கணும் சிந்தி ஒளித்தனர் = சிதறி ஓடி ஒளிந்தார்கள்


கந்தர் அநுபூதி - அற கதி கெட்டு

கந்தர் அநுபூதி - அற கதி கெட்டு 


நல்ல நூல்கள் ஒன்றிரண்டு கிடைத்தால் அதை பொக்கிஷமாக வைத்துப் பாதுகாக்கலாம். நமக்கோ, கணக்கில் அடங்கா நூல்கள் தமிழில் கிடைத்து இருப்பதால் அவற்றின் அருமை தெரியாமல் இருக்கிறோம் நாம்.

எண்ணற்ற நூல்களை விடுங்கள், ஒரு நூலில் எத்தனை பாடல்கள், ஒவ்வொரு பாடலிலும் எத்தனை ஆழமான கருத்துகள்...ஒரு நூலைப் படித்து முடிக்க ஒரு ஆயுள் போதாது.

திருக்குறள், திருவாசகம், திரு மந்திரம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்புகழ், என்று எத்தனை எத்தனை புத்தகங்கள்.

நாமும் அறியாமல், அடுத்த சந்ததிக்கும் இவற்றை அறிமுகம் செய்யாமல் மிகப் பெரிய சொத்தை அனுபவிக்காமல் போகிறோம்.

கந்தர் அனுபூதியில் ஒரு பாடல்...

சுகத்தில் பெரிய சுகம் எது ?

புலன்கள் மூலம் கிடைக்கும் உடல் இன்பம். சுவை, காட்சி, காதால் கேட்பதால் பெரும் இன்பம், தொடுவதால் கிடைக்கும் இன்பம், நறுமணங்களை நுகர்வதால் வரும் இன்பம் என்று கிடைக்கும் புலன் இன்பங்கள்.

உணர்வுகள் மூலம் கிடைக்கும் இன்பம் - தாய்மை, கணவன், மனைவி, பெற்றோர், என்ற உணர்வுகள் மூலம் கிடைக்கும் இன்பம்.

இவை எல்லாவற்றையும் விட பெரியது, ஞானத்தின் மூலம் கிடைக்கும் சுகம். அறிவின் மூலம் கிடைக்கும் சுகம் பெரிய சுகம்.

இந்த சுகத்தை யாரிடம் இருந்து பெறலாம் ?

ஞான சுகத்தின் அதிபதி யாரோ, அவனிடம் இருந்து பெறுவதுதானே முறை.

பாடல்

மதிகெட் டறவா டிமயங் கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதிபுத் திரஞா னசுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே.

சீர் பிரித்த பின்

மதி கெட்டு அற வாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுக அதிப -அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

பொருள்

மதி கெட்டு  = அனைத்து சிக்கல், மற்றும் துன்பங்களுக்கும் காரணம் அறிவு சரியாக வேலை செய்யாமைதான். அறிவு அற்றம் காக்கும் கருவி என்பார் வள்ளுவர்.

கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்பது பழமொழி.

அற வாடி = அற என்றால் முற்றிலும், முழுவதும், அதிகமான

மயங்கி  = மயங்கி

அறக் கதி கெட்டு = அற வழி கெட்டு. புத்தி கெட்டுப் போகும்போது அற வழி மறந்து போகும். அற வழியில்      

அவமே கெடவோ கடவேன் = வீணாக கெட்டுப் போவதற்கா நான் இருக்கிறேன்

நதி புத்திர = நதியின் புத்திரனே. சிவனின் நெற்றில் கண்ணில் இருந்து வந்த சுடரை வாயு பகவானிடமும் , அக்னி பகவானிடமும் கொடுத்தார். அவர்களால் அதன் வெம்மையை தாங்க முடியவில்லை. அவர்கள் கங்கையிடம் கொடுத்தார்கள். அவள் அதை சரவணப் பொய்கையில் விடுத்தாள். இறுதியில் அவளால் தரப் பட்டதால் முருகனை நதி புத்திரர் என்று அழைக்கிறார் அருணகிரிநாதர்.

ஞான சுக அதிப = ஞானத்தால் வரும் சுகத்தின் அதிபதியே. ஞானமும், அதில் இருந்து வரும் சுகமும் ....இரண்டுக்கும் அதிபதி அவன். யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம்தானே கேட்க முடியும் ?

