Thursday, January 29, 2015

திருமந்திரம் - புலன்களைப் போற்றுவோம்

திருமந்திரம் - புலன்களைப் போற்றுவோம் 


பொதுவாக நம் தமிழ் இலக்கியமும் , குறிப்பாக அற நூல்களும் மற்றும் சமய இலக்கியங்களும் புலன்களை அடக்க வேண்டும், புலன்கள் போன வழியில் போகக் கூடாது, புலன்கள் வஞ்சனையை செய்யும், புலன்கள் நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் என்றெல்லாம் தான் சொல்கின்றன.

திருமூலர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

புலன்கள் இல்லாமல் எப்படி எதையும் அறிந்து கொள்வது ? இந்த உடல் முக்கியம், இந்த புலன்கள் முக்கியம் என்று சொல்கிறார்.

புலன்கள் மூலம் தான் அறியமுடியாத இறைவனை அறிய முடியும். எனவே புலன்களை போற்றுங்கள்  என்கிறார்.

உடம்பை  போற்றுகிறார்.

பாடல்


உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

மிக எளிய பாடல். மிக மிக ஆழ்ந்த அர்த்தம் கொண்டது.

பொருள்


உள்ளம் பெருங்கோயில் = உள்ளம் ஒரு பெரிய கோவில்

 ஊன் உடம்பு ஆலயம் = இந்த மாமிச உடம்பு ஒரு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் = வாய் தான் அந்த கோபுரத்தின் வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் = சந்தேகம் இல்லாமல் தெளிந்த மனம் உடையவர்களுக்கு

சீவன் சிவலிங்கம் = சீவனே சிவன். சிவன் வேறு எங்கும் இல்லை

கள்ளப் புலன் ஐந்தும் = கள்ளமான புலன்கள் ஐந்தும்

காளா மணிவிளக்கு = இருட்டைப் போக்கும் விளக்கு

புலன்கள் கள்ளம் செய்யும் இயல்பு உடையனதான். இருந்தாலும், அறியாமை என்ற இருளைப் போக்கி அறிவு ஒளி பெற உதவுவது இந்த புலன்கள்தான்.

கண் இல்லாமல் எப்படி படிப்பது ?

காது இல்லாமல் எப்படி கேட்டு அறிந்து கொள்வது ?

புலன்கள் இல்லாமல் நம்மால் அறிவைப் பெற முடியாது. 

அறிவைத்தரும் புலன்கள் இந்த உடலோடு சேர்ந்தவை என்பதால், இந்த  உடலும் புனிதமான  கோவிலுக்குச் சமமானது.

உடலுக்குக்குள் இருக்கும்  சீவனை சிவனாக அறிய வேண்டும் என்றால், உடலை முதலில்  கோவிலாக நாம் கருத நடத்த வேண்டும். 

எங்கே செய்கிறோம் ?

 புகை பிடிப்பது, தண்ணி அடிப்பது, அளவுக்கு அதிகமாக உணவை அடைப்பது, கண்ட நேரம் தூங்குவது, தூய்மையாக வைத்துக் கொள்வது கிடையாது, அதை  சரியாக பராமரிப்பது கிடையாது. 

பாழடைந்த கோவில் போல வைத்திருக்கிறோம். 

எங்கே இறைவனைக் காண்பது  இதில்.

புலன்களை கூர்மைப் படுத்திக் கொண்டால், நுண்ணிய விஷயங்களை அறிய முடியும். 

இறை என்பது நுணுக்கமான விஷயம். அதை அறிய வேண்டும் என்றால் நம் புலன்கள் கூர்மையாக , மென்மையாக  இருக்க வேண்டும். 

புலன்கள் எப்படி போகத்திற்கு உதவுகிறதோ , அப்படியே யோகத்திற்கும் அது   உதவும் என்கிறார் கம்பரும்.

அதை நாளை பார்ப்போம்....

அதற்கு முன், எப்படி உடலையும், புலன்களையும் போற்றுவது என்று சிந்திப்போம். 


