Sunday, August 30, 2015

இராமாயணம் - பரதன் - பழி வந்தால் போகாது

இராமாயணம் - பரதன் - பழி வந்தால் போகாது 


தீய செயல்களை, பழி தரும் செயல்களை செய்வதில் உள்ள சிக்கல் என்ன என்றால் ஒரு தரம் பழி வந்துவிட்டால் அது எக்காலத்தும் போகாது. பழிச் செயலை செய்தவன் ஆயுளுக்குப் பின்னும் அந்த பழிச் சொல் அவனை விடாது.

நாம் செய்யும் நல்லவைகளை உலகம் எளிதாக மறந்து விடும். ஆனால், நாம் செய்யும் தீய செயல்களை ஒரு போதும் மன்னிக்காது.

இராமன் எவ்வளவோ நல்லது செய்தான். ஆனால் அவன் வாலியை மறைந்து நின்று கொன்றான் என்ற பழிச் சொல் இன்றுவரை போகவில்லை. போகாது.

எனவே தான் வள்ளுவரும்

ஈன்றாள் பசிக் காண்பான் ஆயினும் செய்யற்க ஆன்றோர் பழிக்கும் வினை 

என்றார். சட்ட புத்தகம் ஆயிரம் சொல்லலாம், சாட்சிகள் இல்லாமல் போகலாம், நீதிபதி சரியாக நீதி வழங்காமல் போகலாம்.  சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யக் கூடாது.

நாம் மறைந்தாலும் நம் பழிச் செயல் மாறாது.

"மாயா வன் பழி தந்தீர்" என்றான்.  பழி மாயாது. என்றும் நிலைத்து நிற்கும்.

கைகேயிடம் பரதன் கூறுகிறான்.....

"நீ நோய் அல்ல, உன் கணவனின் உயிரை உண்ட பேய். நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாயே.  எனக்கு என்றும் போகாத பழியைத் தேடித் தந்தீர். முலை தந்தீர், பழி தந்தீர். இன்னும் என்னென்ன தரப் போகிறாயோ "

பாடல்

‘நோயீர் அல்லீர்; நும் கணவன்தன்
    உயிர் உண்டீர்;
பேயீரே! நீர் இன்னம் இருக்கப்
    பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்!
    முலை தந்தீர்!
தாயீரே நீர்? இன்னும் எனக்கு
    என் தருவீரே?

பொருள்

‘நோயீர் அல்லீர் = நீ நோய் அல்ல

நும் கணவன்தன் = உன் கணவனின்

உயிர் உண்டீர் =  உயிரை உண்டாய்

பேயீரே! = பேய் போன்றவள் நீ

நீர் இன்னம் இருக்கப் பெறுவீரே? = இன்னும் உயிரோடு இருக்கிறாயே

மாயீர்! = சாகவில்லையே இன்னும்

மாயா வன் பழி தந்தீர்! = தீராத கொடுமையான பழியைத் தந்தீர்

முலை தந்தீர்! = என்னை பாலூட்டி வளர்த்தாய்

தாயீரே நீர்? = நீயெல்லாம் ஒரு தாயா ?

இன்னும் எனக்கு என் தருவீரே? = இன்னும் எனக்கு என்னவெல்லாம் தரப் போகிறாயோ ?

பரதன் ஒரு குற்றமும் செய்யவில்லை. வரம் கேட்டது கைகேயி. தந்தவன் தசரதன். உயிர் விட்டவன் தசரதன். கானகம் போனவன் இராமன். இதில் பரதன் எங்கே வந்தான்.

இருந்தாலும், தாய் கேட்ட வரத்தால் தனக்கு ஒரு நன்மை வரும் என்றால், அந்த வரத்தின்  தீமையும் தன்னையே சாரும் என்று அவன் நினைக்கிறான்.

திருட்டுப் பொருளை வாங்குவது மாதிரித்தான். நான் திருடவில்லை என்று சொன்னால்   உலகம் ஏற்றுக் கொள்ளாது.