அத் திதி புத்திரர் = அத் திதியின் புத்திரர்களான சூரபத்மன் முதலியோரின்  

வீறு அடு சேவகனே. = வீரத்தை சண்டை இட்ட சேவகனே 


காசிபருக்கும் மாயைக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன் முதலிய அரக்கர்கள். எண்ணிறந்த  வரத்தைப் பெற்றவர்கள். 1008 அண்டங்களை 108 யுகங்கள் ஆளும்  வரம் பெற்றவர்கள். 

என்ன இருந்து என்ன பயன் ? அற வழியில் இருந்து தவறினார்கள். மாண்டு போனார்கள். 

அவர்கள் செய்த தவறு என்ன ? 

நன்றி மறந்தது. எல்லாம் தந்த இறைவனுக்கு நன்றி மறந்த தவறு. 

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்பது வள்ளுவம்.  

செய்த நன்றியை மறந்தான், மாண்டான். 

மதி கெட்டு , அற வழி மறந்து, போகாத வழியில் சென்று முடிவைத் தேடிக் கொண்டான். 

எத்தனை நன்றிகளை நாம் நினைத்துப் பார்க்கிறோம் ? 

பட்டியல் போடுங்கள் ...உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவி செய்தவர்களின்   பெயரை. நன்றி கூறுங்கள் அவர்களுக்கு. 

Thanks Giving day என்று ஒரு நாள் வைத்து இருக்கிறோம். வருடம் பூராவும்  நன்றி செலுத்தும்  நாள்தான். 

Saturday, August 2, 2014

இராமாயணம் - இனி தாலியைத் தொட மாட்டார்கள்

 இராமாயணம் - இனி தாலியைத் தொட மாட்டார்கள்  



போரில் இந்திர சித்து மாண்டு போனான். களத்தில் தன் மகனை கண்டு எடுத்து மடியில் போட்டுக் கொண்டு இராவணன் புலம்புகிறான். அவனுடைய ஒவ்வொரு தலையும் தனித்தனியே புலம்பியதாம். தலைக்கு ஒரு பாட்டு வைக்கிறார் கம்பர்.

இரசிகமணி டி. கே. சி சொல்லுவார் , "அடடா ...இராவணனுக்கு இன்னும் கொஞ்சம் தலை இல்லையே ...இருந்திருந்தால் அதற்கும் சேர்த்து நமக்கு இன்னும் கொஞ்சம் பாடல்கள் கிடைத்திருக்குமே" என்று.

இந்திர சித்து உயிரோடு இருந்த காலத்தில் , அவன் போருக்குப் புறப்படும் போது தன் வில்லின் நாணை சுண்டி ஒலி எழுப்புவான். அந்த ஒலி கேட்டவுடன் இயக்கர்களின் மனைவிமார் தங்கள் தாலியைத் தொட்டுப் பார்த்துக் கொள்வார்களாம்.....கழுத்தில் இருக்கிறதா இல்லை கழன்று விழுந்து விட்டதா என்று. தங்கள் கணவர்களின் உயிருக்கு ஆபத்து வந்து விட்டது என்று அவர்கள் பயப்படுவார்கள். இன்னும் எவ்வளவு நேரம் இந்த தாலி தங்கள் கழுத்தில் இருக்குமோ என்று பயந்து அதை தொட்டு பார்த்துக் கொள்வார்களாம். இந்திர்ஜித்தா, நீ இன்று இறந்து விட்டாய், இனி அவர்களுக்கு பயம் இல்லை. தங்கள் தாலியைத் தொட்டுக் கொள்ள வேண்டி இருக்காது என்று இராவணனின் ஒரு தலை புலம்பிற்று.


பாடல்  


'சேல் இயல் கண் இயக்கர்தம் தேவிமார்,
மேல் இனித் தவிர்கிற்பர்கொல், வீர! நின்
கோல வில் குரல் கேட்டுக் குலுங்கித் தம்
தாலியைத் தொடல்' என்னும் - மற்று ஓர் தலை.

