Sunday, May 14, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - வாளின் கொன்று அறம் தின்றான்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - வாளின் கொன்று அறம் தின்றான் 


பதவி ஆசை இன்று எவ்வளவு பெரிதாகப் போய் விட்டது. எப்படியாவது, எதை செய்தாவது பதைவியை அடையவேண்டும் என்று தவிக்கிறார்கள். பணம் கொடுத்து ஓட்டு வாங்கி, ஒவ்வாத கருத்து உள்ளவர்களிடம் கூட்டு வைத்து , எப்படியாவது பதவியை அடைய ஆசைப் படுகிறார்கள்.

அற வழியில் அல்லாத அரச பதவி தவறு என்று எண்ணி , அப்படி வந்த பதவியை இராமனிடம் திருப்பித் தர வந்திருக்கிறான் பரதன்.

"நீ ஏன் தவக் கோலம் கொண்டு இருக்கிறாய்" என்று கேட்ட பரதனிடம் , பரதன் சொல்கிறான்

"வழி வழியாக வந்த அரச பதவியை துறந்து நீ (இராமன்) தவக் கோலம் கொண்டு காடு வந்து இருக்கிறாய். அப்படி இருக்கும் போது , நான் மட்டும் எப்படி , மரபை மறந்து, நீதியில் இருந்து விலகி, அறத்தினை வாளால் கொன்று தின்று அரசை ஆள முடியும் "

என்றான்.

மிக மிக கடுமையான வார்த்தைகள். அறத்தை வாளால் கொன்று தின்ற என்று சொல்கிறான்.

பாடல்

‘பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் பதம்
துறந்து, மா தவம் தொடங்குவாய் என்றால்,
மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று
அறம் தின்றான் என, அரசுஅது ஆள்வெனோ?


பொருள்


‘பிறந்து = மூத்த மகனாக பிறந்து

நீயுடைப் = உனக்கு உடைய

பிரிவு இல் = உன்னை விட்டு பிரியாத

தொல் பதம் = பழைய முறைமையான அரசு

துறந்து, =துறந்து

மா தவம் = பெரிய தவம்

தொடங்குவாய் என்றால் = தொடங்குவாய் என்றால்

மறந்து = மறந்தும் கூட

நீதியின் திறம்பி = நீதியை விட்டு விலகி

வாளின் கொன்று = வாளால் கொன்று

அறம் தின்றான் = அறத்தினை தின்றான்

என = என்று

அரசுஅது ஆள்வெனோ? = அரசை ஆள்வேனோ ?


அரச பதவியை விட, அது தரும் சுகத்தை விட அறமே உயர்ந்தது என்று இருந்தான் பரதன்.

எப்படி ஒரு பாரம்பரியம் இருந்திருக்கிறது ? எந்த ஒரு உன்னத நிலையில் இருந்திருக்கிறோம்.

எங்கிருந்து , எங்கே வந்து விட்டோம்.

அற வழியில் வராத எதுவும் நல்லது இல்லை. அது அரச பதவியாக இருந்தாலும் சரி, வேறு எந்த பதவியாக இருந்தாலும் சரி.

Friday, May 12, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - சீதையின் துயரம்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - சீதையின் துயரம் 


தயரதன் இறந்த செய்தியை பரதன் சொல்லக் கேட்ட இராமன் துக்கத்தால் மயங்கி விழுகிறான். பின் மயக்கம் தெளிந்து எழுகிறான். அவனைத் தேற்றி, அவனுக்குப் பல அற உரைகள் கூறுகிறார் வசிட்டர். பின், தயாராதனுக்கு நீர் கடன் செய்கிறான் இராமன்.

பின், பர்ண சாலையை அடைந்து சீதையிடம் தயரதன் இறந்ததைப் பற்றி கூறுகிறான். அதைக் கேட்ட சீதை துக்கம் அடைகிறாள். கண்ணீர் விடுகிறாள்.

பாடல்

துண்ணெனும் நெஞ்சினாள் ; துளங்கினாள்; துணைக்
கண் எனும் கடல் நெடுங் கலுழி கான்றிட,
மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள், 
பண் எனும் கிளவியால் பன்னி, ஏங்கினாள்.

