Friday, September 9, 2016

இராமாயணம் - விராதன் வதை - அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே

இராமாயணம் - விராதன் வதை - அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே


இராமனால் கொல்லப்பட்ட விராதன் என்ற கந்தர்வன், சாப விமோசனம் பெற்று, விண்ணுலகம் போவதற்கு முன், இராமன்தான் பரம்பொருள் என்று உணர்ந்து சில சொல்லுகிறான்.

அத்தனையும் தேனாக இனிக்கும் பாடல்கள்.


பாடல்

‘கடுத்த கராம் கதுவ நிமிர் கை
     எடுத்து மெய்கலங்கி
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி
     கொள்ள உறு துயரால்
"அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே!
     பரமே!" என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று
     "ஏன்?" என்றாய்?


பொருள்

‘கடுத்த = கோபம் கொண்ட

கராம் = முதலை

கதுவ =  பற்றிக் கொள்ள

நிமிர் கை = நிமிர்ந்த கை ,தும்பிக்கை

எடுத்து = உயர்த்தி

மெய்கலங்கி = உடல் கலங்கி

உடுத்த திசை அனைத்தினும் = அனைத்து திசைகளிலும்

சென்று ஒலி கொள்ள = செல்லுமாறு குரல் எழுப்பி

உறு துயரால் = பெரிய துயரத்தால்

"அடுத்த = சேர்ந்த

பெருந் = பெரிய

தனி = உவமை இல்லாத

மூலத்து = மூலமான மூலமான

அரும் பரமே! = அருமையான , உயர்வானவனே

பரமே!" என்று = உயர்வே என்று

எடுத்து ஒரு வாரணம் அழைப்ப = யானை அழைக்க

நீயோ = நீயே

அன்று = அன்று

 "ஏன்?" என்றாய்? = ஏன் என்று கேட்டாய்

அன்று ஒரு நாள் ஒரு யானையின் காலை ஒரு முதலை பற்றிக் கொள்ள, அந்த யானை ஆதி மூலமே என்று அலறிய போது ஏன் என்று ஓடி வந்தாய்.

பாடல் இவ்வளவுதான்.

இந்த யானை கூப்பிட்டதும், அவன் வந்ததும் ஆன அந்த கதையை ஆழ்வார்கள் அப்படி கொண்டாடுகிறார்கள். 


பேயாழவார் , மூன்றாம் திருவந்தாந்தியில் 

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துள்
கோள்முதலை துஞ்சக்  குறியெறிந்த  சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு’

என்று சாதிக்கிறார்.


பூதத்தாழ்வாரும்

அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து. 


தொடரெடுத்த மால்யானை சூழ்கயம் புக்கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம்  கொண்டு,அன்றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே* வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு. 

என்று அருளிச் செய்கிறார்


நம்மாழ்வார்...

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

என்று  திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமானை  பாடுகிறார்


மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற,
கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,
எம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,
தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே. 

என்பதும் நம்மாழ்வார் பாசுரமே

சரி , ஏதோ ஒரு யானை கூப்பிட்டது, பெருமாள் வந்து அருள் புரிந்தார்,  இதில் என்ன அப்படி ஒரு விசேஷம் ?

யானைக்கு உயிர் போகும் ஆபத்து. அந்த நேரத்தில் என்ன செய்வோம் என்று தெரியாமல் அது அலறியது. யானைக்கு அருள் புரிந்தவன் நமக்கும் அருள் புரிவான் என்ற நம்பிக்கையை விதைப்பது இந்த பாடல்கள்.

இந்த உலகத்தை நாம் கட்டுப் படுத்தி விட முடியும். இந்த உலகம் நம்  சௌகரியத்திற்கு இருக்க வேண்டும். நமக்கு ஒரு துன்பமும் வரக் கூடாது.  நாம் வெளியே போகும் போது மழை வந்தால், நாம் சலித்துக்   கொள்கிறோம். இரண்டு மாதம் வெயில் அடித்தால் நாம் வெறுப்படைகிறோம். ஏதோ இந்த உலகம் நமக்கு சாதகமாக இல்லை என்று  அலுத்துக் கொள்கிறோம்.

போராடுகிறோம். இதை ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறோம். அறிவினால் எதையும் வென்று விடலாம் என்று நினைக்கிறோம்.

அது ஒரு வழி. அப்படியும் போகலாம். வாழ்நாள் பூராவும் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டே இருக்கலாம்.

பக்தி உள்ளவர்கள், சரணாகதி அடைந்து விடுகிறார்கள். "எல்லாம் நீ பார்த்துக் கொள்...எனக்கு என்ன" என்று.

யானை , முதலையோடு போராடவில்லை. அல்லது, நமக்கு விதித்த விதி இதுதான் என்று சோர்ந்தும் விடவில்லை. "ஆதி மூலமே" என்று அவனிடம்  சரண் அடைந்தது.  முதலையிடம் இருந்து மட்டும் அல்ல, இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்தும் மீண்டது.

யானைக்கு , கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவர் இன்ன பெயரில் இருக்கிறார். இடத்தில் இருக்கிறார். இந்த வண்ணத்தில் இருக்கிறார் என்று தெரியாது. ஒன்று மட்டும் அது உணர்ந்து இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் வேண்டும். இந்த உலகம் அத்தனையும் ஒரு மூலத்தில் இருந்து தொடங்கி இருக்க வேண்டும். அதன் பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.  அந்த ஆதி மூலத்தை , ஆதிமூலம் என்றே அழைத்தது  அந்த யானை.

ஒரு பெரிய கூட்டம். அதில் உங்கள் நண்பர் இருக்கிறார். எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொருவராக பார்த்து பார்த்து கண்டு தெளிய முடியாது. நீங்கள் அவசரமாக அவரைப் பார்க்க வேண்டும்.

என்ன செய்வீர்கள். ஒலி  பெருக்கியில், அவர் பெயரைச் சொல்லி, இன்னார் எங்கிருந்தாலும் இந்த இடத்துக்கு வரவும் என்று அறிவிப்பு செய்வீர்கள் அல்லவா. அதை கேட்டதும், அந்த பெயர் உள்ள உங்கள் நண்பர் அங்கே வருவார்.

அவர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாது.

பெயரைச் சொல்லி அறிவிப்பு செய்தவுடன் அவர் வருகிறார்.

அது போல, ஆதி மூலமே என்று திசைகள் அனைத்தும் கேட்கும்படி அந்த யானை அறிவிப்பு செய்தது.

