Thursday, October 6, 2016

தேவாரம் - திருத்தாண்டகம் - மீண்டும் பிறந்தால் ?

தேவாரம் - திருத்தாண்டகம் - மீண்டும் பிறந்தால் ?


இந்த வாழக்கை தான் எவ்வளவு விசித்திரமானது.

ஒரு துளி நீரிலே உயிர் உண்டாகிறது. கை , கால், மூளை, உடல் என்று பிரிந்து பிரிந்து வளர்கிறது. பின் பிறக்கிறது. தாயால் வளர்க்கப் படுகிறது.

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் , அந்த முதல் கரு முட்டை ஒரு உருவமாக , சிந்திக்கும் திறனோடு பிறப்பது.

 எத்தனையோ தவறுகள் நிகழ்ந்து இருக்கலாம். ஆனால், அத்தனையும் கடந்து, உயிர் பிறந்து வளர்கிறது.

சரி, இத்தனை சிக்கல்களையும் தாண்டி பிறந்து வளர்க்கிறதே , நீண்ட நாள் இருக்குமா என்றால், அதுவும் இல்லை. கொஞ்ச நாளில் இறந்து போய் விடுகிறது.

எதற்கு இத்தனை முயற்சி ?

வாழ்வின் நோக்கம் தான் என்ன. பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று முடிவதற்கா இத்தனை பாடு ?


இறந்த உயிர் மீண்டும் பிறக்கிறது. மீண்டும் இதே சக்கரம் சுழல்கிறது.

எதற்கு இது என்று திகைக்கிறார் நாவுக்கரசர்.

எது எப்படியோ. இறவாமை வேண்டும், அப்படி இறந்தால், பின் பிறவாமை வேண்டும். மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும் என்று வேண்டுகிறார்.

பாடல்

கரு ஆகி, குழம்பி(இ)இருந்து, கலித்து, மூளைக்
    கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி, 
உரு ஆகிப் புறப்பட்டு, இங்கு ஒருத்தி தன்னால்
         வளர்க்கப்பட்டு, உயிராரும் கடை போகாரால்; 
மருவுஆகி, நின் அடியே, மறவேன்; அம்மான்!
   மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல், மறவா வண்ணம்,- 
திரு ஆரூர் மணவாளா! திருத் தெங்கூராய்!
            செம்பொன் ஏகம்பனே!- திகைத்திட்டேனே.


பொருள்


கரு ஆகி = கரு ஆகி

குழம்பி = ஒரு உருவம் இல்லாமல்  குழம்பி

இருந்து = இருந்து

கலித்து = முளைத்து

மூளைக் = மூளை

கரு நரம்பும் = கரிய நரம்பும்

வெள் எலும்பும்  = வெண்ணிறமான எலும்பும்

சேர்ந்து ஒன்று ஆகி = சேர்த்து ஒன்றாகச் செய்து

உரு ஆகிப் = ஒரு உருவத்தை அடைந்து

புறப்பட்டு = பிறந்து

இங்கு = இங்கு

ஒருத்தி தன்னால் = தாயினால்

வளர்க்கப்பட்டு, = வளர்க்கப் பட்டு

உயிராரும் = உயிரானது

கடை போகாரால் = போகாமல் இருந்தால்

மருவுஆகி = பொருந்தி

நின் அடியே, மறவேன் = உன் திருவடிகளை மறக்க மாட்டேன்

அம்மான் = அம்மானே

மறித்து = மீண்டும் 

ஒரு கால் = ஓவர் வேளை

பிறப்பு உண்டேல் = பிறப்பு என்று ஒன்று இருந்தால்

மறவா வண்ணம் = உன்னை மறவா வண்ணம்

திரு ஆரூர் மணவாளா! = திருவாரூர் மணவாளா

திருத் தெங்கூராய்! = திருத்தெங்க்கூர் என்ற ஊரில் உள்ளவனே

செம்பொன் ஏகம்பனே = சிவந்த பொன்னைப் போன்ற மேனி உள்ளவனே

திகைத்திட்டேனே = நான் திகைத்து நிற்கிறேன்

என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று வாழ்க்கை ஓடி விடுகிறது.

என்ன செய்வது ? எதைச் செய்வது என்று திகைத்து நிற்கிறார் நாவுக்கரசர்.

எனக்கு ஒன்றும் தெரியாது. உன் திருவடிகளை பற்றிக் கொள்கிறேன். நீ என்ன செய்ய வேண்டுமோ செய்துக் கொள் என்கிறார்.

அவர் பாடே அப்படி என்றால்....



.

