Tuesday, June 30, 2015

அறநெறிச்சாரம் - யார் நண்பன் ?

அறநெறிச்சாரம் - யார் நண்பன் ?


உங்களின் நல்ல நண்பர்கள் யார் யார் என்று கேட்டால் ஒரு பட்டியல் தருவீர்கள்.

நல்ல நண்பன் என்றால் யார் ?

ஆபத்துக்கு உதவுபவன், நம்ம வீட்டில் ஒரு நல்லது கெட்டது என்றால் கூட இருந்து உதவி செய்பவன், நம் அந்தரங்கங்கள் தெரிந்தவன், நமக்கு சமயத்தில் புத்தி சொல்லுபவன் என்று ஒரு கணக்கு வைத்திருப்போம்.

இதுதான் சரியான கணக்கா ?

நல்ல நண்பன் என்றால் யார் என்று அறநெறிச்சாரம் சொல்கிறது....

"இந்தப் பிறவியில் நம் புலன் அடக்கத்திற்கு உதவி செய்து, நாம் புகழ் அடைய துணை செய்து, மறுமையில் உயர்த கதிக்கு உயர்த்த பாடு படும் நல்ல குணம் உள்ளவரே நண்பர் என்று சொல்லப் படுவார்கள் "

பாடல்

இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக் குய்த்தலால்-மெய்ம்மையே
பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே
நாட்டா ரெனப்படு வார்.

சீர் பிரித்த பின்

இம்மை அடக்கத்தைச் செய்து  புகழ் ஆக்கி 
உம்மை உயர் கதிக்கு உய்தலால் -மெய்ம்மையே
பட்டாங்கு அறம் உரைக்கும்  பண்புடையாளரே
நாட்டார் எனப் படுவார்.

பொருள்

இம்மை  - இந்தப் பிறவியில்

அடக்கத்தைச் செய்து = புலன் அடக்கத்திற்கு வழி செய்து

புகழ் ஆக்கி = நமக்கு புகழ் உண்டாகும் படி செய்து

உம்மை = மறு பிறப்பில்

உயர் கதிக்கு  = வீடு பேற்றை அடைய

உய்தலால் = வழி செய்து

மெய்ம்மையே = உண்மையிலேயே

பட்டாங்கு = உலகில்

அறம் உரைக்கும் = அறத்தை கூறும்

பண்புடையாளரே = நல்ல பண்பு உள்ளவர்களே

நாட்டார் எனப் படுவார் = நண்பர்கள் என்று கூறப் படுவார்கள்.

எனவே நண்பன் என்று சொல்லுவதற்கு என்னென்ன குணம் வேண்டும் ?

- புலன் அடக்கத்திற்கு வழி செய்ய வேண்டும்.  "வாடா , தண்ணி அடிக்கப் போகலாம், தம் அடிக்கப் போகலாம்" என்று கூட்டிக் கொண்டு போகக் கூடாது.

- புகழ் அடைய வழி செய்ய வேண்டும் - புகழ் எப்படி வரும் ? கடின உழைப்பு, புத்திசாலித் தனம் போன்றவை இருந்தால் புகழ் வரும். தவறு செய்யாமல் இருந்தால் புகழ் வரும்.  வாய்மையை கடை பிடித்தால் புகழ் வரும். நல்ல ஒழுக்கம் இருந்தால் புகழ் வரும்.



- மறு பிறப்பில் உயர் கதி அடைய வழி காட்ட வேண்டும்

- நல்ல அறங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்

- நல்ல பண்பு உள்ளவனாக இருக்க வேண்டும்.

உங்கள் நண்பர்களை விடுங்கள்.

நீங்கள் எத்தனை பேருக்கு இப்படிப் பட்ட நல்ல நண்பனாக , நண்பியாக இருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்று வரை இல்லாவிட்டால் என்ன, நாளை முதல் இப்படி இருக்கப் பாருங்கள்....




நளவெண்பா - மாறியவை

நளவெண்பா - மாறியவை 


நிடத நாட்டில் இது சிறப்பாக இருக்கிறது, அது சிறப்பாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே போனால் அந்த பட்டியல் எப்போது முடியும். எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும், பட்டியலும் நீளமாக போகக் கூடாது...எப்படி சொல்லுவது...?