பொருள்

துண்ணெனும் நெஞ்சினாள் = மனதில் துணுக்குற்று

துளங்கினாள் = துவண்டாள்

துணைக் = துணை உடைய (இரண்டு)

கண் =கண்கள்

எனும் = என்ற

கடல் = கடல்

நெடுங் =பெரிய

கலுழி = கலங்கிய நீர்

கான்றிட = அருவி போல் பொழிந்திட

மண் எனும் = மண் என்ற

செவிலிமேல் = செவிலித் தாய் மேல்

வைத்த கையினாள் = கையை வைத்து , தன்னைத்தானே தாங்கிக் கொண்டு


பண் எனும் கிளவியால் = இனிய குரலில்

பன்னி,= புலம்பி

ஏங்கினாள் = ஏங்கினாள்


மாமனார் இறந்த செய்தியைக் கேட்ட மருமகள் வருந்தினாள். இதுதான் செய்தி.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். இதைப் போய்  பெரிய செய்தி என்று கம்பன் வேலை மெனக்கெட்டு ஒரு பாடல் போடுகிறானே என்று நாம் நினைக்கக் கூடும்.

காரணம் இருக்கிறது.


சீதை அரச குமாரி. செல்லமாக வளர்ந்தவள். காடு என்றால் என்ன என்று கூடத் தெரியாது.

வந்த இடத்தில் ஏதோ குடும்பப் பிரச்சனை. கைகேயி ஏதோ வரம் கேட்டாள். இராமனுக்கு வர வேண்டிய அரசு போனது. அவனை காட்டுக்கும் அனுப்பி விட்டாள் . இராமன் கூடவே சீதையும் கிளம்பி வந்து விட்டாள் .

ஒரு நிமிடம் சீதையின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

அரச வாழ்வை துறந்து, மர உரி உடுத்து கானகம் வந்தவளின் மன நிலை எப்படி இருக்கும் ? தயரதன் மேலும், கைகேயி மேலும், பரதன் மேலும் கோபம் வருமா வராதா ? எல்லோரும் சேர்ந்து தன்னையும் தன் கணவனான இராமனையும் இப்படி செய்து விட்டார்களே என்று தோன்றுமா இல்லையா ?

கோபம் இல்லாவிட்டால் கூட, "எனக்கு செய்த துன்பங்களுக்கு ஆண்டவன் தயரதனுக்கு தண்டனை கொடுத்தான் " என்று மனதுக்குள் நினைக்கலாம் அல்லவா ?

ஒரு சாதாரண பெண் என்றால் அப்படித்தான் நினைத்து இருப்பாள். நினைத்தால் அதை   தவறு என்று சொல்ல முடியாது.

திருமணம், பண்டிகை போன்ற நாட்களில் வீட்டில் சில பெண்கள் இருந்தால், ஒருத்திக்கு கொஞ்சம் உயர்ந்த விலையில் ஒரு பட்டுச் சேலையும் இன்னொரு பெண்ணுக்கு கொஞ்சம் விலை குறைந்த பட்டுச் சேலையும் எடுத்தால் , விலை குறைந்த சேலை பெற்ற பெண்ணின் மனம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும்.

பட்டுச் சேலை தான். கொஞ்சம் விலை வித்தியாசம் அவ்வளவுதான். இருந்தும் மனம் அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.


ஆனால், சீதை அப்படி நினைக்கக் கூட இல்லை. பண்பின் உச்சம் தொடுகிறாள்.

இறந்து போன தயரதனுக்காக வருந்தி அழுகிறாள்.

குடும்பத்தில் பிரச்சனைகள் வரும்.

ஒருவருக்கு கூட வரும். இன்னொருவருக்கு குறைச்சல் வரும். பெண்கள் அனுசரித்துப் போக வேண்டும். வித்தியாசங்களை ஊதி ஊதி பெரிசாக்கி குடும்பத்தில் பிளவை உண்டு பண்ணி விடக் கூடாது.

இராமனுக்கு வர வேண்டிய அரசை பரதனுக்கு கொடுத்தான் தயரதன். இராமன் அதை ஏற்றுக் கொண்டான். இராமன் ஏற்றுக் கொண்டதால் சீதையும் அதை முழு மான்தோடு ஏற்றுக் கொண்டாள்.