 

Monday, January 26, 2015

திருக்குறள் - ஆமை போல புலன்களை அடக்க வேண்டும்

திருக்குறள் - ஆமை போல புலன்களை அடக்க வேண்டும் 


புலன்கள் நம்மை துன்பத்தில் இழுத்து விட்டு  விடும். புலன்கள் நம்மை தீய வழியில் இட்டுச் செல்லக் கூடும். அப்படி புலன்கள் போன வழியில் போகாமல், அவற்றை கட்டுப் படுத்தி, அவை தவறான பாதையில் செல்ல முயலும்போது அவற்றை உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி என்றால், ஆமை எப்படி தனக்குத் துன்பம் வந்த போது புலன்களை உள்ளே இழுத்துக் கொள்கிறதோ அப்படி.

புலன்களை உள்ளே இழுத்துக் கொள்வதன் மூலம் அந்த புலன்கள் மட்டும் அல்ல உடல் பூராவும், உயிரும் ஆபத்தில் இருந்து தப்பிக்கும்.

பாடல்

ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி 
னெழுமையு மேமாப் புடைத்து.

சீர் பிரித்த பின்

ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றி 
எழுமையும் எமாம்பு உடைத்து 


பொருள்

ஒருமையுள் = ஒன்றனுக்குள் 

ஆமை போல் = ஆமையைப் போல

ஐந்து அடக்கல் ஆற்றி = ஐந்து புலன்களையும் அடக்கினால்

எழுமையும் = ஏழு பிறப்பிற்கும்

எமாம்பு உடைத்து = அரணாக அமையும்

ஒருமையுள் என்றால் என்ன ?


ஆமை அனைத்தையும் (நான்கு கால்களையும், தலையையும் ஆக மொத்தம்  ஐந்து ) தன் ஒரு ஓட்டினுக்குள் இழுத்துக் கொள்ளும். அது ஒரு ஒருமை.

ஆனால் பின்னால் வரும் எழுமைக்கும் என்பதோடு இது சேர மாட்டேன் என்கிறது.

ஒரு பிறவியில் புலன்களை அடக்கினால் அது பின் வரும் ஏழு பிறவிக்கும் நல்லது  செய்யும் என்பது பொருத்தமாக இருக்கிறது.

இரண்டையும் சேர்த்து சிந்தித்தால் இன்னும் சுவை கூடும்.

தனக்கு ஆபத்து வரும்போது ஆமை தன் அவயங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும்.

அது போல புலன்களால் ஆபத்து வரும்போது அவற்றை உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பிறவியில் மன மொழி மெய்யை அடக்கினால் அதன் பலன் ஏழு பிறவிக்கு  வரும் என்கிறார்.

முயன்று தான் பார்ப்போமே ?





Sunday, January 25, 2015

இராமாயணம் - தாரையின் சொல்வன்மை - இசையினும் இனிய சொல்லாள்

இராமாயணம் - தாரையின் சொல்வன்மை - இசையினும் இனிய சொல்லாள் 


வள்ளுவனும் சரி, கம்பனும் சரி சொல்லுக்கு மிக மிக முக்கியத்வம் தந்து இருக்கிறார்கள்.

கோபத்தோடு வந்த இலக்குவனைப் பார்த்து தாரை பேசுகிறாள். அவள் பேசியது  இசையை விட இனிமையாக இருந்ததாம். அப்படி இனிமையாக இருந்தால் யார் தான் மயங்க மாட்டார்கள் ?

தாரை சொல்கிறாள் ..

"நீ சீற்றத்தோடு வருவதைக் கண்ட வானர சேனைகள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றன. உன் உள்ளத்தில் உள்ளது என்ன என்று எங்களிடம் சொல்லுவாய். நீ இராமனை விட்டு எப்போதும் பிரியமாட்டாயே, எப்படி இங்கு தனியாக வந்தாய் " என்று கேட்கிறாள்.

பாடல்

‘வெய்தின் நீ வருதல் நோக்கி,
    வெருவி நின் சேனை வீரர்,
செய்திதான் உணர்கிலாது,
    “திருவுளம் தரெித்தி “ என்றார்;
ஐய! நீ ஆழிவேந்தன்
    அடியிணை பிரிகலாதாய்
எய்தியது என்னை? ‘என்றாள்
    இசையினும் இனிய சொல்லாள்.

