Monday, April 6, 2015

தேவாரம் - அப்புறம் செய்யலாம்

தேவாரம் - அப்புறம் செய்யலாம் 


அப்புறம் செய்யலாம் , அப்புறம் செய்யலாம் என்று எவ்வளவோ நல்ல காரியங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

"நிறைய படிக்கணும்...எங்க நேரம் இருக்கு...எல்லாம் retire ஆனதுக்குப் பிறகு படிக்கலாம் என்று இருக்கிறேன் ..."

"போகணும்...காசி, இராமேஸ்வரம்..இப்படி நாலு தலங்களுக்கு போகணும். எங்க நேரம் இருக்கு....பிள்ளைங்க படிப்பு, அவங்க பள்ளிக் கூடம் ...எல்லாம் முடிந்த பின் போகணும்..."

இப்படி பலவற்றை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்...

பின்னாளில், நாம் நினைக்கும் நாள் வரை நாம் இருக்க வேண்டுமே ? நாம் செல்லும் நாள் என்றென்று நமக்குத் தெரியாதே ? நாம் நினைத்து வைத்த நாளை வராமலே போய் விட்டால் ?

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க; மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

என்றார் வள்ளுவர். நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று நினைத்து நல்லது செய்வதை தள்ளிப் போடாதீர்கள்.

நாளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? இந்த உடம்பை சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம். எத்தனை நாள் இந்த உடம்பு நம்மோடு இருக்கும் ? நாயோ, நரியோ, தீயோ, கொண்டு செல்லும் உடல் இது. இதன் மேலா இத்தனை ஆசை ? இத்தனை பற்று. இதற்காகவா நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறீர்கள் ?

வறியவர்களுக்கு, இல்லை என்று வந்தவர்களுக்கு சோறும் நீரும் நல்ல வார்த்தை சிலதும் சொல்லுங்கள். அப்படி செய்யும் நல்லவர்கள் வணங்கும் தலம் கேதாரிநாத்.


பாடல்

பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே

பொருள்

பறியே = உடலையே

சுமந் து = சுமந்து 

உழல்வீர் = துன்பப் படுவீர் 

பறி = இந்த உடலானது

நரி கீறுவ தறியீர் = நரி கீறுவது அறியீர்

குறி = குறித்த நாளில்

கூவிய = சொல்லிய படி

கூற்றங்கொளு நாளால் = எமன் வந்து உங்கள் உயிரை கொண்டு செல்லும் நாளில்

அறம் உளவே = அறம் (செய்ய) முடியுமா ?. முடியாது

அறிவானிலும் அறிவான் = நாம் ஒன்றை அறிகிறோம் என்று சொன்னால் அறிவது எது ? அறிந்து கொள்ளப் படுவது எது ? அறியும் செயல் எது ? அறிவுக்கு அப்பால் நின்று நம் அறிவை செலுத்துபவன்

நல நறுநீரொடு =நல்ல தூய்மையான நீரோடு 

சோறு = சோறும்

கிறிபேசி = நல்ல வார்த்தைகள் பேசி

நின் றிடுவார் = எப்போதும் மற்றவர்களுக்கு வழங்கும் அவர்கள்

தொழு கேதாரமெ னீரே = தொழும் தலம் கேதாரம் என்ற தலமாகும்.


இந்த கோடை விடுமுறைக்கு குளிர்ச்சியாக கேதாரநாத் சென்று வாருங்கள். 

பின்னால் முடியுமோ என்னவோ ?

Sunday, April 5, 2015

இன்னிலை - சிற்றின்பமும் பேரின்பமும்

இன்னிலை - சிற்றின்பமும் பேரின்பமும் 


நம் புலன்களுக்கு இன்பம் தருவன பல.

அவற்றில் சில, ஒரு புலனுக்கு மட்டும் இன்பம் தரும். இசை, காதுக்கு மட்டும் இன்பம் தரும். அதை தொட முடியாது, நுகர முடியாது.

நல்ல உடை கண்ணுக்கும், உடலுக்கும் இன்பம் தரும். பார்க்கவும் அழகாக இருக்கும், அணியும் போது உடலுக்கும் சுகமாக இருக்கும்.