கணவன் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதற்கு துணை போக வேண்டும். "நீ வேணும்னா காட்டுக்குப் போ, என்னால் வந்து அங்கு கஷ்டப் பட முடியாது " என்று சொல்லி  இருக்கலாம். சொல்லவில்லை.

தயரதன் இறந்த செய்தி கேட்டு , அப்பாடா சிக்கல் தீர்ந்தது. பரதன் அரசை தர வந்திருக்கிறான் என்று நினைத்து இராமனை தனியாக அழைத்து "பேசாமல் அரசை ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் அயோத்தி போகலாம் ..." என்று சொல்லவில்லை.

இறந்த தயராதனுக்காக அழுகிறாள்.

பெண்களுக்கு பாடம் சொல்லித் தருகிறான் கம்பன். குடும்பத்தை எப்படி மேலே எடுத்துச் செல்ல வேண்டும் என்று.

பெண்கள் மனது வைக்காமல் குடும்பம் ஒரு அடி கூட மேலே போக முடியாது. மாமியார் கொடுமைக் காரியாக இருக்கலாம். கைகேயி போல. மாமியார் பேச்சைக் கேட்டுக் கொண்டு மாமனார் ஆடலாம். தயரதன் போல. அப்பா அம்மா சொல்லை கேட்டு, மறு பேச்சு கேட்காமல் கணவன் இருக்கலாம். இராமனைப் போல.

மனைவி என்ன செய்ய வேண்டும் என்று சீதையின் வாயிலாக கம்பன் காட்டுகிறான்.

பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.

சீதை மட்டும் கொஞ்சம் முரண்டி இருந்தால் , இராமனுக்கு ஒரு துளி பெருமையும் வந்திருக்காது.

அது இராமாயணம் அல்ல. சீதாயணம் என்பதே பொருத்தமான பெயர்.







Tuesday, May 9, 2017

இராமாயணம் - மரணம் பற்றிய பயம் போக

இராமாயணம் - மரணம் பற்றிய பயம் போக


தயரதன் இறந்தான் என்ற செய்தியை கேட்ட இராமன் மயங்கி விழுகிறான். பின் மயக்கம் தெளிந்த அவனுக்கு வசிட்டன் மரணத்தின் தன்மை பற்றி கூறுகிறான்.

கருத்தாழம் மிக்க பாடல்கள்.

"இன்ப துன்பம் என்ற அனுபவங்களால் பிறக்கும் இந்த பிறவிகள் பல கோடிகள் என்று நூல்கள் கூறுகின்றன.  அதை அறிந்த நீ எமனிடம் அருளை எதிர் பார்க்கலாகுமா ?"

என்று கேட்கிறான்.

பாடல்

உண்மை இல் பிறவிகள்,
     உலப்பு இல் கோடிகள்,
தண்மையில் வெம்மையில்
     தழுவின எனும்
வண்மையை நோக்கிய,
     அரிய கூற்றின்பால்,
கண்மையும் உளது எனக் 
     கருதல் ஆகுமோ?

பொருள்

உண்மை இல் = உண்மை இல்லாத. நிலை இல்லாத

பிறவிகள் = இந்த பிறவிகள், உயிர்கள்

உலப்பு இல் கோடிகள் = கணக்கில் அடங்காத கோடிக் கணக்கானவை

தண்மையில் = இன்பத்தில்

வெம்மையில் = துன்பத்தில்

தழுவின” = சேர்ந்தன அல்லது பிறந்தன

எனும் = என்ற

வண்மையை = உயர்ந்த செய்தியை

நோக்கிய = அறிந்த பின்

அரிய கூற்றின்பால் = எமனிடம்

கண்மையும் = அருள் (கண்ணின் மை . கண்ணின் தண்மை அருள் நோக்கு)

உளது எனக் = உண்டு என்று

கருதல் ஆகுமோ? = நினைக்கலாமா ?


