Sunday, January 8, 2017

தேவாரம் - அஞ்சி ஆகிலும்

தேவாரம் - அஞ்சி ஆகிலும் 


மனிதன் இறைவனை தொழ ஆரம்பித்தது பயத்தினால்தான். இடி இடித்தால் பயம், மின்னல் வெட்டினால் பயம். வெள்ளம், நில நடுக்கம், கிரகணம் , கொள்ளை நோய் என்று பலவற்றை கண்டு மனிதன் பயந்தான். தனக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. தன்னால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது என்று அறிந்து கொண்டான். அந்த சக்தியின் கோபத்தில் இருந்து தப்பிக்க, அதன் தயவைப் பெற, அதை வழி படத் துவங்கினான்.


மனிதனின் பயம் இடம் மாறியது. இடி மின்னலில் இருந்து , பாவம், புண்ணியம், சொர்கம் , நரகம் என்று நினைக்கத் தொடங்கினான். தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்று நினைத்தான். எண்ணெய் கொப்பரை பயம் பற்றிக் கொண்டது.

நாள் ஆக ஆக , அறிவு வளர்ந்தது. அறிவியல் பலவற்றை கண்டு சொல்லியது.


மழையும், இடியும், மின்னலும், நோயும் , கிரகணமும் எப்படி வருகிறது என்று கண்டு சொல்லியது. மனிதனின் பயம் குறையத் தொடங்கியது. நோய் என்றால்    தெய்வ  குத்தம் என்று கோவிலுக்குப் போவதில்லை, மருத்துவமனைக்குப் போகிறான்.

பயம் கொஞ்சம் குறைந்தது. இருந்தும் ஆண்டவனை தொழுவது குறையவில்லை. எதற்கு தொழ வேண்டும் ? எதெல்லாம் ஆண்டவன் செயல் என்று சொல்லிக் கொண்டிருந்தானோ, அது எல்லாம் ஆண்டவன் செயல் அல்ல என்று புரிந்த பின் ஏன் ஆண்டவனைத் தொழ வேண்டும் ?

நாளடைவில் , ஆண்டவன் மேல் அன்பு வரத் தொடங்கியது. பயம் , அன்பாய் மலர்ந்தது.

பெற்றோர் மேல் பிள்ளைகளுக்கு முதலில் பயம் இருக்கும். வளர்ந்து பெரிய ஆளானபின் அந்த பயமே அன்பாக மாறுவது போல.....

"அச்சத்தின் காரணமாகவேனும், அன்பினாலாவது இறைவனை நினை " என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

அஞ்சி யாகிலு மன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதி லெய்திமை யோர்தொழக்

குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

சீர் பிரித்தபின்

அஞ்சி ஆகிலும் அன்பு பட்டாகிலும் 
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ
இஞ்சி மாமதில் இமையோர் தொழ 

குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே

பொருள்

அஞ்சி ஆகிலும் = அச்சத்தின் காரணமாகவேனும்

அன்பு பட்டாகிலும்  = அன்பினாலாவது

நெஞ்சம் வாழி = நெஞ்சே நீ வாழ்க

நினை  = நினைப்பாயாக

நின்றியூரை நீ = திரு நின்ற ஊர் என்ற தலத்தில் உள்ள

இஞ்சி மாமதில்= காவலை உடைய பெரிய மதில்களைக் கொண்ட

இமையோர் தொழ = கண் இமைக்காத தேவர்களும் தொழ


குஞ்சி = தலை முடியில்

வான்பிறை = வானில் உள்ள பிறையை

சூடிய கூத்தனே = சூடிய கூத்தனே

வாழ்க்கை என்ற மிகப் பெரிய இன்பத்தைக் கொடுத்த இறைவனிடம் அன்பு செலுத்தச் சொல்கிறார்  நாவுக்கரசர். ஆரோக்கியமான உடல், அளவான செல்வம், அன்பான குடும்பம், அமைதியான நாடு...இப்படி எத்தனை எத்தனையோ நன்மைகளைத் தந்த ஆண்டவனை அன்போடு நினைக்கச் சொல்கிறார் அப்பர்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/01/blog-post_12.html




இராமாயணம் - பரதன் குகன் - உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்

இராமாயணம் - பரதன் குகன் - உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்


இராமனைக் கொல்லவே பரதன் வந்திருக்கிறான் என்று குகன் நினைத்து விட்டான். நினைத்தது மட்டுமல்ல, பரதன் மேல் சண்டை போட தன் படைகளை தயார் விட்டான். குகனும், அவன் படைகளும் போருக்கு தயாராக நிற்கின்றனர். பரதனுக்கு இது எதுவும் தெரியவில்லை. இராமன் சென்ற திசை பார்த்து நிற்கிறான். பரதனின் அமைச்சன், நிலைமையை எடுத்துச் சொல்கிறான்.