லட்டு - பார்க்க அழகாக இருக்கும், வாயில் போட்டால் சுவையாக இருக்கும். அதில் உள்ள ஏலக்காய் , கிராம்பு போன்றவை நல்ல மணத்தைத் தந்து மூக்குக்கும் இன்பம் தரும்.

இப்படி ஒரு புலனுக்கு, இரு புலனுக்கு , மூன்று புலனுக்கு என்று இன்பம் தரும் பொருள்கள் உள்ளன.

ஐந்து புலன்களுக்கும் இன்பம் தரும் ஒன்று உண்டா  என்றால் , உண்டு.

அது ஆணுக்கு பெண்ணும், பெண்ணும் ஆணும் தரும் இன்பம்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

என்பார் திருவள்ளுவர்.  கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும், தொட்டு அறியும்  ஐந்து புலன்களுக்கு இன்பமும் வளையல் அணிந்த அவளிடம் உள்ளது என்கிறார் வள்ளுவர்.

அது ஆணுக்கும் பொருந்தும்.

ஆணும் , பெண்ணும் சேர்ந்து அடையும் அந்த சிற்றின்பம் , பேரின்பத்திற்கு வழி வகுக்கும் என்கிறது இன்னிலை என்ற நூல்.

திருமணம் ஆன புதிதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் காமத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். நாள் ஆக நாள் ஆக அது குறையும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக முக்தி அடைய உதவுவார்கள்.

காம விருந்து படைத்த கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் துணையாவார்கள். எப்போது என்றால், கலவி இன்பத்தில் குற்றம் ஏதும் வந்து விடாமல்,  அளவு கடக்காமல் இருந்தால். குற்றம் வராமல் என்றால், மற்ற ஆணையோ பெண்ணையோ நாடாமல், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்தல்.

அப்படி குற்றம் இல்லமால், அளவோடு காமத்தை சுகிப்பவர்கள்,பின்னாளில் முக்தி அடைய ஒருவருக்கு ஒருவர் துணையாவார்.

அந்த சிற்றின்பமே அவர்களுக்கு ஒரு படகு போல அமைந்து முக்தி கரை சேர்க்கும்.

இளைமையில், மணம் புரிந்த போது இருந்த இளமையும் அழகும் அதன் மூலம் கிடைக்கும் கலவி இன்பமும், கசப்பான மருந்துக்கு இனிப்பு தடவி தருவது போல.

பாடல்

துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காகா ராகல்-புணைதழீஇக்
கூட்டுங் கடுமிசையான் கட்டியிற் கொண்டற்றால்
வேட்டபோழ் தாகு மணி.

பொருள்

துணையென்ப = துணை என்று சொல்லுவார்கள்

காம விருந்துய்ப்பார் = காம விருந்து உய்ப்பார் (அடைவார்)

தோமில் = குற்றம் இல்லாமல்

இணைவிழைச்சின் = கலவி இன்பத்தில்

மிக்காகா ராகல் = அளவுக்கு அதிகமாக போகாமல் இருந்தால்

புணைதழீஇக் = ஆற்றைக் கடக்க உதவும் புணை போல (படகு போல )

கூட்டுங் கடுமிசையான்  = கசப்பான மருந்தை

கட்டியிற் கொண்டற்றால் = கற்கண்டு கொண்டு அதன் ஆற்றாலால் (கசப்பை மறைப்பது போல )

வேட்டபோழ் தாகு மணி = மனந்த போது உண்டான அழகு

சிற்றின்பமே பேரின்பத்திற்கு வழி வகுக்கும். 


தேவாரம் - மண்ணாவது திண்ணம்

தேவாரம் - மண்ணாவது திண்ணம் 



கேதாரம். கேதர்நாத் என்று அழைக்கப்படும் தலம் . புது டெல்லிக்கு அருகில் உள்ள தலம் . பனிபடர்ந்த மலைச் சாரலில் அமைந்த தலம் .

இந்த வாழ்வு ஒரு மாயம். நிலைத்து இருப்பது போலத் தோன்றும். சட்டென்று ஒரு நாள் மாயமாய் மறைந்து விடும்.

"அவரா ? நேத்து வரை நல்லாத்தான இருந்தாரு ...என்ன ஆச்சு " என்று கேட்கும் படி ஆகும்.

படுத்தவர் எழுந்திருக்கவில்லை....ஏன் ? அது தான் magic ...மாயம்.