பொருள் 


‘வெய்தின் = சீற்றத்தோடு

நீ = நீ

வருதல் நோக்கி = வருவதைப் பார்த்து

வெருவி நின் = அஞ்சி நின்றனர் 

சேனை வீரர் = சேனை வீரர்

செய்திதான் உணர்கிலாது = செய்தியை உணராது

"திருவுளம் தெரித்தி  “ என்றார்; = உன் உள்ளத்தை தெரிவிக்க வேண்டும்

ஐய! = ஐயனே

நீ = நீ

ஆழிவேந்தன் = இராமனின்

அடியிணை = திருவடிகளை

பிரிகலாதாய் = பிரிய மாட்டாயே

எய்தியது என்னை?  = எப்படி வந்தாய் வந்தாய்

என்றாள் = என்றாள்

இசையினும் இனிய சொல்லாள் = இசையினும் இனிய சொல்லாள்

இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால்,

1. முதலில் இராமனும் இலக்குவனும் சீதையை தனியே விட்டு விட்டு சென்றதால்,சீதையை இழந்தார்கள். இப்போது, இலக்குவன் இராமனை தனியாக விட்டு விட்டு வந்து இருக்கிறான். ஒரு வேளை அவனுக்கு ஏதாவது ஆபத்து  வந்து விட்டால் என்ன செய்வது என்று இலக்குவனிடம் கூறுகிறாள். அதாவது, நீ இப்படி வந்திருக்கக் கூடாது , ஓடு என்று  சொல்லமால் சொல்கிறாள்.

2. அவன் கோபத்தை மாற்றி, அவன் சிந்தனையை வேறு திசையில் திருப்புகிறாள்.

3. சீதையை தேட உதவி செய்வதாக சுக்ரீவன் சொல்லி இருக்கலாம். அது இந்த வானர வீரர்களுக்குத் தெரியாது. எனவே, நீ இவர்களின் செயலை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே என்றும் கூறுகிறாள்.





திருக்குறள் - அடக்கமுடைமை - நிலையில் திரியாது அடங்குதல்

திருக்குறள் - அடக்கமுடைமை - நிலையில் திரியாது அடங்குதல்


அடக்கமுடைமை என்றால் ஏதோ எல்லா புலன் இன்பங்களையும் விடுத்து, சாமியாராகப் போய் விடுவதா ?

ஒன்றையுமே அனுபவிக்காமல் மரக் கட்டை போல இருப்பதா ? ஒரு கல்லைப் போல உணர்ச்சி இல்லாமல் இருப்பதா ?

ஒன்றுக்குமே ஆசைப் படாவிட்டால் வாழ்கை எப்படி நடக்கும் ?

வள்ளுவர் விடை  தருகிறார்.

பாடல்

நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.

அது என்ன நிலையில் திரியாது ?

நாம் வாழ்வில் பல நிலைகளை கடந்து வருகிறோம்.

குழந்தையாக இருக்கும் நிலை, பின் மாணவன், பின் மணம் முடித்து இல்லற நிலை , பின் முதுமை நிலை என்று பல நிலைகள்.

அதே போல,  பிள்ளையாக,மாணவனாக, கணவனாக,  சகோதரனாக, தந்தையாக,  பாட்டனாக பல நிலை. பெண்கள் அதே போல்  மாணவியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என்று பல நிலைகள்.

இப்படி நம் வாழ்வை உற்று நோக்கினால் நாம் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு நிலையில் இருக்கிறோம்.

அந்த நிலைக்கு ஏற்ப வாழ  வேண்டும்.  அதில் இருந்து மாறுபடக் கூடாது.

ஆசிரியர் கேள்வி கேட்டால், அடக்கமாக இருக்கிறேன் என்று பதில் சொல்லாமல் இருக்கக் கூடாது.

எதிரி மன்னன் படை எடுத்து வந்தால் என் படை பலத்தை காட்டாமல் அடக்கமாக இருக்கிறேன் என்று ஒரு மன்னன் இருக்கக் கூடாது.

இல்லறத்தில் இருப்பவன் மனைவி மேல் ஆசை கொள்ளாமல் புலன்களை அடக்கி ஆளப் போகிறேன் என்று இருக்கக் கூடாது. பின் எதற்கு திருமணம் செய்வது ?

நிலையில் திரியாது இருக்க வேண்டும்.