தவறான வழியில் வரும் செல்வம் தீராத பழியைக் கொண்டு சேர்க்கும் என்று அவன் நினைத்தான்.

அப்படி ஒவ்வொருவரும் நினைத்தால் இந்த உலகம் எப்படி  இருக்கும் ?

உலகம் மாறுகிறதோ இல்லையோ, நாம் மாறுவோமே...



Saturday, August 29, 2015

இராமாயணம் - பழிக்கு அஞ்சிய பரதன்

 இராமாயணம் - பழிக்கு அஞ்சிய பரதன் 


கைகேயி பெற்ற வரத்தால் பரதனுக்கு அரசு கிடைத்தது. ஆண்டு அனுபவிக்க வேண்டியதுதானே.

என்ன ஆகி விடும் ? சக்ரவர்த்தியை எதிர்த்து யார் என்ன சொல்ல முடியும் ?

பரதன் கவலைப் படுவது அவன் வாழ்ந்த காலத்தில் உள்ள மக்களைப் பற்றி அல்ல. பின்னாளில் வருபவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணி வருந்துகிறான்.

முன்பொரு நாள் அரச குல தர்மத்தை பரதன் சிதைத்தான் என்று வருங்கால சந்ததி பேசுமே என்ற பழிக்கு அஞ்சினான்.

வள்ளுவர் சொல்லுவார்,

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால் 
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

நல்ல பண்பில்லாதவன் பெற்ற பெரிய செல்வம், சரியாக சுத்தப் படுத்தாத பாத்திரத்தில் இட்ட நல்ல பால் போன்றது என்று.

பாத்திரம் சரி இல்லை என்றால், பால் கெட்டுப்  போகும். அந்தப் பாலை உட்கொள்ள முடியாது.  அப்படியே உண்டாலும் அது உண்டவனுக்கு தீமை செய்யும்.  அது போல, பண்பில்லாதவன் பெற்ற செல்வத்தை அவனால் அனுபவிக்க  முடியாது, அப்படியே அனுபவித்தாலும் அது அவனுக்கு தீமையே செய்யும்.

தான் அந்த அரசை பெறுவது ஒரு பண்பில்லாத செயல் என்று எண்ணினான் பரதன்.

தான் வாழும் காலத்திற்கு மட்டும் அல்ல, இன்னும் வரும் காலத்தில் உள்ள மக்கள் என்ன நினைப்பார்களோ என்று பழிக்கு அஞ்சியவன் பரதன்.

பாடல்

‘ “சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்,
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து, ஒரு
பழி உடைத்து ஆக்கினன், பரதன் பண்டு” எனும்,
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ?


பொருள்

‘ “சுழியுடைத் = கெட்ட எண்ணம் கொண்ட

தாயுடைக் = தாயின்

கொடிய சூழ்ச்சியால் = கொடிய சூழ்ச்சியால்

வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து = வழி வழியாக கட்டிக் காத்த மரபை கொன்று

ஒரு பழி உடைத்து ஆக்கினன் = ஒரு பழியை செய்தான்

பரதன் = பரதன்

பண்டு” = அந்தக் காலத்தில்

எனும் = என்ற

மொழி உடைத்து ஆக்கலின் = பழிச் சொல்லை ஆக்குவதைத் தவிர

முறைமை வேறு உண்டோ? = வேறு என்ன இருக்கிறது

அரசை ஆள்வதில் உள்ள சுகம் அவனுக்குத் தெரியவில்லை.

அதிக்கரம், செல்வம், பணம், பகட்டு, ஆள் , அம்பு, சேனை ஒன்றும் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை.

அதனால் வரும் பழி மட்டும் அவனுக்குத் தெரிகிறது.

மற்றவர்களாய் இருந்தால், சக்கரவர்த்தி பதவியின் சுகம் மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். கொஞ்சம் பழி வந்தால் என்ன, ஏதாவது சொல்லி  சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள்.