புகழேந்தி சொல்கிறார்....

அந்த நாட்டில் வளைந்து இருப்பது வில் மட்டும்தான்...தளர்ந்து இருப்பது பெண்களின் கூந்தல் மட்டுமே...வாய் விட்டு அரற்றுவன பெண்களின் சிலம்பில் உள்ள மணிகள் மட்டும் தான், கலங்குவது நீர் மட்டும்தான், நல்ல நெறியை விட்டு விலகுவன பெண்களின் கண்கள் மட்டுமே...

பாடல்

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்கம்
கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.

பொருள்

வெஞ்சிலையே = கொடிய வில் மட்டும்

கோடுவன = வளைந்து இருப்பன. அப்படி என்றால் அரசனின் செங்கோலும், நீதி தேவதையின் துலாக் கோலும் வளையாமல் நிமிர்ந்து நின்றன.

மென்குழலே  = மென்மையான (பெண்களின் )  தலை முடியே

சோருவன = தளர்ந்து இருப்பன . மக்களிடம் சோர்வு இல்லை. அலை அலையாக பறக்கும் பெண்களின் கூந்தல் மட்டும் தான் தளர்ந்து இருக்கும்.

அஞ்சிலம்பே = கொலுசுகள் மட்டும் தான்

வாய்விட் டரற்றுவன = சத்தம் போட்டு அரற்றுவன. சிலம்பு ஏன் வாய் விட்டு அரற்றும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். வாய் விட்டு புலம்புபவர்கள் யாரும் இல்லை அந்த ஊரில் இல்லை. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

கஞ்கம் கலங்குவன = கலங்குவது நீர் மட்டும் தான்

மாளிகைமேல்  = மாளிகையின் மேல்

காரிகையார் = பெண்களின்

கண்ணே = கண்கள் மட்டும்தான்

விலங்குவன = விலகிச் செல்வன

மெய்ந் நெறியை விட்டு = உண்மையான நெறியை விட்டு

மெய் நெறி என்பது வீடு பேறு அடையும் வழி. பெண்களின் கண்கள் இந்த உலக இன்பங்களை  அனுபவிக்க நம்மை இழுக்கும். அந்தக் கண்கள், பற்றற்ற துறவற நிலைக்கு  நம்மை அழைத்துச் செல்லாது என்று சொல்ல வருகிறார்.

எதிர் மறையிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது.



Monday, June 29, 2015

பிரபந்தம் - மணத்தூணே பற்றி

பிரபந்தம் - மணத்தூணே பற்றி 


ஓடுகின்ற தண்ணீரில் நின்று இருக்கிறீர்களா ? பெரிய அலை அடைக்கும் போது கடற்கரையில் கால் நனைத்து இருக்கிறீர்களா ?

தண்ணி அப்படியே இழுத்துக் கொண்டு போவது போல, தள்ளிக் கொண்டு போவது போல இருக்கும் அல்லவா ?

நிற்கவும் முடியாது, அதே சமயத்தில் விழுந்தும் விடுவது இல்லை...இரண்டுக்கும் நடுவில் கிடந்து தத்தளிப்போம். எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொள்ளலாம் போல இருக்கும் அல்லவா ?

அந்த அனுபவம் ஒரு புறம் இருக்கட்டும்.....

வாழ்வில் உங்களுக்கு கிடைத்த வரங்களை, இன்பங்களை எண்ணிப் பாருங்கள்...

முதலில் ஆரோக்கியமாக பிறந்து இருக்கிறீர்கள்...நொண்டி, முடம், குருடு இல்லாமால்,

நல்ல படிப்பு, நல்ல குடும்பம், நல்ல ஊரில் பிறந்து வளர்ந்து இருக்கிறீர்கள், நல்ல நண்பர்கள், நல்ல உறவு, இனிமையான கணவன் மனைவி, பிள்ளைகள், கொஞ்சம் சொத்து...இப்படி எத்தனையோ நல்லவை உங்களுக்கு வாய்த்திருக்கிறது . எல்லோருக்கும் எல்லாமும் இருக்கும் என்று சொல்லவில்லை...பொதுவாகவே நமக்கு எல்லாம் கிடைத்து இருக்கிறது....