பொருள்

சேல் = மீன்

இயல் = போன்ற

கண் = கண்களைக் கொண்ட

இயக்கர்தம் தேவிமார் = இயக்கர்களின் தேவிகள்

மேல் இனித் = இனிமேல்

 தவிர்கிற்பர்கொல் = தவிர்ப்பார்களோ 

 வீர! = வீரனே

நின் = உன்னுடைய

கோல வில் = வீரம் பொருந்திய வில்லின்

குரல் கேட்டுக் = ஒலி கேட்டு

குலுங்கித் = திடுக்கிட்டு

தம் = தங்களுடைய

தாலியைத் தொடல்' = தங்களுடைய தாலியைத் தொடும் அந்த செய்கையை

என்னும் - மற்று ஓர் தலை. = என்று சொல்லும் மற்றும் ஓர் தலை



Friday, August 1, 2014

சிவ புராணம் - நமச்சிவாய வாழ்க

சிவ புராணம் - நமச்சிவாய வாழ்க 




பாடல்

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

இறைவன் பல்வேறு வடிவங்களிலும், உருவிலும், இருக்கக் காரணம், பல்வேறு மதங்களும், மதக் கோட்பாடுகளும் இருக்கக் காரணம் மனிதர்கள் பல்வேறு விதமாக இருக்கிறார்கள் என்று  முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

இந்த கருத்து மீண்டும்  மீண்டும், விடாமல் நமது சமய நூல்களில் எங்கும் காணக் கிடைக்கிறது.

சற்று ஆழமாகப் படித்தால் நமக்கு புரிபடும்.

இந்த ஐந்து வரிகளில் மணிவாசகர் என்ன சொல்ல வருகிறார் ?


கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

திருப் பெருந்துறையில் குருவடிவாக வந்தவன் தாள் வாழ்க
ஆகமம் என்றால் வேத புத்தகம். வேதமாக அல்லது மந்திரமாக நின்றவன் தாள் வாழ்க .
ஏகன் அனேகன் - ஒன்றாய் பலவடிவாய் நின்ற இறைவன் தாள் வாழ்க

அதாவது, இறைவன் மனித வடிவிலும் வருகிறான், மந்திர வடிவிலும் வருகிறான், ஒன்றாய் பலவாய் இருக்கிறான்.

இதே கருத்தை சொல்ல வந்த திருநாவுக்கரசரும்,


விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியன்
உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கி கடைய முன் நிற்கவே 


விறகில் தீயைப் போலவும்
பாலில் உள்ள நெய்யைப் போலவும்
மணியில் உள்ள சோதியைப் போலவும் இருக்கிறான் என்கிறார்.

மணியில் உள்ள ஜோதி , ஒளி எளிதில் தெரியும். கையில் எடுத்துப் பார்த்தால் உடனே கண்ணுக்குப் புலப் படும்.


பாலில் உள்ள நெய்யை அவ்வளவு எளிதாக காண முடியாது. காய்ச்சி, உரை விட்டு, தயிர் ஆக்கி,  தயிரைக் கடைந்து, மோர் ஆக்கி, அந்த மோரில் இருந்து வெண்ணை எடுத்து, அதை உருக்கி நெய்யை அடைய வேண்டும்.

 
விறகில் உள்ள தீயை வெளியே கொண்டுவருவது மோரைக் கடைவது போல எளிதானது  அல்ல.

சிலருக்கு இறைவன் மணியில் உள்ள ஒளி போல வெளிப் படுகிறான்.
சிலருக்கு பாலில் உள்ள நெய்யாக இருக்கிறான்.
வேறு சிலருக்கோ விறகில் உள்ள தீயாக இருக்கிறான்.

கடைசி வரியைப் பாருங்கள்



முறுக வாங்கி கடைய முன் நிற்கவே


சிலருக்கு முன் நிற்கும்.
சிலருக்கு கடைய முன் நிற்கும் 
சிலருக்கு முறுக வாங்கிக் கடைய முன் நிற்கும் 


இதை சொல்ல வந்த  சேக்கிழாரும் 

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் 
நிலவுலாவிய நீர்மலி வேணியன்: 
அலகில் சோதியன்: அம்பலத்து ஆடுவான்: 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.

ஓத முடியாத ஒரு உருவம் 
நிலவு தலையில் உலவும் தலை கொண்ட வடிவம் 
அளவு இல்லாத ஜோதி வடிவம் 

இதையே அருணகிரி நாதரும் 

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


அபிராமி பட்டர் கூறுவார் 

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

 

இப்படி இறைவன் என்பது ஒரு தனி மனித பயணம், தனி மனித தேடுதல், தனை மனித  அனுபவமாய் இருக்கிறது. 

ஆளுக்குத் தகுந்த மாதிரி இறை அனுபவம் மாறுகிறது. 