பரதன் இராமனை விட உயரக் காரணம், அவன் மனம் உயர்ந்ததனால். அவனுடைய பழிக்கு அஞ்சிய குணமும் அவன் மனம் உயர ஒரு காரணம்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை மகிழ்விக்க, நாம் செய்யும் தவறை சுட்டி காட்டாமல்  போகலாம். நமக்கு கீழே இருப்பவர்கள், நமக்கு பயந்து நம் தவறுகளை  நமக்கு எடுத்துச் சொல்லாமல் போகலாம்.

நமக்குத் தெரிய வேண்டும்....நல்லது எது , கெட்டது எது என்று. அப்படி அறிந்து அதன் படி   நின்றதால் உயர்ந்தான் பரதன்.



Friday, August 28, 2015

இராமாயணம் - பரதன் - மாளவும் , மீளவும், ஆளவும்

இராமாயணம் - பரதன் - மாளவும் , மீளவும், ஆளவும் 


வாழ்கையை எப்படி இன்பமாக, வெற்றிகரமாக வாழ்வது ?

ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் வாழ்வில் உயர முடியும்.

நான் தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கிறேன், தினமும் பல் விளக்குகிறேன், நடை பயிற்சி செய்கிறேன்...யார் பொருளையும் இதுவரை திருடியது கிடையாது ...நான் முன்னேற முடியுமா என்று கேட்கலாம்.

ஒழுக்கம் என்றால் என்ன என்று அறியாதவர்கள் சொல்வது இது.

ஒழுக்கம் என்றால் என்ன ?

ஒழுக்கம் என்றால் ஒழுகுவது.

வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் ஏதாவது கீறல் விழுந்தால் அதில் இருந்து நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.

அதாவது மேலிருந்து கீழே வருவது ஒழுகுதல்.

அது, போல உயர்ந்தவர்கள், சான்றோர்கள், படித்தவர்கள் , செய்வதை கண்டு அதன் படி வாழ்வது ஒழுக்கம்.

மேலும், ஒழுக்கம் என்பது துளி போல் விட்டு விட்டு விழுவது அல்ல. விடாமல், தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஒழுக்கமும் விடாமல் கடை பிடிப்பது.

பெரியவர்கள் செய்த நல்ல செய்கைகளை விடாமல் கடை பிடித்தால் அது ஒழுக்கம் எனப்படும்.

அப்படி வாழ்ந்தால் , வாழ்க்கையில் கட்டாயம் முன்னேற முடியும் அல்லவா ?

அந்த ஒழுக்கத்தை வாழ்வில் கடை பிடித்தவன் பரதன்.

எப்படி ?

பாடல்

‘மாளவும் உளன் ஒரு மன்னன் வன்சொலால்
மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால்
கோள் அலது அறநெறி; குறை உண்டாகுமோ?

பொருள் 

‘மாளவும் உளன் ஒரு மன்னன் = தன் வாக்கை காப்பாற்றவும், அரச நெறியை காக்கவும் உயிரையே கொடுத்தான் ஒரு மன்னன் (தசரதன்)

வன்சொலால் = கொடிய சொல்லால் (வரத்தால் )

மீளவும் உளன் ஒரு வீரன் = பதினாலு வருடம் கானகம் போய் மீண்டு வர உள்ளான் ஒரு வீரன்

மேய பார் ஆளவும் உளன் ஒரு பரதன் = பரந்த இந்த உலகை ஆள உள்ளான் பரதன்

ஆயினால் = ஆகையால்

கோள் அலது அறநெறி; =   அறநெறிக்கு ஒரு குற்றம் இல்லை

குறை உண்டாகுமோ? = ஒரு குறையும் இல்லை


நான் இந்த அரசை ஆண்டால் அது அறநெறிக்கு புறம்பானது, குற்றம் உள்ளது என்கிறான்.

தசரதன், இராமன் என்ற இரண்டு பெரியவர்களை எதுத்துக் கொள்கிறான் பரதன்.