வாழ்க்கை இருக்கிறது. வாழ்கிறோம். ஒரு நாள் அது முடிந்து போகிறது. நம் வாழ்க்கை முடிந்தாலும், மற்றவர்கள் வாழ்க்கை முடிந்தாலும் துக்கம் வருகிறது. சோகம் நம்மை பிடித்துக் கொள்கிறது. நம் வாழ்க்கை முடிந்து விடுமே என்ற பயம், சோகம் இருக்கிறது. மரணத்தை கண்டு கலங்காதவர் யார். இறப்பதற்கு யாருக்குத் தான் விருப்பம் இருக்கும்.

ஏன் இந்த துக்கம் வருகிறது ? ஏன் மரணம் இவ்வளவு துன்பகரமாக இருக்கிறது ? அந்த துன்பத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று வசிட்டன் சொல்லுகிறான் ?

மரணம் துன்பமாக இருக்கிறது ஏன் என்றால் நாம் அனுபவங்கள் தடை பட்டுப் போகும்.  அனுபவங்கள் தொடராது.

எந்த மாதிரி அனுபவங்கள் ?

இன்பமான அனுபவங்கள் ... நல்ல உணவு, உடை, இசை, நாம் வாசிக்கும் புத்தகங்கள், பார்க்கும் சினிமா, டிவி, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு கலந்து பழகும் இனிமையான நேரங்கள் போன்றவற்றை அனுபவிக்க முடியாது.

நடுவில் சில துன்பங்கள் வரலாம். நாம் அதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு. நல்லதோ கெட்டதோ , இரண்டு அனுபவங்களின் தொகுப்பு தான் வாழ்க்கை. அதைத் தாண்டி ஒன்றும் இல்லை.

சரி. இந்த அனுபவங்களை விட்டு சற்று விலகி நின்றால் ? அனுபவங்களை சேர்த்துக் கொண்டே போகாமல் இருந்தால் ? நடப்பவைகளை ஏதோ யாருக்கோ நடக்கிறது என்று ஒரு மூன்றாம் மனிதரைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால் மரணம் வலிக்காது.

நாம் அனுபவிக்கிறோம். சுகமான அனுபவங்கள் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். நீண்ட நாள் அவை வேண்டும் என்று விரும்புகிறோம். அது மரணத்தின் மூலம் தடை படும் போது எமனை திட்டுகிறோம்.

தவறு யாரு மேல் ?

துன்பம் எமனிடம் இருந்து வரவில்லை.

நம் ஆசையினால். நமது அனுபவங்களின் மேல் கொண்ட பற்றினால் , அவை தொடர வேண்டும் என்ற விருப்பத்தால் ...மரணம் நமக்கு துன்பமாகத் தெரிகின்றது.

இதை அறிந்து கொண்டால் மரணம் பற்றை பயமோ , வலியோ இருக்காது.

ஆழமான அர்த்தம் கொண்ட பாடல். தனிமையில் இருந்து சிந்தியுங்கள்.

திரை விலகலாம். உண்மையின் தரிசனம் கிடைக்கலாம்.





Monday, May 8, 2017

திருக்குறள் - அறிவுடையோர் குணம்

திருக்குறள் - அறிவுடையோர் குணம் 


அறிவு என்றால் என்ன ?

புத்தக அறிவா ? அனுபவ அறிவா ? கேள்வி அறிவா ? பட்டங்களா ? இசை, விளையாட்டு, நடனம் போன்றவை அறிவு சார்ந்த துறைகள் இல்லையா ? வீட்டை பராமரிப்பது, சமைப்பது இது அறிவின் பால் சேராதா ?

பின் இதுதான் அறிவு ?

வள்ளுவர் சொல்கிறார் - அறிவு உள்ளவர்களுக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. அது என்ன என்றால், அவர்கள் வருவதை முன்பே அறிந்து கொள்வார்கள். அது மட்டும் அல்ல, அப்படி அறிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிர்ச்சி அடையும்படி ஒரு துன்பம் வராது.