இதில் என் அனுபவம்  உயர்ந்தது, உன் அனுபவம் தாழ்ந்தது என்று சொல்ல என்ன இருக்கிறது. 

ஒவ்வொருவரின் அனுபவமும் மிகத் தனிப்பட்டது. 

ஒருவரின் அனுபவத்தை இன்னொருவர் பின் பற்றுவதும் சரி அல்ல. நான் புறப்பட்ட இடத்தில் இருந்து நான் இறைவனை சென்று அடைய எடுத்துக் கொண்ட வழி எனக்கு சரியாக இருக்கலாம். அதே வழி உங்களுக்கும் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. 

உங்கள் வழி, நீங்கள் புறப்படும் இடத்தைப் பொருத்தது. 

எல்லோருக்கும் ஒரு வழி என்றால், எல்லோரும் ஒரே இடத்தில் இருந்து புறப்பட வேண்டும்.  

ஏகன், அநேகன் இறைவன் அடி வாழ்க ...

அவன் ஒருவன், அவன் பலவாகவும் இருக்கிறான்....

இறைவன் இருக்கிறான் என்று சொல்பவர்களும் சரிதான். 

இல்லை என்று சொல்பவர்களும் சரிதான் 

அவனுக்கு உருவம் இருக்கிறது என்றாலும் சரி, உருவம் இல்லை என்றாலும் சரி...

இது சிவ புராணத்தில் முதல் ஐந்து அடிக்கு மட்டும் உள்ள விளக்கம்...

இன்னும் இருக்கிறது. 






 

கம்ப இராமாயணம் - நினைத்ததை முடிப்பவன்

கம்ப இராமாயணம் - நினைத்ததை முடிப்பவன் 



ஒரு   முறை ஒரு பெரிய பணக்காரன் ஒரு ஜென் துறவியைப் கண்டு ஆசி வாங்கப் போனான். துறவிக்கு நிறைய பொருள் கொடுத்து என்னை ஆசீர்வதியுங்கள் என்றான்.

உடனே அந்தத் துறவி "முதலில் நீ சாவாய் . பின் உன் மகன் சாவான். பின் உன் பேரன் சாவான் " என்று ஆசி  வழங்கினார்.

அந்த செல்வந்தனுக்கு பெரிய ஏமாற்றமும் கோபமும்.

"என்ன துறவியாரே , ஆசி வழங்கச் சொன்னால் இப்படி சாகும் படி சொல்கிறீர்களே " என்றான்.

அதற்கு அந்த துறவி சொன்னார் "யோசித்துப் பார் , முதலில் உன் பேரன் இறந்து, பின் உன் மகன் இறந்து, பின் நீ இறந்தால்  எப்படி இருக்கும்....அந்த சோகத்தை உன்னால் தாங்க முடியுமா ? "  என்றார்.

சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம்.

தனக்கு மரணமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த இராவணன் மரணத்தின் வலி என்றால் என்ன என்று உணரும் தருணம். 

இந்திரசித்து மாண்டு போனான். இராவணன் போர் களத்திற்கு வந்து தன் மகனின் உடலைத் தேடுகிறான். கை கிடைத்தது. உடல் கிடைத்தது. தலை கிடைக்கவில்லை. தன் மகனின் தலை இல்லா உடலை மடி மேல் கிடத்தி அழுகிறான் இராவணன்.

அப்போதும் சீதையின் ஞாபகம் வருகிறது அவனுக்கு.

அந்த சீதையால், எனக்கு நீ செய்ய  வேண்டிய இறுதிக் கடன்களை நான் உனக்கு செய்ய வேண்டியதாயிற்றே என்று  புலம்புகிறான். என் கோபத்தால், உலகை எல்லாம் வென்று, இந்திரனின் செல்வத்தைப் பெற்று நான் நினைத்ததை முடித்து நின்றேன்.  ஆனால், இன்றோ அந்த சீதையால் எனக்கு நீ செய்ய வேண்டிய கருமங்களை நான் உனக்குச் செய்ய வேண்டியதாயிற்று என்று பச்சாதபத்தில் புலம்புகிறான்.

பாடல்

‘சினத்தொடும் கொற்றம் முற்றி,
   இந்திரன் செல்வம் மேவி,
நினைத்தது முடித்து நின்றேன்;
    நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத் தக்க
    கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வது ஆனேன்!
    என்னின் யார் உலகத்து உள்ளார்.