பாடல்

‘கங்கை இரு கரை உடையான்;
     கணக்கு இறந்த நாவாயான்;
உங்கள் குலத் தனி நாதற்கு
     உயிர்த் துணைவன்; உயர் தோளான்;
வெங்கரியின் ஏறு அனையான்;
     வில் பிடித்த வேலையினான்;
கொங்கு அலரும் நறுந் தண் தார்க்
     குகன் என்னும் குறி உடையான்.


பொருள்


‘கங்கை = கங்கை ஆற்றின்

இரு கரை = இரண்டு கரைகளையும்

உடையான் = ஆட்சி செய்பவன்

கணக்கு இறந்த = கணக்கில் அடங்காத

நாவாயான் = படகுகளை உடையவன்

உங்கள் = உங்கள்

குலத் = குலத்தில் தோன்றிய

தனி நாதற்கு = தனிச் சிறப்பு வாய்ந்த நாயகனான இராமனுக்கு

உயிர்த் துணைவன்; = உயிர் போன்ற துணைவன்

உயர் தோளான் = பரந்த தோள்களை உடையவன்

வெங்கரியின் ஏறு அனையான் = மதம் கொண்ட ஆண் யானை போன்றவன்

வில் பிடித்த வேலையினான் = விற்களைப் பிடித்திருக்கும் சேனையை கடல் போலக் கொண்டவன்

கொங்கு அலரும் = மொட்டு மலரும்

நறுந் தண் = மணம் வீசும் குளிர்ச்சியான

தார்க் = மாலை அணிந்தவன்

குகன் என்னும் குறி உடையான் = குகன் என்ற பெயரைக் கொண்டவன்

எப்படி பேச வேண்டும் என்று கம்பன் பாடம் நடத்துகிறான்.

சில பேர் பேச ஆரம்பித்தால் எப்படா முக்கிய விஷயத்தை சொல்லப் போகிறான் என்று  பொறுமை அத்துப்  போகும்.தேவை இல்லாத விஷயங்களை எல்லாம்   முதலில் சொல்லி விட்டு கடைசியில் சொல்ல வந்ததை  சொல்லுவார்கள்.

அது தவறு.

முதலில் சொல்ல வந்ததை,  எது முக்கியமானதோ, எது கேட்பவர்ககு தேவையோ  அதை முதலில் சொல்ல வேண்டும்.

பரதனுக்கு என்ன வேண்டும் இப்போது ?

கங்கை கரையை கடக்க வேண்டும், அதற்கு படகு வேண்டும். இராமன் இருக்கும் இடம் தெரிய  வேண்டும். ....

சுமந்தரன் சொல்லுகிறான்...

' கங்கை கரையை உடையவன்'

'கணக்கில் அடங்காத படகுகளை கொண்டவன் '

பரதனுக்கு  புரிந்திருக்கும், கங்கையை கடக்க குகனின் துணை வேண்டும் என்று.

அது மட்டும் அல்ல, இந்த குகன் உங்கள் இராமனின் நண்பன் என்றும் அறிமுகப் படுத்துகிறான். எனவே அவனுக்கு இராமன் இருக்கும் இடம் தெரியும்  என்பதும் பாரதனுக்குப் புரிந்திருக்கும்.

அது மட்டும் அல்ல, குகன் பெரிய பலசாலி என்று சொல்கிறான்.

சுமந்திரன் பாடு சங்கடமான ஒன்று.

குகன் நினைக்கிறான் பரதன் இராமனை கொல்ல வந்திருக்கிறான் என்று. எப்படியாவது  பரதனை அழிக்க வேண்டும் என்று படையை தயார் செய்து விட்டான்.

பரதனுக்கு குகன் மேல் பகை இல்லை. குகன் தன் மேல் கோபம் கொள்ள காரணம்  எதுவும் இல்லை என்ற நினைப்பு அவனுக்கு இருக்கும்.

