Sunday, November 6, 2016

திருக்குறள் - உற்றநோய் நீக்கி

திருக்குறள் -  உற்றநோய் நீக்கி


சில பேரிடம் உதவி என்று கேட்டுப் போனால், "நீ அப்படி செஞ்சிருக்கக் கூடாது. இப்படி செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சதால தான் இப்ப இந்த மாதிரி சிக்கல்ல மாட்டிக்கிட்ட " என்று நடந்து முடிந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஒழுங்கா படிக்க வேண்டிய நேரத்தில பிடிச்சிருந்தா நல்ல மார்க்கு கிடைச்சிருக்கும், இப்ப அழுது என்ன புண்ணியம் என்று கையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் பழங்கதை பேசிக் கொண்டிருப்பார்கள்.

கண்டதையும் சாப்பிட வேண்டியது, அப்புறம் acidity , வயிற்று வலின்னு தவிக்க வேண்டியது என்று ஏற்கனவே வலியில் துடிக்கும் ஒருவனுக்கு மேலும் வலிக்கும் படி ஏதாவது சொல்லுவது.

பெரியவர்கள் என்றால், முதலில் இருக்கின்ற பிரச்னைக்கு தீர்வு சொல்ல வேண்டும். பின் , அந்த மாதிரி பிரச்சனை இனி வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லித் தர வேண்டும். அப்படிப் பட்ட பெரியவர்களை , அவர்களைப் போற்றி அவர்கள் உறவை கொள்ள வேண்டும்.

பாடல்

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

பொருள்

உற்றநோய் = வந்த துன்பத்தை

நீக்கி = நீக்கி

உறாஅமை = மீண்டும் அவை வராமல்

முற்காக்கும் = முன்பே காத்துக்  கொள்ளும் வழி சொல்லும்

பெற்றியார்ப் = தன்மை உடையவரை

பேணிக் = போற்றி

கொளல் = அவர்கள் உறவை ன், நட்பை கொள்ள வேண்டும்.


நோய் என்றால் துன்பம்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

என்பது குறள் . தனக்கு துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மற்றவர்களுக்கு துன்பம்  வேண்டும் என்று நினைக்கக் கூடாது.


அது என்ன உற்ற நோய் ? உற்ற நோய் என்றால் வந்த துன்பம்.  

துன்பம் இரண்டு வழியில் வரும். 

தெய்வத்தால் வருவது. மக்களால் வருவது. 

தெய்வத்தால் வருவது என்பது (an act of God ) வெள்ளம் , நில நடுக்கம், தீ, பெருங்காற்று, பெரிய நோய்  போன்றவை. 

மக்களால் வருவது என்பது பகை, திருட்டு, கொள்ளை, பழி சொல்லுதல் போன்றவை. 

பெரியோர் என்பவர் இவற்றில் இருந்து நம்மை காப்பார்கள். 

தெய்வத்தால் வருவதில் இருந்து எப்படி காப்பார்கள் என்றால், இயற்கையை நன்றாக ஊன்றி கவனித்து,  அதன் தன்மை புரிந்து, இந்த இந்த நிலை இருந்தால், இன்னின்ன நிகழும் என்று கணித்து கூறுவார்கள்.  இப்படி வெயில் அடித்தால் , இந்த வருடம் அதிகம் மழை பொழிவு இருக்கும். எனவே, ஏரிகளை தூர் வாரி, சரி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று வருவது உரைப்பார்கள். 

அறிவில் சிறந்த அமைச்சர்கள், பண்டிதர்கள் இவர்களை ஒரு அரசன் துணையாக  வைத்துக் கொள்ள வேண்டும்.

அது போல இன்றைய தினத்தில்  ஒரு நிறுவனத்தின் முதலாளி, CEO  தனக்கு வரும் துன்பங்களில் இருந்து  தன்னை காக்கும் வழி சொல்லும் நல்லவர்களை  துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

இல்லறத்தில் இருப்பவனுக்கு மனைவியே நல்ல துணை. ஒருவனுக்கு வரப் போகும் மற்றும்  வந்த துன்பங்களில் இருந்து ஒருவனை காப்பவள் அவன் வாழ்க்கை துணை நலமான மனைவியே. 

மக்களால் வரும் துன்பங்களை சாம, தான, பேத , தண்டம் என்ற வழிகளில் சென்று  அந்தத் துன்பங்களில் இருந்து அரசனை காக்க வேண்டும். 


"பேணிக் கொளல்"

பேணுதல் என்றால் போற்றுதல். 

தந்தை தாய் பேண் என்பது அவ்வை வாக்கு. (ஒண்ணாங் கிளாசில் படிச்ச ஆத்திச் சூடி நினைவுக்கு வருகிறதா ?)

கப்பிய கரி முகன் அடி பேணி என்பது அருணகிரியார் வாக்கு. 


கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
   கப்பிய கரிமுக                      னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை                கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
   மற்பொரு திரள்புய                    மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
   மட்டவிழ் மலர்கொடு                  பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய                     முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
   அச்சது பொடிசெய்த                  அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
    அப்புன மதனிடை                   இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
   அக்கண மணமருள்                  பெருமாளே.
 

என்பது திருப்புகழ். 