பொருள் 

‘சினத்தொடும் = கோபத்தோடு

கொற்றம் முற்றி = அரசு எங்கும் செலுத்தி

இந்திரன் செல்வம் மேவி = இந்திரனின் செல்வத்தைப் பெற்று

நினைத்தது முடித்து நின்றேன் = நான் மனத்தில் நினைத்ததை முடித்து வந்தேன்

நேரிழை ஒருத்தி = சீதை என்ற பெண்ணால்

நீரால் = நீரால்

எனக்கு நீ செய்யத் தக்க கடன் எலாம் = எனக்கு நீ செய்ய வேண்டிய இறுதிக் கடனை  எல்லாம் 

ஏங்கி ஏங்கி = ஏங்கி ஏங்கி

உனக்கு நான் செய்வது ஆனேன்! = உனக்கு நான் செய்ய வேண்டியது ஆனேன்

என்னின் யார் உலகத்து உள்ளார் = என்னைப் போல யார் உள்ளார்கள்

காமமா அழித்தது அவனை ?

இல்லை !

அறம் பிறழ்ந்த வாழ்கை முறை அழித்தது.

எல்லா துன்பத்திற்கும் காரணம் எங்கோ அறம் பிறழ்த செய்கைதான்.

துன்பம் வரும்போது யோசித்துப் பாருங்கள். எங்கே அறம் பிழைத்தீர்கள் என்று ...



சிவ புராணம் - நமச்சிவாய வாழ்க

சிவ புராணம் - நமச்சிவாய வாழ்க 

இறைவனைப் பற்றிய சிந்தாந்தங்கள் மனிதனை குழப்பியதைப் போல வேறு ஏதாவது குழப்பியிருக்குமா என்பது சந்தேகமே.

அத்தனை கடவுள்கள், அத்தனை மார்கங்கள், சமயங்கள், சமய கோட்பாடுகள்....இதில் என் மதம் உயர்ந்தது, உன் மதம் தாழ்ந்தது என்ற சண்டை சச்சரவுகள்.....

இதற்கு நடுவில், கடவுள் இல்லவே இல்லை என்று வாதிடும் ஒரு கூட்டம். அந்த கூட்டம் ஏதோ அறிவியல் வளர்ச்சியால் இன்று வந்ததது அல்ல.

"நாத்திகம் பேசி நாத் தழும்பு ஏறி " என்று மணிவாசகர்  குறிப்பிடுகிறார்.அவர் காலத்திலேயே நாத்திகம் இருந்திருக்கிறது.

இதற்குப் பின்னால் இறைவன் இருக்கிறானா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது என்று ஒரு கூட்டம்.

ஏன் இவ்வளவு குழப்பம் ?

அது அப்படி ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் ஒரு நாள் உங்கள் உறவினரையோ நண்பரையோ பார்க்க அவர்கள் இருக்கும் ஊருக்குப் போகிறீர்கள். இதற்க்கு முன்னால் போனது கிடையாது. கையில் விலாசம் இருக்கிறது. ஆனால் சரியான இடம்  தெரியாது.

அவர் இருக்கும் இடத்திற்கு சற்று தொலைவு வரை வந்து விட்டீர்கள்.

அங்கு உள்ள ஒருவரிடம் அந்த விலாசத்தைக் காட்டி உங்கள் நண்பரின் வீட்டுக்கு எப்படி போவது என்று கேட்கிறீர்கள்.

"இப்படியே நேர போய் , இடது புறம் திரும்பினால் ஒரு சந்து வரும், அதில் மூணாவது  வீடு" என்கிறார்.

இதுவே நீங்கள் எதிர் திசையில் இருந்திருந்தால், அங்குள்ள ஒருவர், "இப்படியே நேரே போய் வலது புறம் திரும்பினால் ஒரு சந்து வரும். அதில் மூணாவது வீடு" என்று சொல்லி இருப்பார்.

ஒரு வேளை நீங்கள் அந்த சந்திலே நின்று கொண்டு விலாசம் கேட்டு இருந்தால் "இந்தத் தெரு தான், அதோ இருக்கு பாரு பாருங்க அந்த பச்சை கலர் பெயிண்ட் அடித்த வீடு...அது தான்" என்று சொல்லி இருப்பார்.