என்ன செய்வது. மேலே போனால், குகன் பரதன் மேல் அம்பு எய்வது உறுதி.
மேலே போகவும் வேண்டும். குகனைப் பற்றி பரதனிடம் சொல்லவும் வேண்டும்.

எப்படிச் சொன்னான் என்று பார்ப்போம்




Saturday, January 7, 2017

இராமாயணம் - பரதன், குகன் - என் ஆர் உயிர் நாயகன் ஆளாமே

இராமாயணம் - பரதன், குகன் - என் ஆர் உயிர் நாயகன் ஆளாமே 


பக்தி என்பது உணர்வின் உச்சம்.

அது நம்பிக்கையில் பிறப்பது. அங்கே தர்க்கமும் அறிவும் விடை பெற்று போய் விடுகின்றன.

இராமனைக் கண்டு, அவனிடம் அரசை தர வேண்டும் என்று பரதன் தன்னுடைய மந்திரிகள் மற்றும் படையோடு வருகிறான். வந்த பரதன் கங்கையின் கரையில் காத்திருக்கிறான். ஆற்றைக் கடக்க வேண்டும்.

நமெக்கெல்லாம் கடலைக் கடக்க வேண்டும், அவனுக்கு ஆற்றைக் கடந்தால் போதும் , ஆண்டவனை அடைய.

மறு கரையில் குகன் இருக்கிறான்.

படையோடு வந்த பரதனைக் கண்ட குகன், அவனை தவறாக எடை போடுகிறான். இராமன் மேல் படை எடுத்தது வந்துவிட்டான் பரதன் என்று நினைக்கிறான் குகன். பரதன் மேல் சண்டை போட்டு அவனை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும்  என்று கோபத்தோடு நினைக்கிறான்.

"என் ஆருயிர் நாயகன் இராமனிடம் இருந்து வஞ்சனையாக அரசைப் பறித்துக் கொண்ட பரதன் இப்போது அவன் மேல் படை எடுத்து வந்திருக்கிறான். இவனைப் போக விட்டு விட்டால் இந்த உலகம் என்னை "நாய்" என்று இகழும் " என்கிறான்.

பாடல்

‘அஞ்சன வண்ணன், என் ஆர்
     உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
     மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ
     உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”
     என்று, எனை ஓதாரோ?


பொருள்

அஞ்சன வண்ணன் = கரிய நிறம் கொண்ட

என் = என்னுடைய

ஆர் உயிர் நாயகன் = அருமையான உயிர் போன்ற நாயகன் (இராமன்)

ஆளாமே = ஆளாமல்

வஞ்சனையால் = சூழ்ச்சியால்

அரசு எய்திய = அரசை பெற்றுக் கொண்ட

மன்னரும் வந்தாரே! = மன்னனாகிய பரதனும் வந்தாரே

செஞ் சரம் என்பன = சிவந்த அம்புகள்

தீ உமிழ்கின்றன = தீயை கக்குகின்றன

செல்லாவோ? = சொல்ல மாட்டார்களோ ?

உஞ்சு இவர் போய்விடின் = தப்பி இவர்கள் போய் விட்டால்

“நாய்க்குகன்” = நாய் குகன்

என்று, எனை ஓதாரோ? = என்று என்னைச் சொல்ல மாட்டார்களா ?

குகனுக்கு இராமன் மேல் , இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் இராமன் என்ற உருவத்தின் மேல் அவ்வளவு காதல்.

இராமனுக்கு ஆயிரம் சிறப்புகள் இருக்கலாம். குகனுக்குத் தெரிந்தது எல்லாம், 'கரிய நிறம் ' மட்டும்தான். அவன் உருவ அழகில் உருகியவன் குகன்.

எல்லோராலும் தவறாக புரிந்து கொள்ளப் படுவதே பரதனின் நிலையாக இருக்கிறது.

ஈன்ற தாய் புரிந்து கொள்ளவில்லை. வரத்தின் மூலம் அரசைப் பெற்றுக் தந்தால்  பரதன் ஏற்றுக் கொள்வான் என்று கைகேயி தவறாக எண்ணின்னாள் .

அவன் எனக்கு மகனே இல்லை என்று தசரதன் கூறினான்.

இலக்குவன் அவனை புரிந்து கொள்ளவில்லை.

கோசலை கூட ஒரு கணம் பரதனை தவறாக நினைத்தாள்.