சொன்ன சொல்லைக் காக்கவும், அரச நெறியைக் காக்கவும் உயிரைக் கொடுத்து உயர்ந்தவன்  தசரதன்.

தந்தையின் சொல்லை காப்பாற்ற கானகம் போய் தனை உயர்த்திக் கொண்டவன்   இராமன்.


அவர்களை தன் வாழ்வுக்கு உதாரணமாகக் கொள்கிறான் பரதன்.

நம்மை விட வாழ்வில் உயர்ந்தவர்களை , அவர்களின் வாழ்கை முறைகளை கடை பிடிக்க வேண்டும்.

தசரதனும், இராமனும் தங்கள் செயல்கள் உயர்ந்தவர்கள்.

செயற்கரிய செய்வார் பெரியார்,  சிரியர் செயற்கரிய செய்கலாதார் என்று வள்ளுவன்  சொன்னது போல, செயற்கரிய செயல்களை செய்து பெரியவர்களாக  உயர்ந்தவர்கள் தசரதனும், இராமனும்.


அவர்களின் வாழ்கையை முன் உதாரணமாகக் கொண்டு வாழ்ந்து உயர்ந்தவன்  பரதன்.

பரதன் உயர்ந்தது இருக்கட்டும்....

நீங்கள் உயர, யாரை முன் உதாரணமாகக் கொண்டிருக்கிறீர்கள் ?

சிந்திப்போம்.



இராமாயணம் - தீயவற்றில் ஒரு சுவை

இராமாயணம் - தீயவற்றில் ஒரு சுவை 


இன்று இராமாயணம் பேசும் சிலர் , "பரதன் பாட்டன் வீட்டில் இருந்து கொண்டு , தாயை ஏவி விட்டு அரசைப் பெற்றுக் கொண்டான்" என்று கூறுகிறார்கள். இவர்களுடைய கீழ்மையை உயர்ந்த பாத்திரங்களின் மேல் ஏற்றுகிறார்கள்.

பரதன் அப்படிப் பட்டவானா ?

தசரதன் தனக்குத் தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பி உனக்கு அரசையும் பெற்றுத் தந்தேன் என்று கைகேயி சொல்லி முடிக்கும் முன், தன் தலைக்கு மேல் கூப்பிய கைகளை கீழே கொண்டு வந்து இரண்டு காதுகளையும் இறுக பொத்திக் கொண்டான் பரதன்.

பாடல்

சூடின மலர்க் கரம், சொல்லின் முன், செவி
கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு, அழல் கொழுந்துகள்
ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே!


பொருள்


சூடின மலர்க் கரம் = தலை மேல் கூப்பிய கரங்கள்

சொல்லின் முன் = கைகேயி சொல்லி முடிக்குமுன்

செவி கூடின;  = அவனின் இரு காதுகளின் பக்கம் வந்து கூடின

புருவங்கள் குனித்துக் = புருவங்கள் வளைந்து

கூத்து நின்று ஆடின = கூத்து ஆடின

உயிர்ப்பினோடு = உயிருடன்

அழல் கொழுந்துகள் ஓடின = நெருப்பு ஆறு ஓடியது

உமிழ்ந்தன = வடித்தன

உதிரம் கண்களே! = கண்கள் இரத்தத்தை

ஒரு இடத்தில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  சில நாள் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை  கொல்கிறார்கள். சில நாள் , காவல் படையும், இராணுவமும் சேர்ந்து தீவிரவாதிகளை  கொல்கின்றன. பத்திரிகைகளும், மற்ற ஊடகங்களும் இவற்றை  நாளும் எடுத்துச் சொல்கின்றன.

இன்று யாரை, யார் கொன்றார்கள் என்று கணக்குத் தருகின்றன.

இவற்றை தினமும் படித்துக் கொண்டிருந்தால், நமக்கு என்ன தோன்றும் ?

நாளடைவில்,  இது ஒரு பெரிய செய்தாகப்  படாது.  நாலைந்து பேர் இறந்தார்கள் என்றால்  , சரி என்று அடுத்த பக்கத்தை புரட்டப் போய் விடுவோம்.