எத்தனை சந்தோஷம்....எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று கூறுவது போல....

இதை எண்ணிப் பார்க்கிறார் குலசேகர ஆழ்வார்...

அவன் அன்பை, அருளை எண்ணி எண்ணி உருகுகிறார்...ஏதோ அவனிடம் இருந்து அருள் , அன்பு வெள்ளம் பொங்கி வருவது போல இருக்கிறது...அந்த வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகாமல் கோவில் மண்டபத்தில் உள்ள தூணை பற்றிக் கொள்கிறார்...

அப்படி ஒரு அருள் வெள்ளம்....

பாடல்

வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ

வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்

காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!

சீர் பிரித்த பின்

வாய் ஓர் ஈர் ஐநூறு  துதங்கள் ஆர்த்த  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந் தீ

வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் மேன் மேலும் மிக எங்கும்  பரந்த தன் கீழ்

காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன  மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத் தூணே பற்றி நின்று ஏன்  வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே!


பொருள் 

வாய் = வாய்

ஓர் ஈர் ஐநூறு = இரண்டு ஐநூறு அதாவது ஆயிரம்

துதங்கள் = துதம் என்றால் தோத்திரம். துதித்தல் என்பது  அதிலிருந்து வந்தது. துதங்கள் , அதன் பன்மை. பலப் பல தோத்திரங்கள்.  

ஆர்த்த  = பொங்கி வரும். அல்லது தொடர்ந்து வரும்.

ஆர்த்த பிறவித் துயர் கெட என்பார் மணிவாசகர்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

வளை உடம்பின்  = வளைந்த உடம்பின்

அழல் = தீயின் நாக்கு

நாகம் உமிழ்ந்த  = நாகம் (ஆதி சேஷன் ) உமிழ்ந்த

செந் தீ = சிவந்த தீ

வீயாத = கீழே விழாத

மலர்ச் = மலர்களால் ஆன

சென்னி = தலைக்கு மேல் உள்ள

விதானமே போல் = பந்தல் போல

மேன் மேலும் = மேலும் மேலும்

மிக எங்கும் = எங்கும்

பரந்த = பரந்து விரிந்து

தன் கீழ் = தனக்கு கீழே

காயாம்பூ  = காயாம்பூ

மலர்ப் = மலர்

பிறங்கல் அன்ன  மாலைக் = ஒளி பொருந்திய மாலை

கடி அரங்கத்து = சிறந்த திருவரங்கத்தில்

அரவணையில் = அரவு + அணையில் = பாம்பணையில்

பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும்

மாயோனை = மாயோனை

மணத் தூணே பற்றி = மணத்  தூணைப் பற்றிக் கொண்டு

நின்று = நின்று

என்  வாயார = என் வாயார

என்று கொலோ வாழ்த்தும் நாளே! = என்று வாழ்த்துவேனோ

நாம் எல்லாம் கோவிலுக்குப் போனால் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும்  என்று கேட்போம். ஒரு படி மேலே போனால், கொடுத்ததற்கு நன்றி சொல்லப்  போவோம்.

ஆழ்வார் ஒரு படி இன்னும் மேலே போகிறார்.

"நீ நல்லா இருக்கணும் " என்று இறைவனை இவர் வாழ்த்துகிறார். "பாவம் , நீ தான் எவ்வளவு கஷ்டப் படுகிறாய்...நீ நல்லா இருக்கணும்" என்று இறைவனை வாழ்த்துகிறார்.

இரண்டாவது,  மணத் தூணே பற்றி நின்று. வைணவக் கோவில்களில் சந்நிதியில் இரண்டு தூண்கள் இருக்கும். அவற்றிக்கு "திருமணத்தூண்கள் " என்று பெயர்.

பக்தி பெருகும்போது, ஆனந்த வெள்ளம் கரை புரண்டு வரும்போது, பற்றிக் கொள்ள உதவும்  தூண்கள் அவை.