கடைசியாய் விட்ட மூச்சை உள்ளே இழுக்க முடியவில்லை...ஏன் ? மாயம்.

அன்போடு இருந்த பிள்ளைகளும் மனைவியும் அன்பு மாறுவார்கள்...ஏன் ? மாயாஜாலாம்.

இந்த உடல் மண்ணாவது உறுதியிலும் உறுதி.

இந்த பிறவி நாளும் பாழாகிக் கொண்டு இருக்கிறது. வேலை, உணவு, படிப்பு, சம்பளம், சேமிப்பு என்று செக்கு மாடு போல சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாள் வாழ்ந்தோமே, என்ன நிகழ்ந்தது என்று யோசித்துப் பார்த்தால் எவ்வளவு நாளை வீணாகக் கழித்து விட்டோம் என்றும் தெரியும்.

இந்த உடல் உணவு போட்டு வளர்த்தது. பசி, அதனால் உணவு , அதனால் வளர்ந்த உடல் இது. பசி என்ற நோய் செய்த உடல் இது. நோயில் வளர்ந்த உடல்.

இருக்கும் வரை குறையாமல் அறம் செய்யுங்கள். "தாழாது அறம் செய்யுங்கள்". வருடத்துக்கு ஒரு முறை நன்கொடை கொடுத்தாலும் பரவாயில்லை. அதை குறைத்து விடாதீர்கள். தாழாது செய்யுங்கள்.

திருமாலும், பிரமனும் கீழும் மேலும் அறிய நின்றவன் இருக்கும் இடம் திருக் கேதாரம்.

பாடல்

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே.                                            - (சுந்தரர்)

பொருள்

வாழ்வாவது மாயம் = இந்த வாழக்கை ஒரு மாயம்

மிது மண்ணாவது திண்ணம் = இது மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக்கடல் = பாழாகிறது இந்த பிறவிக் கடல்

பசிநோய்செய்த பறிதான் = இந்த உடல் (பறி ) பசி என்ற நோய் செய்தது

தாழாதறஞ் செய்ம்மின் = குறையாமல் அறம் செய்யுங்கள்

தடங் கண்ணான் = தாமரைக் கண்ணன் (திருமால்)

மல ரோனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

கீழ்மேலுற = கீழும் மேலும் செல்ல

நின்றான் = நின்றவன்

திருக் கேதாரமெ னீரே = திருக் கேதாரம் என்று சொல்லுங்கள்

பசி நோய் செய்த பறிதான் என்பதற்கு தாய் தந்தையரின் காமப் பசியில் விழைந்தது இந்த உடல் என்றும் கொள்ளலாம்.

நேரம் இருப்பின், கேதார்நாத் ஒரு முறை சென்று வாருங்கள்.

சுந்தரரும், ஞான சம்பந்தரும் சென்றிருக்கிறார்கள்.

 

இராமாயணம் - ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்

இராமாயணம் - ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் 


இராமாயணம் என்றால் என்ன ?

இராமன் + அயனம் = அயனம் என்றால் வழி. உத்தராயணம், தக்ஷினாணயம் என்று சூரியனின் வழியைச் சொல்லுவது போல, இராமனின் வழியை சொல்லுவது இராமாயணம்.

எது அவன் வழி ? அவன் நடந்து சென்ற பாதை எது ? அதில் போய் அவன் எதை அடைந்தான் ?

"நல் அறம் நிறுத்த" நல்ல அறங்களை நிலை நிறுத்த அவன் வந்தான்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் மனித குலம் எது சரி , எது தவறு என்று தெரியாமல் தவிக்கின்ற நேரத்தில் எல்லாம் அற வழியை காண்பிக்க பெரியவர்கள் தோன்றுகிறார்கள்.

வெயில் அதிகமா இருந்தால் மழை வருவது போல.

இருள் அதிகமாக இருந்தால் பகல் வருவது போல.

காலம் காலமாய் இது நிகழ்கிறது.

அப்படி வந்தவன் இராமன். அவனை பலர் புரிந்து கொள்ளவில்லை. அன்று மட்டுமல்ல, இன்றும்.

யாருக்கு அவன் புரிவான் ?

"ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் " - ஒருங்குதல் என்றால் ஒன்று படுத்தல், சேர்தல், இணைதல், கூடுதல், குவிதல், ஒருபடியாதல், அழிதல் மற்றும்  ஒடுங்குதல்  என்று பல பொருள் உள்ளது. உணர்வு ஒன்று பட்டால், அவனை உணரலாம். உணரலாம் என்று தான் சொன்னாரே தவிர அறியலாம் என்று சொல்லவில்லை. இறை என்பது ஒரு உணர்ச்சி. அது ஒரு பொருள் இல்லை. அது ஒரு தனிப்பட்ட அனுபவம்.

விராதன் என்ற அரக்கன் இராமனோடு சண்டை இட வருகிறான். அந்த இடத்தில் இராமனைப் பற்றி கம்பர்  கூறுகிறார்.

பாடல்


ஓம் அராமரை, ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை,  நல் அறம் நிறுத்த நணுகித்
தாம் அரா அணை துறந்து தரை நின்றவரை, ஓர்
மா மராமரம் இறுத்து, அதுகொடு எற்ற வரலும்.


பொருள் 

ஓம் அராமரை = ஓம் என்ற பிரணவத்தின் பொருளான அந்த இராமனை

ஒருங்கும் = ஒன்று படும்

உணர்வோர் உணர்வுறும் = உணர்வுகளை உடையவர்கள் உணரும்

நாமர் ஆம் அவரை = நாமம் கொண்ட அவரை

நல் அறம் நிறுத்த = நல்ல அறங்களை நிலை நிறுத்த

நணுகித் = ஒன்று சேர்ந்து, அருகில் வந்து, அணுகி.

தாம் அரா அணை துறந்து = தன்னுடைய பாம்பணையை துறந்து

 தரை நின்றவரை, = தரையின் மேல் நின்ற அவரை

ஓர் = ஒரு

மா மராமரம் = பெரிய மரா மரத்தை

இறுத்து = பெயர்த்து எடுத்து

அதுகொடு எற்ற வரலும் = அதைக் கொண்டு போருக்கு வரும் போது

அரக்கரகளுக்கு இறைவன் எதிரில் நின்றபோதும் தெரிவது இல்லை.

இறைவனை அறியாதவர்கள் தான் அரக்கர்களோ ?



Friday, April 3, 2015

விவேக சிந்தாமணி - விருந்தினர்களை உபசரிக்கும் முறை

விவேக சிந்தாமணி - விருந்தினர்களை உபசரிக்கும் முறை 


விருந்தினர்களை உபசரிப்பது என்பது தமிழரின் பண்பாடு. விருந்தோம்பல் என்று அதற்கு ஒரு அதிகாரமே வைத்திருக்கிறார்  வள்ளுவர். விருந்தோம்புதலை ஒரு அறம் என்றே நம் முன்னவர்கள் கொண்டார்கள்.

இன்று நம் பிள்ளைகளுக்கு விருந்தினரை எப்படி உபசரிப்பது என்று தெரிவதில்லை.

வீட்டிற்கு ஒருவர் வந்தால் கூட, அவர்கள் பாட்டுக்கு அவர்கள் அறையில் இருக்கிறார்கள். ...அவர்களின் கை பேசி, கணணி, youtube , facebook என்று இருக்கிறார்கள்.

இப்படி ஒரு இரண்டு தலைமுறை சென்றால் விருந்து என்ற ஒன்றே இல்லாமல் போய்  விடும்.

அவர்களை விட்டு விடுவோம். எதற்கு எடுத்தாலும் இளைய தலைமுறையையே ஏன் குற்றம் சொல்ல வேண்டும். எப்படி விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் என்று  நமக்கே சரியாகத் தெரியுமா ? நமக்குத் தெரிந்தால் அல்லவா  அதை பிள்ளைகளுக்குச் சொல்லி தர.

விவேக சிந்தாமணி சொல்லித் தருகிறது....எப்படி விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் என்று.

முதலில் விருந்தினரை ஆவலோடு, ஆச்சரியத்தோடு, வியந்து நோக்க வேண்டும்.

இரண்டாவது, நல்ல வார்த்தைகளை இனிமையாக சொல்ல வேண்டும்.