Tuesday, October 4, 2016

சிலப்பதிகாரம் - மாதவியின் ஓலை

சிலப்பதிகாரம் - மாதவியின் ஓலை 


ஆண் பெண் உறவு என்பது மிகச் சிக்கலானது. எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், கனவுகள், கற்பனைகள், சமுதாய சட்ட திட்டங்கள் என்ற பலப் பல சிக்கல்களுக்கு நடுவில் பின்னப் பட்டது.

அதிலும் , ஒரு ஆணின் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால் , அது இன்னும் சிக்கல் நிறைந்தது. முக்கோணக் காதல் கதைகளை நாம் நிறைய கேள்விப் பட்டு இருக்கிறோம்.

சிலப்பதிகாரத்தில் , இளங்கோ அப்படி ஒரு சூழ்நிலையை விவரிக்கிறார்.

மாதவியை விட்டு பிரிந்து வந்த கோவலன்  கண்ணகியை அழைத்துக் கொண்டு மதுரை வருகிறான்.

வருகிற வழியில், அவனுக்கு மாதவி ஒரு கடிதம் (ஓலை) கொடுத்து அனுப்புகிறாள்.

கோவலன் இருப்பது கண்ணகியோடு. மாதவியின் ஓலை வருகிறது.

என்ன எழுதி இருப்பாள் ? எப்படி எழுதி இருப்பாள் ? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.


மாதவி சொல்லுகிறாள் கோவலனைப் பார்த்து (கடிதத்தில்) "நீங்கள் உங்கள் பெற்றோரை விட்டு விட்டு , மனைவியோடு ஊரை விட்டுப் போகிறீர்கள். உங்கள் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன், நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குச் சொல்லுங்கள்"


பாடல்


அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி,
போது அவிழ் புரி குழல் பூங் கொடி நங்கை,
மாதவி ஓலை மலர்க் கையின் நீட்ட,
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம்
குறு நெறிக் கூந்தல் மண் பொறி உணர்த்திக்
காட்டியது; ஆதலின் கை விடலீயான்,
ஏட்டுஅகம் விரித்து, ஆங்கு எய்தியது உணர்வோன்,
‘அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர் பணி அன்றியும், குலப்பிறப்புஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது,
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய் தீர் காட்சிப் புரையோய், போற்றி!’
என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து,
‘தன் தீது இலள்’ என, தளர்ச்சி நீங்கி,
‘என் தீது’ என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு-

பொருள்

அழிவு உடை உள்ளத்து = துன்பம் கொண்ட உள்ளத்தோடு

ஆர் அஞர் ஆட்டி,= அஞர் என்ற சொல் ஆழம் மிகுந்த சொல். அதாவது தனது துன்பத்தில் இன்பம் காணும் மன நிலை. Maschocism என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். Sadism என்பதன் எதிர்நிலை.  அப்படி , தனது துன்பத்தில் இன்பம் கண்ட மாதவி

போது = மலர்

அவிழ் = மலர்கின்ற , அரும்புகின்ற

புரி குழல் = இருக்கும் கூந்தல்

பூங் கொடி = பூங்கொடி போன்ற

நங்கை = பெண்

மாதவி ஓலை = மாதவியின் ஓலை

மலர்க் கையின் நீட்ட = மலர் போன்ற கையால் கொடுக்க
,
உடன் உறை காலத்து = அவளோடு கூட இருந்த காலத்தில்

உரைத்த நெய் வாசம் = பூசிய நெய்யின் வாசம்

குறு = செறிந்த , அடர்ந்த

நெறிக் = ஒழுங்காக பின்னப் பட்ட

கூந்தல் = கூந்தல்

மண் பொறி உணர்த்திக் காட்டியது = மண்ணில் விழுந்து, அந்த மண் வாசம் கோவலனின் நாசியில் உணரும்படி காட்டியது