என்ன ஆகிறது என்றால், தீமைகள் மரத்துப் போகிறது நமக்கு. இதெல்லாம் சாதாரணம், எப்போதும் நடப்பதுதான் என்று எடுத்துக் கொண்டு விடுகிறோம்.

தவறுகளுக்கு, தீமைகளுக்கு மனம் பழகி விடுகிறது.

இதற்கு அடுத்த கட்டம், அதிகமான தீமையை தவற்றை எதிர்பார்ப்பது.

ஆயிரம் இரண்டாயிரம் இலஞ்சம் வாங்கினான் என்றால் யாரும் கண்டு கொள்வது இல்லை.  பெரிதாக எதிர் பார்க்கத் தொடங்கி விடுகிறது.

சின்ன இலஞ்சம் வாங்கின யாரையாவது கைது பண்ணினால், "அவனவன் இலட்சம் கோடினு   வாங்கிறான்...அதை விட்டு விட்டு ஆயிரம் ரூபாய் வாங்கினவனை போய்   பிடிச்சிகிட்டு" என்று நமக்கு ஒரு சலிப்பு வந்து விடுகிறது.

இதில் அடுத்த கட்டம் என்ன என்றால், எல்லாரும் தான் வாங்குகிறார்கள், நாமும்  வாங்கினால் என்ன என்று தோன்றும்.

பொய்யில்,  தீமையில்,தவறில் ஒரு சுவாரசியம் வந்து விடுகிறது. ஒரு சுவை வந்து  விடுகிறது.

தவறு செய்வதில் ஆர்வமும், நல்லது செய்பவனை பார்த்தால் ஒரு இளக்காரமும் வந்து  விடுகிறது.

தீயவைகளை காது கொடுத்துக் கூட கேட்கக் கூடாது. கேட்டால் அதில் ஒரு ஆர்வமும், சுவையும் வந்து  விடும்.

கைகேயி சொன்னதை பரதன் முழுதாகக் கூட கேட்கவில்லை.

என்ன வரம், அதன் சாரம் என்ன, அதில் என்ன ஓட்டை இருக்கிறது, எப்படி கேட்டாய், எங்கு கேட்டாய், என்றெல்லாம் அவன் கேட்கவில்லை.

ஒரு தவறை முற்றுமாகக் கூட அவனால் கேட்க முடியவில்லை என்றால் அவன்  மனம் எவ்வளவு மென்மையானதாக இருந்திருக்க வேண்டும் ?

பேருந்தில் ஒரு பெண் மானபங்கப் படுத்தப் பட்டாள் என்றால், அதை விலாவாரியாக  விவரிப்பதும், அதை ஒரு வார்த்தை விடாமல் படிப்பதும் கூட ஒரு  வக்கிரம் தான்.

தீயாரை காண்பதுவும் தீதே , அவர் சொல் கேட்பதுவும் தீதே என்றாள் அவ்வை.

பொய் சொல்வதை கேட்பது, புரணி சொல்வதை கேட்பது,  புறம் சொல்வதை கேட்பது,  தவறுகளை விவரித்துக் கூறுவதை கேட்பது ....இவற்றை தவிர்க்க வேண்டும்.

தீயவற்றை மனதுக்குள் போட்டால் அது அங்கேயே தங்கி விடும். அகற்ற வழி இல்லை.

குழந்தைகளை தீயனவற்றை பார்க்கவோ, கேட்கவோ அனுமதிக்காதீர்கள்.

மனம் உயர அது ஒரு வழி.

தீயவற்றை கேட்க்கக் கூசினான் பரதன்.

மேலும் பார்ப்போம்.

 

Wednesday, August 26, 2015

திருவருட்பா - ஒன்றும் இல்லை என்று சொல்லும் கயவர்கள்

திருவருட்பா - ஒன்றும் இல்லை என்று சொல்லும் கயவர்கள் 


இறைவன் இல்லை.