"ஏன் , என்னை கூப்பிட்டாயா" என்று கேட்டுக் கொண்டே அவன் வந்தான்.

அது மட்டும் அல்ல, அப்படி வந்த பரம்பொருள் இராமன் தான் என்று உலகுக்குச் சொல்லிப் போகிறான் விராதன்.

நம்புங்கள். நம்பி கூப்பிடுங்கள்.

யானைக்கு செவி சாய்த்தவன் , உங்களுக்கு குரலுக்கு செவி சாய்க்க மாட்டானா ?

சாய்பான்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_9.html

Thursday, September 8, 2016

நற்றிணை - வினை முடித்தன்ன இனியோள்

நற்றிணை - வினை முடித்தன்ன இனியோள் 


அது ஒரு பழங்கால தமிழ் நாட்டின் ஒரு கிராமம். ஊரில் ஒரு வேப்ப மரம் இருக்கிறது. அந்த வேப்ப மரத்தில் ஒரு பருந்து கூடு கட்டி வசிக்கிறது. அப்போதுதான் முட்டை போட்டு இருக்கிறது. அந்த வேப்ப மரத்தின் நிழலில் கொஞ்சம் சிறுவர்கள் நெல்லிக் காயை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். மாலை வந்து விட்டது. உழவர்களும் , பயிற்சிக்கு சென்ற வீரர்களும் வீடு  திரும்புகிறார்கள். வீட்டில் , இனிமையான அவள் விளக்கு ஏற்றுகிறாள். இரவு நீள்கிறது.

இதை விவரிக்கும் பாடல்

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே.


ஈன் பருந்து = ஈன்ற பருந்து. முட்டை இட்ட பருந்து

உயவும் = வருந்தவும்

வான் பொரு = வானளாவிய

நெடுஞ் = நீண்ட

சினைப் = கிளைகளைக் கொண்ட

பொரி = கடினமான

அரை வேம்பின் = வேப்ப மரத்தின் கிளையின்

புள்ளி நீழல் = புள்ளி புள்ளியாக இருக்கும் நிழல்

கட்டளை அன்ன இட்டு  = கட்டளை இட்டது போல

அரங்கு இழைத்து = விளையாடும் இடம் செய்து

கல்லாச் சிறாஅர் = கற்காத சிறுவர்கள்

நெல்லி வட்டு ஆடும் = நெல்லிக் கனியை விளையாடும் காயாகக் கொண்டு ஆடும்

வில் = வில்

ஏர் உழவர் = கலப்பையை கொண்ட உழவர்

வெம் முனைச் சீறூர்ச் = கூரிய முனையைக் கொண்ட சின்ன ஊர்

சுரன் முதல் வந்த = புஞ்சை நிலத்தில் முதலில் வந்த

உரன் மாய் = வலியைக் குறைக்கும்

மாலை = மாலைப் பொழுது

உள்ளினென் = நினைத்தேன்

அல்லெனோ = ஒரு வேளை நினைக்க வில்லையோ

யானே = நானே

உள்ளிய = நினைத்த

வினை முடித்தன்ன இனியோள் = வேலை செய்து முடித்ததை போன்ற இனிமையானவள்

மனை = இல்லத்தில்

மாண் = மாண்பொடு

சுடரொடு = விளக்கு ஏற்றி வைத்து

படர் பொழுது எனவே.= நீளும் பொழுதைப் போல

என்ன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத வரிகளாக இருக்கிறதா ?

முட்டை போட்ட பருந்து, வேப்ப மர நிழல், விளையாடும் சிறுவர்கள், வீடு  திரும்பும் ஆண்கள். விளக்கு ஏற்றும் நேரம்.

இதில்  என்ன கவிதை இருக்கிறது என்று நினைக்கத் தோன்றும்.

கொஞ்சம் கரடு முரடான தமிழ்தான்.

 சிந்திப்போம்.

இந்த பாடலை எழுதியது யாராக இருக்கும்.

வீட்டில் இருக்கும் பெண்ணைப் பற்றி எழுதியதால் எழுதியது ஒரு ஆண் என்று புரிகிறது.

எந்த மனநிலையில் இருந்து எழுதி இருக்கிறான் ?

பிரிவின் சோகத்தில் இருந்து  எழுதுகிறான்.

எப்படி என்று  பார்ப்போம்.

முதலில், பருந்து முட்டை இட்டு வலியில் இருக்கிறது.  ஆனால்,அது அந்த மரத்தின்  அடியில் விளையாடும் சிறுவர்களுக்குத்  தெரியாது.அவர்கள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது, கல்லாச் சிறார் என்றதால், அந்த காலத்தில் எல்லா பிள்ளைகளும் பள்ளிக் கூடம் போய் படிக்கவில்லை என்று தெரிகிறது.  படிப்பறிவு இல்லாத சிறுவர்கள். அவர்கள் எப்படி பருந்தின் வலியை உணர மாட்டார்களோ, அப்படி நானும் அவளின் சோகத்தை அறியாமல் பொருள் தேடி வெளியூர் போகிறேன் என்பது சொல்லாமல் சொன்ன கதை.

மூன்றாவது, மாலை நேரத்தில் வேலைக்குப் போன ஆண்கள் எல்லோரும் வீடு திரும்புகிறார்கள். உழவர்கள், வீரர்கள் எல்லோரும் வீடு திரும்பும் நேரம். தான் மட்டும் வீடு திரும்பாமல் எங்கோ தனிமையில் தவிக்கும் நிலை புரிகிறது அவனுக்கு.

நான்காவது, தனிமையில், அவள் விளக்கு ஏற்றி வைத்து காத்திருக்கும் சோகம் நம் மீதும் படர்கிறது.

 ஐந்தாவது, அவள் மிக மிக இனிமையானவள். அவளின் இனிமைக்கு ஒரு உதாரணம் கண்டு பிடித்த இந்த கவிஞனுக்கு ஒரு கோவில்  கட்டி கும்பிடலாம்.

" உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்"

நினைத்த வேலையை நல்ல படியாக முடித்தால் வரும் இன்பம் வருமே, அந்த இன்பத்தைப் போன்றவள் அவள் என்கிறான்.

ஒரு வீட்டை நன்றாக கட்டி, பால் காய்ச்சி குடி போகும் போது வரும்  இன்பம்,  பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்து அவர்கள்  மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கும் போது வரும் இன்பம், இப்படி ஒரு பெரிய வேலையை நன்றாக முடித்த பின் வரும்  இன்பம் போன்றவள் அவள்.