ஆதலின் = ஆதலினால்

கை விடலீயான் = அந்த ஓலையை கையை விட்டு விடாமல் பற்றிக் கொண்டு இருந்த கோவலன்

ஏட்டுஅகம் விரித்து = அந்த ஓலையினை திறந்து

ஆங்கு = அங்கு, மாதவியின் வீட்டில்

எய்தியது உணர்வோன் = நடந்ததை அறிந்தான்

‘அடிகள் முன்னர் = பெரியவரான (கோவலன்) உங்கள் முன்னால்

யான் அடி வீழ்ந்தேன் = நான் உங்கள் கால்களில் வீழ்கிறேன்

வடியாக் = தெளிவில்லாத

கிளவி = சொல். தெளிவில்லாத என் சொற்களை

மனக்கொளல் வேண்டும் = மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது

குரவர் பணி அன்றியும் = உன் பெற்றோர்களை காக்கும் பணியினை விட்டு

குலப்பிறப்பு = உயர்ந்த குலத்தில் பிறந்த

ஆட்டியோடு = பெண்ணான கண்ணகியோடு

இரவிடைக் கழிதற்கு = இரவோடு இரவாக நகரை விட்டு நீங்கள் போனதற்கு

என் பிழைப்பு அறியாது = நான் செய்த குற்றம் என்ன

கையறு நெஞ்சம் = தெரியாமல் தவிக்கும் என் நெஞ்சம்

கடியல் வேண்டும் = அதனை நீங்கள் போக்க வேண்டும்

பொய் தீர் = பொய் கலப்பில்லாத

காட்சிப் = பார்வையைக் கொண்ட

புரையோய் =  உயர்ந்தவனான நீ

போற்றி! = உன்னைப் போற்றுகின்றேன். நீ வாழ்க

என்று அவள் எழுதிய = என்று அவள் எழுதிய

இசைமொழி உணர்ந்து, = இனிய மொழி உணர்ந்து

‘தன் தீது இலள்’ என = அவள் குற்றம் அற்றவள் என்று நினைத்து


தளர்ச்சி நீங்கி = வாட்டம் நீங்கி

‘என் தீது’ என்றே = என்னுடைய குற்றம் தான் என்று

எய்தியது உணர்ந்து-ஆங்கு = நடந்ததை உணர்ந்து , அங்கு

காதலியின் கடிதம் கையில். அவள் கூந்தல் வாசம் அந்தக் கடிதத்தில்  மணக்கிறது. கூந்தல் வாசத்தோடு, அவள் வீட்டின் அந்தத் தரையின் வாசமும் வருகிறது. எனவே கூந்தலை அவிழ்த்து தரையில் விழும்படி  அவள் இருக்கிறாள் என்று கோவலன் அறிந்து கொண்டான். தன்னைப் பிரிந்து கவலையில் இருக்கிறாள் என்று அவன் உள்ளம்  புரிந்து கொண்டது. 

மேலும், அவள் கேட்க்கிறாள் "எனக்காகவா நீங்கள் ஊரை விட்டுப் போகிறீர்கள்.  நான் என்ன தவறு செய்தேன்" என்று கேட்க்கிறாள்.

தாசி குலத்தில் பிறந்தவள்தான். இருந்தும், கோவலன் ஒருவனையே  நினைத்து வாழ்ந்தாள்.


யாரை குறை சொல்லுவது ?

கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியையா ?

அவள் மேல் காதல் கொண்ட கோவலனையா ?

கோவலனை கண்டிக்காத கண்ணகியையா ?

எல்லாம் விதி. விதியைத் தவிர வேறு எதைச் சொல்லுவது ?

மாதவியின் அந்தக் கடிதத்தை கோவலன் என்ன செய்தான் தெரியுமா ?

தன் தந்தைக்கு அனுப்பி வைத்தான். 

திருமணமான ஒருவன். தன் மனைவி அல்லாத இன்னொரு பெண்ணின் கடிதத்தை , தன்னுடைய தந்தைக்கு அனுப்பி வைக்கிறான். 

மாதவியின் காதலின் மகத்துவம் அது.  கண்ணகி உயர்ந்த குலத்தில் பிறந்த  பெண் என்றும், அவள் கோவலனின் மனைவி என்றும் அவளுக்குத் தெரியும். 

இருந்தும் கடிதம் எழுதுகிறாள். அவனும் அதை புரிந்து கொண்டு அந்தக்  கடிதத்தை தனது தந்தைக்கு அனுப்பி வைக்கிறான். 

  

இராமாயணம் - வீடணன் சரணாகதி - ஒத்தன உணர்த்தினேன்

இராமாயணம் - வீடணன் சரணாகதி - ஒத்தன உணர்த்தினேன் 


வீடணன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாய் இல்லை. வீடணனின் வார்த்தைகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போனது.

கடைசியாக, "எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் உனக்கு உயர்த்தினேன். நீ உணரவில்லை. நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் என்னைப் பொறுத்துக் கொள்" என்று கூறிவிட்டு இலங்கையை விட்டு நீங்கினான்.

பாடல்

எத்துணை வகையினும் உறுதி எய்தின,
ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;
அத்த ! என் பிழை பொறுத்தருளுவாய்' என,
உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான்.

பொருள்

எத்துணை வகையினும் = எத்தனை வழி உண்டோ அத்தனை வழியிலும்

உறுதி எய்தின = உறுதியானவற்றை
,
ஒத்தன = ஒத்துப் போபவைகளை

உணர்த்தினேன் = உனக்கு உணர்த்தினேன்

உணரகிற்றிலை = நீ உணரவில்லை

அத்த ! = தந்தையே

என் பிழை பொறுத்தருளுவாய்' = என் பிழைகளை பொறுத்து அருள்வாய்

என = என்று கூறி

உத்தமன் = உயர்ந்தவனான

அந் நகர் = இலங்கையை

ஒழியப் போயினான் = விட்டு விலகிப் போனான்

ஒத்தன உணர்த்தினேன் என்றான்.