வரும் துன்பத்தை முன்பே அறிந்து கொண்டு அதில் இருந்து தங்களை காத்துக் கொள்பவர்களே அறிவுள்ளவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்

பொருள்

எதிரதாக் = எதிர்த்து + ஆ = எதிர் காலத்தில் ஆகும்

காக்கும் = காத்துக் கொள்ளும்

அறிவினார்க்கு = அறிவுடையவர்களுக்கு

இல்லை =இல்லை

அதிர = அதிர்ச்சி தரும்படி

வருவதோர் = வருகின்ற ஒரு

நோய் = நோய் , துன்பம்


சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

பெரும்பாலோனோர் துன்பம் வந்த பின் , ஐயோ துன்பம் வந்து விட்டதே, என்ன செய்வது, எப்படி இதை சமாளிப்பது என்று அங்கும் இங்கும் அலைவார்கள். யாரிடம் உதவி கேட்கலாம், என்ன செய்யலாம் , எப்படி செய்யலாம் என்று பதறுவார்கள். எல்லோர் மேலும் எரிந்து விழுவார்கள். தேவை இல்லாமல் கோபம் கொள்வார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது  என்று தன்னிரக்கத்தில் தத்தளிப்பார்கள்.

இது துன்பம் வந்தபின் அதை சமாளிக்கும் வழி.

அறிவுள்ளவர்கள் செய்யும் செயல் அல்ல.

அறிவுள்ளவர்கள், துன்பம் வருவதற்கு முன்னே அதைப் எதிர்பார்த்து, அது வராமல் இருக்கும்  வழிகளை மேற்கொள்வார்கள்.

எப்படி ?

சில உதாரணங்களை பார்ப்போம்.

மாணவப் பருவத்தில் சரியாக படிக்காமல் இருந்தால் பின்னால் துன்பம் வரும் என்று அறிந்து கொண்டு சரியாகப் படித்தால் ஏழ்மை என்ற துன்பத்தில் இருந்து தப்பிக்கலாம்.

உண்ணும் உணவில் கட்டுப்பாடு இல்லை என்றால் பின்னால் சர்க்கரை நோய் வரும், உடல் பருமன் சார்ந்த நோய்கள் வரும். இதை அறிந்து கொண்டு கட்டுப்பாட்டோடு இருந்தால் அந்த நோய்களால் வரும் துன்பத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அளவுக்கு மீறி கடன் வாங்கினால் வட்டி கட்ட வேண்டும், முதலை திருப்ப வேண்டும் , அந்த சமயத்தில் கையில் காசு இல்லை என்றால் சங்கடம்தான். கடன் வாங்கும்போது பின்னால் வருவதை யோசிக்க வேண்டும்.

இது தனி மனிதனுக்கு மட்டும் அல்ல. வியாபார நிறுவனங்களுக்கு, அரசாங்கத்துக்கு எல்லாம் பொருந்தும்.

பெரு மழை வந்தால் வெள்ளம் வரும். வெள்ளம் வந்தால் மக்கள் துன்பப் படுவார்கள். பொருள் சேதம் , உயிர் சேதம் வரும் என்று அறிந்து, ஏரி , கம்மாய்களை  தூர் எடுத்து, வெள்ளம் வடிய வாய்க்கால் வெட்டி வைத்தால் வெள்ள நீரை சேமித்து  அதன் மூலம் பயன் பெறலாம்.

மழை பொய்த்தும் போகும். வறட்சி வரும். நீரை தேக்கி வைத்தால் , வறட்சியை சமாளிக்க முடியும். வறட்சி வரும்முன் செய்ய வேண்டிய வேலை அது. அப்படி செய்தால், வறட்சியால் வரும் துன்பத்தை குறைக்க முடியும்.

பெரிய நிறுவனங்கள் பட்ஜெட் போடுவார்கள் எதற்கு ? என்ன நடக்கப் போகிறது என்று அறிந்து கொள்ள. ஒரு வேளை விற்பனை குறைந்து விட்டால் ? செலவு அதிகமாகி விட்டால் என்ன செய்வது என்று அறிந்து கொள்ள.

வரம் துன்பத்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது. அதில் இருந்து காத்துக் கொள்ளும் வழிகளை அறிந்து செயல் பட வேண்டும். துன்பத்தில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். அது தான் அறிவுள்ளவர் செயல்.