பாவ புண்ணியம் இல்லை.

பக்தியும் முக்தியும் சும்மா கட்டுக் கதைகள்.

தவமும், விரதமும் வெட்டி வேலை.

இதையெல்லாம் விட்டு விட்டு, வாழ்க்கையை அனுபவிக்க வாருங்கள்....நன்றாக உண்டு, நல்ல உடை உடுத்து, பெண்களோடு சேர்ந்து கலந்து இன்பம் அனுபவிப்பதுதான் வாழ்க்கை. இது தான் மாம் வாழ்வில் கை மேல் கண்ட பலன். மற்றவை எல்லாம் வெறும் கற்பனை என்று சொல்லும் கயவர்களின் பால் சேராமல் இருக்க எனக்கு அருள் செய்வாய் என்று முருகனிடம் வேண்டுகிறார் வள்ளலார்.

எல்லாம் பொருளால் ஆனது. பொருள்களைத் தாண்டி எதுவும் இல்லை என்று கூறுபவரக்ளை கயவர்கள் என்கிறார் வள்ளலார்.

இந்த உலகில் பொருள்களைத் தாண்டி வேறு பல விஷயங்களும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் அறிய வேண்டும். அப்படி அறியாமல், உலக இன்பமே பேரின்பம் என்று அலையும் கயவர்களோடு என்ன கூட்டு இனியே என்கிறார் வள்ளலார்.

பாடல்

 பரமேது வினைசெயும் பயனேது பதியேது 
         பசுவேது பாச மேது 
         பத்தியேது அடைகின்ற முத்தியேது அருளேது 
         பாவ புண்ணியங்க ளேது 
    வரமேது தவமேது விரதமேது ஒன்றுமிலை 
         மனம்விரும் புணவுண்டு நல் 
         வத்திர மணிந்துமட மாதர்தமை நாடிநறு 
         மலர் சூடி விளையாடி மேற் 
    கரமேவ விட்டுமுலை தொட்டு வாழ்ந்தவரொடு 
         கலந்து மகிழ்கின்ற சுகமே 
         கண்கண்ட சுகமிதே கைகண்ட பலனெனுங் 
         கயவரைக் கூடா தருள் 
    தரமேவு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் 
         தலமோங்கு கந்த வேளே 
         தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
         சண்முகத் தெய்வ மணியே. 

பொருள்

 பரமேது = பரம் ஏது ? பரம் என்றால் ஆதி என்று பொருள். பரம்பரை என்றால் ரொம்ப காலமாய் வருவது. பரம சிவன். பர பிரும்மம்.

வினைசெயும் பயனேது = நல் வினை, தீ வினை இவற்றால் விளையும் பயன் ஏது ?

பதியேது = பதி ஏது  ? எல்லாவற்றிற்கும் தலைவன், ஆண்டவன் ஏது  ?

பசுவேது = பசு என்றால் அடிமை. ஆண்டான் அடிமை ஏது  ? கடவுள் , பக்தன் என்பதல்லாம் ஏது  ?

 பாச மேது  = பதிக்கும், பசுவுக்கும் இடையில் உள்ள பாசம் ஏது ?

பத்தியேது  = பக்தி என்றால் என்ன

அடைகின்ற முத்தியேது = அதன் மூலம் அடையும் முக்தி என்றால் என்ன ?

அருளேது = இறைவன் அருள் என்றால் என்ன ?

பாவ புண்ணியங்க ளேது  = பாவ புண்ணியங்கள் என்றால் என்ன ?

வரமேது தவமேது விரதமேது  = வரம், தவம், விரதம் என்றால் என்ன ?