ஒத்தன என்றால் என்ன ?

ஒத்தன என்றால் ஒத்துப் போவது ? எதனோடு ஒத்துப் போவது ?

உலகோடு ஒத்துப் போவது. வாழும் சமுதாயத்தோடு ஒத்துப் போவது. மற்ற உயிர்களோடு ஒத்துப் போவது. இயற்கையோடு ஒத்துப் போவது. அறத்தோடு ஒத்துப் போவது.

வள்ளுவர் கூறினார்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான், மற்றையவர்கள் செத்தாருள் வைக்கப் படும் .

வாழ்வில் பல துன்பங்களுக்குக் காரணம் ஒத்துப் போகாததுதான்.

உடலுக்கு ஒத்துப் போகாத உணவை உண்பதால் நோய் வருகிறது.

நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்கு ஒத்துப் போகாவிட்டால் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேர்கிறது.

நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு ஒத்துப் போகாவிட்டால் தனிமைப் பட்டு  துன்பப் படுவோம்.

இயற்கையோடு ஒத்து போகாவிட்டால், வெள்ளம், சுற்றுப் புற மாசு, வெப்பமயமாதல் என்று  பல பிரச்சனைகள் வருகிறது.

யார் ஒத்துப் போகாமல் இருப்பார்கள் ? பிணம் தான் யார் சொன்னாலும் கேட்காது, யார் எப்படி போனால் என்ன என்று அது பாட்டுக்கு இருக்கும்.

அப்படி மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாமல் வாழ்பவர்களை பிணம் என்கிறார் வள்ளுவர்.

அது போல, இராவணனுக்கு எது எல்லாம் நல்லதோ, அதை எடுத்துக் கூறினான் வீடணன்.

அடுத்து வரும் வரி தான் மிக மிக முக்கியம்.

சொன்னதைக் கேட்கவில்லை இராவணன். வீடணன் இலங்கையை விட்டு நீங்கினான்.

பெரியவர்கள், நல்லவர்கள் நமக்கு வேண்டியதைச் சொல்லுவார்கள். ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை சொல்லுவார்கள். கேட்க வில்லை என்றால், நம்மை விட்டு விலகி விடுவார்கள்.

பெரியவர்கள் சொல்வதை கேட்காமல் விதண்டாவாதம் செய்து கொண்டு இருந்தால்,  ஒரு கட்டத்தில் அவர்கள் நம்மை விட்டு விலகி விடுவார்கள்.

அப்புறம், கீழானவர்கள்தான் நம்மோடு இருப்பார்கள்.

அவர்கள் சொல்வதை கேட்டு வாழ்ந்தால், வாழ்க்கை சீரழிந்து விடும்.

எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பெரியவர்கள், நல்லவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவர்களோடு ஓயாமல் , முடிவில்லாமல்  வாதம் செய்து கொண்டே இருந்தால், அவர்கள் நம்மை  விட்டு விலகிப் போய்விடுவார்கள்.

இராவணன் அப்படி அழிந்தான்.

Monday, October 3, 2016

திருக்குறள் - எண்ணித் துணிக கருமம்

திருக்குறள் - எண்ணித் துணிக கருமம் 


பாடல்


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

பொருள்

எண்ணித் = ஆராய்ந்து

துணிக = தொடங்குக

கருமம் = வேலையை

துணிந்தபின் = தொடங்கிய  பின்

எண்ணுவம் = ஆராய்ந்து கொள்ளலாம்

என்பது இழுக்கு = என்று நினைப்பது தவறு

எந்த காரியத்தையும் யோசித்து, ஆராய்ந்து செய்ய வேண்டும். காரியத்தை ஆராய்ந்த பின், யோசித்துக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு.

அவ்வளவுதான் பொருள்.

கொஞ்சம் ஆராய்வோம்.

"எண்ணி"  என்றால் என்ன ?

இதற்கு இரண்டு அர்த்தம். ஒன்று நினைத்துப் பார்த்தல். யோசித்துப் பார்த்தல். இன்னொன்று ஒன்று, இரண்டு என்று எண்ணிப் பார்த்தல்.

ஒரு வேலையை தொடங்கும் முன்

இந்த வேலையை செய்து முடிக்க எவ்வளவு பொருள் தேவைப் படும், நம்மிடம் எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு காலம் ஆகும், நம்மால் அத்தனை  காலம் பொறுக்க முடியுமா என்று நம்மிடம் உள்ள பணம், பொருள், நேரம், போன்றவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அனுமானிக்க வேண்டும்.