மூன்றாவது, அவர்களை நன்றாகப் பார்க்க வேண்டும். முகத்தை எங்கேயோ வைத்துக் கொண்டு, டிவி பார்த்துக் கொண்டு, கை பேசியில் chat பண்ணிக்கொண்டு "ம்ம்..சொல்லுங்க...அப்புறம் " என்று விருந்தினர்களோடு பேசக் கூடாது. சில பேர் விருந்தினர்களை அழைத்துக் கொண்டு உயர்ந்த உணவு விடுதிக்குப் (hotel ) போவார்கள்..அங்கு போய் அமர்ந்து கொண்டு, ஆளாளுக்கு ஒரு   கை பேசியில் (cell போன்) குறுஞ் செய்தி (sms ) அனுப்பிக் கொண்டு இருப்பார்கள். எல்லார் கவனமும் அவர்களின் கை பேசி மேல். அப்படி அல்ல, வந்த விருந்தினர்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும்.

நான்காவது, அவர்களை "வாருங்கள்" என்று அழைக்க வேண்டும்

ஐந்தாவது, அவர்களை எழுந்து சென்று வரவேற்க வேண்டும். இருந்த இடத்தில் இருந்து கொண்டே "வாங்க" என்று சொல்லக் கூடாது.

ஆறாவது, அவர்களோடு முன்னாளில் எப்படி எல்லாம் மகிழ்வாக இருந்தோம் என்று நினைவு படுத்த வேண்டும்.

ஏழாவது, விருந்தினர்களின் அருகில் இருக்க வேண்டும். அவர்களை விட்டு விலகக் கூடாது. "இது தான் உங்கள் அறை ...ஏதாவது வேண்டும் என்றால் கூப்பிடுங்கள் " என்று சொல்லிவிட்டு நாம் பாட்டுக்கு நம் வேலையை பார்க்கக் போய் விடக் கூடாது.

எட்டாவது, அவர்கள் செல்லும் போது அவர்கள் கூடவே கொஞ்ச தூரம் போய் வழி அனுப்ப வேண்டும். "சரி, கிளம்புறீங்களா, அப்புறம் பாக்கலாம், போகும் போது அந்த கதவை அப்படியே சாத்தி விட்டு போங்க " என்று சொல்லக் கூடாது.

ஒன்பதாவது, அவர்கள் போகும் போது நல்லதாக அவர்கள் மனம் மகிழும்படி சில நல்ல வார்த்தைகளை சொல்லி அனுப்ப வேண்டும் "நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்....அடிக்கடி வந்து போங்க...வீட்டுல எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்க..பத்திரமா போயிட்டு வாங்க " என்று சில நல்ல வார்த்தைகளை சொல்லி அனுப்ப வேண்டும்.

பாடல்

"விருந்தின னாக ஒருவன்வந் தெதிரில்
வியத்தல்நன் மொழியினி துரைத்தல்
திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்
எழுதல்முன் மகிழ்வன செப்பல்
பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல்
போமெனிற் பின்செல்வ தாதல்
பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடு பண்பே."


பொருள்

"விருந்தின னாக = விருந்தினனாக

ஒருவன் = ஒருவன்

வந் தெதிரில் = எதிரில் வந்தால்

வியத்தல் = முக மலர்ச்சியுடன் வரவேற்றல்

நன் மொழியினி துரைத்தல் = நல்ல வார்த்தைகளை இனிமையாக உரைத்தல்

திருந்துற நோக்கல் = நன்றாக அவர்களை பார்த்தல்

வருகென வுரைத்தல் = "வருக" என்று உரைத்தல்

எழுதல் = இருந்த இடத்தை விட்டு எழுந்திரித்தித்தல்

முன் மகிழ்வன செப்பல் = முன்பு மகிழ்ந்த நிகழ்வுகளை சொல்லுதல்

பொருந்து = பொருந்தும்படி

மற் றவன்தன்  அருகுற இருத்தல் = அவர்கள் அருகில் இருத்தல்

போமெனிற் = திரும்பி போகின்ற போது

பின்செல்வ தாதல் = பின்னால் போதல்

பரிந்து = அன்போடு

நன் முகமன் வழங்கல் = நல்ல புகழுரைகளை கூறுதல்

இவ் வொன்பான் =  இந்த ஒன்பது

ஒழுக்கமும் = ஒழுக்கமும்

வழிபடு பண்பே. = விருந்தினர்களை போற்றும் முறை

இதை ஒரு ஒழுக்கமாகவே சொல்லி இருக்கிறார்கள் நம்  முன்னவர்கள்.