தேவைக்கு அதிகமாக அலையக் கூடாது. ஒரு மனைவி இருக்கும் போது இன்னொன்றை தேடி அலையக் கூடாது. அது அடக்கமின்மை.

உடலுக்கு வேண்டியவற்றை உண்ணத்தான் வேண்டும். அதற்கு மேல் உண்டால் அது அடக்கமின்மை.

அப்படி இருப்பவனின் தோற்றம் மலையை விடப் பெரியது என்கிறார் வள்ளுவர்.

ஏன் மலை ?

மலை தன்னிடம் எவ்வளவோ செல்வங்களைக் கொண்டிருந்தாலும், பெரிதாக அலட்டிக் கொள்வது  கிடையாது. அமைதியாக  இருக்கும்.  கம்பீரமாக இருக்கும்.   அதைப் போல நிலையில் திரியாதவனின் நிலை இருக்கும் என்கிறார் வள்ளுவர்.



Tuesday, January 20, 2015

குறுந்தொகை - அவள் வருவாளா ?

குறுந்தொகை - அவள் வருவாளா ?



வாழ்க்கையின் சிக்கல்களை இலக்கியம் படம் பிடிக்கிறது. நமக்கு ஒரு சிக்கல் வரும் போது , இலக்கியத்தைப் படித்தால், அட இது ஒண்ணும் புதிதல்ல,  இதற்கு முன் எத்தனையோ பேர் இந்த சிக்கலை, இந்த துன்பத்தை அனுபவித்து இருக்கிறார்கள் என்று தோன்றும். வாழ்கையின் மேல் உள்ள வெறுப்பு  குறையும்.

கணவனுக்கு வெளி நாடு செல்ல வேண்டும். சென்றால் நல்ல  சம்பளம். மேலும் பிற்காலத்தில் பதவி உயர்வு கிடைக்க நல்ல வாய்புகள் வரும்.

ஆனால், மனைவியை அழைத்துக் கொண்டு செல்ல முடியாத சிக்கல். விசா கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

என்ன செய்வது ? பெரிய சிக்கல்.

 அன்பான,அழகான மனைவியை விட்டு பிரியவும்  முடியவில்லை.

அதே  சமயம்,வெளி நாடு செல்லும் வாய்ப்பை உதறவும்  மனமில்லை.

தவிக்கிறான்  கிடந்து.

அவன் தவிப்பை இந்த பாடல் படம் பிடிக்கிறது.

பாடல்

ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்  
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்  
கம்மா வரிவையும் வருமோ 
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே  

சங்கப் பாடல், கொஞ்சம் சீர்  பிரிப்போம்.

ஈதலும்  துய்த்தலும் இல்லோர்க்கு இல்லென   
செய் வினை கைம்மிக எண்ணுதி  அவ்வினைக்கு   
அம்மா அரிவையும் வருமோ ?
எம்மை உய்த்தியோ உரைத்திசி நெஞ்சே 

பொருள்

ஈதலும் = தானம் தருவதும்

துய்த்தலும் = அனுபவித்தலும்

இல்லோர்க்கு = இல்லை என்று தம்மிடம் வருவோர்க்கு

இல்லென = இல்லை என்று சொல்லாமல் தருவதும்
 
செய் வினை = செயல் செய்ய

கைம்மிக எண்ணுதி = அதைப் பற்றி மிகுதியாக எண்ணுவாய்

அவ்வினைக்கு = அந்த வினைக்கு   

அம்மா  = அம் + மா = அந்த பெரிய, அல்லது சிறந்த

அரிவையும் = பெண்ணும்

வருமோ ? = வருவாளோ

எம்மை உய்த்தியோ = என்னை மட்டும் அனுப்புகிறாயே

உரைத்திசி நெஞ்சே = சொல் என் நெஞ்சே

அவன், தன் நெஞ்சிடம்  சொல்கிறான்.

என்னை மட்டும் போ போ என்று  பிடித்துத் தள்ளுகிறாயே...அவளையும் வரச் சொல்  என்று சொல்கிறான்.

காதல் பாடல்  தான். பிரிவு சோகம் தான். அதிலும் அறத்தைப் பாடுகிறான்   தமிழ்  புலவன்.

பாடலை உற்று நோக்கினால் பாடலின் பின்னே உள்ள அறம் விளங்கும்.


ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்  


நாமெலாம் , நம் செலவு போக, எதிர் கால தேவை போக மீதியை கொஞ்சம் தானம்  செய்வோம். 

முதலில் நாம் அனுபவிப்போம், பின் தானம் செய்வோம். 

இந்தப் பாடலில் , முதலில், ஈதல் பின் துய்த்தலை பற்றி பேசுகிறான் புலவன். 

தானம் தந்தது போக மீதி உள்ளது நமக்கு என்று வாழ நினைத்த மனம். 

நம்மிடம் ஒரு பிச்சைகாரன் வந்து பிச்சை கேட்டால்,  "ஒண்ணும் இல்லை, அங்க போய்  கேளப்பா " என்று அவனை விட பெரிய பிச்சைகாரனாக நாம் மாறி விடுவோம். 

இங்கே, தலைவன் தன்னிடம் இல்லை என்று வருவோர்க்கு தானும் இல்லை என்று  சொல்லாமல் தர வேண்டுமே என்று நினைத்து பொருள் தேடச் செல்கிறான். 

பொருள் சேர்ப்பது தான் அனுபவிக்க இல்லை. ஈவதற்கும், இல்லை என்று யாசகம்  வேண்டி வருவோருக்கு தருவதற்கும். 

இதற்கு இடையில் மனைவியை விட்டு பிரிய மனம் இல்லை. 

தவிக்கிறான். 

இதுதான் வாழ்க்கை.

சுயநலத்துக்கும் பொது நலத்துக்கும் இடையில் கிடந்து ஊசலாடுகிறது....


திருக்குறள் - அடக்கமுடைமை - செறிவு அறிந்து சீர்மை பயக்கும்

திருக்குறள் - அடக்கமுடைமை - செறிவு அறிந்து சீர்மை பயக்கும் 


அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார்.

அடக்கத்தை ஒரு பொருளாக நினைத்து காக்க வேண்டும் என்றார்.

அப்படி மனம், மெய், மொழிகளை அடக்கினால் என்ன கிடைக்கும் ? அதனால் என்ன இலாபம் ?  என்ற கேள்விகள் ஒரு  புறம்.

எப்படி புலன்களை, மனதை, மொழியை அடக்குவது ?

இந்த குறளில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை  தருகிறார்.

பாடல்

செறிவு அறிந்து சீர்மை பயக்கும்-அறிவு அறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

பொருள்

செறிவு அறிந்து சீர்மை பயக்கும் = சிறந்த நன்மையை அளிக்கும்

அறிவு அறிந்து = அறிவு அறிந்து

ஆற்றின் = வழியில்

அடங்கப் பெறின் = அடங்கப் பெற்றால்

இந்த குறளுக்கும் , முன்பு சொன்ன கேள்விக்கும் ஒரு சம்பந்தமும் இருப்பது போலத் தெரியவில்லையா ?

உள்ளே இறங்கி சிந்திப்போம்.

அறிவு அறிந்து அப்படி  என்றால் என்ன ?

அறிவு எதை   அறிய வேண்டும் ?

எதை அடக்க வேண்டுமோ அதை அறிவு அறிய வேண்டும்.

முதலில் புலனடக்கத்தை எடுத்துக்  கொள்வோம்.

புலன்  இன்பங்கள் மூன்று காரணங்களால் நிகழ்கிறது.

ஒன்று, இன்பத்திற்கு   காரணமான புறப் பொருள்கள். உதாரணமாக ஒரு இனிப்பு பண்டம், நல்ல இசை, அழகான காட்சிகள்.

இரண்டாவது, அந்த புறப் பொருட்கள் தரும் இன்பம் - சுவை, ஒளி , ஊறு , ஓசை, நாற்றம் (அல்லது மணம் )

மூன்றாவது - அவற்றை அனுபவிக்க உதவும்  கரணங்கள் அதாவது புலன்கள். நாக்கு, கண், தோல், காது, மூக்கு என்பன.

இந்த மூன்றின் தொகுப்பாக புலன் இன்பம் நிகழ்கிறது. இதை அறிய வேண்டும்.