அடுத்தது, எப்படி செய்வது, யாருடைய துணை தேவைப் படும், இதில் என்னென்ன சிக்கல்கள் வரும் , வந்தால் என்ன செய்யவது , சிக்கல்களை  சமாளிக்க முடியுமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இது இரண்டையும் சேர்த்து "எண்ணி" என்றார்.

ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது

அடுத்தது, "துணிக"

அது என்ன துணிக. செய்க என்று சொல்லி இருக்கலாம் அல்லவா. ஏன்  துணிக என்றார் ?

ஒரு காரியத்தை நாம்  செய்யப் போகிறோம் என்றால் அதற்காக  காலத்தையும், பொருளையும் செலவிடப் போகிறோம் என்று அர்த்தம். அப்படி ஒரு காரியத்திற்காக செலவிடும் போது அந்த  காலத்தையும், பொருளையும் மற்ற காரியங்களுக்கு செலவிட முடியாது. எவ்வளவோ வேலைகளை விட்டு விட்டு  இந்த காரியத்தை செய்யப்  போகிறோம்.  இது சரியாக வரலாம், வராமலும் போகலாம். தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றியாக முடிய வேண்டும் என்று  ஏதாவது விதி இருக்கிறதா ? தோல்வியும்  வரலாம். மற்ற காரியங்களை வேண்டாம் என்று தள்ளி வைக்கும் துணிவு, தோல்வி வந்தால் துவண்டு விடாமல் மீண்டும்  தொடரும் துணிவு  வேண்டும்.

மேலும், ஒரு காரியத்தை தொடங்கினால், பல இடையூறுகள் வரும். சங்கடங்கள் வரும். எதிர்பார்த்த சிக்கல்கள், எதிர்பாராத ஆபத்துகள் என்று பல வரலாம். இவற்றை எல்லாம் எதிர் கொள்ளும் துணிவு வேண்டும்.  துவண்டு விடக் கூடாது. வியாபாரம் என்றால் நட்டம் வரும். திருமணம் என்றால் மன வேற்றுமை வரும். தேர்தல், தேர்வு என்றால் வெற்றி தோல்வி வரும். துணிந்து இறங்க வேண்டும்.

துணிந்த பின் எண்ணுவம் ....

வேலை பாதி போய் கொண்டிருக்கும் போது , இது சரிதானா, இது தேவைதானா, இந்த வழி சரிதானா என்று யோசிக்கக் கூடாது.

திருமணம் முடிந்த பின்,  ஒரு வேளை அந்தப் பெண் இவளை விட நல்லா இருந்திருப்பாளோ என்று நினைக்கக் கூடாது.

ஒரு course எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டால், பாதியில், அடடா இதுக்கு பதில் அதை எடுத்து இருக்கலாமோ என்று நினைக்கக் கூடாது.


சரி, அப்படி நினைத்தால் என்ன ஆகும் ?

"இழுக்கு" என்றார்.

அப்படினா ?

பாதியில் சிந்தனை தடுமாற ஆரம்பித்தால் , இது வரை செய்த வேலை வீணாகப் போய்  விடும்.அது மட்டும் அல்ல, நம்மை சார்ந்தவர்களையும்  அது குழப்பி விடும்.  "இவனுக்கு  என்ன வேணும் ? இப்ப இது வேணாம் , அது வேணுங்கிறான்,  நாளைக்கு   அதுவும்  வேண்டாம், இன்னொன்னு வேணும்னு கேக்க மாட்டான்னு என்ன  நிச்சயம் " என்று சுற்றி இருப்பவர்கள் சலிப்படைவார்கள்.

அது மட்டும் அல்ல, நாம் எந்த முடிவை  எடுத்தாலும்,யாரும் ஆதரிக்க  மாட்டார்கள். நினைச்சு நினைச்சு மாத்திக்கிட்டே இருப்பான் அப்படினு நம்மை தனியாக விட்டு விடுவார்கள்.

 சரி, அதற்காக ஒரு தவறான முடிவை எடுத்து விட்டால் அதை திருத்திக் கொள்ளக் கூடாதா ?

மீண்டும் முதல் அடியைப்  படியுங்கள்...எண்ணித் துணிக கருமம். முதலில் தவறான முடிவை எடுக்கக் கூடாது.

ஒரு வேலையை தொடங்குமுன், இதில் என்னென்ன சிக்கல்கள் வரலாம், வந்தால் என்ன செய்வது என்று முன் கூட்டியே யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வீடு  வாங்கப் போகிறோம் என்றால், ஒரு வேலை வீட்டின் விலை  அதிகரித்து விட்டால், குறித்த காலத்துக்குள் கட்டி முடிக்க வில்லை என்றால்  என்ன செய்வது என்பது பற்றி முன்பே யோசித்து முடிவு செய்ய வேண்டும்.  வந்தா பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது   இழுக்கு.