இப்படி கரை புரண்டு வெள்ளத்தை , குலசேகர ஆழ்வார் மட்டும் தான் உணர்ந்தாரா ?

இல்லை . அபிராமி பட்டர் கூறுவார்

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே

கரை காணாத வெள்ளம் என்கிறார்.


இதையே அருணகிரிநாதரும் 

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே

தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே என்று கூறுவார்.

ஆனந்தமான கடல்.

ஒன்றும் இல்லாமலா எல்லோரும் சொல்லி இருப்பார்கள் ?

 


Friday, June 26, 2015

தாயுமானவர் பாடல் - எது ?

தாயுமானவர் பாடல் - எது ?


தாயுமானவர், வேதாரண்யத்தில் பிறந்து, திருச்சியில் வேலை பார்த்து, பின் இராமநாதபுரத்தில் சமாதி அடைந்தவர். 1700 களில் வாழ்ந்தவர்.

தமிழ், சமஸ்கிரதம் இரண்டிலும் புலமை பெற்றவர்.

கிட்டத்தட்ட 1700 பாடல்கள் பாடியுள்ளார்.  மிக மிக எளிமையான பாடல்கள்.

இராமலிங்க அடிகளும், பாரதியாரும் எளிமையான பாடல்கள் பாட இவர் ஒரு உதாரணம் என்று சொல்லுபவர்களும் உண்டு.

இவரை சித்தர் என்று சொல்பவர்களும் உண்டு.

எளிமையான பாடல்கள்தான் என்றாலும் ஆழ்ந்த பொருள் செறிந்த பாடல்கள்.

எல்லோரும் பாடத் தொடங்கும்போது பிள்ளையார் மேல் பாடல் பாடுவார்கள், அல்லது தங்கள் இஷ்ட தெய்வத்தைப் பாடி நூல் தொடங்குவார்கள்.

தாயுமானவர், கேள்வியோடு பாடலை ஆரம்பிக்கிறார்.

எங்கும் நிறைந்தது எது ? ஆனதமானது எது ? அருள் நிறைந்தது எது ? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விகளுக்கு விடையான அதை வணங்குவோம் என்று முடிக்கிறார்.

பாடல்

அங்கிங் கெனாதபடி  எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி
  அருளடு  நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
      அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
       தழைத்ததெது மனவாக்கினில்
  தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
       தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
       எங்கணும் பெருவழக்காய்
  யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
       என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
       கருத்திற் கிசைந்ததுவே
  கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
       கருதிஅஞ் சலிசெய்குவாம்.   


கொஞ்சம்  .சீர் பிரிப்போம்


அங்கு இங்கு எனாத படி எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி அருளடு  நிறைந்தது எது ?

தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் 
தங்கும் படிக்கு இச்சை வைத்து உயிர்க்கு உயிராய் 
தழைத்தது எது ?

மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது ?

சமய கோடிகள் எல்லாம் தன் தெய்வம் என் தெய்வம் 
என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது ?

எங்கணும் பெரு வழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளது எது அது ? 

கங்குல் பகல் அற நின்ற எல்லையுள்ளது எது அது  ? 

கருத்திற்கு இசைந்ததுவே 
கண்டன எல்லாம் மோன  உரு வெளியதாவும் 
கருதி அஞ்சலி செய்குவாம்.   

கடின பதம் எதுவம் இல்லை. 

பொருள் வேண்டுமா என்ன ?


Wednesday, June 24, 2015

நள வெண்பா - மனம் விரியட்டும்

 நள வெண்பா - மனம் விரியட்டும் 


இலக்கியங்கள் நம் மனதை விரிவடையச் செய்கின்றன.

மனம் ஏன் விரிய வேண்டும் ? மனம் பரந்து விரிவதால் என்ன பயன் ?

இரண்டு பயன்கள்

முதலாவது, துன்பங்கள் குறையும். பொதுவாகவே துன்பங்கள் நான், எனது, என் வீடு, என் கணவன், என் மனைவி, என் மக்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தினால் வருகிறது.