முப்பது முவர்கத்து அமரரும் அடி பேண  என்பதும் அவர் வாக்கே 

முத்தைத்தரு பத்தித் திருநகை
                அத்திக்கிறை சத்திச் சரவண
                 முத்திக்கொரு வித்துக் குருபர                  எனவோதும்
  முக்கட்பர மற்குச் சுருதியின்
                முற்பட்டது கற்பித் திருவரும்
                முப்பத்துமு வர்க்கத் தமரரும்                  அடிபேணப்
 பத்துத்தலை தத்தக் கணைதொடு
                ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
                 பட்டப்பகல் வட்டத் திகிரியில்                  இரவாகப்
 பத்தற்கிர தத்தைக் கடவிய
                 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
                பட்சத்தொடு ரட்சித் தருள்வது                   மொருநாளே
  தித்தித்தெய ஒத்தப் பரிபுர
                நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
                திக்கொட்கந டிக்கக் கழுகொடு                  கழுதாட
 திக்குப்பரி அட்டப் பயிரவர்
               தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
               சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக                             எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
               குக்குக்குகு குக்குக் குகுகுகு                      
                குத்திப்புதை புக்குப் பிடியென                    முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
               வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
               குத்துப்பட ஒத்துப் பொரவல                         பெருமாளே

பேணுதல் என்றால் போற்றுதல்.

பேண் என்ற சொல்லடியாக வந்தது தான் பெண் என்ற சொல். 

போற்றுதலுக்கு உரியவள் என்று பொருள் 

ஏதோ பணம் கொடுத்து நல்லவர்களை, பெரியவர்களை துணையாகக் கொள்ளக் கூடாது. அவர்கள் மனம் விரும்பும்படி, அவர்களைப் போற்றி அவர்களின் உறவைப் பெற வேண்டும். 

அவர்கள் , நமக்கு வந்த துன்பத்தை போக்குவது மட்டும் அல்ல, இனி அந்த மாதிரி  துன்பங்கள் வரமால் இருக்கவும் வழி சொல்லித் தருவார்கள். 

அப்படி எத்தனை பெரியவர்களை உங்களுக்குத் தெரியும் ?

அப்படி ஒரு பெரியவராக நீங்கள் எத்தனை பேருக்கு இருக்கிறீர்கள் ?

சிந்தியுங்கள்.


Saturday, November 5, 2016

இராமாயணம் - பரதன் 11 - தீயன இராமனே செய்யுமேல்

இராமாயணம்  - பரதன் 11  - தீயன இராமனே செய்யுமேல்


இராமன் மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தான் பரதன்.

உன் தந்தை தயரதன் இறந்து போனான் என்று கைகேயி பரதனிடம் கூறினாள். அதைக் கேட்ட பரதன் துக்கப் படுகிறான். "இந்த துக்கத்தை மாற்ற இராமனின் திருவடிகளை பற்றினால் தான் சரி வரும் " என்று எண்ணி, இராமன் எங்கே என்று கேட்கிறான் பரதன்.

இராமன் கானகம் போய் விட்டான் என்று சொல்கிறாள் கைகேயி.

ஆடிப் போய் விடுகிறான் பரதன். இராமன் ஏன் கானகம் போனான் ? அவனை யார் போகச் சொன்னது ? அவன் என்ன தவறு செய்தான் ? அப்படியே அவன் தவறு செய்திருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு போலல்லவா எண்ண வேண்டும் . இராமன் தயரதன் இறக்கும் முன் போனானா ? அல்லது இறந்த பின் போனானா என்று கேட்கிறான்.

பாடல்

தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்.

பொருள்

தீயன = தீமையான செயல்களை

இராமனே = இராமனே

செய்யுமேல் = செய்து இருந்தாலும்

அவை = அந்தச் செயல்கள்

தாய் = ஒரு தாய்

செயல் =செய்த செயல்

அல்லவோ = அல்லவோ ?

தலத்துளோர்க்கு எலாம்? = இந்த உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம்

போயது = இராமன் போனது

தாதை = தந்தை

விண் = வானம்

புக்க = புகுந்த

பின்னரோ? = பின்னாலா ?

ஆயதன் = அல்லது

முன்னரோ? = அதற்கு முன்னாலா ?

அருளுவீர்’  = தயவு செய்து சொல்லுங்கள்

என்றான் = என்றான்

இராமன் தவறு செய்ய மாட்டான். அப்படியே செய்து இருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு  மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறான் பரதன்.

அது என்ன தாய் செய்த தவறு ?

சில சமயம் குழந்தை பால் குடிக்காமல் அடம் பிடிக்கும். ஒரு தாய் அந்த குழந்தையை  இறுக்கிப் பிடித்து கட்டாயமாக பால் புகட்டுவாள். பார்ப்பதற்கு ஏதோ  அசுர வைத்தியம் போல இருக்கும்.

குழந்தை நோய் வாய்ப்பட்டால் , மருந்து கொடுக்க வேண்டும். மருந்து கசக்கும் என்று  குழந்தை குடிக்காது. தாய், தன்னுடைய இரண்டு கால்களுக்கு இடையில் குழந்தையை இறுக பிடித்துக் கொண்டு, வலு கட்டாயாமாக வாயைத் திறந்து  மருந்தை புகட்டி விடுவாள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன இவள்  கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் இப்படி செய்கிறாளே என்று தோன்றும்.

அவள் அவ்வளவு முரட்டுத் தனமாக நடந்து கொண்டாலும், அது அந்த குழந்தையின் நல்லதுக்கே.

அது போல, ஒரு வேளை இராமன் தவறே செய்திருந்தாலும், அது ஒரு தாய் செய்த  தவறு போல எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்.

பல பேர் ஒரு சின்ன துன்பம் வந்தால் கூட இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா ? அவனை வணங்குவது சரி தானா ? நாம் எவ்வளவு எல்லாம் பூஜை பண்ணினோம்,  நமக்கே இந்த துன்பங்கள் வருகிறதே என்று இறைவனை சந்தேகப் படுவார்கள், அல்லது

கடவுளே உனக்கு கண் இல்லையா, உனக்கு கருணை இல்லையா என்று கடவுளை ஏச தலைப்படுவார்கள்.