இப்போது குகன் அவனை தவறாக நினைக்கிறான்.

அறத்தின் வழியில் செல்பவர்களை உலகம் எளிதாக புரிந்து கொள்வதில்லை என்பதற்கு பரதன் ஒரு  உதாரணம்.

உலகம் புரிந்து கொள்ளவில்லையே என்பதற்காக பரதன் ஒரு இடத்திலும் தன்  நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

பரதனை முழுமையாக புரிந்து கொண்டவன் ஒருவன் மட்டுமே - அது இராமன்.

யாருக்குப் புரிய வேண்டுமோ அவருக்குப் புரிந்தது.

அற வழியில் செல்பவர்களை உலகம் புரிந்து கொள்ளாவிட்டாலும் ஆண்டவன் புரிந்து கொள்வான்.

Friday, January 6, 2017

திருக்குறள் - உயர்ந்த செல்வம் எது ?

திருக்குறள் - உயர்ந்த செல்வம் எது ?


செல்வம் எது என்று என்னிடம் கேட்டால் - பணம், காசு, வீடு, மனை, பங்கு பத்திரங்கள், கார், நிலம் , நகை என்று அடுக்கிக் கொண்டே போவேன்.

இன்னும் சில பேர், இதெல்லாம் பெரிய செல்வம் இல்லை. கல்விச் செல்வம்தான் பெரிய செல்வம் என்று சொல்லுவார்கள்.

இன்னும் சில பேர், ஆரோக்கியம்தான் சிறந்த செல்வம் என்பார்கள். என்ன இருந்து என்ன பயன், நல்ல உடல் ஆரோக்கியம் இல்லை என்றல் எதையும் அனுபவிக்க முடியாது. எனவே உடல் ஆரோக்கியம்தான் உள்ளதிற்குள் சிறந்த செல்வம் என்பார்கள்.

இன்னும் சிலரோ, இதெல்லாம் பெரிய செல்வம் இல்லை, முக்தி அல்லது வீடு பேறு பெறுவதுதான் சிறந்த செல்வம் என்பார்கள்.

வள்ளுவரைக் கேட்டால் இது எதுவுமே பெரிய செல்வம் இல்லை...எல்லாவற்றையும் விட பெரிய செல்வம் "வேண்டாமை" என்ற எண்ணம் தான் என்கிறார்.

பாடல்

வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை 
யாண்டு மஃதொப்ப தில்.


சீர் பிரித்த பின்

வேண்டாமை அன்ன விழுச்  செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அது ஒப்பது இல்

பொருள்

வேண்டாமை = வேண்டாம் என்று சொல்லும் மனம் அல்லது எண்ணம்

அன்ன = போன்ற

விழுச்  செல்வம் = சிறந்த செல்வம்

ஈண்டு இல்லை  = இங்கு இல்லை

யாண்டும் = மற்றவற்றில்

அது ஒப்பது இல் = அதற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை

வள்ளுவர் ஏன் வேண்டாமை என்பதை சிறந்த செல்வம் என்கிறார் என்று சிந்திப்போம்.

வள்ளுவர் சொன்னார் என்பதற்க்காக அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை.

வேண்டும் வேண்டும் என்று நினைப்பதால் தான் நாம் மேலும் மேலும் உயர்கிறோம், சம்பாதிக்கிறோம்..வேண்டாம் என்று வைத்தது விட்டால் பின் உழைப்பு ஏது, செல்வம் ஏது ?

பின் ஏன், வேண்டாமை என்பதை சிறந்த செல்வம் என்கிறார் ?

நமக்கு எவ்வளவு தான் செல்வம் இருந்தாலும், நமக்கு மேலே ஆயிரம் பேர் இருப்பார்கள். அவர்களை விட நம் செல்வம் ஒன்றும் பெரியது இல்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

இருக்கும் வீட்டை விட பெரிய வீடு, பெரிய கார், பெரிய சேமிப்பு, பெரிய பட்டங்கள் என்று மேலும் மேலும் வேண்டும் வேண்டும் என்றே அலைந்து கொண்டு இருப்போம். எவ்வளவு சேர்த்தாலும் , பற்றாக் குறைதான். சேர்த்ததை அனுபவிக்க  முடியாது. சேர்த்த செல்வத்தை வேறு யாராவது கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம்.

எவ்வளவு சேர்த்தாலும், நிறைவு , திருப்தி என்பதே கிடையாது. மனம் அமைதி அடையாது.