Thursday, April 2, 2015

இராமாயணம் - மாலையும் பாம்பும்

இராமாயணம் - மாலையும் பாம்பும் 


கடவுள் வாழ்த்து என்பது ஒரு நூலில் முதலில் பாடப் படுவது. கம்பரோ, ஒவ்வொரு காண்டத்திலும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடுகிறார். நல்லதை எத்தனை முறை செய்தால் என்ன என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.

அவருக்கு இன்னொரு சௌகரியம். கடவுள் அவரது காப்பியத்தின் நாயகன் இராமன். இராமன் மேல் அவருக்கு அவ்வளவு பிரியம். இழைத்து இழைத்து பாடுகிறார்.



அலங்கலில் தோன்றும் பொய்ம்மை 
     அரவு என, பூதம் ஐந்தும் 
விலங்கிய விகாரப்பாட்டின் 
     வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால் ?
     அவர், என்பர்- கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே,

     மறைகளுக்கு இறுதி யாவார்!

நாம் பலவற்றின் மேல் ஆசை கொள்கிறோம். அவற்றை அடைய வேண்டும் என்று பல முயற்சிகள் செய்கிறோம். செய்யும் முயற்சிகள் சில பலன் அளிக்கின்றன. பல பலன் அளிப்பதில்லை.

ஆசையோ மிக அதிகம். எவ்வளவு முயன்றாலும் நம்மால் நமது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

முயற்சியினால் வரும் துன்பம், சோர்வு ஒரு புறம்.

நிறைவேறாத ஆசைகளினால் வரும் துன்பம் இன்னொரு புறம்.

இப்படி கிடந்து அலைகிறோம் .

இது ஏன் நிகழ்கிறது ? இது தெரிந்தும் நாம் ஏன் இதிலிருந்து விடு பட முடியவில்லை ?

காரணம், அறிவு மயக்கம்.

வேறு வேறாக திரிவது எல்லாம் ஒன்றுதான் என்ற தெளிவு இல்லாததால்.

இந்த லட்டு பிடிக்கிறது, அந்த பூந்தி பிடிக்கிறது, பாதுஷா, ஜிலேபி, மைசூர் பாகு என்று  எத்தனையோ இனிப்பு பலகாரங்கள் இருந்தாலும், அடிப்படை ஒன்றுதான்.

மனைவியை பிடிக்கிறது. அந்தப் பெண்ணும் அழகாகத்தான் இருக்கிறாள். இவளும்  அழகு தான். எல்லாம் ஒன்றுதான் என்ற எண்ணம் வருவது இல்லை.

இப்படி இது வேண்டும், அது வேண்டும் என்று மனம் தாவிக் கொண்டே இருக்கக் காரணம்   பொருள்களின் வெளி வடிவத்தில் நாம் மயங்குவதுதான்.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒவ்வொரு புலனுக்கும் ஒரு இன்பம் இருக்கிறது...சுவைத்தல், கேட்டல், காணல் என்று ஒவ்வொரு இன்பம் இருக்கிறது.

இவை எல்லாம் வேறு வேறானதா என்றால் பார்க்க அப்படி இருக்கும். ஆனால் அனைத்து இன்பங்களுக்கும் அடிப்படை ஒன்று தான்.

இந்த தெளிவு வரும்போது துன்பம் தானாகவே போய் விடுகிறது.

இந்த மயக்கம் எப்படி போகும் ?

மாலையை பாம்பு என்று   பயப்படுகிறோம்.   அது பாம்பு அல்ல  மாலை தான் என்ற தெளிவு  வந்த பின் பயம் போய் விடுகிறது.

அறியாமை பயம்.

அறிவின் தெளிவு நிம்மதி, மகிழ்ச்சி.

இந்த அறிவின்  மயக்கம் எப்படி போகும் என்றால் இராமனைக் கண்டால்,

பொருள்


அலங்கலில் = மாலையில்

தோன்றும் பொய்ம்மை = தோன்றும் பொய்மையான தோற்றம்

அரவு என = பாம்பு என்று

பூதம் ஐந்தும் = ஐந்து பூதங்களும்

விலங்கிய விகாரப்பாட்டின் = ஒன்றோடு ஒன்று கலந்து வெளிப்பட்ட வடிவங்களின்

வேறுபாடு உற்ற வீக்கம் = வேறு பட்ட வடிவங்களின் பன்மை தோற்றம்

கலங்குவது எவரைக் கண்டால் ? = கலங்கி மறைவது யாரைக் கண்டால் ?