ஒன்றுமிலை = இவையெல்லாம் ஒன்றும் இல்லை

மனம் விரும் புணவுண்டு = மனம் விரும்பும் உணவு உண்டு

 நல் வத்திர மணிந்து = நல்ல துணிகளை அணிந்து

மட மாதர்தமை நாடி = பெண்களை நாடி

நறு மலர் சூடி = வாசனையான மலர்களை சூடி

விளையாடி = விளையாடி

மேற் கரமேவ விட்டு = கையை அவர்கள் மேல் படர விட்டு

முலை தொட்டு  = அந்தப் பெண்களின் மார்புகளைத் தொட்டு

வாழ்ந்தவரொடு = வாழ்ந்து அவரோடு

கலந்து மகிழ்கின்ற சுகமே = கலந்து மகிழ்கின்ற சுகமே 
       
கண்கண்ட சுகமிதே  = கண் கண்ட சுகம் இதே

கைகண்ட பலனெனுங் = இதுவே கை கண்ட பலன் என்று சொல்லும்

கயவரைக் கூடா தருள் = கயவர்களை கூடாமல் இருக்க அருள்

தர = தருவதற்கு

மேவு = இருக்கும்

சென்னையிற் = சென்னையில்

கந்த கோட்டத்துள் = கந்த கோட்டத்தில்

வளர் = வளரும், அல்லது உறையும்

தலமோங்கு கந்த வேளே  = அதற்கு பெருமை செய்யும் கந்த வேளே

 தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வ மணியே.  =  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வ மணியே.

உணவு, உடை, ஆண் பெண் உறவு இவற்றைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லையா ?

சிந்திக்க வேண்டிய விஷயம்.

Tuesday, August 25, 2015

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் - பாகம் 2

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் - பாகம் 2 


"என்னது என் தந்தை தசரதன் இறந்து போனானா? என் அண்ணன் கானகம் போனானா ? ஏன் ? எப்படி நடந்தது இது ?" என்று அதிர்ச்சி அடைந்த  பரதன் கைகேயிடம் கேட்டான்.

அதற்கு கைகேயி

தசரதனை "அவன்" என்று குறிப்பிடுகிறாள்.

"அவன் தந்த இரண்டு வரத்தினால் இராமனை கட்டுக்கு அனுப்பினேன், உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன், அது பொறுக்காமல் அவன் உயிரை விட்டு விட்டான்"

என்று ஏதோ தன் பேரில் ஒரு குற்றமும் இல்லாத மாதிரி  மிகச் சாதரணமாக சொல்லி முடிக்கிறாள்.

பாடல்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து’ என்றாள்.

  பொருள்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு = தசரதன் முன்பு வரம் தந்தான். அதை, நிறைவேற்றுவதாக இப்போது வாக்கு தந்தான். அதன்  மூலம்

மைந்தனைப் போக்கினேன், வனத்திடை; = இராமனை காட்டுக்கு அனுப்பினேன்

போக்கி = அனுப்பி விட்டு

பார் உனக்கு ஆக்கினேன்; = இந்த உலகை உனக்கென்று ஆக்கினேன்

அவன் = தசரதன்

அது பொறுக்கலாமையால் = அதைப் பொறுக்காமல்

நீக்கினான் தன் உயிர் = உயிரை விட்டு விட்டான்

நேமி வேந்து’ என்றாள் = அதிகார சக்ரத்தை  செலுத்தும் அரசன் என்றாள்

இந்த பாட்டில் நிறைய ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.

அவற்றை நாளை பார்ப்போம்.

============== பாகம் 2 =================================================

கைகேயி  மிக நல்லவள். இராமனை தன் மகனாக நினைத்து வளர்த்தவள்.  கூனியின் வார்த்தைகளை கேட்டு தலைகீழாக மாறினாள்.

நம் எல்லோருக்குள்ளும் நல்லதும் கெட்டதும் கலந்து கிடக்கிறது.

நல்லதைப் படித்து, நல்லவர்களோடு சேர்ந்து இருந்தால் நமக்குள் இருக்கும் நல்லவைகள் சுடர் விட்டு எழும்.

கெட்டவர்களோடு சேர்ந்து, கெட்டதைப் படித்தால் கெட்டவைகளே மேலெழுந்து நிற்கும்.

கைகேயி , கூனியொடு சேர்ந்தாள். அவளுக்குள் கிடந்த சாத்தான் உயிர் பெற்றெழுந்தான்.