வேண்டாம் என்று வைத்து விட்டால், ஓட்டம் நிற்கும். அலைச்சல் நிற்கும். நம்மை விட அவன் அதிகம் வைத்து இருக்கிறான். அவனைப் போல நமக்கும் வேண்டும் என்ற பொறாமை, போட்டி, எல்லாம் நிற்கும்.

கேட்க நல்லா இருக்கு. அப்படி யாராவது இருந்திருக்கிறார்களா ? அப்படி இருக்க முடியுமா ?

முதலில் மாணிக்க வாசகர்....


உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

வேண்டேன் , வேண்டேன் என்று  உருகுகிறார்.

அடுத்தது, தொண்டரடிப் பொடி ஆழ்வார்

பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

இந்திர லோகமே கிடைத்தாலும் வேண்டேன் என்று இருக்கிறார்.

அடுத்தது திருமூலர்

ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்

ஆசை விட விட ஆனந்தம் ஆமே.

கடவுளே கிடைத்தாலும் , அதற்கு ஆசைப் படாதீர்கள் என்கிறார்.

நம்ம ஆட்கள் எப்போதும் மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப் படுவார்கள்.

சொர்கத்துக்கு போனாலும், அதற்கும் மேல் ஏதாவது உண்டா என்று ஆசைப் படுவார்கள்

பரமபதம் போனாலும், அதற்கு மேல் நித்ய சூரிகளாக இருக்க ஆசைப் படுவார்கள்.

சொர்கத்துக்கு அப்பால் உள்ள இடத்துக்கு வாலி போனான் என்பார் கம்பர்

தன் அடி தாழ்தலோடும்
    தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி,
    ‘நீ இது பொறுத்தி ‘என்றான்;
என்னலும், உலகம் ஏழும்
    ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு
    அப்புறத்து உலகன் ஆனான்.

வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான் என்பது கம்பர் வாக்கு.

அங்கேயும் போய் , அதை விட சிறந்தது ஏதாவது இருக்கிறதா என்று தேடாதீர்கள்....அங்கும் "வேண்டாமையைப்" போல சிறந்த செல்வம் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்

யாண்டு மஃதொப்ப தில்...எப்போதும் அதைப் போல சிறந்த செல்வம் இல்லை என்கிறார்.

வேண்டாமை என்பது ஒரு செல்வம் என்று நினைத்தாவது பார்த்து இருக்கிறோமா ?

நினைத்துப் பார்ப்போம்.




Tuesday, January 3, 2017

நாலடியார் - யாரை நட்பாகக் கொள்வது ?

நாலடியார் - யாரை நட்பாகக் கொள்வது ?


நண்பர்கள் நம் வாழ்வில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார்கள். நம் வாழ்வின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவர்கள். அது நல்ல திசையிலும் இருக்கலாம், அல்லது மற்ற வழியிலும் இருக்கலாம்.

நண்பர்களை எப்படி தேர்தெடுப்பது ?

நம்மை விட படித்தவர்கள், செல்வத்தில், அதிகாரத்தில் , புகழில் உயர்ந்தவர்களை நாம் நட்பாக பெற விரும்புவோம். அதில் தவறு ஒன்றும் இல்லை.

நாலடியார் ஓர் எச்சரிக்கை தருகிறது.

படித்தவர்கள், அறிவாளிகள் , புத்திசாலிகள் சில சமயம் தங்களுடைய சுய நலத்துக்காக நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், வலிமை அற்ற சில நண்பர்களோ நாம் தவறே செய்திருந்தாலும் நம்மை மன்னித்து நம் மீது தொடர்ந்து அன்பு செலுத்துவார்கள். அப்படிப்பட்ட நண்பர்களை நாம் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.

யானை இருக்கிறதே, அது வலிமையானதுதான், கம்பீரமானதுதான் இருந்தாலும் சில சமயம் தன்னை பழக்கிய பாகனையே அது மிதித்து கொன்று  விடுகிறது. நாய் இருக்கிறதே அது சாதாரண விலங்குதான் . நாம் அதை எட்டி உதைத்தாலும், திட்டினாலும், அது நம் மீது தொடர்ந்து அன்பு காட்டும். நாம் அதன் மீது வேலை எறிந்தாலும் , அந்த வேல் உடலில் தைத்து இருந்து வேதனை தந்தாலும்  , அதையும் மறந்து அந்த நாய் நம் மீது அன்பு செலுத்தும். அது போல, நம் பிழை பொறுத்து, நம் மீது அன்பு கொண்டவர்களை நாம் நட்பாகக் கொள்ள வேண்டும்.