அது மட்டும் அல்ல,  ஏன் நமக்கு ஒரு குறிப்பிட்ட ஒன்றின் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது என்று அறிய வேண்டும். உடம்புக்கு கெடுதல் என்று அறிந்தும் ஏன் அளவுக்கு அதிகமாக சிலர் உண்கிறார்கள், தண்ணி அடிக்கிறார்கள் ...ஏன் ?

அதை அறிய வேண்டும்.

 அறிந்த பின்,

"ஆற்றின்" = ஆற்றுதல் என்றால் வழிப் படுத்துதல் என்று பொருள். புலன் இன்பத்தைப் பற்றி அறிந்தால் மட்டும் போதாது அதை எப்படி அடக்க வேண்டும் என்ற வழியை அறிய வேண்டும். சிலர், உணவு கட்டுபாட்டுடன் இருக்கப்  போகிறேன் என்று கொலை பட்டினி  கிடப்பார்கள். சில நாட்களில் அதை  தொடர முடியாமல் மீண்டும் பெரும் தீனி தின்னத் தொடங்கி  விடுவார்கள். பட்டினி கிடப்பது அல்ல "வழி". கொஞ்சமாக உண்ண வேண்டும். நேரத்துக்கு உண்ண வேண்டும். இப்படி நல்ல வழிகளை வகுத்துக் கொண்டு அந்த  பாதையில் போக வேண்டும்.




வழியை கண்டு பிடிச்சாச்சு...அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

அந்த வழியில் சென்று "அடங்கப் பெறின் "  மன மொழி மெய் அடங்கப் பெற்றால்.

செறிவு அறிந்து சீர்மை பயக்கும்.

சீர்மை என்றால் சிறப்பு.  சிறப்பைத் தரும். 

செறிவு அறிந்து என்றால் அதன்  தன்மை அறிந்து சீர்மை பயக்கும். எந்த அளவுக்கு  அடக்கம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பு  உண்டாகும்.

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய குறள் .

அறிவுதான் அனைத்து அடக்கத்திற்கும்  மூல வேர்.

அடக்கம் இல்லாதவன்  அறிவில்லாதவன் என்றே அர்த்தம் அல்லது அறிவு இருந்தும்  அதை பயன் படுத்தாதவன். 

அறிவின் மூலம், நம் புலன்கள், மனம், மற்றும் மொழி எப்படி வேலை செய்கிறது  என்று அறிந்து, அதன் தன்மை அறிந்து, சிறந்த வழியில் அதைக் அடக்கினால்  சிறப்புகள் வந்து சேரும். 


Sunday, January 18, 2015

திருக்குறள் - காக்க பொருளாக அடக்கத்தை

திருக்குறள் - காக்க பொருளாக அடக்கத்தை 


நம்மிடம் யாராவது உங்களுடைய உடமைகள் என்னென்ன என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

நம்மிடம் இருக்கும் வீடு, நிலம், நகை, பங்குகள், கார், வங்கியில் உள்ள பணம், இவற்றைச் சொல்லுவோம்.

இவை நம் உடமைகளா ?

வள்ளுவர் வேறு சிலவற்றை உடமைகள் என்று சொல்கிறார்.

முதலில் அவர் சொல்லுவது அடக்கம் உடமை.

அதைத் தொடர்ந்து மேலும் சில உடமைகளை சொல்கிறார்....ஒவ்வென்றுக்கும் ஒரு அதிகாரம் வேறு வைத்து  இருக்கிறார்.


  1. அருளுடைமை 
  2. அறிவுடைமை 
  3. அன்புடைமை 
  4. ஆள்வினையுடைமை 
  5. ஊக்கமுடைமை 
  6. ஒழுக்கமுடைமை 
  7. நாணமுடைமை 
  8. பண்புடைமை 
  9. பொறையுடைமை 


அடக்கமுடமையுடன் சேர்த்து மொத்தம் பத்து சொத்துகள்.

யோசித்துப் பாருங்கள், இதில் உங்களிடம் எத்தனை சொத்துகள் இருக்கின்றன என்று.

இதில் முதலில் வந்த அடக்கமுடைமை அதிகாரத்தில்  அடக்கம் அமரருள் உய்க்கும் என்று  பார்த்தோம்.

அடக்கம் என்றால் ஏதோ ஒன்று எதிலோ வேறொன்றில் அடங்க வேண்டும்.