இந்த குறளை படித்தபின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்றால் , உங்களுக்கு என்ன எல்லாம் துன்பம் வரக் கூடும் என்று ஒரு பட்டியல் போடுங்கள்.  ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் எப்படி காத்துக் கொள்ளலாம் என்றும்  வழி காணுங்கள்.

வள்ளுவர் சொல்லுவதை கூர்ந்து கவனியுங்கள்.

என்னதான் வரும் துன்பத்தை பற்றி கனக்குப் போட்டு , அதை சமாளிக்க வழி தேடினாலும், துன்பம் வராமல் போகுமா ?

"அதிர வருவதோர் நோய் " என்றார்.

நோய் அல்லது துன்பம் வரும். அதனால் பெரிய அதிர்ச்சி இருக்காது. அதிர்ச்சி தரும் துன்பம் இருக்காது. ஏன் என்றால் அந்த துன்பம் வரும் வரும் என்று நீங்கள் மனதுக்குள் எதிர்பார்த்து இருப்பதால், அது உண்மையிலேயே வரும் போது ஒரு அதிர்ச்சி இருக்காது.  உங்கள் மனம் அதை எதி கொள்ளத் தயாராக இருக்கும். துன்பம் ஒரு அதிர்ச்சியைத் தராது.

அதிர்ச்சி இல்லை என்றால், தெளிவாக, பதற்றம் இல்லாமல் அந்த துன்பத்தை கையாள முடியும்.

முழு உடல் பரிசோதனை செய்யுங்கள். என்ன நோய் வர வழி இருக்கிறது என்று கண்டு கொள்ளுங்கள். அதற்கு தகுந்த மருந்து, மாத்திரை சிகிச்சைகளை மேற் கொள்ளுங்கள்.

உங்கள் நிதி நிலவரத்தை ஆராயுங்கள். என்ன பெரிய செலவு வரும் , அதை எப்படி சமாளிப்பது என்று திட்டம் போடுங்கள்.

காப்பீடு (insurance ) இல்லை என்றால் உடனே எடுங்கள்.

எதிர் காலத்தில் வரும் துன்பத்தில் இருந்து தப்பிக்க இப்போதே வழி தேடுங்கள்.

வாழ்க்கை இனிமையாக இருக்கும்.










Sunday, May 7, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எது துணை

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எது துணை 


கானகம் சென்ற இராமனை கண்டு அவனிடம் அரசை மீண்டும் தர வந்தான் பரதன். வந்த இடத்தில் தயரதன் இறந்த செய்தியை சொல்கிறான் பரதன். அதை கேட்ட இராமன் மயங்கி விழுகிறான். அவனை மயக்கம் தெளிவித்து அவனுக்கு எல்லோரும் தேறுதல் கூறுகிறார்கள்.

மரணத்தின் தன்மை பற்றி வசிட்டன் கூறத் தொடங்குகிறான். ஆழ்ந்த கருத்து உடைய ஏழு பாடல்கள்.

அதில் முதல் பாடல்.

"மறை நூல்களின் எல்லை கண்ட நீ (இராமா), இறப்பும் பிறப்பும் உயிர்களுக்கு இயற்கையானது என்பதை எப்படி மறந்தாய் ? மனிதனுக்கு இல்லறம் , துறவறம் தவிர வேறு ஒரு துணையும் இல்லை "

என்றான்.

பாடல்

துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை,
     பொருந்தும் மன்னுயிர்க்கு;
“இறத்தலும் பிறத்தலும்
     இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின்
     வரம்பு கண்ட நீ?


பொருள்


துறத்தலும் = துறவறமும்

நல் அறத் துறையும் = நல்ல அறத்தின் துறையும்

அல்லது = அல்லாமல்

புறத்து = வெளியே

ஒரு துணை இலை = ஒரு துணையும் இல்லை

பொருந்தும் = பொருந்திய

மன்னுயிர்க்கு =நிலைத்த உயிர்களுக்கு

“இறத்தலும் = இறப்பதும்

பிறத்தலும் = பிறப்பதும்

இயற்கை” என்பதை =இயற்கையானது என்பதை

மறத்தியோ, = மறந்து விட்டாயா ?