பாடல்

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.

பொருள்

யானை யனையவர் = யானை அனையவர் = யானை போன்றவர்

நண்பொரீஇ = நட்பைக் கொள்ளாமல்

நாயனையார் = நாய் அனையர் = நாய் போன்றவர்

கேண்மை = நட்பை

கெழீஇக் கொளல்வேண்டும்; = தழுவிக் கொள்ள வேண்டும்

யானை = யானையானது

அறிந்தறிந்தும் = தன்னை நன்றாக அறிந்த

பாகனையே கொல்லும் = பாகனையே கொல்லும்

எறிந்தவேல் = தன் மேல் எறியப்பட்ட வேல்

மெய்யதா = உடலில் தைத்து இருந்த போதும்

வால்குழைக்கும் நாய் = வாலை குழைத்து வரும் நாய்


அறிவும், செல்வமும், அதிகாரமும் நட்புக்கு அடிப்படை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அது சில சமயம் அதுவே ஆபத்தாகக் கூட முடியலாம்.

அன்புதான் நட்புக்கு அடிப்படை.

அது மட்டும் அல்ல,

நாம் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்றால், நம் நண்பர்கள் செய்யும் துன்பத்தையும்  பொறுத்துக் கொள்ள வேண்டும். நட்பில் சில சமயம் சில வேண்டாத   வார்த்தைகள் வந்து விழுந்து விடலாம், சந்தேகம் வரலாம், வேறு ஏதேனும்  மனக் கசப்பு வரலாம். அவற்றை மறந்து அன்போடு இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

நாயிடம் இருந்தும் பாடம் படிக்கலாம்.

நாய் என்றால் ஏதோ ஒரு கேவலமான பிராணி என்று தான் இலக்கியங்கள்  பேசி வந்திருக்கின்றன.

நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு என்பார் மணிவாசகர்.

நம்மையும் ஓர் பொருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்து என்பதும் அவர் வாக்கே.

அதை மாற்றி நாய் போன்ற குணம் உள்ளவர்களின் நட்பை கொள்ள வேண்டும் என்று சொல்கிறது  நாலடியார்.

நமக்கு எத்தனை நண்பர்கள் அப்படி இருக்கிறார்கள் ?

நாம் எத்தனை பேருக்கு அந்த மாதிரி நண்பர்களாய் இருக்கிறோம் ?


Monday, January 2, 2017

இராமாயணம் - பரதன் , குகன் - கிட்டியதமர்

இராமாயணம் - பரதன் , குகன் - கிட்டியதமர் 


பொதுவாக இறைவனிடம் வேண்டுபவர்கள் "கடவுளே என்னை காப்பாற்று" என்று வேண்டுவார்கள். என்னை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்று, இந்த வறுமையில் இருந்து காப்பாற்று, இந்த வலியில் இருந்து காப்பாற்று, இந்த பிறவிப் பிணியில் இருந்து காப்பாற்று என்று வேண்டுவார்கள்.

கடவுளுக்கு ஏதாவது துன்பம் வந்து விடக் கூடாது , அவன் நன்றாக இருக்க வேண்டும் என்ற காதலில் பல்லாண்டு பாடினார் பெரியாழ்வார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

திருவாசகத்தை தொடங்கிய மணிவாசகர், "நமச்சிவாய வாழ்க" என்று  தொடங்கினார்.

தசரதனுக்கு ஈமக் கடன்களை முடித்துவிட்டு , இராமனை கண்டு அவனை நாட்டுக்கு அழைத்து வர  பரதன் புறப்படுகிறான். கங்கை ஆற்றின் ஒரு கரையில் தங்கி இருக்கிறான். மறு கரையில் குகன் நிற்கிறான்.

பரதன் ஏதோ இராமன் மேல் சண்டை போடத் தான் வந்து விட்டான் என்று எண்ணி கோபம் கொள்கிறான் குகன்.


பாடல்


கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
‘கிட்டியது அமர் ‘எனக் கிளரும் தோளினான்.