எந்த காரியத்தையும் ஆராய்ந்து, யோசித்து, துணிந்து செய்ய வேண்டும். ஆரம்பித்த பின், யோசிக்கலாம் என்று நினைப்பது தவறு.

இன்று முதல் எந்த வேலை செய்வதானாலும் திட்டம் போடுங்கள்.  நல்லது கெட்டது நாலையும் யோசியுங்கள். தைரியமாக செயல் படுத்துங்கள்.

வெற்றி வரும்.







 



Sunday, October 2, 2016

இராமாயணம் - வீடணன் சரணாகதி

இராமாயணம் - வீடணன் சரணாகதி 


துன்பம் வரும்போது , எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று ஒவ்வொருவரும் வருந்துவார்கள். நான் என்ன தவறு செய்தேன் ? பொய் சொன்னேனா, களவு செய்தேனா, கொலை செய்தேனா, என்ன தீமை செய்தேன் என்று எனக்கு இந்த தீமை வந்தது என்று மனம் நோபவர்கள் ஏராளம்.

எங்கோ அற வழியில் இருந்து தவறி இருப்பார்கள். மறந்து போய் இருக்கும் . அல்லது அது அறமில்லாத வழி என்று தெரிந்திருக்காது.

சாலை விபத்தில் இறந்தான் என்று பார்க்கிறோம். காரும், புளிய மரமும், லாரியும் ஒரு துணைக்  கருவிகள். அற நெறி தவறியது முதற்  காரணம்.

அறத்தை விட்டு விலகியவர்களை அறம்  அழிக்கும்.எந்த விதத்திலாவது வந்து அழிக்கும். அது நோயாக இருக்கலாம், ஏமாற்றமாக இருக்கலாம், விபத்தாக இருக்கலாம்....இயற்கையோடு முரண் பட்டால் , அந்த இயற்கையே அழிக்கும்.



வீடணன் சொல்கிறான்

வரம்பற்ற உன் வாழ்நாளும், உன் பெருமையும் , கீழானோர் சொல் கேட்டு நீயே கெடுத்துக் கொள்கிறாய்.அற நெறியை விட்டு விட்டால் நல்ல வாழ்க்கை கிடைக்குமா ? கிடைக்காது என்பது பொருள்.

பாடல்

'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,
கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?
வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?


பொருள்


'வாழியாய் !  = நீ (இராவணனே ) வாழ்க

கேட்டியால் = நான் சொல்வதைக் கேட்பாயாக

வாழ்வு = உன் வாழ்வு

கைம்மிக = மிகுந்து ஓங்க

ஊழி காண்குறு = ஊழிக் காலம் வரை இருக்கப் போகும்

நினது = உனது

உயிரை = உயிரை

ஓர்கிலாய் = நினைத்துப் பார்க்க மாட்டாய்

கீழ்மையோர் = கீழானவர்கள்

சொற்கொடு = சொற்களைக் கேட்டு

கெடுதல் நேர்தியோ ? = கெடுதல் வேண்டுவாயா ?

வாழ்மைதான், = வாழ்க்கைதான்

அறம் பிழைத்தவர்க்கு, = அறத்தில் இருந்து பிறழ்ந்தவர்களுக்கு

வாய்க்குமோ ? = கிடைக்குமோ ?

கீழானவர்கள் சொல்லை கேட்டால் கெடுதல் வரும்.  நமக்குத் தெரிவதில்லை. யார் யார் சொல்வதெல்லாமோ கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  பத்திரிக்கைகள், தொலைகாட்சி,  இணைய தளங்கள் என்று   யார் யார் சொல்வதெல்லாமோ கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  யார் சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள் என்று  யோசித்துப் பாருங்கள்.  நீங்கள் யார் சொல்வதை கேட்கிறீர்களாளோ அவர்கள்  உயர்ந்தவர்களா என்று ஒரு நிமிடம்  யோசியுங்கள். இல்லை என்றால், அவர்கள் சொல்வதை கேட்காதீர்கள்.

வாழ்வு நல்லபடி அமைய வேண்டுமா ? இனிமையாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா ? அற வழியில் செல்லுங்கள்.

அறம் பிழைத்தால் எத்தனை தவம் இருந்தும், செல்வம் இருந்தும், ஆயுள் இருந்தும், வீரம், புகழ் என்று அனைத்தும் இருந்தாலும் வாழ்க்கை  சிறக்காது.

இராவணனிடம் என்ன இல்லை ? எல்லாம் இருந்தது...ஒரே ஒரு அறத்தை விட்டு விலகினான்.  பிறன் மனை நயந்தான் , அழிவு வந்தது.

இராவணனை அழித்தது வீடணன் அல்ல, இராமன் அல்ல, இராமனின் அம்பு அல்ல...இராவணன் அழித்த அறம் , அவனை அழித்தது.