அதிலும் குறிப்பாக "உள்ளிய வினை" அதாவது நினைத்த வேலை. யாரோ சொன்ன வேலை. நாம் நினைத்து செய்த வேலை.

அடடா, என்ன ஒரு உதாரணம்.

தமிழனாகப் பிறந்ததற்கு இன்னுமொருமுறை கர்வப் பட்டுக் கொள்ளலாம்.


ஆறாவதாக, வெளியூரில் இருக்கும் அவன் வேலை மும்முரத்தில் சில சமயம் அவளை நினைப்பதைக் கூட மறந்து விடுகிறான். அப்படி நினைக்காதது அவனுக்கு ஒரு குற்ற உணர்வை தருகிறது. எனக்காவது வேலை இருக்கிறது. அவள் பாவம் தனியாக இருப்பாளே என்று தவிக்கிறான்.


"உள்ளினென் அல்லெனோ"

முதலில் நினைத்தேன் என்கிறான். உடனே குற்ற உணர்வு வருகிறது. "அல்லெனோ' , நினைக்கவில்லையோ என்று தவிக்கிறான்.

ஏழாவதாக, பகல் எல்லாம் எப்படியோ போய் விடும். இந்த மாலைதான் படுத்தும்.  வலிமையை குன்றச் செய்யும் மாலை என்கிறான்.

உரன் மாய் மாலை


வலிமையை மாய்க்கும் (அழிக்கும்) மாலை.

கடைசியாக, இந்த மாலையும் அதை தொடர்ந்து வரும் இரவும் இருக்கிறதே, அது சட்டென்று முடியாமல் நீண்டு கொண்டே  போகிறதாம்.

"படர் பொழுது"

விளக்கு ஏற்றி வைக்கிறாள். விளக்கின் ஒளியில் நடக்கும் போது நிழல் எப்படி  நீண்டு தெரியுமோ அப்படி இந்த மாலையும் இரவும் நீண்டு கொண்டே போகிறது. உருவம் என்னவோ சின்னது தான், ஆனால், இந்த நிழல் மட்டும் நீண்டு கிடக்கும் . அது போல,  எப்போதும்  சின்னதாக இருக்கும் மாலை இப்போது நீண்டு கிடக்கிறது.

வரிக்கு வரி பிரிவின் சோகம் நிழலாடும் பாடல்.

எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்து வந்து, ஏதோ ஒரு பெயர் தெரியாத கிராமத்தை, பெயர் தெரியாத ஒரு ஆணையும்,பெண்ணையும், அவர்களின் பிரிவுத் துயரையும் நம் கண்   முன் கொண்டு வந்து நிறுத்துகிறதல்லவா இந்தப் பாடல்.

இன்னொரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

அந்த  கிராமமும்,அந்த அந்தி  நேரமும், விளக்கேற்றிய அந்த வீடும், அதில்  பிரிவின் சோகத்தில் இருக்கும் அந்த பெண்ணும் உங்களுக்குத்   தெரிவார்கள்.


http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_8.html


Wednesday, September 7, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம்

இராமாயணம் - விராதன் வதைப் படலம்


இராமாயணத்தில் அதிகம் பேசப் படாத பாத்திரங்களில் ஒன்று விராதன்.

அவன் ஒரு கந்தர்வன். ஒரு சாபத்தால் அரக்கனாக வந்து பிறந்தான்.

அவனையும் ஆட்டி வைத்தது காமம். அது பற்றி பின் ஒரு நாள் சிந்திப்போம்.

அரக்கனாக பிறந்த அவன், சீதையை கவர முயல்கிறான். இராமனோடு சண்டை இட்டு , சாப விமோச்சனம் பெற்று மேலுலகம் அடைகிறான்.

போவதற்கு முன் கொஞ்சம் பேசுகிறான்.

அத்தனையும் வேதாந்த சாரம். தேனாய் தித்திக்கும் தமிழ் பாடல்கள்.

கல்லும் கரையும் தமிழ். ஒவ்வொரு பாடலையும் படித்து முடித்தவுடன் , அப்படியே கண் மூடி கரைந்து போக வைக்கும் பாடல்கள்.


அதிலிருந்து சில பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ஒரு மாட்டுத் தொழுவத்தில் நிறைய பசு மாடுகள் கட்டி இருக்கின்றன. அங்கே சில கன்றுகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. பசி வந்தால், அந்த கன்றுகள் , சரியாக தன் தாய் பசுவை சென்று அடையும். அது போல, தாய் பசுவுக்கும் தன் கன்று எது என்று தெரியும்.

இறைவா, நீ தான் இந்த உயிர்களை எல்லாம் படைத்தாய்.உனக்கு இந்த உயிர்களை எல்லாம் தெரியும். ஆனால், இந்த உயிர்களுக்குத் தான் உன்னைத் தெரியவில்லை.

இது என்ன மாயை என்று வினவுகிறான் விராதன்.

மாயைப் பற்றி ஆயிரம் சர்ச்சைகள் இருக்கின்றன. பெரிய பெரிய  மேதாவிகள், பண்டிதர்கள் எல்லாம் மாயை  என்றால் என்ன என்று  பக்கம் பக்கமாய் விளக்கி இருக்கிறார்கள். இருந்தும் நமக்கு அது சரியாக புரிவது  இல்லை.

மூலம் எது என்று தெரியாதது தான் மாயை.

நான்  யார், எங்கிருந்து வந்தேன், என்பது புரியாமல் குழம்புவது தான் மாயை  என்று நாலு வரியில் சொல்லிப் போகிறான் விராதன்.

பாடல்


தாய்தன்னை அறியாத கன்று
     இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய்
     ஆகின், ஐய!
நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை
     நிலை அறியா;
மாயை இது என்கொலோ?-
     வாராதே வரவல்லாய்!


பொருள்


தாய்தன்னை = தாயை

அறியாத கன்று இல்லை; = அறியாத கன்று இல்லை

தன் கன்றை = தன்னுடைய கன்றை

ஆயும் அறியும்; = தாய் பசுவும் அறியும்

உலகின் தாய் ஆகின், = நீ உலகின் தாய் போன்றவன்

ஐய! = ஐயா

நீ அறிதி எப் பொருளும்; = நீ அனைத்தும் அறிவாய்

அவை உன்னை நிலை அறியா = அவை உன் உண்மை நிலையை அறியா

மாயை இது என்கொலோ?- = இது என்ன மாயை

வாராதே வரவல்லாய்! = வாராதே வர வல்லாய்

அறிவு சேர சேர குழப்பம் அதிகமாகும். சந்தேகங்கள் அதிகம் ஆகும்.