நம்மிடம் ஒரு உயர்ந்த பொருள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எப்படி பாதுகாப்போம் ? ஒரு விலை உயர்ந்த வைரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதை எப்படி பாதுகாப்போம் ? அதன் மேல் எவ்வளவு கவனமாக இருப்போம் ? அடிக்கடி அது பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்போம் அல்லவா ?

கவனாமாக இல்லாவிட்டால் தொலைந்து போய் விடும் அல்லவா ?

அது போல அடக்கம் என்ற உடமையை பாதுகாக்க வேண்டும்  என்கிறார்.

பாடல்

காக்க பொருளா வடக்கத்தை யாக்க

மதனினூஉங் கில்லை யுயிர்க்கு

சீர் பிரித்த பின்

காக்க பொருளாக அடக்கத்தை ஆக்கம் 
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு 


பொருள்

காக்க = காபாற்றுக

பொருளாக = உயர்ந்த பொருளாக

அடக்கத்தை = அடக்கத்தை

ஆக்கம் = உயர்வு

அதனின் = அதைவிட

 ஊங்கு இல்லை உயிர்க்கு = உயிர்களுக்கு அதை விட ஒன்றும் இல்லை

இதை விட ஒரு படி மேலே போகிறார் வள்ளுவர்.

நம் குழந்தைகளை நாம் எப்படி பாதுகாப்போம் ?

அவர்களை சிறிது நேரம் காணவில்லை என்றாலும் தவித்துப் போவோம் அல்லவா ? அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் இரவு பகல் கண் விழித்து மருத்துவம் பார்ப்போம் அல்லவா.

குழந்தை காணாமல்  போய் விட்டால், போனால் போகிறது என்று இருப்போமோ ?

வள்ளுவர் பொருள் என்று கூறுவது குழந்தைகளை.

புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தில்,

 தம் பொருள் என்ப தம் மக்கள்; அவர் பொருள்
தம்தம் வினையால் வரும்.

தம் பொருள் என்பது தம் மக்கள் என்கிறார். 

பொருள் என்பது பிள்ளைகளையே குறிக்கும். அல்லது, அந்த காலத்தில் குறிக்கப் பட்டிருக்கிறது.

நாம் குழந்தைகளை எப்படி பாதுகாப்போமோ அப்படி அடக்கத்தை பாதுகாக்க வேண்டும் .

ஒரு நிமிடமும் நம் கவனத்தில் இருந்து பிரிந்து போய் விடக் கூடாது. 

பிள்ளைகள் ஆசைப் பட்டு கண்டதையும் கேக்கும். அதற்காக ஒரு பொறுப்புள்ள பெற்றோர் அதை வாங்கித் தருவார்களா ? மாட்டார்கள் அல்லவா. அது போல புலன்கள் கண்டதையும் கேக்கும். பிள்ளைகள் கண்டதையும் சாப்பிட்டு உடலை கெடுத்து கொள்ளாமல் எப்படி அவற்றை பாதுகாப்போமோ அது போல புலன்கள் கண்டதையும் அனுபவித்து கெட்டுப் போகாமால்  காக்க வேண்டும். 

கண்டித்து வளர்க்கவில்லை என்றால் பிள்ளைகள் கெட்டுப் போவார்கள். அது போல  புலன்களை கண்டித்து அடக்கி வைக்க வேண்டும். 

பிள்ளைகள் தீயனவற்றை பார்க்கக் கூடாது என்று நாம் அக்கறை கொள்வோம்...வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று உள்ள படங்களை பிள்ளைகளை  பார்க்க அனுமதிக்க மாட்டோம். அது போல, புலன்களை கண்டதையும் பார்க்க அனுமதிக்கக் கூடாது. 

பிள்ளைகள் தீயவர்களோடு பழகுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். அது போல புலன்கள் தீய வழியில் செல்வதை அடக்க வேண்டும்.

சுருக்கமாக, பிள்ளையைப் பார்ப்பதைப் போல அடக்கத்தை காக்க வேண்டும். அடக்கம் என்பது மனம், வாக்கு செயல் வழி வெளிப்படுவதால் , அவற்றை பிள்ளைகளைப் போல   காக்க வேண்டும். 

எவ்வளவு ஆழமாக யோசித்து இருக்கிறார்கள் ?