பரதன் சொல்கிறான், இராமன் துன்பமே தந்தாலும், அது தாயின் அன்பில் விளைந்த துன்பம் , அது நல்லதுக்கே என்று கொள்ள வேண்டும் என்கிறான்.

நன்றே செய்வாய். பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே என்பார் மணிவாசகர்.

அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,
குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?
இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!

நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?

என்பது திருவாசகம்.

நல்லது எது கெட்டது எது என்று அவளுக்குத் தெரியும். எனக்கு என்ன தெரியும். நீ தீமை செய்தால் கூட அது என் நன்மைக்கே. என்னுடையது என்று இருந்த அனைத்தையும் உன்னிடம் கொடுத்து விட்டேன். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று உருகுகிறார் பட்டர்.



நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது 
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம் 
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக் 
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.


சரணாகதி  தத்துவத்தின் சாரம்.

கிடைப்பதை ஏற்றுக் கொள்ளுவது. 

இறைவன் எதைத் தந்தாலும்  அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் பரதனிடம் இருந்தது. 

அது எப்படி  துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாக பார்க்க முடியும். கேட்க வேண்டுமானால்  நல்லா இருக்கும். நடை முறைக்கு ஒத்து வருமா என்ற கேள்வி  வரும்.

துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கும் என்றால், அந்த துன்பத்தை நாம் வெறுக்க மாட்டோம் அல்லவா ?

வள்ளுவர் சொல்கிறார்.  துன்பத்திலும் ஒரு நண்மை உண்டு. அந்தத் துன்பம்  நமக்கு  உரியவர்கள் யார். நமக்கு நல்லது செய்பவர்கள் யார் என்று அறிந்து கொள்ள உதவும் அளவு கோல்  என்கிறார். 

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

சிந்தித்துப் பாருங்கள். 

இன்னிலை - திருமணமும் குழந்தைப் பேறும்

இன்னிலை - திருமணமும் குழந்தைப் பேறும் 


எதற்காக திருமணம் செய்து கொள்கிறாய் என்று கேட்டால் , "மனைவியோடு இன்பமாக இருக்கலாம், சீர் செனத்தி என்று கொஞ்சம் செல்வம்  வரும்,மாப்பிள்ளை என்று ஒரு மரியாதை வரும், சமூகத்தில் ஒரு மதிப்பு வரும்..." இவற்றிற்காக கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்கிறான்.

சரி, பிள்ளை எதற்கு என்று கேட்டால் "பிள்ளை இல்லா விட்டால் ஆண்மை இல்லாதவன், மலடி என்ற அவச் சொல் வரும், அது மட்டும் அல்ல, நமக்கு அப்புறம் நம் சந்ததி வளர வேண்டாமா, அதற்கும், மேலும், சேர்த்து வைத்த சொத்துகளுக்கு ஒரு வாரிசு வேண்டாமா அதற்கும் " ஒரு பிள்ளை வேண்டும் என்கிறான்.

சரி, பிள்ளைகளை எதற்கு பள்ளி கூடத்திற்கு அனுப்புகிறாய் என்று கேட்டால், படிச்சு வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கத்தான் என்கிறான்.

எதற்கு திருமணம் செய்துகொள்வது, எதற்கு பிள்ளைகள் பெற்றுக் கொள்ளவது, எதற்கு அவர்களை படிக்க வைப்பது என்று சரியாகத்  தெரியாமலேயே இவை நடந்து கொண்டிருக்கின்றன.

திருமணம் செய்து கொண்டு, இல்வாழ்க்கையில் ஈடுபட்டு , குழந்தைகளை பெற்றுக் கொள்வதின் நோக்கம் என்ன என்று இன்னிலை என்ற அற நூல் கூறுகிறது.

"ஒரு பெண்ணை மணந்து அவளோடு இன்பம் காணப்பது என்பது நல்ல பிள்ளைகளைப் பெற்று, அவர்களை நான்கு அல்லது ஐந்து ஆண்டில் அவர்களை பள்ளிக்கு அனுப்பி, அவர்கள் இறைவனை காணும்படி கல்வி கற்பிப்பதே இல்வாழ்வின் இனிய நோக்கம் "

பாடல்

பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய்-தழைகாதல்
வாலறிவ னாக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந் தணந்து.

பொருள்

பாலை = பாலகனை

வளர்த்துக்  = வளர்த்து

கணங்குழை = அழகிய காதணிகளை அணிந்த பெண்ண

மாலையுறல் = மால் என்றால் மயக்கம். கிறக்கம் . இங்கே இன்பம் என்ற பொருளில் வந்தது. இன்பம் அடைதல்

சால்பென்ப = உயர்ந்தது என்று கூறுவார்கள்

கண்கூடாக் காணாய் = கண் கூடாகக் காண்பாய்

தழைகாதல் = பெருகி வரும் காதலில்

வாலறிவ னாக்க = இறைவனை அறிய

வகையறிக = வகையினை செய்தல் , பள்ளியில் சேர்த்தல், குருவிடம் ஒப்புவித்தல்

காலத்தால் = தகுந்த நேரத்தில்

தோலொடு = அழகான

நாலைந் தணந்து = நான்கு அல்லது ஐந்து வயதில்

இரண்டு வயதில், இரண்டரை வயதில் pre kg என்று பிள்ளைகளை கொண்டு போய்  பள்ளிக் கூடத்தில் தள்ளி விடுகிறார்கள்.

கல்வி கற்பதின் நோக்கம், ஏதோ வேலை தேடிக் கொண்டு , நாலு காசு பார்ப்பது அல்ல.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர்.