இதை அறிந்துதான் மணிவாசகரும்

கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா ! உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே என்றார்.

கன்றை ஈன்ற பசுவின் மனம் போல கசிந்து உருக வேண்டுகிறார் மணிவாசகர்.

பிள்ளையைப் பெற்ற ஒரு பெண்ணைப் போல என்று ஏன் சொல்லவில்லை. பசுவிடம் அறிவின் தாக்கம் குறைவு, உணர்வின் தாக்கம்  அதிகம்.

"கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் " என்பார் அவர்.

ஆதி மூலமே என்று அன்று ஒரு யானை தன் மூலத்தை அறிந்து கூப்பிட்டு , அவனை அடைந்தது.

வாதாடி, போராடி தோற்று "கோவிந்தா" என்று கை உயர்த்தி அவனைக் கண்டாள் பாஞ்சாலி.

மூலத்தை அறிய விடாமல் தடுப்பது மாயை.

மாயை விலக வேண்டும்.

தண்ணீர் மேல் படிந்திருக்கும் பாசி போல. பாசி விலகினால் நீரின்  தன்மை புரியும்.

ஆசைக் கடலில் அகப்பட்டு   அருளற்ற அந்தகன் கை
"பாசத்திடை" அல்லல் பட இருந்தேனை உன் பாதம் எனும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்வேன் ஈசர் பாகத்து நேரிழையே

என்பார் அபிராமி பட்டர்.


பாசம் என்ற திரை மறைக்கும், வழுக்கும்.


வாராதே வரவல்லாய்!

சரி, நமக்குத் தான் இறைவனைத் தெரியவில்லை. அவனுக்குத் தான் நம்மைத்  தெரியுமே. அவன் நேரில் வந்து தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள  வேண்டியது தானே. 

அவன் வரவில்லை என்று யார் சொன்னது. நாம் அறியவில்லை. அவ்வளவுதான்.  வராமலே வரும் ஆற்றல் உள்ளவன் அவன். 

‘வருவாய் போல வாராதாய்! வந்தாய் என்று மனம் களிப்ப,
வெருவாதிருந்தே  நீ  இடையே  துன்பம்  விளைக்க,
                                   மெலிகின்றோம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இதனைக்
                                      காவாயேல்,
திரு வாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ?’

என்பது நம்மாழ்வார் வாகு.

வருவது போல வராமல் இருப்பாய்.  உன் மாயையை எங்களால் அறிந்து கொள்ள  முடியுமா என்கிறார் நம்மாழ்வார்.

சிந்திப்போம். மாயை என்ற திரை விலகும். உண்மையின் தரிசனம் கிடைக்கட்டும் .

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_7.html



Tuesday, September 6, 2016

திருக்குறள் - தடையும் , விடா முயற்சியும்

திருக்குறள் - தடையும் , விடா முயற்சியும் 


வாழ்வில் எத்தனையோ தடைகள் வரும்.

நினைத்தது  நடக்காது. தோல்விகள் வரும். எதிர்பாராத சறுக்கல்கள் இருக்கும்.

எல்லாம் சரியாக, நாம் நினைத்தது படி நடந்து கொண்டிருந்தால் நல்லதுதான்.

நாம் எதிர்பார்த்ததற்கு எதிராக ஏதாவது நடந்தால் என்ன செய்வது ?

போரில், யானை மேல் அம்புகள் பாயும். ஆனால், அந்த யானை அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய கம்பீரம் குறையாமல் போரில் மேல் செல்லும். அது போல ஊக்கம் உடையவர்கள் , என்ன துன்பம் வந்தாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மேலே செல்வார்கள்.

பாடல்

சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற் 
பட்டுப்பா டூன்றுங் களிறு.

சீர் பிரித்த பின்

சிதை இடத்து ஓல்கார் உரவோர் புதை அம்பில் பட்டு பாடு ஊன்றும் களிறு 

பொருள்

சிதை இடத்து =  சிதைவு வந்த இடத்தில். துன்பம் வந்த போது


ஓல்கார் = தளர்ந்து பின் வாங்க மாட்டார்

உரவோர் = வலிமை உடையோர்

புதை அம்பில் பட்டு  = புதைக்கின்ற அம்பினால் பட்டு

பாடு = கடமை, வேலை

ஊன்றும்பா = நிலை நிறுத்தும்

களிறு = யானை

அம்பு பட்ட யானை போல தளராது வேலை செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.


இது ஒரு பெரிய கருத்தா ? இதை யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்.  வள்ளுவர் சொல்லும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது ?

பார்ப்போம்

துன்பம் இயற்கையாக வரலாம். அல்லது நமக்கு வேண்டாதவர்கள் மூலம் வரலாம்.

போரில் உள்ள யானைக்கு வந்த துன்பம் எதிரிகள் மூலம் வந்த துன்பம். அதிலும் ஒரு ஆள் செய்த துன்பம் இல்லை. பல எதிரிகள் எய்த  அம்பு.

அது போல வாழ்வில் எதிரிகளை கண்டு கலங்கி விடக் கூடாது. உடலால், மனதால், பொருளாதாரத்தால் நமக்கு துன்பம் விளைவிப்பவர்கள்  நிறைய பேர் இருக்கலாம். வாங்கிய கடனை திருப்பித்  தராதவர்கள், பணத்தை வாங்கி கொண்டு அதற்குரிய பொருளை, சேவையைத் தராமல் ஏமாற்றுபவர்கள், நம் பொருளை , உழைப்பை கவர்ந்து கொள்பவர்கள், நம்மை பற்றி மற்றவர்களிடம்  தவறாக பேசுபவர்கள், நமக்கு வர வேண்டிய நன்மையை தடுத்து நிறுத்துபவர்கள்  என்று பல வித எதிரிகள் இருக்கலாம்.

போரில், ஒவ்வொரு எதிரியாக வந்து அம்பு போடமாட்டான். எல்லோரும் ஒன்றாக அம்பு எய்வார்கள். அது போல நமக்கும் துன்பம்  வரும் போது , ஒன்றாக வரும். ஒவ்வொன்றாக வராது.

புதை அம்பு என்றார் வள்ளுவர். ஏதோ மேலே பட்டு குத்தி விட்டு கீழே விழுந்து விடும் அம்பு அல்ல. உடம்பில் குத்தி உள்ளே சென்று , இரத்தம் வெளி வர , வலி உண்டாக்கும் அம்புகள்.