பொருள் 

கட்டிய = இடையில் கட்டிய

சுரிகையன் = உடை வாளை உடையவன்

கடித்த வாயினன் = உதட்டை கடித்துக் கொண்டு நிற்கிறான்

வெட்டிய மொழியினன் = கோபத்தில் பேச்சு கோர்வையாக வரவில்லை. துண்டு துண்டாக வந்து விழுகிறது.

விழிக்கும் தீயினன் = கண்கள் தீயைக் கக்குகிறது

கொட்டிய துடியினன் = துடி என்பது ஒரு தோற் கருவி. போர் முரசை கொட்டுகிறான்

குறிக்கும் கொம்பினன் = கொம்பு என்பது ஒரு காற்று கருவி. போர் சங்கம் ஊதி விட்டான்.

‘கிட்டியது அமர் ‘ = கிட்டியது போர்

எனக் கிளரும் தோளினான் = என்று கிளர்ந்து எழும் தோளை கொண்டவன்

இராமனுக்கு ஏதோ ஒரு தீங்கு என்று முடிவு செய்துவிட்டான். இராமனை காக்க , அவனுக்காக போர் செய்ய புறப்பட்டு விட்டான்.

கிட்டியது அமர் என்ற வார்த்தை கொஞ்சம் உற்று நோக்கத் தக்கது.

தமர் என்றால் உறவு.

அமர் என்றால் போர்

கிட்டியது என்ற வார்த்தையையும் அமர் வார்த்தையையும் சேர்த்து வாசித்தால்

கிட்டியதமர் என்று வரும். உறவு கிடைத்தது என்ற பொருளில்

பிரித்து வாசித்தால்

கிட்டியது அமர் - போர் கிடைத்தது என்ற பொருளில்

சேர்ந்து இருந்தால் உறவு. பிரித்துப் பார்த்தால் பகை. சேர்ந்து இருக்க படிக்க வேண்டும்.

"சேர வாரும் செகத்தீரே" என்றார் தாயுமானவர்.

"ஒன்றாகக் காண்பதுவே காட்சி" என்றார் ஒளவையார்

இராமன் மேல் கொண்ட அளவுகடந்த பாசத்தால் அவனுக்கு ஒரு தீங்கு வந்து விடக் கூடாதே என்று குகன் தவிக்கிறான்.


அங்கே பாரதனோ...

Sunday, January 1, 2017

சிலப்பதிகாரம் - தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு,

சிலப்பதிகாரம் - தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு, 


சிலப்பதிகாரம் ஒரு ஆச்சரியமான நூல். வில்லன் என்ற பாத்திரமே இல்லாத ஒரு காப்பியம் என்றால் அது சிலப்பதிகாரம் தான். 

இராமாயணத்தில் - இராமன், இராவணன் 
பாரதத்தில் - பாண்டவர்கள், கௌவரவர்கள் 
கந்த புராணத்தில் - கந்தன் , சூரபத்மன் 

இப்படி எந்த கதையை எடுத்துக் கொண்டாலும், அதில் கதாநாயகன் இருப்பான், அவனுக்கு எதிராக ஒரு பலமான வில்லன் இருப்பான். வில்லனை முறியடித்துத்தான் கதாநாயகன் தன் வலிமையை காட்ட முடியும். 

சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு வில்லன் என்று யாரும் கிடையாது. 

விதிதான் வில்லன். 

நடக்கும் சம்பவங்கள் தான் வில்லனின் விளையாட்டு.

ஒரு சின்ன சம்பவம், கதையின் போக்கையே மாற்றி விடுகிறது. 

பாண்டிய மன்னன் அவையில் இருந்து நடனத்தை இரசித்துக் கொண்டிருக்கிறான். அவன் கண்கள் அங்கு நடனமாடும் பெண்கள் மேல் இலயிக்கிறது. அதை , அருகில் இருந்த அவன் மனைவி பார்த்து விடுகிறாள். அது அவளுக்கு பிடிக்கவில்லை. 'தலை வலிக்கிறது' என்று கூறிவிட்டு அந்தப் புறம் நோக்கிச் செல்கிறாள். அவளின் ஊடலை புரிந்து கொண்ட பாண்டியன் அவள் பின்னே செல்கிறான் அவளை சமாதனப் படுத்த. அந்த நேரத்தில் பொற் கொல்லன் வந்து கோவலனைப் பற்றி ஏதோ சொல்ல, தான் இருந்த மன நிலையில் , சரியாக ஆராயாமல் , பாண்டியன் கோவலனுக்கு தண்டனை கொடுத்து விடுகிறான். 