தரையிலே செல்பவனுக்கு மேடு பள்ளம் தெரியும். ஆகாய விமானத்தில் செல்பவனுக்கு மேடு பள்ளம் தெரியாது. மனம் உயர உயர, விரிய விரிய மேடு பள்ளம் மறைந்து சம நோக்கு வரும்.

இரண்டாவது, இறை அனுபவம் பெறலாம். நாம் தெரிந்ததில் இருந்து தெரியாததை அறிந்து கொள்கிறோம். புலி எப்படி இருக்கும் என்றால் பூனை போல இருக்கும், ஆனால் கொஞ்சம் பெரிதாக இருக்கும் இன்று பிள்ளைகளுக்கு சொல்லித்தருவோம். இப்படி தெரிந்த பூனையில் இருந்து தெரியாத புலியை நம்மால் யூகம் பண்ண முடியும்.

எதைச் சொல்லி இறைவனை யூகம் பண்ண முடியும் ? இறைவன் யாரைப் போல இருப்பான் ? எதைப் போல இருப்பான் ? தெரியாது.  மனம் விரிந்து கொண்டே போனால் , எல்லாவற்றிலும் பெரியவன், உயர்ந்தவன், சிறந்தவன் என்று சொல்லப்படும்   இறைவனை அறிய முடியும்.

அதீத கற்பனைகளினால், இலக்கியங்கள் நம் மனதை பெரிதும் விரிவடையச் செய்கின்றன.

நிடத நாடு.

அங்குள்ள மாளிகைகள் எல்லாம் உயரமாக இருக்கின்றன. எவ்வளவு உயரம் என்று கேட்டால், அந்த மேகம் வரை உயரமாக இருக்கின்றன. அந்த மாளிகைகளில் மேகம் முன் வாசல் வழி வந்து பின் வாசல் வழி போகும். அவ்வளவு உயரம்.

அந்த மாளிகைகளில், பெண்கள் குளித்து முடித்து தங்கள் கூந்தலில் உள்ள ஈரம் போக  அகில், சாம்பிரானி புகை காட்டுகிறார்கள். அந்த புகை , அங்கு வரும் மேகங்களோடு  கலந்து விடுகிறது.  பின், அந்த மேகங்கள் மழை பொழிகிற பொழுது, இந்த நறுமண வாசனைகளும் கலந்து பொழிகின்றன. அதனால்  அந்த ஊரில் பெய்யும் மழை எல்லாம் பன்னீர் தெளிப்பது போல வாசமாக இருக்கிறது.

பாடல்

நின்றுபுயல் வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பரால் - தென்றல்
அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.

பொருள்

நின்று = (வானில்)  நின்று

புயல் = மேகம்

வானம் = வானம்

பொழிந்த நெடுந்தாரை = பொழிந்த நீண்ட மழை

என்றும் = எப்போதும்

அகில் கமழும் என்பரால் = அகில் (சந்தனம் போல ஒரு நறுமண மரம்) வாசம் வீசும் என்று கூறுவார்கள்

தென்றல் = தென்றல் மெல்ல வந்து

அலர்த்தும் = வருடிப் போகும்

கொடிமாடத் = கொடிகள் உள்ள மாடத்தில்

தாயிழையார் = ஆயிழையார் = ஆராய்ந்து எடுக்கப் பட்ட அணிகலன்களை அணிந்த பெண்கள்

ஐம்பால் = ஐந்து பிரிவு எடுத்து பின்னப்பட்ட கூந்தல். இப்போதெல்லாம் மூன்று பிரிவு எடுத்து பின்னுகிறார்கள். அந்தக் காலத்தில் அவ்வளவு அடர்த்தியான முடி. ஐந்து பிரிவாக கூந்தலைப் பிரித்து பின்னுவார்களாம். எனவே பெண்களுக்கு ஐம்பால் என்று ஒரு அடை மொழியும் உண்டு.

புலர்த்தும் = புகை போடும்

புகை = புகை

வான் புகுந்து = வானில் உள்ள மேகங்களின் ஊடே புகுந்து

சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கற்பனை விரியும். காணாத  ஒன்றை உங்கள் கற்பனையில் காண முடியும். 