ஒரு அம்பு குத்தியவுடன், "ஐயோ, வலிக்கிறதே , இதை வெளியில் எடுத்து, கட்டு போட்டு , குணமானபின் வந்து சண்டை போடலாம் " என்று  சொல்ல முடியாது. ஒரு அம்பு பாய்ந்து , இரத்தம் வந்து கொண்டிருக்கும் போது , இன்னொரு அம்பு பாயும். நின்று யோசிக்க நேரம் இல்லை. களைப்பாற நேரம் இல்லை. காயத்துக்கு கட்டுப் போட நேரம் இல்லை.

அது போல, ஒரு துன்பம் வந்தால், தளர்ந்து இருந்து விடக் கூடாது. இன்னும் வரும், அதையும் சேர்த்து தாங்குவேன் என்று உறுதியாக இருக்க வேண்டும்.

ஒரு அம்புக்கே தளர்ந்து விட்டால், பின் பத்து அம்பை எப்படி தங்குவது.



உரவோர் - வலிமை மிக்கவர் என்று பொருள். 

உரம் என்ற சொல்லில் இருந்து  வந்தது. உரம் என்பது மற்றவற்றை நன்கு வளர உதவி செய்வது.  அது போல, வலிமையானவர்கள், தான் வலிமையாக இருப்பதோடு தன்னை சார்ந்தவர்களையும் வலிமை உள்ளவர்களாக  ஆக்குவார்கள். 

யானைப் படை முன்னால் அடித்து துவம்சம் செய்து கொண்டு போகும். அதன் பின்னால் மற்ற படைகள் முன்னேறும். எதிரியின் அரண்களை  தன் வலிமையால் தகர்த்து மேலே செல்லும். அதன் வழியை பின்  பற்றி மற்ற படைகள் முன்னேறும். 

அது போல, நாம் வரும் துன்பங்களை ஏற்றுக் கொண்டு மேலே சென்றால் , நம் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் நம் பின்னால் வருவார்கள். 

யானை வலிக்கு பயந்து புறமுதுகு கொண்டு ஓடினால் , தன்னுடைய படைக்கே  அது எமனாக மாறிவிடும். எதிரியை கொல்வதற்கு பதில், தான் படைக்கே அது சேதம் விளைவித்து விடும். 

அது போல, நாம் துன்பத்தை கண்டு தளர்ந்து விட்டால், அது நம் குடும்பத்தில் உள்ளவர்களை  அதிகமாக பாதிக்கும். எனவே, வலியைம் அவமானத்தையும்  பொறுத்துக் கொண்டு மேலே செல்ல வேண்டும். 

மேலும், யானை தன் மேல் பட்ட அம்புகளை தாங்கி கொண்டு மேலே செல்லும்போதும் அதன் கம்பீரம் குறையாது. அது கூனி குறுகிச் செல்லாது. 

துன்பத்தை கண்டு நாம் தயங்கி விடக் கூடாது. கம்பீரமாக மேலே செல்ல வேண்டும். 

அப்படிச் செல்ல என்ன வேண்டும் ?

ஊக்கம் வேண்டும். 


அப்படி செய்வது, "கடமை" என்கிறார் வள்ளுவர். அது ஏதோ விரும்பி செய்வது அல்ல. அது ஒரு கடமையும் கூட. 


இதைத்தான் அவ்வையாரும் ஒரே வரியில் சொல்லி விட்டுப் போனார் 

"ஊக்கமது கைவிடேல் " என்று. 

ஊக்கத்தை கை விடாதீர்கள்.

எத்தனை தடையும் வந்தாலும் , வெல்ல முடியும். 

வெல்வீர்கள். 

Monday, September 5, 2016

திரு இரட்டை மணிமாலை - ஆழாமை காப்பானை

திரு இரட்டை மணிமாலை - ஆழாமை காப்பானை 


காரைக்கால் அம்மையார் அருளிச் செய்தது.

சங்கரனை, சடை முடி கொண்டவனை, அந்த சடையில் பாம்பை அணிந்தவனை, நாம் ஆழ்ந்து விடாமல் காப்பவனை , நெஞ்சே, எப்போதும் வணங்கு என்பது பாடல்.

பாடல்

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை. 

பொருள்

சங்கரனைத் = இன்பம் தருபவனை

தாழ்ந்த சடையானை = பரந்து  விரிந்து கிடைக்கும் சடை முடியினைக் கொண்டவனை

அச்சடைமேற் = அந்த சடையின் மேல்

பொங்கரவம் = பொங்கு + அரவம் = சீறும் பாம்பினை

வைத்துகந்த = வைத்து + உகந்த = வைத்து மகிழ்ந்தவனை

புண்ணியனை = புண்ணியம் நிறைந்தவனை

அங்கொருநாள் = அங்கு ஒரு நாள்

ஆவாஎன்று = ஆ ஆ என்று

ஆழாமைக் = மூழ்கி விடாமல்

காப்பானை = காப்பவனை

எப்பொழுதும் = எப்பொழுதும்

ஓவாது = இடைவிடாமல்

நெஞ்சே உரை = மனமே சொல்

இவ்வளவுதானா ? இதில் என்ன பெரிய சிறப்பு இருக்கிறது ?


"அங்கொருநாள்" - அது எந்த நாள் ?  கடைசி நாள், உயிர் உடலை விட்டு பிரியும் நாள். புலன்கள் தள்ளாடி, அறிவு மயங்கும் அந்த நாள்.

வாழ் நாள் எல்லாம், எப்போதும் ஒரு அவசரகதியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நல்ல விஷயங்களை எல்லாம் அப்புறம் அப்புறம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி  வைக்கிறோம்.

பின்னாள் , எந்நாளோ ? அந்த நாள் வரும் போது எப்படி இருப்போமோ.

அன்று என்று எண்ணாது அறம் செய்க என்றார்  வள்ளுவர்.



"ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை"


பிறவியை பெரிய கடலுக்கு ஒப்பிட்டு சொன்னார்கள் நம் முன்னவர்கள்.

ஏன் ?

ஏன் ஒரு பெரிய நில பரப்புக்கு ஒப்பிட்டுச் சொல்லவில்லை ?

நிலத்தில் வழித் தடம் போட்டு விடலாம். ஒரு சாலை அமைத்து விடலாம்.  போகும் இடத்துக்கு ஒரு வழி அமைத்து, சாலையின் இருமருங்கிலும்  வழி காட்டி பலகைகள் வைத்து விடலாம்.

கடலில் அது முடியாது.

இப்படித்தான் போக வேண்டும் என்று சொல்ல முடியாது.

இறைவனை அடையும் வழி என்று ஒன்று இல்லை.