அவள் பேச்சில் ஆணவம் சொட்டுகிறது....

மைந்தனைப் போக்கினேன்
பார் உனக்கு ஆக்கினேன்

என்று தான் செய்ததாகக் கூறுகிறாள்.

இராமன் வனம் போனான்.  தசரதன் வானம் போனான்.

காரணம் என்ன ?

கைகேயி சொல்கிறாள், "என் பேரில் என்ன தப்பு...நான் ஒரு தவறும் செய்யவில்லை"....

அவன் வரம் தந்தான்

அவன், அந்த வரங்களை நிறைவேற்றுவதாக வாக்கு தந்தான் ....இது தசரதனின் பிழை. என் மேல் ஒரு குற்றமும் இல்லை என்பது போல பேசுகிறாள்.


கூனியின் நட்பு அவளை அப்படி பேச வைத்தது...

தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
   தீயார்சொற் கேட்பதுவுந் தீதே-தீயார்
   குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
   டிணங்கி யிருப்பதுவுந் தீது.

தீயாரோடு இணங்கி இருந்தாள். தீயவளாகிப் போனாள்.

அப்போது கூட, அவளின் அடிப்படை நல்ல குணம் போகவில்லை.

இராமனை போக்கினேன் என்று கூறவில்லை.

"மைந்தனைப் போக்கினேன்" என்று கூறுகிறாள்.  அப்போதும் , இராமன் மேல் உள்ள பாசம் போகவில்லை.

மகனே மகனே என்று சொல்லி வளர்ந்த நாக்கு  தவறியும் மாற்றிச் சொல்லவில்லை.

சொல்லு நா நமச்சிவாயவே என்று சுந்தரர் கூறியது போல...கைகேயியின் நாக்கு, இராமனை கானகம் அனுப்பிய பின்னும், "மைந்தன்" என்றே கூறியது.

நல்லதை பழக்கப் படுத்தி வையுங்கள். அது உங்களை நல்ல வழியில் இட்டுச் செல்லும்.

 சரி,இதைக் கேட்டவுடன் பரதன் என்ன செய்தான் ?









Monday, August 24, 2015

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன்

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் 


"என்னது என் தந்தை தசரதன் இறந்து போனானா? என் அண்ணன் கானகம் போனானா ? ஏன் ? எப்படி நடந்தது இது ?" என்று அதிர்ச்சி அடைந்து பரதன் கைகேயிடம் கேட்டான்.

அதற்கு கைகேயி

தசரதனை "அவன்" என்று குறிப்பிடுகிறாள்.

"அவன் தந்த இரண்டு வரத்தினால் இராமனை கட்டுக்கு அனுப்பினேன், உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன், அது பொறுக்காமல் அவன் உயிரை விட்டு விட்டான்"

என்று ஏதோ தன் பேரில் ஒரு குற்றமும் இல்லாத மாதிரி  மிகச் சாதரணமாக சொல்லி முடிக்கிறாள்.

பாடல்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து’ என்றாள்.

  பொருள்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு = தசரதன் முன்பு வரம் தந்தான். அதை, நிறைவேற்றுவதாக இப்போது வாக்கு தந்தான். அதன்  மூலம்

மைந்தனைப் போக்கினேன், வனத்திடை; = இராமனை காட்டுக்கு அனுப்பினேன்

போக்கி = அனுப்பி விட்டு

பார் உனக்கு ஆக்கினேன்; = இந்த உலகை உனக்கென்று ஆக்கினேன்

அவன் = தசரதன்

அது பொறுக்கலாமையால் = அதைப் பொறுக்காமல்

நீக்கினான் தன் உயிர் = உயிரை விட்டு விட்டான்

நேமி வேந்து’ என்றாள் = அதிகார சக்ரத்தை  செலுத்தும் அரசன் என்றாள்

இந்த பாட்டில் நிறைய ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.

அவற்றை நாளை பார்ப்போம்.