கல்வியின் பயன் இறைவனைத் தொழுதல். இறைவனை அறியாமல் எப்படி அவனை தொழுவது ? இறைவன், கடவுள் என்றால் யார் என்றே அறியாமல் , எல்லோரும் செய்கிறார்கள், நானும் செய்கிறேன் என்று கோவிலுக்குப் போவது, பூஜை செய்வது, பாட்டுப் பாடுவது, விரதம் இருப்பது என்று பல பேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் தேவைதான். ஆனால் அதுவே முடிவு அல்ல.

மணி அடிப்பதும் , சர்க்கரை பொங்கல், சுண்டல் சாப்பிடுவதும் இறைவனை அறிவது ஆகாது. ஆனால் , அங்குதான் ஆரம்பிக்க வேண்டும்.

பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து அவர்கள் இறைவனை அடைய வழி செய்வதுதான் திருமணம் செய்து கொண்டு , ஒரு பெண்ணோடு இன்பமாக வாழ்வதின்  குறிக்கோள்.

சொல்லித் தந்திருக்கிறார்கள். படிக்காமல் விட்டு விட்டோம்.

படிப்போம். மற்றவர்களுக்கும் சொல்லுவோம்.

எந்த நிலையில் நம் சமுதாயம் சிந்திருக்கிறது என்று நினைத்துப் பார்ப்போம்.





Friday, November 4, 2016

இராமாயணம் - பரதன் 10 - சிந்தை வெம் கொடுந் துயர் தீர்கலாது

இராமாயணம்  - பரதன் 10 -  சிந்தை வெம் கொடுந் துயர் தீர்கலாது


துன்பம் இல்லாத யார் இந்த உலகில் ? எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், அதிகார பலம் உள்ளவனாக இருந்தாலும், ஆள்  அம்பு சேனை என்று இருந்தாலும் துன்பம் ஏதோ ஒரு வகையில் அழையா விருந்தாளியாக வந்து விடுகிறது.

சரி துன்பம் வந்து விட்டது. என்ன செய்வது ? எப்படி அதைப் போக்கிக் கொள்வது என்று தெரியாமல் அல்லாடுபவர்கள் ஆயிரம்.

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று எதையெதையோ முயன்று பார்ப்பார்கள்.

தயரதன் இறந்து விட்டான்.  தந்தை இறந்த துக்கத்தை எப்படி மாற்றுவது ? அவன் உயிரோடு எழுந்து வந்தால் அல்லது அந்த துக்கம் போகாது. அது ஒன்றும் நடக்கும் காரியம் இல்லை. பின் எப்படி அந்த துக்கத்தில் இருந்து விடுபடுவது ?

பரதன் சொல்கிறான்


" என் தந்தையும், தாயும், என் தலைவனும், என் முன் பிறந்தவனும் , முடிவே இல்லாத நல்ல குணங்களை கொண்ட இராமனின் திருவடிகளில் என் தலையை வைத்தால் அல்லது இந்த துக்கம் மாறாது " என்று

பாடல்

எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன்கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெம் கொடுந் துயர் தீர்கலாது ‘என்றான்.


பொருள்

‘எந்தையும் = என்னுடைய தந்தையும்

 யாயும் = என் தாயும்

எம்பிரானும் = என் தலைவனும்

எம்முனும் = என் அண்ணனும் (முன் பிறந்தவன்)

அந்தம் = முடிவே

இல் =  இல்லாத

பெருங் = சிறந்த

குணத்து = குணங்களைக் கொண்ட

இராமன் = இராமன்

ஆதலால் = ஆதலால்

வந்தனை = வணக்கம்

அவன்கழல் = அவன் திருவடிகளில்

வைத்தபோது = செய்கின்றபோது

அலால் = தவிர

சிந்தை = மனதில் உண்டானான

வெம் = வெம்மகாயன்

கொடுந் = கொடுமையான

துயர் = துன்பம்

தீர்கலாது  = தீராது

என்றான் = என்றான் பரதன்

மனக் கவலையை மாற்றும் மருந்து இராமனின் திருவடிகள் என்பது பரதனின் முடிவு.

பரதன் இருந்த போது இராமன் இருந்தான். அவன் கூடவே, அவன் மாளிகையில். இப்போது நமக்கு ஒரு துன்பம் என்றால் இராமனைத் தேடி எங்கே போவது  ?

இராமனை வெறுமனே இராமன் என்று சொல்லவில்லை.

எந்தையும்
யாயும்
எம்பிரானும்
எம்முன்னும்
அந்தமில் குணத்து இராமன்

என்று கூறுகிறான்.

பெரியவர்கள், நல்லவர்கள், உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் , அவர்களைப் போய்ச் சேருங்கள். அதுவே மனக் கவலையை மாற்றும் மருந்து.

ஒரு வேளை , பரதனின் அதீத சோகத்தால் அவன் அண்ணனைப் பார்க்க நினைத்திருக்கலாம்.

உணர்ச்சி வசப்படாமல் , தெளிவாக சிந்தித்து , மனக் கவலை மாற்ற வழி சொன்னவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா ?

வள்ளுவர் இருக்கிறார். அவரிடம் கேட்போம்.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக் கவலை மாற்றல் அரிது  

என்கிறார் வள்ளுவர்.

தனக்கு உவமை இல்லாதவனுடைய திருவடிகளை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு  மனக் கவலையை மாற்ற முடியாது என்கிறார்.

பரதனைப் படிக்கும் போது , வாழ்க்கையைப் படிக்கிறோம்.