 பாடம்,





சிலப்பதிகாரம் - சதுக்க பூதம்

சிலப்பதிகாரம் - சதுக்க பூதம் 


தவறு செய்பவர்களுக்கு பயம் இல்லாமல் போய் விட்டது. மாட்டிக் கொண்டால் என்ன ? சட்டம், வழக்கு, வக்கீல், சாட்சி, மேல் முறையீடு , சட்டத்தில் உள்ள ஓட்டைகள் , என்று ஏதோ வழியில் தப்பி விடலாம் என்று நினைக்கிறார்கள். தப்பியும் விடுகிறார்கள் பல பேர்.

சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதில் உள்ள பலவீனம் தவறு செய்பவர்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது.

தெரு முனையில் , போக்கு வரத்து விதியை மீறுபவரை பிடிக்கும் காவலரில் இருந்து , உயர் அதிகாரி வரை இலஞ்சம் கொடுத்து சரி கட்டி விடலாம் என்று பணம் படைத்த தவறு செய்பவர்கள் நினைக்கிறார்கள். பணம் இருந்தால் போதும் , எந்த குற்றத்தில் இருந்தும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் வலுத்து விட்டது.

மனசாட்சி என்பது இல்லாமல் போய் விட்டது.

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க , பொய்த்த பின், தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்றார் வள்ளுவர்.

சிலப்பதிகார காலத்தில் , சதுக்க பூதம் என்று ஒன்று இருந்தது.

 சதுக்கம் என்றால் நாலு வீதி சேரும் இடம். ஊருக்குப் பொதுவான  ஒரு இடம்.

அங்கே ஒரு பூதம் இருக்குமாம்.

தவறு செய்தால் அல்ல, செய்ய வேண்டும் என்று நினைத்தாலே போதுமாம், அந்த பூதம் பெரிய குரல் எழுப்பி சத்தம் போட்டு, அப்படி தவறு செய்பவர்களை பிடித்து, நடு வீதியில் வைத்து நைய புடைத்து , கடித்து தின்று விடுமாம்.

தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே போதும், பூதம் "ஓ" என்று கத்திக் கொண்டு வந்து, ஊருக்கு நடுவில் வைத்து அடித்து துவைத்து பிழிந்து , கடித்து தின்று விடும்.

தவறான எண்ணம்  வருமா ?

யார் யாரை எல்லாம் அந்த சதுக்க பூதம் பிடித்து தின்னும் என்று இளங்கோ அடிகள் ஒரு பட்டியல்  தருகிறார்.

பாடல்

தவமறைந் தொழுகுந் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும


பொருள்

தவ = தவம்

மறைந் தொழுகுந் தன்மை யிலாளர் = வேடத்தில் மறைந்து , தவத்திற்கு உரிய  தன்மை இல்லாதவர்கள்

 
அவமறைந் தொழுகும் = அவலத்தை மறைத்து வாழும்

அலவற் பெண்டிர் = விலை மகளிர் 

அறைபோ கமைச்சர் = சூது செய்யும் அமைச்சர்கள் 

பிறர்மனை நயப்போர் = மற்றவனுடைய மனைவியை விரும்புபவன்

பொய்க்கரி யாளர் = கரி என்றால் சாட்சி. பொய் கரி என்றால் பொய் சாட்சி சொல்பவர்கள்

புறங்கூற் றாளரென் = புறம் கூறுபவர்கள்

கைக்கொள் பாசத்துக் = கையில் உள்ள பாசக் கயிற்றால்

கைப்படு வோரெனக் = வீசிப் பிடித்து  (கையில் கொண்டு)

காத நான்கும் = நான்கு காதமும் கேட்க்கும் படி

கடுங்குர லெடுப்பிப் = பெரிய குரலை எழுப்பி

பூதம்= பூதம்

புடைத்துணும் = அடித்து புடைத்து உண்ணும்

பூத சதுக்கமும = பூதம் வாழும் சதுக்கமும்

போலி சாமியார்களை பிடித்து தின்று விடும்.

பொய் சாட்சி சொல்பவர்களை தின்று விடும்

மற்றவர்களை பற்றி புறம் சொல்லுபவர்கள், மற்றவன் மனைவியை விரும்பினாலே போதும்,  பூதம் வந்து பிடித்துக் கொண்டு போய்விடும்.

சூது செய்யும் அமைச்சர்களை கொண்டு போய் தின்று விடும்.

தவறு செய்யும் எண்ணம் வருமா ?

ஊரின் நடுவில் ஒரு பூதத்தின் சிலை இருக்கும்.

அந்த ஊரில் உள்ள சின்ன பிள்ளைகளுக்கு இப்படி சொல்லி   வளர்ப்பார்கள். தப்பு நினைத்தால் பூதம் கடித்து தின்று விடும் என்று.