இப்படியே பழகுங்கள்...ஒரு நாள், காணாத ஒன்றை, கடவுளைக் கூட காண இது உதவலாம்.

Tuesday, June 23, 2015

கந்தர் அலங்காரம் - எப்போது படிக்க வேண்டும்

கந்தர் அலங்காரம் - எப்போது படிக்க வேண்டும் 


எதைப்  படிக்க வேண்டும் என்பது ஒரு பிரச்னை.

எப்போது படிக்க வேண்டும் என்பது அதை விட பெரிய சிக்கல்.

எப்படி படிக்க வேண்டும் என்பது அதனினும் பெரிய சிக்கல்.

கற்க கசடு அற , கற்பவை , கற்றபின், நிற்க, அதற்குத், தக என்று சொன்ன வள்ளுவர் கூட எப்போது கற்க வேண்டும் என்று சொல்ல வில்லை.

எப்போது படிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று அருணகிரியார் சொல்கிறார்....

இந்தப் பிறவியை அழித்து, பின் பிறக்க விடாமல் செய்யும் முருகனின் கவியை அன்போடு , பிழை இல்லாமல் படிக்க மாட்டீர்கள். தீ பிடித்தது போல கண்களில் புகை எழ, கோபத்தோடு எமன் வந்து பாசக் கயிற்றை உங்கள் கழுத்தில் போட்டு இழுக்கும் போதா கற்பீர்கள் ?


பாடல்

அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீ  ரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

அருணகிரியாரின் பாடல்களை சீர் பிரிக்காமல் படிப்பது சற்று கடினம்.

சீர் பிரித்தபின்

அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால் 
எழுத்துப் பிழை அற கற்கின்றிலீர்  எரி மூண்டதென்ன
விழித்துப் புகை எழ  பொங்கு வெங் கூற்றன் விடும் கையிற்றால் 
கழுத்தில்  சுருக்கிட்டிழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.

அடடா ! புரிகிற மாதிரி இருக்கே !!

அழித்துப்  = இந்த பிறவி என்ற தொடரை அழித்து

பிறக்க ஒட்டா = மீண்டும் பிறக்க விடாமல் செய்யும்

அயில் = கூர்மையான

வேலன் = வேலை உடையவன்

கவியை = கவிதையை

அன்பால் = அன்போடு

எழுத்துப் பிழை அற  = எழுத்துப் பிழை இல்லாமல்

கற்கின்றிலீர் = கற்க மாட்டீர்கள்

எரி மூண்டதென்ன = தீ பிடித்தாற்போல்

விழித்துப் = விழித்துக் கொண்டு

புகை எழ  = எங்கும் புகை எழ

பொங்கு = கோபத்தோடு வரும்

வெங் கூற்றன் = வெம்மையான கூற்றன்

விடும் கையிற்றால் = விடும் பாசக் கயிற்றால்

கழுத்தில் = கழுத்தில்

சுருக்கிட்டிழுக்கும் = சுருக்குப் போட்டு இழுக்கும்

அன்றோ  = அன்றைய தினமா

கவி கற்கின்றதே = கவி கற்பது ?

பின்னாளில் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள்.

காலன் எப்போது நம் கழுத்தில் கயிற்றை மாட்டுவான் என்று தெரியாது.

நல்லவற்றை முடிந்தவரை சீக்கிரம் படித்து விடுங்கள்.

நமக்கு கிடைத்தது போல் பெரியவர்கள், குருமார்கள் யாருக்குக் கிடைத்தார்கள் ?

நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். உங்கள் முன்னவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காசு போட்டால் கிடைக்குமா கந்தரலங்காரம் ?


அறநெறிச்சாரம் - எதைப் படிக்க வேண்டும் ?

அறநெறிச்சாரம் - எதைப் படிக்க வேண்டும் ?


ஒரு புத்தகத்தை படித்து முடிக்க மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகலாம். ஒரு வருடத்தில் பத்து அல்லது பன்னிரண்டு புத்தகங்கள் வாசித்து முடிக்கலாம்.