Thursday, November 3, 2016

இராமாயணம் - பரதன் 9 - தோய்ந்தே கடந்தான்

இராமாயணம் - பரதன் 9 - தோய்ந்தே கடந்தான்


முந்தைய பிளாகில் தயரதன் கோபம், காமம் போன்ற குற்றங்களை தவிர்த்து வாழ்தவன் என்று பார்த்தோம்.

(முந்தைய பிளாகைப் படிக்க

http://interestingtamilpoems.blogspot.in/2016/11/blog-post.html


‘சினக் குறும்பு எறிந்து,
    எழு காமம் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும்
    எற்றி, யாவர்க்கும்
மனக்கு உறும் நெறி செலும்
    வள்ளியோய்! மறந்து ‘
உனக்கு உறும் நெறி செலல்
    ஒழுக்கின் பாலதோ? ‘


)


தயரதனுக்கு பதினாயிரம் மனைவிகள் மற்றும் மூன்று பட்டத்து இராணிகள் என்று இருந்தார்கள். இவ்வளவு பெண்களோடு வாழ்ந்தவன் எப்படி காமத்தை வென்றவனாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பு.


நாம் எதையும் முழு மனதோடு செய்வது இல்லை. ஒன்றைச் செய்யும் போதே இன்னொன்றின் மேல் மனம் செல்கிறது. மனம் ஒன்றிச் செய்வது இல்லை.

சாப்பிடும் போது டிவி பார்த்துக் கொண்டோ அல்லது பேப்பர் அல்லது புத்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடுவது. சாப்பாட்டில் எங்கே கவனம் இருக்கும். அலுவலத்தில் இருக்கும் போது வீட்டு எண்ணம். வீட்டில் இருக்கும் போது அலுவலகத்தின் எண்ணம். இறைவனை வணங்கும் போதும் ஆயிரம் சிந்தனைகள்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
        உத்தமர்தம் உறவு வேண்டும்  என்பார் வள்ளலார். 


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
        உத்தமர்தம் உறவு வேண்டும் 
        உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் 
        உறவு கலவாமை வேண்டும் 
    பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை 
        பேசா திருக்க வேண்டும் 
        பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் 
        பிடியா திருக்க வேண்டும் 
    மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை 
        மறவா திருக்க வேண்டும் 
        மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற 
        வாழ்வுனான் வாழ வேண்டும் 
    தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் 
        தலமோங்கு கந்த வேளே 
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி 
        சண்முகத் தெய்வ மணியே. 

என்பது திருவருட்பா.

மனம் எங்கே ஒருமைப் படுகிறது ? எப்போதும் ஏதோ ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே வாழ்கிறோம். ஒரே நேரத்தில் பல காரியங்களை செய்ய நினைக்கிறோம். ஒன்றிலும் மனம் இலயிப்பது கிடையாது.

மனம் ஒன்றாததனால் , அனுபவம் முழுமை பெறுவது இல்லை. ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது. அரைகுறையாக விட்டதை மீண்டும் அனுபவிக்க மனம் விரும்புகிறது.

ஒரு ஆசையில் இருந்தும் மீண்டு வர முடியவில்லை.

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்

பெண் என்பவள் என்ன மோசமானவளா . ஏன் ஞானிகள் , அறிஞர்கள் எல்லோரும் பெண்ணைக் கண்டால் இப்படி பயப்படுகிறார்கள் ? பெண்ணைப் பற்றி , அவளின் உடலைப் பற்றி கேவலமாக பேசுகிறார்கள். பெண் இல்லை என்றால் அவர்களே தோன்றியிருக்க முடியாதே. அப்படி இருக்க பெண்ணைப் பற்றி ஏன் அப்படி எழுதுகிறார்கள் ?

வள்ளலார் சொல்கிறார் "அணைக்கும் பெண்ணின் ஆசையை மறக்க வேண்டும்" என்கிறார்.  பெண் ஆசை வேண்டும். அந்த ஆசை இல்லை என்றால்  உலகம்  நின்று போகும். ஆனால், அதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு கால கட்டத்தில் , பெண் என்பவள் ஒரு நண்பியாக, தோழியாக, தாயாக, சகோதரியாக நினைக்க வேண்டும். மருவுதலையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. பெண்ணை மறக்கச் சொல்லவில்லை. பெண் மேல் உள்ள ஆசையை மறக்க வேண்டும் என்கிறார்.

எப்படி அதை மறப்பது ? பெண் ஆசை எனபது மறக்கக் கூடியதா ?

மனதை வேறொன்றின் மேல் செலுத்தினால் பெண் ஆசை மறக்கும். "உன்னை மறவாது இருக்க வேண்டும்" என்கிறார் வள்ளலார். மனம் தெய்வ சிந்தனையில் போனால்  பெண் ஆசை போகும்.

எதையோ எழுத வந்து எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன்....மன்னிக்கவும்.



ஆனால், தயரதன் அப்படி அல்ல. எதைச் செய்தாலும் அதை முழுமையாக, அதன் இறுதி வரை சென்று முழுமையாக அனுபவித்து பின் அதை விட்டு மீண்டு வருகிறான். போதும் என்ற திருப்தி வந்து விடுகிறது.

அரசியல் சிறப்பு பற்றி சொல்ல வந்த கம்பன், தயரதனின் பெருமையைப் பற்றிக் கூறுகிறான்.

"இல்லை என்று கடல் போல வருபவர்களை தர்மம் என்ற படகில் ஏறிக் கடந்தான். உலகில் உள்ள எண்ணற்ற நூல்கள் என்ற கடலை ஆராய்ச்சி என்ற படகில் சென்று கடந்தான்.  பகைவர்கள் என்ற கடலை தன்னுடைய வீரம் என்ற படகால் கடந்தான். செல்வம் தரும் அனைத்து சுகங்களையும் அனுபவம் என்ற படகால் கடந்தான் "

பாடல்

ஈய்ந்தே கடந்தான் இரப்போர் கடல்;எண்
    இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும்
    அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான் பகை வேலை;
    கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான் திருவின்
    தொடர் போக பௌவம்.