போகும் போதும், வரும் போதும்  அதை பார்ப்பவர் மனதில், குறிப்பாக  குழந்தைகள் மனதில் கெட்ட எண்ணங்கள் வளராது.

பூதம் பிடித்து தின்றதோ இல்லையோ. அப்படி இருக்க வேண்டும் என்று  எல்லோரும் நினைத்து ஊர் நடுவில் ஒரு சிலையை வைத்து இருந்தார்கள்.

நாகரீகத்தின் உச்சம் தொட்டவர்கள்  நாம்.

தவறான ஒன்றை நினைப்பதே கூட தவறு என்று  வாழ்ந்தவர்கள் நம் முன்னவர்கள்.

பெருமைப் படுவோம்.



Saturday, October 1, 2016

இராமாயணம் - மேதாவிகட்கு எல்லாம் மேலாய மேன்மையான்.

இராமாயணம் - மேதாவிகட்கு எல்லாம் மேலாய மேன்மையான்.



 இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறுகிறான் வீடணன். பிரகலாதன் கதை முழுக்க கூறுகிறான். கடைசியில்


பாடல்

“‘ஈது ஆகும், முன் நிகழ்ந்தது;
    எம் பெருமான்! என் மாற்றம்
யாதானும் ஆக
    நினையாது, இகழ்தியேல்,
தீது ஆய் விளைதல் நனி
    திண்ணம் ‘‘ எனச் செப்பினான்,
மேதாவிகட்கு எல்லாம்
    மேலாய மேன்மையான்.


பொருள்

‘ஈது ஆகும், முன் நிகழ்ந்தது = இது தான் முன்னாள் நிகழ்ந்தது

எம் பெருமான்! = என்னுடைய தலைவனே (இராவணனே )

என் மாற்றம் = என்னுடைய இந்த மாறுபட்ட சொல்லும் செயலும்

யாதானும்  = எதுவாக இருந்தாலும்

ஆக நினையாது = உன்னுடைய நன்மைக்காக என்று நினைக்காமல்

இகழ்தியேல் = இகழ்ந்தால்

தீது ஆய் விளைதல் = தீமையாக முடியும்

நனி  திண்ணம் = மிக உறுதி

எனச் செப்பினான் = என்று கூறினான்

மேதாவிகட்கு எல்லாம் = மேதைகளுக்கு எல்லாம்

மேலாய மேன்மையான் = மேலான மேன்மை உடைய வீடணன்


அறிவுள்ளவர்கள் சொன்னால் அதை கேட்டு , அதன் படி நடப்பது என்பது கடினமாகத்தான் இருக்கும்.

பிரகலாதன் சொன்னதை இரணியன் கேட்கவில்லை.

அழிந்தான்.

வீடணன் சொன்னதை இராவணன் கேட்கவில்லை.

அழிந்தான்.

தவறு செய்வது மனித இயல்பு. அந்த தவற்றை , அறிவுடைய பெரியவர்கள் சுட்டிக் காட்டும் போது , அதை ஏற்று நம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டுமே  அல்லாது அவர்களோடு வாதம் செய்து கொண்டு  இருக்கக் கூடாது.

வீடணன் சொன்னதைக் கேட்டிருந்தால் இராவணன் அழிந்திருக்க மாட்டான்.

நீண்ட நெடிய வாதம் புரிகிறான் வீடணனோடு.

அடுத்த முறை உங்களுக்கு பிடிக்காத ஒன்றை, நீங்கள் செய்ய வேண்டாம் என்று நினைக்கும் ஒன்றை உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்  செய்யச் சொல்லும் போது , அவர்களோடு வாதம் புரியும் போது  , வீடணனையும் இராவணனையும் நினைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி வாதம் புரிந்துதான் அழிந்தான் இராவணன்.

இராவணன் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை.

நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட நாவு கொண்டவன்.

எனக்குத் தெரியாதா ஆணவம் கொண்டான். தன்னை விட வேறு யாரும் அறிவு உடையவர்களாக இருக்க முடியாது என்று நினைத்தான். அறிஞர்களின் வாக்கை அலட்சியம் செய்தான்.

நாம் செய்வது இல்லையா ?

எத்தனையோ புத்தகங்கள் படிக்கிறோம். blog குகள் வாசிக்கிறோம். பெரியவர்கள் சொல்வதை  கேட்கிறோம்.

அப்புறம், "இதெல்லாம் சரிப் பட்டு வராது, நடை முறையில் சாத்தியம் இல்லை " என்று தள்ளி வைத்து விடுகிறோம்.

இராவணன் என்பவன் வேறு எங்கும் இல்லை.

நாம் தான் இராவணன்.

நல்லதை கேட்டும். படித்தும் அதன் படி நடக்காத எல்லோரும் அரக்கர்கள்தான்.

சிந்திப்போம்.