பாடல் 

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும், 
பாடல் பகுதியும், பண்ணின் பயங்களும், 
காவலன் உள்ளம் கவர்ந்தன’ என்று, தன் 
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து, 
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு, 
குலமுதல் தேவி கூடாது ஏக, 
மந்திரச் சுற்றம் நீங்கி, மன்னவன் 
சிந்து அரி நெடுங் கண் சிலதியர்-தம்மொடு 
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி, 
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின்- 
விழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக்

பொருள்

‘கூடல் மகளிர் = கூடத்தில் ஆடும் பெண்களின்

ஆடல் தோற்றமும் = ஆடலும், அவர்களின் தோற்றமும்

பாடல் பகுதியும் = பாடல் பகுதியும்

பண்ணின் பயங்களும் = பாடலின் பயன்களும்

காவலன் = அரசனின்

உள்ளம் கவர்ந்தன’ என்று, = உள்ளத்தை கவர்ந்தன என்று

தன் = தன்னுடைய

ஊடல் உள்ளம் = ஊடல் கொண்ட மனத்தை

உள் கரந்து ஒளித்து = உள்ளே ஒளித்து  வைத்து

தலைநோய் = தலைவலி

வருத்தம் = வருத்தம்

தன்மேல் இட்டு = தனக்கு இருப்பதாகக் கூறி

குலமுதல் தேவி = பாண்டிமாதேவி

கூடாது ஏக = சேர்ந்து இருக்காமல் உள்ளே போக

மந்திரச் சுற்றம் நீங்கி = மந்திரிகளை விட்டு நீங்கி

மன்னவன் = பாண்டிய மன்னன்

சிந்து அரி நெடுங் கண் = சிவந்த அழகிய நீண்ட கண்களை கொண்ட

சிலதியர் = பணிப் பெண்கள்

தம்மொடு = அவர்களோடு

கோப்பெருந்தேவி = அரசியின்

கோயில் = அரண்மனை

நோக்கி, = சென்று

காப்பு உடை  = காவலை உடைய

வாயில் = வாசலில்

கடை காண் = வாசலை அடையும் முன்பே

அகவையின் விழ்ந்தனன் = படியில் வீழ்ந்தான்

கிடந்து = தரையில் கிடந்து

தாழ்ந்துபல ஏத்திக் = பணிந்து பலவாறாக அவளை சமாதானம் செய்து

காமம் , பாண்டியனை அந்த நடனமாடும் பெண்களின் உடலை இரசிக்கத் தூண்டியது. அருகில் அவன் மனைவி இருப்பது கூடத் தெரியாமல். இன்னொரு பெண்ணை கணவன் இரசிப்பதை எந்த பெண்ணாலும் சகித்துக் கொள்ள முடிவதில்லை. 'தலை வலிக்கிறது ' என்று  சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள் .

'போனால் போகட்டும்...அவ எப்போதும் அப்படித்தான் ...அப்புறம் பேசிக் கொள்ளலாம் ...இந்த ஆட்டம் முடியட்டும் ' என்று பாண்டியன் இருக்கவில்லை.

தன் தவறை உணர்ந்தான். அவள் இருக்கும் அரண்மனைக்கு சென்று அவளை சமாதனப் படுத்த முயன்றான்.

அன்பான, இனிமையான தாம்பத்யத்தின் இலக்கணம் அது.

'நான் எவ்வளவு பெரிய ஆள். நீ யார் என்னை கேட்க ' என்று இருக்கவில்லை.

அவன் அந்த அளவுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கிறான் என்றால் அவர்களுக்குள் இருந்த தாம்பத்யம் புலப்படும்.

வெளியில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவியின் முன்னால் கணவன் , அவ்வளவுதான்.

அந்த ஒரு இக்கட்டான இடத்திலும் ஆண்களுக்கு ஒரு பாடத்தை வைக்கிறார் இளங்கோ அடிகள் .

ஆண் வெளியில் யாராக இருந்தாலும், வீட்டில் , தாய்க்கு பிள்ளைதான், தாரத்துக்கு கணவன் தான், பிள்ளைகளுக்கு தந்தை அவ்வளவுதான் இருக்க வேண்டும்.

இதை புரிந்து கொண்டால் வாழ்வு உறவுகள் பலப்படும்.