 அவர், என்பர் = அவர் என்று சொல்லுவார்கள்

கைவில் ஏந்தி = கையில் வில் ஏந்தி

இலங்கையில் பொருதார் = இலங்கையில் சண்டை போட்ட

அன்றே = அன்றே


மறைகளுக்கு இறுதி யாவார் = வேதங்களுக்கு முடிவான பலன் ஆவார்

இன்னும் ஆழமான பொருள் கொண்ட பாடல் இது.

இராமனைக் கண்டால் பஞ்ச பூதங்களும் தங்களின் வெளித் தோற்றத்தை விட்டு கலங்கி நிறுக்கும் என்று சொன்ன கம்பர்,  அது யாரைப் பார்த்து என்றால்  இராமனைப் பார்த்து என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம். இலங்கையில் சண்டைப் போட்ட இராமன் என்று ஏன் சொல்ல வேண்டும் ?

இராவணன் , இராமனை மனிதன் என்று இகழ்ந்து , ,மதிக்காமல் அழிந்தான்.  இராமன் பரம்பொருள் என்று முதல் சில அடிகளில் சொன்ன கம்பர், அடுத்த சில வரிகளில் , இராவணனைப் போல இராமனை மனிதன் என்று நினைத்து ஏமாந்து  போகாதீர்கள் என்று நினைவு படுத்த "இலங்கையில் சண்டை போட்ட இராமன் " என்று நமக்கு நினைவு படுத்துகிறார்.



விகாரப்பாட்டின் 
     வேறுபாடு உற்ற வீக்கம்

அது என்ன   விகாரம் ?

உள்ளதை இல்லாததாக நினைப்பது.

இல்லாததை உள்ளதாக நினைப்பது.

நிரந்தரம் இல்லாததை நிரந்தரம் உள்ளதாக நினைப்பது.

நிரந்தரமானதை நிரந்தரம் அற்றதாக நினைப்பது.

இவை எல்லாம்  விகாரங்கள்.

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; "எம் ஐயா," "அரனே! ஓ!" என்று என்று
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,

என்பார் மணிவாசகர். 

     மறைகளுக்கு இறுதி யாவார்!


வேதங்கள்,அவற்றை விளக்க வந்த உபநிடதங்கள், அவற்றை விளக்க வந்த இதிகாச புராணங்கள்  என்று இவை அனைத்திற்கும் இறுதி ஆனவன்  
அவன்.

படிப்பது எதற்கு ? அவனை அடைய.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலவறிவன் நற்றாள் தொழார் எனின்.

கல்வியின், அறிவின் முடிவு அவனைத் தொழுவது என்று முடிக்கிறார் வள்ளுவர். 

அள்ள அள்ள குறையாத அர்த்தங்கள் கொண்டவை கம்ப இராமயணப் பாடல்கள். 

கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசித்துப் பாருங்கள். 

Wednesday, April 1, 2015

இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும்

இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும்




வான் நின்று இழிந்து
    வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும் போல்
    உள்ளும் புறனும் உளன் என்ப;
கூனும் சிறிய கோத் தாயும்
    கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
    இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை.

எல்லாமே கடவுள் தான் என்றால், எவ்வளவு வறுமை, எவ்வளவு துன்பம், எவ்வளவு ஏமாற்று , பொய், பித்தலாட்டம் , அநியாயம், அக்கிரமம் என்று இவை அனைத்திற்கும் காரணமும் கடவுள் தானா ?

அப்படி என்றால் கடவுள் இருந்து என்ன பயன் ?

என்று சில பேர் கேட்கலாம்.

இது ஏதோ கடவுள் என்றால் ஒரு தனிப்பட்ட ஆள் என்று நினைத்துக் கொண்டு , அவர் தான் இது அனைத்திற்கும் காரணம் என்று  கேட்கப்படும் கேள்வி.

கடவுள் என்பதை ஒரு உருவத்துக்குள் அடக்க முடியாது. அப்படி அடக்க முடிந்தால்  அந்த உருவத்துக்கு வெளியே இருப்பது கடவுள் இல்லையா என்ற கேள்வி வரும்.