பொருள் 


ஈய்ந்தே = தர்மம் செய்தே

கடந்தான் = கடந்தான், தாண்டினான்

இரப்போர் கடல் = கடல் போன்ற இரப்போர்களை.  கடல் போன்ற வறியவர்களை.

எண் இல் = எண்ணிக்கையில் அடங்காத

நுண் நூல் = நுண்மையான நூல்களை , புத்தகங்களை

ஆய்ந்தே கடந்தான் = ஆராய்ச்சி செய்தே கடந்தான்


அறிவு என்னும்  அளக்கர் = அறிவு என்ற கடலை

வாளால் = தன்னுடைய வாளால் , வீரத்தால்

காய்ந்தே கடந்தான் = சண்டையிட்டே கடந்தான்

பகை = பகைவர்கள் என்ற

வேலை = கடலை

கருத்து முற்றத் = மனம் நிறைய , திருப்தி படும்படி

தோய்ந்தே கடந்தான் = அனுபவித்தே கடந்தான்

திருவின் = செல்வத்தின்

தொடர் = தொடர்ந்து வரும்

போக = சுகம் என்ற

பௌவம் = கடலை

மிக ஆழமான பாடல்.

இன்பங்களை அனுபவித்து கடக்க முடியுமா ? நெய்யை விட்டு நெருப்பை அணைக்க முடியுமா ? அனுபவிக்க அனுபவிக்க இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்றல்லவா  மனம் கேட்கும்.

தயரதனுக்கும் அப்படி நிகழ்ந்து இருக்கலாம். மேலும் வேண்டும், மேலும் வேண்டும் என்று  அனுபவித்து ,  சரி,இதில் இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று  அவன் அதை கடந்திருக்கலாம். அல்லது, அனுபவத்தை  முழுமையாக்கி  , அதை கடந்திருக்கலாம். எப்படி இருப்பினும், உலக சுகங்களை எல்லாம்  அனுபவித்தே கடந்துவிட்டான். இனி , அந்த சசுகங்களின் மேல் பற்று இல்லை. நான் பார்க்காததா என்ற நிமிர்வு வந்து விடும்.

இரண்டாவது, சரி நாங்களும் அப்படி அனுபவித்து கடக்கிறோம். அவன் சக்திக்கு  பதினாயிரம் மனைவிகள் என்றால் எங்கள் சக்திக்கு ஒரு பத்தாவது முடியாதா  என்று குதர்க்கமாக யாரும் கேட்கலாம். இங்குதான் ஒரு முக்கியமான  கருத்தை நான் கவனிக்க வேண்டும்.

ஒரு அரசன், இந்த சுக போகங்களை அனுபவித்து கடந்து விட்டால், அவன் மனம் அதில் செல்லாது. வருகின்ற வரிப் பணத்தைக் கொண்டு எப்படி மக்களுக்கு நல்லது  செய்யலாம் என்று தோன்றும். இல்லை என்றால், எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். சேர்க்கிறார்கள்.  ஆசை சலித்துப் போனால் , மனம் மக்களை பற்றி, அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் தொடங்கும்.

குற்றங்கடிதல் பற்றி சொல்ல வந்த வள்ளுவர் , காமத்தை எதிரிகள் அறியாமல் அனுபவித்துக் கொள் என்கிறார். இல்லை என்றால் பகைவர்கள் அந்த பலவீனத்தை அறிந்து கொண்டு அதன் மூலம் உன்னை வீழ்த்தி விடுவார்கள் என்று மன்னனுக்கு அறிவுரை கூறுகிறார். வள்ளுவருக்குத் தெரியும் , காமம் என்பதை அடக்க முடியாது. இரகசியமாக அனுபவித்துக் கொள் என்று சொல்லித் தருகிறார்.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

என்பது வள்ளுவம். 

எண்  இல் நுண் நூல் ஆய்ந்தே கடந்தான்

கம்பர் காலத்திலேயே புத்தகங்கள் இருந்து இருக்கிறது. அதுவும் எப்படி, எண்ணில் அடங்காத  நூல்கள். அது மட்டும் அல்ல, எண்ணில் அடங்காத நுண்மையான நூல்கள். அறிவுப் பூர்வமான, ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட நூல்கள்  மட்டுமே எண்ணிக்கையில் அடங்காத அளவு இருந்ததாம். அது அல்லாமல் மற்ற  புத்தகங்களும் இருந்திருக்கும் போல. நுண் நூல் என்று சொல்லும்போது  நுண்மை இல்லாத நூல்களும் , பொழுது போக்கு நூல்களும்  இருந்திருக்கும்.

படித்தவர்களும், படித்ததை எழுதி வைத்தவர்களும், எழுதியதை படித்து பயன்  பெறுபவர்களும் நிறைந்த ஞான பூமி இது.

படிக்கும் போது , நல்ல விஷயங்கள் உள்ள, ஆழ்ந்த கருத்துகளை கொண்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

வார, மாத நாவல்களை விட்டு அறிவு பூர்வமான நூல்களை வாசிப்போம்.