அந்த வீட்டுக்கு போய் விட்டீர்கள். அது ஒரு அடுக்கு மாடி கட்டிடம். வாசலில் உள்ள காவலாளியிடம் கேட்கிறீர்கள்...அவர் "ஆறாவது மாடி சார், லிப்டுல மேல போனீங்கனா , ஆறாவது மாடியில இடது புறம் இரண்டாவது வீடு " என்று  சொல்வார்.


ஒரே வீடுதான், ஒருவர் இடது புறம் போ என்கிறார், ஒருவர் வலது புறம் போ என்கிறார், ஒருவர் நேரே போ என்கிறார், ஒருவர் மேலே போ என்கிறார்....

எப்படி எல்லாம் சரியாக இருக்க முடியும் ?

இடது புறம் திரும்பு என்று சொன்னவரும், வலது புறம் திரும்பு என்று சொன்னவரும் ஒருவரை ஒருவர் "நான் சொல்வதுதான் சரி " என்று  சண்டை பிடித்துக் கொண்டால் எப்படி இருக்கும்   ?

எல்லாம் சரிதான்...இருந்து ஏன் வேறு வேறு வழியாக இருக்கிறது ?

காரணம், நீங்கள் நின்று கேட்ட இடம் வேறு வேறு.

நீங்கள் எங்கிருந்து புறப்படுகிரீர்களோ, போய் சேர வேண்டிய வழி நீங்கள் புறப்படும் இடத்தை பொறுத்து மாறும்.

இறைவன் பலவாறாக இருக்கக் காரணம், மதங்கள் பலவாறாக இருக்கக் காரணம் மனிதன் பலவாறாக இருக்கிறான்.

அவன் பிறந்த சூழ்நிலை, படித்த படிப்பு, நண்பர்கள், அவன் அனுபவம் என்று மனிதன்  பல பரிணாமங்களில் இருப்பதால் அவன் தேடும் இறையும் அதன் வழிகளும் வேறு வேறாக இருக்கிறது.

ஒவ்வொரு சமயப் பெரியாரும் அவர் நின்ற இடத்தில் இருந்து இறைவனை காண வழி சொன்னார். நீங்களும் அதே இடத்தில் நின்றால், அந்த வழி உங்களுக்கும் சரியாக இருக்கும்.

ஆனால், நீங்கள் அவர் இடத்தில் இல்லை. எனவே அவர் சொன்ன வழி உங்களுக்கு சரியாக இருக்காது.  நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து நீங்கள் தான்  வழி காண வேண்டும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

அது மட்டும் அல்ல, நீங்கள் இருக்கும் இடம் நாளும் மாறிக் கொண்டே இருக்கிறது.


அவர் சொன்ன பாதையில் சென்றேன். ஒண்ணும் தெரியவில்லை என்றால் தெரியாது. அவர் நின்ற இடத்தில் இருந்து அவர் சென்ற பாதை சரி. ஆனால் நீங்கள் நிற்கும் இடம் வேறு. அவர் சொன்ன பாதை உங்களுக்கு எப்படி சரியாக வரும் ? நீங்கள் தான் தேடி கண்டடைய வேண்டும்.

நீங்கள் போய் சேரும் இடம் எப்படி இருக்கும் என்று சொல்லலாம். ஆனால் அங்கே எப்படி போவது என்று சொல்ல முடியாது.

சிலருக்கு உருவமாய்த் தெரிகிறது, சிலருக்கு ஜோதியாய் தெரிகிறது, சிலருக்கு மந்திர வடிவாய் தெரிகிறது, சிலருக்கு ஒன்றும் இல்லாத வெளியாகத் தெரிகிறது, சிலருக்கு எங்கும் நிறைந்த ஆத்ம சொரூபமாகத் தெரிகிறது , சிலருக்கு ஒன்றும் தெரிவது இல்லை ....எல்லாம் ஒன்றுதான்....


பாடல்

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க


இந்த ஐந்து வரிகளை நான் பள்ளியில், கல்லூரியில்  படிக்கும் காலத்திலேயே கேட்டதுண்டு. வாசித்தது  உண்டு. ஏதோ மணிவாசகர் இறைவனைப் பற்றி வர்ணிக்கிறார் என்ற அளவில் வாசித்து விட்டு போய் இருக்கிறேன்.

இதற்குள் இவ்வளவு அர்த்தமா என்று இன்று வியக்கிறேன்.

அப்படி என்ன இதில் இருக்கிறது ?