உள்ளே இருப்பதும் கடவுள் தான்

வெளியே இருப்பதும் கடவுள் தான்

இந்த உள்ளே இருப்பதற்கும் வெளியே இருப்பதற்கும் உள்ள தொடர்பும் கடவுள்தான் என்று சொல்ல்கிறார் கம்பர்.


ஊனும் உயிரும் உணர்வும் போல்
    உள்ளும் புறனும் உளன் என்ப;


ஊன் = உடல் 
உயிர் = உயிர் 
உணர்வு = இந்த உடலும் உயிரும் சேர்ந்து அனுபவிக்கும் அந்த அனுபவம் என்ற உணர்வு  

இந்த மூன்றும் அவன் தான். 

பார்பவனாக இருக்கிறான். 

பார்க்கப் படுபவனாக இருக்கிறான் 

பார்க்கும் அந்த செயலாக இருக்கிறான். 

உள்ளும் அவன். புறமும் அவன். 

சரி , அது ஒரு புறம்  இருக்கட்டும்.

உள்ளும் புறமும் ,  ஊனும், உயிரும் , உணர்வும்  எல்லாம் ஒன்றாக அல்லது ஒருவனாக  இருக்க முடியும் ?

அதை முதல் வரியில் சொல்கிறார்....

வான் நின்று இழிந்து
    வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,


நாம் எல்லாம் எங்கிருந்து வந்தோம் ? நம்மை சுற்றியுள்ள இந்த அனைத்து பொருள்களும்  உயிர்களும் எங்கிருந்து வந்தன ? 

வானத்தில் இருந்து வந்தது ...ஏதோ ஒரு புள்ளி வெடித்து சிதறி, இந்த சூரியன், பூமி, கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் என்று எல்லாம் உண்டாயின. 

இந்த ஐந்து பூதங்களும் வானத்தில் இருந்து ஏதோ ஒன்று வெடித்துச் சிதறி வந்தவைதான்.

நீங்களும், நானும், நான் எழுதும் இந்த கணணியும், நீங்கள் படிக்கும் உங்கள் கணணியும் எல்லாம்  ஏதோ ஒரு பொருளில் இருந்து வந்தவைதான். 

வானில் இருந்து வந்த , எல்லை இல்லாத இந்த பூதங்களின் தொகுப்பு எங்கும்  

ஊனும், உயிரும், உணர்வும், உள்ளும் , புறமும் ஒன்றானவன் அவன்.

அவன்,  கூனியும்,சிறிய தாயாரும் கொடுமை இழைக்க செங்கோல் துறந்து, காட்டையும் , கடலையும் தாண்டிப் போய் , தேவர்களின் துன்பம் துடைத்தவன்.

வான் இகந்து வந்த பூதங்களின் வைப்பு எங்கும் இருப்பவனுக்கு ஒரு கூனியும், சிறிய தாயாரும்   கொடுமை செய்ய முடியுமா ? அப்படி என்றால் அவன் என்ன பெரிய ஆள்   ?

எல்லாம் ஒரு விளையாட்டுத்  தான்.

அப்பா பெரிய கம்பெனியில் பெரிய பதவியில் இருப்பார்....வீட்டில் பிள்ளை அவன் முதுகில் யானை ஏறும். அவ்வளவு பெரிய ஆள் இது என்ன சின்னப் பிள்ளைத் தனமாய்   யானை மாதிரி செய்து கொண்டு என்று கேட்க்கக் கூடாது. 

பிள்ளைக்கு சந்தோஷம். அப்பா விளையாடுகிறார். 

உயிர்களுக்கு சந்தோஷம். இறைவன் விளையாடுகிறான். 

நான் முன்பே சொன்னது போல, இந்த பாடலை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.  நான் எழுதிய எல்லாவற்றையும் மறந்து நேரடியாக பாடலை அனுபவியுங்கள். 

 தோன்றியது, இறைவனின் தன்மை, அவன் லீலை என்று அனைத்தையும்   ஒருங்கே கொண்ட பாடல். 

 வாசிக்க வாசிக்க ஆழமான அர்த்தங்களை அள்ளித் தரும் பாடல். 

இன்னும் ஒரு முறை நுரையீரல் முழுவதும் காற்றை இழுத்து பெருமிதம் கொள்ளுங்கள்....உங்களுக்கும் தமிழ் தெரியும் என்று பெருமிதம் கொள்ளுங்கள்.