இருந்திருந்தால் இந்நேரம் எல்லோரும் அந்த வழியில் போய் இறைவனை  அடைந்திருக்க மாட்டோமா ?

உண்மை என்பது ஒவ்வொருவரும் , தனக்குத் தானே கண்டு கொள்ள  வேண்டிய ஒன்று.

மற்றவர் போன பாதையில் நாம் போக முடியாது.

பூஜைகளும், புனஸ்காரங்களும் , புத்தகங்களும், பிரசங்ககளும் வழி காட்ட  முடியாது. 

நம் வழியை நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும். 

கடலில் வழி கிடையாது. 

நீங்கள் போய் அடைந்தாலும், உங்கள் வழியை இன்னொருவர் உபயோகப் படுத்த  முடியாது. 

இரண்டாவது, தரையில் நடந்தால், கால் வலித்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்  கொள்ளலாம். கடலில் ஓய்வு எடுக்க முடியாது.   நீந்துவதை  நிறுத்தினால் மூழ்க வேண்டியதுதான். 

பிறவி பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார் இறைவனடி சேராதார் என்பார் வள்ளுவர். 

கால் சலித்து, கை சலித்து ஓயும் போது , அந்த சமயத்தில், நாம் மூழ்கி விடாமல் காப்பவன் இறைவன் என்கிறார்  அம்மையார். 

"ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை"

ஆழ்ந்து விடாமல் காப்பவன் இறைவன். 

பிறவி என்னும் பெருங்கடலில் நாம் தனியாக நீந்தவில்லை. 

கல்லை கட்டிக் கொண்டு நீந்துகிறோம். 

குடும்ப பாரம், சமுதாய பாரம், பயம், கோபம், காமம்  போன்ற பாரங்களை சேர்த்து கட்டிக் கொண்டு நீந்துகிறோம். 

நாவுக்கரசர் சொன்னார் 

"கற்றுணை பூட்டி ஒரு கடலுள் பாய்ச்சினும் 
நற்றுணை ஆவது நமச்சிவாயவே " 

என்று.

ஒரு கல்லா, இரண்டு கல்லா...ஆயிரம் கல்லை கட்டிக் கொண்டு நீந்துகிறோம்.


மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

 என்பதும்,நாவுக்கரசர் வாக்கே. 

 சிந்திப்போம்.




Saturday, September 3, 2016

பெரிய புராணம் - மனம் மலரும் கலை

பெரிய புராணம் - மனம் மலரும் கலை


பெரிய புராணத்தை படிக்க படிக்க , இப்படி ஒரு நூலா என்ற வியப்புதான் மேலிடுகிறது. அது  மட்டும் அல்ல, இத்தனை நாள் படிக்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தமும் கூடவே வருகிறது.

கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன், எல்லோருக்கும் தோன்றும் கவலை என்ன ?

இந்த பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதுதான் ?

 நிறைய வட்டியும் வர வேண்டும், முதலுக்கும் மோசம் வரக் கூடாது, வேண்டிய போது எடுக்கும் படியும் இருக்க வேண்டும்...அப்படிப்பட்ட ஒரு முதலீடு எது என்று ஒரே யோசனையாக இருக்கும்.

இது ஒரு பிரச்னை.

இன்னொரு பிரச்னை என்னவென்றால், பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு, பிள்ளைகளை என்ன படிப்பு படிக்க வைப்பது/படிப்பது  என்பதுதான்.

பிள்ளைகளுக்கு ஒன்றில் விருப்பம் இருக்கும். ஆனால், அதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா என்ற கவலை இருக்கும். சரி, அது வேண்டாம் என்றால் , பிடிக்காத ஒன்றை படிக்க வைக்க முடியுமா ? அதுவும் முடியாது. பின் எதைத்தான் படிப்பது ?

அது ஒரு பக்கம் இருக்க, பள்ளி கல்லூரிகளை விடுத்து , பொதுவாக எதைப் படிப்பது ? நாவல், சிறுகதை, தொடர் கதை, கவிதை, கட்டுரை என்று எதைப்  படிப்பது  என்ற இன்னொரு சந்தேகம்.

கண்டதையும் படித்தால் மனம் திரிந்து போகும்.

இப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சேக்கிழார் பெருமான்  விடை தருகிறார்.

திருநாவுக்கரசு நாயனாருக்கு படிப்பு ஆரம்பிக்க வேண்டும்.

அதை சொல்ல வருகிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

முதலில் அவருக்கு மொட்டை அடித்து, குழப்பம் இல்லாத தெளிந்த மதி உடைய பெரியவர்கள் எல்லாம் மகிழும்படி ஒரு விழா எடுத்து, ஆற்று வெள்ளம் போல செல்வத்தை அள்ளிக் கொடுத்து, புலன்கள் பற்றி, மனம் மலரும், மனச் சுருக்கத்தை நீக்கும் கலைகளை பயிலத் தொடங்குவித்தார்.

பாடல்

மருணீக்கி யார்சென்னி
   மயிர்நீக்கும் மணவினையுந்
தெருணீர்ப்பன் மாந்தரெலாம்
   மகிழ்சிறப்பச் செய்ததற்பின்
பொருணீத்தங் கொளவீசிப்
   புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
   கலைபயிலத் தொடங்குவித்தார்


பொருள்

மருணீக்கி யார் = மருள் நீக்கியார் (திருநாவுக்கரசரின் இயற் பெயர்)

சென்னி = தலை

மயிர்நீக்கும் = முடிகளை களைந்து

மணவினையுந் = சிறந்த வைபவத்தையும்

தெருணீர்ப்பன் = தெருள் நீங்கிய

மாந்தரெலாம் = சுற்றம் மற்றும் நண்பர்கள் எல்லாம்

மகிழ்சிறப்பச் = மகிழ்ந்து சிறப்பாக

செய்ததற்பின் = செய்த பின்

பொருணீத்தங் கொள = பொரு நீத்தம் என்றால் வெள்ளம்.

வீசிப் = அள்ளிக் கொடுத்து

புலன்கொளுவ = கொளுவுதல் என்றால் சிக்கிக் கொள்ளுதல், மாட்டிக் கொள்ளுதல் என்று அர்த்தம். புலன் கொளுவ என்றால் புலன்கள் சேர்ந்து கொள்ளுதல்.

மனமுகிழ்த்த = மனம் மொட்டு மலர்வது போல மலர்ந்து

சுருணீக்கி = சுருள் நீக்கி

மலர்விக்குங் = மலர வைக்கும்

கலைபயிலத் = கலைகளை கற்றுக்கொள்ள

தொடங்குவித்தார் = ஆரம்பித்து வைத்தார்

மேலோட்டமாகப் பார்த்தால், பாடல் என்னவோ இவ்வளவுதான்.