ஒரு அம்பது வருடம் தொடர்ந்து வாசித்து வந்தால் 500 முதல் 600 புத்தகங்கள் அதிக பட்சம் வாசிக்கலாம்.

இருக்கின்ற புத்தககளோ கோடிக்கணக்கில்.

இனி வரப் போகும் புத்தகங்களோ கணக்கில் அடங்காதவை.

இவற்றில், எதைப் படிப்பது, எதை விடுவது  என்று மலைப்பாக இருக்கும்.

இருக்கின்ற கொஞ்ச நாளில் மிக மிக சிறந்த நூல்களை வாசிக்க வேண்டும்.

எது சிறந்த நூல், அதை எப்படி தேர்ந்து எடுப்பது என்று அறநெறிச்சாரம் சொல்கிறது.

ஒரு புத்தகத்துக்கு நீங்கள் இரண்டு விலை கொடுக்கிறீர்கள்.

ஒன்று, அந்த புத்தகம் வாங்க கடைகாரனுக்கு தரும் விலை. இது மிக மிக சிறய விலை.

இரண்டாவது, அந்த புத்தகத்தை நீங்கள் படிக்க செலவழிக்கும் உங்களின் மதிப்பு மிக்க நேரம். இது, மிக மிக அதிகமான விலை.

பணம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு வினாடி நேரம் கூட நம்மால் அதிகமாக சம்பாதிக்க முடியாது.

எனவே, மிக மிக விலை கொடுத்து ஒரு புத்தகத்தை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதிகமான விலை கொடுத்துதங்கத்தை வாங்குபவன் எப்படி வாங்குவான் ?

அதை நிறுத்து, அதை வெட்டிப் பார்த்து, நெருப்பில் சுட்டு, கல்லில் உரைத்து தங்கத்தை வாங்குவதைப் போல, நல்ல நூல்களை தரம் பார்த்து வாங்க வேண்டும்.

தங்கத்தை வாங்க வேண்டும் என்றால் இப்படி வாங்க வேண்டும்.

புத்தகங்களில் தங்கம் போல உயர்ந்தவை எது ?

 இந்த பிறவி என்ற பந்தத்தை அறுக்கும் நூல்களே தங்கம் போல உயர்ந்த நூல்கள். அந்த மாதிரி நூல்களை தேடிப்  பிடித்து படிக்க வேண்டும்.

பாடல்


நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால்--பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகுமற் றாகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.


பொருள்

நிறுத்தறுத்துச் = நிறுத்து , அறுத்து

சுட்டுரைத்துப் = சுட்டு (தீயில்) , உரைத்து (கல்லில்)

பொன் கொள்வான் போல = பொன்னை (தங்கத்தை) வாங்குபவன் போல

அறத்தினும் = அற நூல்களையும்

ஆராய்ந்து புக்கால் = ஆராய்ந்து பார்த்தால்

பிறப்பறுக்கும் = பிறப்பை அறுக்கும்

மெய்ந்நூல் = உண்மையை உரைக்கும் நூல்கள்

தலைப்பட லாகும் = கிடைக்கும்

மற் றாகாதே = மற்று ஆகாதே

கண்ணோடிக் கண்டதே கண்டு = கண்ணால் கண்ட நூல்களை எல்லாம் வாங்கக் கூடாது.


அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

அழித்து பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால் 
எழுத்துப் பிழை அற கற்கின்றிலீர் 

என்பார் அருணகிரி.

பிறக்காமல் இருக்க உதவும் நூல்களை படியுங்கள் , தவறு இல்லாமால் அன்போடு படியுங்கள்  என்கிறார்.

இதையே வள்ளுவரும்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

குறள் விளக்கம்

நல்ல நூல்களை கற்று அதன் உண்மையான பொருள்களை அறிந்தவர் மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியை அறிவார்கள் என்கிறார்.

அடுத்த முறை வார பத்தரிகைகள், மாத நாவல்கள்,  சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள், மர்ம நாவல்கள், என்று வாங்குமுன் சற்று சிந்தியுங்கள்.

அவை பிறப்பறுக்கும் நூல்களா என்று ?