Wednesday, November 2, 2016

இராமாயணம் - பரதன் 8 - உனக்கு உறும் நெறி செலல்

இராமாயணம் - பரதன் 8 - உனக்கு உறும் நெறி செலல்


இராமாயணம் போன்ற காப்பியங்களை எழுதுவதின் நோக்கம் ஏதோ கதை சொல்வதற்காக அல்ல. கதை என்று பார்த்தால் இராமாயணம் போன்ற கதைகள் ஆயிரம் இருக்கின்றன. இராமாயணத்தில் என்ன சிறப்பு என்றால் அதன் கதை அல்ல. அந்தக் கதையின் ஊடாக சொல்லப் பட்ட தர்மங்கள், அறங்கள். கதை என்பது மாத்திரையின் மேல் பூசப்பட்ட சர்க்கரை மாதிரி. வெறுமனே அறத்தை மட்டும் எடுத்துச் சொன்னால் கசக்கும். கதையோடு சொல்லும் போது , வாசகன் அறியாமலேயே நல்ல கருத்துக்கள் அவனுள் சென்று சேர்ந்துவிடும்.

தயரதன் இறந்த செய்தியை கேட்டதும் பரதன் அழுது அரற்றுகிறான். அங்கும் கம்பன் பல நல்ல செய்திகளை வைக்கிறான். தயாராதனின் நல்ல குணங்கள் என்று பரதன் பட்டியல் போட்டுச் சொல்கிறான். அது நமக்கும் ஒரு பாடம். அந்த நல்ல குணங்களை நாமும் மேற்கொள்ள வேண்டும். அடுத்த சந்ததிக்கும் சொல்லித் தர வேண்டும்.


"சினம் காமம் போன்ற குற்றங்களை தவிர்த்து, எல்லோருக்கும் பிடித்த நல் வழியில் செல்பவனே (தயரதனே ) , இன்று அவற்றை விட்டு விட்டு நீ நினைத்த பாதையில் போவது சரி தானா ?"

என்று புலம்புகிறான்.

பாடல்

‘சினக் குறும்பு எறிந்து,
    எழு காமம் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும்
    எற்றி, யாவர்க்கும்
மனக்கு உறும் நெறி செலும்
    வள்ளியோய்! மறந்து ‘
உனக்கு உறும் நெறி செலல்
    ஒழுக்கின் பாலதோ? ‘

பொருள்


‘சினக் = சினம் என்ற

 குறும்பு = குறும்பை

எறிந்து = தவிர்த்து

எழு = எழுகின்ற

காமம் = காமம் என்ற

தீ = தீயை

அவித்து = அணைத்து

இனக் = சினம் காமம் போன்றவற்றின் இனமான

குறும்பு யாவையும் = மற்றைய குறும்புகள் அனைத்தையும்

எற்றி = மாற்றி, தவிர்த்து

யாவர்க்கும் = அனைவர்க்கும்

மனக்கு = மனதுக்கு

உறும் = பிடித்த

நெறி செலும் = வழியில் செல்லும்

வள்ளியோய்! = வள்ளலே

மறந்து  = அவற்றை எல்லாம் மறந்து

உனக்கு = உனக்கு

உறும் = பிடித்த

நெறி செலல் = வழியில் போவது

ஒழுக்கின் பாலதோ? = ஒழுக்கத்தின் பாற் பட்டதா ?

குறும்பு என்றால் மீண்டும் மீண்டும் வரும் வந்து துன்பம் தரும் பகை  என்று பொருள். 

மனதளவில்  ஆறு விதமான  பகைகள் மீண்டும் மீண்டும் வரும். 

கோபம். காமம். பேராசை. மானம். உவகை. மதம். 

இதில் கோபமும், காமமும் உள்ளிருந்து வெளியில் செல்பவை என்று சொல்கிறார்கள். அது மட்டும் அல்ல, கோபமும் காமம் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவை. 

ஒன்றின் மேல் ஆசை வரும். அது கிடைக்கவில்லை என்றால் கோபம் வரும். 

சீதை மேல் இராவணனுக்கு காமம் வந்தது. அவள் அவனுக்கு உடன் படவில்லை என்றபோது  கோபம் வந்தது. அந்த காமமும் கோபமும் அரக்கர் குலத்தையே அழித்தது. 

கோபம் வரும்போது சிந்தித்துப் பாருங்கள். ஆதற்கு முந்தைய காமம் புலப்படும். அடுத்த முறை காமம் வரும்போது , எண்ணிக்கொள்ளுங்கள், கோபம் வரப்போகிறது என்று . 

மற்ற பூதங்கள்  - நீர், காற்று போன்றவை ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு  இடத்துக்கு தூக்கிப் போடும். அதனால் அந்தப் பொருள் கொஞ்சம் சேதம்  அடையலாம். ஆனால், அந்தப் பொருளின் தோற்றமும், வடிவமும் அப்படியே  இருக்கும். ஆனால், தீ அப்படி அல்ல. எரித்து சாம்பலாக்கி விடும்.  உருவமே இல்லாமல் செய்து விடும். எனவே தான் காமத்தை  தீ க்கு ஒப்பிட்டு கூறினார். காமம் வந்தால் ஒருவன் தன் நிலை இழப்பான்.  ஆளே மாறிப்போவான். 

‘சினக் குறும்பு எறிந்து,
    எழு காமம் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும்
    எற்றி'


சினம், காமம் அதற்கு இனமான மற்றைய குறும்புகள் அனைத்தையும் நீக்கி.

இவற்றை நீங்கியதால்  தயரதன் பெரிய சக்ரவர்த்தியாக திகழ்ந்தான். உயர் நிலையை அடைய வேண்டுமென்றால் இந்த குற்றங்களை தவிர்க்க வேண்டும் என்பது பாடம்.

இப்போது இதை எல்லாம் விட்டு விட்டு , நீ பாட்டுக்கு உன் வழியில் போனால் என்ன அர்த்தம்  என்று புலம்புகிறான்.

புலம்பலில் கூட உயர்ந்த கருத்துக்கள்.

பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல் என்றார் வள்ளுவர்.

இம்மைக்கும் மறுமைக்கும் பயனில்லாத சொற்களை பேசுபவன் என்று அதற்கு உரை செய்தார்  பரிமேல் அழகர்.

துக்கத்தில் அழும் போது கூட உயர்ந்த சொற்களை கூறினவன்  பரதன்.


Tuesday, November 1, 2016

இராமாயணம் - பரதன் 7 - பரதனின் தந்தைப் பாசம்

இராமாயணம் - பரதன் 7 - பரதனின் தந்தைப் பாசம் 


இராமாயணம் படிப்போர் எல்லாம் , இராமனுக்கும் தயரதனுக்கும் உள்ள நெருக்கமான உறவைப் பற்றித்தான் பெரும்பாலும் பேசுவார்கள். சொல்லப் போனால் தயாரதனுக்கு பரதன் மேல் கோபம் கூட உண்டு. தனக்கு அவன் பிள்ளை இல்லை, தனக்கு அவன் இறுதிக் கடன் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டு உயிர் விடுகிறான் தயரதன்.

ஆனால், தயரதன் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறான் பரதன்.

தந்தை மகன் உறவு எப்போதும் மௌனத்திலேயே நடக்கிறது. இருவரும் வெளியே சொல்லிக் கொள்வதில்லை.

 பரதனின் தந்தைப் பாசம் கண் கலங்க வைக்கும்.

ஒரு பெண்ணைப் போல ஆணால் அன்பை, உணர்ச்சியை எளிதாக வெளிப் படுத்த முடிவதில்லை.

தயரதன் இறந்துவிட்டான். பரதன் , தயரதனைத் திட்டுகிறான்.

"நீ பாட்டுக்கு இப்படி பொறுப்பு இல்லாமல் இறந்து போய் விட்டாயே. நீ இறந்து விட்டால் இந்த அறத்தையும், அருளையும், நீதியையும், நீ சேர்த்த செல்வத்தையும் யார் காப்பாற்றுவார்கள். இப்படி பொறுப்பில்லாமல் இறந்து விட்டாயே" என்று ஏசுவது போல துக்கத்தில் குமுறுகிறான்.

பாடல்

‘அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை,
சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து,
இறத்னை ஆம் எனின், இறைவ! நீதியை
மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ?


பொருள்

‘அறம்தனை = அறத்தை

வேர் அறுத்து = வேரோடு அறுத்து

அருளைக் கொன்றனை = அருளை, கருணையை கொன்றாய்

சிறந்த= உயர்ந்த

நின் = உன்னுடைய

தண்ணளித் = தண் + ஒளி = குளிர்ந்த ஒளி பொருந்திய

திருவைத் = செல்வத்தை

தேசு = பெருமை, செல்வாக்கு

அழித்து = அழித்து

இறத்னை ஆம் எனின் = இறந்துவிட்டாய் என்றால்

இறைவ! = தலைவனே

நீதியை = நீதியை , ஞாயத்தை

மறந்தனை; = மறந்து விட்டாய்

உனக்கு = உனக்கு

இதின் = இதைவிட

மாசு = குற்றம்

மேல் உண்டோ? = அதிகம் உண்டோ


தயரதனை "இறைவ " என்று அழைக்கிறான். காக்கும் தொழில் இறைவனின் பிராதன தொழில். நாம் இறைவனிடம் எதிர்பார்ப்பது நம்மை காப்பாற்றுவதைத் தான்.  யாரும் கடவுளிடம் "கடவுளே என்னை படை , என்னை  உருவாக்கு" என்று கேட்பது இல்லை. நாம் தான் ஏற்கனவே படைக்கப் பட்டு  விட்டோமே. "ஆண்டவா என்னை அழித்து விடு "என்று யாரும்  ஆண்டவனை வேண்டுவது இல்லை. அழிப்பதும் ஆண்டவன் தொழில் தானே. கடவுளிடம் வேண்டுவது எல்லாம் காப்பாற்றுதல் ஒன்றுதான்.


யார் காப்பாற்றுகிறார்களோ அவர்கள் கடவுள்.

அரசனுக்கு "இறைவன்" என்று பெயர். இறைமாட்சி என்று ஒரு அதிகாரம் வைத்தார்  வள்ளுவர், அரசனின் கடமைகளை சொல்ல.

அறத்தை, நீதியை, அருளை, புகழை காக்கும் தொழில் அரசனுக்கு உண்டு.


அவன் இறந்ததே குற்றம் என்கிறான். இதெல்லாம் யார் பார்ப்பார்கள் என்று நீ பாட்டுக்கு  இறந்து விட்டாய் என்று புலம்புகிறான்.

நாங்கள் எல்லாம்  சின்னப் பிள்ளைகள். எங்களுக்கு என்ன தெரியும். அறமும், நீதியும், அருளும், புகழும் எல்லாம் உனக்குத்தான் தெரியும். நீ இறந்து விட்டால் நாங்கள் என்ன செய்வோம். நீ இப்படி இறந்தது தவறு என்று ஒரு சிறு பிள்ளை போல்  அழுகிறான்.

தந்தை இறந்த அந்த சோகத்திலும் அவனுக்கு மனதில் முதலில் வருவது "ஐயோ, இந்த அறத்தை இனி யார் காப்பார்கள்" என்பது தான். துக்கத்திலும் அற உணர்வே  அவனிடம் மேலிட்டு நிற்கிறது.

அறத்தை காப்பது அரசனின் கடமை . தயரதன் அந்தக் கடமையில் இருந்து தவறி விட்டான்  என்று புலம்புகிறான் பரதன்.

இப்படி ஒரு பிள்ளையை கண்டது உண்டா ?