சற்று ஆழ்ந்து யோசிப்போம்.

முதலில் , எதற்கு மொட்டை அடிக்க வேண்டும் ? படிப்புக்கும் மொட்டைக்கும் என்ன சம்பந்தம்.

இளம் வயதில், உடல் அழகில் மனம் செல்லச் தொடங்கினால், மனம் புலன்கள் பின்னேயே போய் விடும்.  முதலில் முடி வளர்க்கச் சொல்லும், பின் அதை அழகாக வெட்டி, அதற்கு எண்ணெய் போட்டு அழகு செய்யச் சொல்லும். பின் அவன் முடி அழகா, என் முடி அழகா என்று  ஒப்பிடச் சொல்லும்.

கவனம் சிதறும்.

முடி வெட்டுவது என்பது ஒரு அடையாளம். பொதுவாக படிக்கும் காலத்தில் புலன் இன்பங்களை நுகர விடக் கூடாது. புலன் இன்பங்களின் சுகம் தெரிந்து விட்டால், புலன்கள் அதையே மேலும் மேலும்  வேண்டும் என்று கேட்கும்.  டிவி, பகட்டான உடை, பலவிதமான  சுவை உள்ள சாப்பாடு என்று குழந்தைகளுக்கு ருசியை காட்டி  விட்டால், பின் கவனம் எல்லாம் அதிலேயே போகும்.

எந்த சினிமாவுக்குப் போகலாம், எந்த ஓட்டலில் போய் என்ன சாப்பிடலாம், என்றே மனம் செல்லும்.

அது மட்டும் அல்ல, கிடைக்காததற்கு மனம் ஏங்கும் , வாங்கித் தராத  பெற்றோர் மேல் கோபம் வரும். வீட்டுகுத் தெரியாமல் பணம் எடுத்துப் போய் வங்கச் சொல்லும், உண்ணச் சொல்லும்.

இதை தவிர்க்க வேண்டும் என்றால், முதலில் ஆடம்பரங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது.

தசரதன் , தன் பிள்ளைகளான இராம இலக்குவனர்களை வசிட்டரின் ஆசிரமத்துக்கு அனுப்பித்து படிப்பு சொல்லித் தரச் செய்தான்.

சக்கரவர்த்தி அவன். நினைத்து இருந்தால், வசிட்டருக்கு ஒரு அரண்மனை  ஒதுக்கி அங்கேயே பாடம் சொல்லித் தந்து இருக்கலாம். செய்ய வில்லை. ஏன் , அரச போகங்களை அனுபவிக்க  ஆரம்பித்து விட்டால், படிப்பு மண்டையில் ஏறாது.

இது முதல் பாடம்.

இரண்டாவது, முடியை எடுப்பது என்பது அடையாளத்தை மாற்றுவது. இறைவனுக்கு ஏன் முடி காணிக்கை கொடுக்கிறோம் ? முடி ஒரு  அடையாளம். மொட்டை அடித்து விட்டால் அழகு போகும். அடையாளம் போகும்.  அழகு போனால் ஆணவம் போகும். அடையாளம் போனால்  நான் என்பது இந்த முடியிலா இருக்கிறது என்ற எண்ணம் வரும். நான் என்ற அடையாளம் போய் இறைவன் முன்  நான் பணக்காரன், படித்தவன், என்ற அடையாளங்கள் எதுவும் இல்லாமல்  எளிமையாக இருக்க முடியும்.

அதே போல, படிக்கும் முன், முடி களைவது , நான்  புதிய அவதாரம் எடுக்கிறேன். மாணவன் என்ற அவதாரம். இன்னாரின் பிள்ளை என்ற  அடையாளம் போய் , இன்னாரின் மாணவன் என்ற புது பிறவி  எடுக்கிறேன்.

இது இரண்டாவது பாடம்.

நம்மிடம் பணம் இருந்தால், வீடு வாங்குவோமா, கார் வாங்குவோமா, பங்குகள் வாங்குவோமா, நகை நட்டுகள் வாங்குவோமா என்று  நினைப்போம். யாராவது, நம்மிடம் இருக்கும்  இந்த பணத்தை கொண்டு நம்  பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வியை வாங்குவோமா  என்று யோசித்தது உண்டா? அப்படியே யோசித்தாலும்,  எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரம்பு கட்டுவோம் .

திருநாவுக்கரசரின் தமக்கையார்,  பணத்தை தண்ணியாக செலவழித்தாராம். பெருகி வரும் வெள்ளம் போல பணத்தை செலவழித்து  தம்பியை படிக்க வைத்தாராம்.

பணத்தை பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு தாராளாமாக செலவு செய்யுங்கள்.

இது  மூணாவது பாடம்.

பிள்ளைகளை tuition  அனுப்ப வேண்டும் என்றால் எவ்வளவு ஆகும் என்று  கனக்குப் போடுவோம். மிக மிக சிறந்த ஆசிரையைக் கொண்டு  படிப்பித்தால் செலவு அதிகமாகும். இவ்வளவு செலவழிக்க  வேண்டுமா என்று யோசிப்போம்.

யோசிக்காதீர்கள், என்று சேக்கிழார் பாடம் நடத்துகிறார்.

Tuition , விலை அதிகம் உள்ள புத்தகங்கள்,  CD , போன்றவற்றை வாங்கித் தாருங்கள்.

தெருணீர்ப்பன் மாந்தரெலாம்...தெருள் என்றால் தெளிவு. தெளிவான சுற்றமும் நட்பும் இருந்தது. இருக்க வேண்டும்.

அது என்ன தெருள் ?

மனிதனுக்கு அறிவு நான்கு படிகளில் இருக்கிறது.

இருள், மருள், தெருள் மற்றும் அருள்.

இருள் என்பது ஒன்றும் தெரியாமல்  இருப்பது. தெரியாது என்பது கூட தெரியாமல்  இருப்பது.   படிப்பறிவும்,அனுபவ அறிவும்  இல்லாமல் இருப்பது.

அடுத்த படி, மருள். அறியாமை புலப்படும்.  அறிந்து கொள்ள வேண்டும் என்ற  ஆவல்  இருக்கும். எதைப் படிப்பது,  எது  சரி,எது
தவறு என்று தெரியாமல்  தடுமாறுவது.

அடுத்த படி, தெருள். குழப்பங்கள் நீங்கி தெளிவு பெற்று இருப்பது.

அதற்கும் அடுத்த படி அருள்.

அறிவின் கடைசிப் படி அருள்.

உயிர்கள் மேல் அன்பு செலுத்துவது.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

அது அருளின் உச்சம்.


   புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
   கலைபயிலத் தொடங்குவித்தார்


புலன்கள் சென்று பற்றிக் கொள்ள. அறிவு நமக்கு புலன்கள் மூலமாகத்தான் வரவேண்டும். வாசித்து , கேட்டு, தொட்டு அறிந்து, நாம் அறிவைப் பெறுகிறோம். ஐந்து புலன்கள் + மனம் என்ற ஆறாவது கருவியும் சேர்த்து நமக்கு ஆறறிவு. 

அறிவு சேர சேர மனம் மலர வேண்டும். மொட்டு போல கூம்பி இருக்கும் மனம் மலரும். 

மலரும் என்றால், மணம் வீசும், தேனை அள்ளித் தரும். அழகாக இருக்கும். 

அறிவு ஒரு அழகு.

மனம் விரியாத கலை ஒரு கலை இல்லை. 

படிக்க படிக்க உற்சாகம் பீறிட்டு எழ வேண்டும். மனம் ஒரு மலரைப் போல மென்மையாக வேண்டும். வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்க்காமல் எல்லோர்க்கும் மணம் தர வேண்டும். 

அப்படி படிக்க வேண்டும். 

இது ஒரு பாடல்.

எனக்குத் தெரிந்தது  இவ்வளவுதான்.

இப்படி எத்தனை பாடல்கள். எவ்வளவு கருத்துச் செறிவு. 

நாம் தான் எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_3.html

Thursday, September 1, 2016

இராமாயணம் - வாலி வதம் - வேறு உளதோ தருமம் ?

இராமாயணம் - வாலி வதம்  - வேறு உளதோ தருமம் ?


இராமனின் அம்பால் அடி பட்டு இறக்கும் தருவாயில் உள்ள வாலி இராமனைப் பார்த்து சொல்லுகிறான் "என்னை கொல்லும் உன் அம்பை விட சிறந்த தருமம் வேறு உள்ளதோ "

பாடல்

'புரம் எலாம் எரி செய்தோன்
      முதலினோர் பொரு இலா
வரம் எலாம் உருவி, என்
      வசை இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி, என்
      உயிர் எலாம் நுகரும் நின்
சரம் அலால், பிறிது
      வேறு உளதுஅரோ, தருமமே?

பொருள்

'புரம் எலாம் = முப்புரங்களையும்

எரி செய்தோன் = எரி ஊட்டிய சிவனின்

முதலினோர் = இந்திரன் மற்றும் பிரமன் போன்றோர்

பொரு இலா =  ஒப்பில்லாத

வரம் எலாம் உருவி = வரங்களை எல்லாம் கவர்ந்து

என் = என்னுடைய

வசை இலா = குற்றமற்ற

வலிமை சால் = பெரிய வலிமையை

உரம் எலாம் உருவி = உறுதியான மார்பை ஊடுருவி

என் உயிர் எலாம் நுகரும் = என்னுடைய உயிரை நுகரும்

நின் = இராமா உன்னுடைய

சரம் அலால் = அம்பைத் தவிர

பிறிது வேறு உளது = வேறு ஏதாவது இருக்கிறதா

அரோ = அசைச் சொல்

தருமமே = தர்மம் என்று ?


தன்னை மறைந்து நின்று கொன்ற இராமனின் அம்பை தர்மத்தின் வடிவம் என்று  போற்றுகிறான் வாலி. 

ஏன் அப்படி போற்ற வேண்டும் ?

கொஞ்சம் வேறு விதமாக யோசித்துப் பார்ப்போம். 

ஆயிரம் சமாதானம் சொன்னாலும் ஏற்க முடியாத இந்த வாலி வதத்தை  வேறு ஒரு கோணத்தில் சிந்தித்துப்  பார்ப்போம் .


ஒரு வேளை , இராமன் நேரில் சண்டைக்கு வந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் ?


ஒன்று, இராமனின் பாதி ஆற்றல் வாலிக்குப் போய் இருக்கும்.  பாதி ஆற்றலை  இழந்த இராமன் கட்டாயம் தோற்றிருப்பான். அல்லது போரில் இறந்து  கூட போய் இருக்கலாம்.  சீதை அங்கேயே இருந்திருக்க வேண்டியதுதான்.  

அது போகட்டும். வாலி என்னவாகி இருப்பான் ? ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல்   இராமனின் ஆற்றலில் பாதியைக் கொண்டு, மிகப் பெரிய  வீரனாக மாறி இருப்பான். 

சரி அடுத்து என்ன ஆகும் ?

வாலியை யாராலும் வெல்ல முடியாது. 

ஆனால், வயது ஆகிக் கொண்டே போகும். எமன் கிட்ட வர பயப்படுவான். எனவே மரணம் வராது. ஆனால், மூப்பு வரும். கண் பார்வை மங்கும்,  காது கேட்காது, ஞாபக சக்தி போய் விடும். ஆண்டுகள்  ஆயிரம் ஆனாலும் மரணம் என்ற ஒன்று இல்லாமல் வயதாகி, முடங்கி மூலையில் கிடப்பான். அப்படி ஒரு நிலை யாருக்காவது  வேண்டுமா என்று கேட்டால் யாருமே வேண்டாம் என்று தான்  சொல்லுவார்கள். கல்ப கோடி ஆண்டுகள் மரணமில்லாமல்,  ஆனால் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருக்க யாருக்குப்  பிடிக்கும் ? அப்படி   

 சரி,  அப்படி எதுவும் நடக்கவில்லை. 

இராமனை கண்டவுடன் வாலி அவனிடம் சரண் அடைந்து , அவனுக்கு  உதவி செய்து இருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் இராமானுக்கே  நான் உதவி செய்தவன் என்ற எண்ணம் தான் அவனுக்கு  இருந்திருக்கும். அந்த ஆணவம், அவன் முன்னேற்றத்திற்கு  ஒரு தடையாக இருந்திருக்கும். 

எப்படி பார்த்தாலும், சிக்கல் தான். 

ஆனால், இப்போது நடந்தது என்ன ?

இந்த சிக்கல் எல்லாம் தாண்டி, வாலி மோட்சம் அடைகிறான். 

இது வாலிக்குத் தெரிந்திருக்கிறது.

இதுதான் தருமம் என்று அவன் முடிவு செய்கிறான்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post.html