மறைகளின் = மறை நூல்களின்

வரம்பு கண்ட நீ? = எல்லையை கண்ட நீ


இறப்பதும் பிறப்பதும் இயற்கைதான். நாம் தினமும் காண்கிறோம். இருந்தும் நெருங்கிய ஒருவர் இறந்து போனால் துக்கம் வருகிறது. ஆனானப்பட்ட இராமனே மயங்கி  விழுகிறான். புலம்புகிறான்.

மறைகளின் எல்லை கண்டவனுக்கே அப்படி என்றால் நாம் எம்மாத்திரம் ?

துன்பம் ஏன் வருகிறது ? பற்றினால் துன்பம் வருகிறது.

அப்படி என்றால் பற்று இல்லாமல் இருக்க முடியுமா ? பற்றற்று இருக்க நாம் எல்லாம் என்ன துறவிகளா ? சாமியார்களா ? எல்லோரும் துறவியாக முடியுமா ?

வசிட்டன் சொல்லவந்தது அது அல்ல.

நாம் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துகிறோம். அப்படி யார் மேல் அன்பு செலுத்துகிறோமோ அவர்கள் இறந்து போனால் நமக்கு துன்பம் வருகிறது.

சற்று யோசிப்போமா ?

நாம் அன்பு செலுத்துபவர் இறந்து போனால் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்த முடியாதா ? ஏன் அந்த ஒருவர் மேல் மட்டும் அன்பு செலுத்த வேண்டும் ? மற்றவர்கள் மேல் அன்பு செலுத்த முடியாதா ?

உண்மை என்ன என்றால் , நாம் அன்பு செலுத்துவதில் இல்லை சிக்கல். அன்பை பெறுவதில். யார் இறந்து போனாரரோ அவரிடம் இருந்து அன்பு நமக்கு கிடைக்காது. அவர் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் நமக்கு துணையாக இருந்து இருக்கிறார். அந்த துணை இப்போது போய் விட்டது.

நாம் அன்பு செலுத்தவும், நாம் அன்பை பெறவும், வேறு ஏதோ ஒரு விதத்திலும் அவர் நமக்கு துணையாக இருந்திருக்கிறார். அந்த துணை போய் விட்டதால் துக்கம்.

வசிட்டர் சொல்கிறார், மனிதனுக்கு இரண்டே துணைகள்தான் உண்டு.

ஒன்று , அற வழியில் செல்லுதல். பின்னால் துறவறம் என்று சொல்லுவதால், முதலில் உள்ள அறத்தை இல்லறம் என்று கொள்ளலாம். 

இன்னொன்று, துறவறம்.

இல்லறம், துறவறம் இது இரண்டும்தான் துணை.

இல்லறம் என்றால் கணவன், மனைவி, பிள்ளைகள் இது தானே. அப்படி என்றால் அவர்கள் துணை தானே. அவர்கள் இல்லாமல் போனால் துன்பம் வராதா ?

இல்லறம் என்றால் இல்லம் + அறம். இல்லத்தில் இருந்து செய்யும் அறம்.

அதையும் காலத்தில் விட்டு விட்டு துறவறம் மேற் கொள்ள வேண்டும். துறவு + அறம்.

அறம் ஒன்றுதான் துணை. வேறு எதுவும் துணை இல்லை.



"துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது"

அது என்ன "நல் அறத் துறை"

ஆறு போய் கொண்டே இருக்கும். அங்கங்கே படிகள் அமைத்து மக்கள் ஆற்றில் இறங்கி நீராடுவார்கள். அதற்கு படித்துறை என்று பெயர்.

அறம் என்ற ஆறு ஓடிக் கொண்டே இருக்குறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இறங்கி அந்த அறத்தை அறிகிறார்கள். படித்துறை போல அது அறத்துறை.

அது மதமாக இருக்கலாம், கொள்கையாக இருக்கலாம், அவரவர் விரும்பும் தர்மமாக இருக்கலாம், செய்யும் வேலையாக இருக்கலாம்...எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அறத்தின் ஏதோ ஒரு கூறு. (துறை என்றால் department என்று இப்போது வைத்து இருக்கிறார்கள்.)

சைவத் துறை விளங்க என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

வேத நெறி தழைத்து ஓங்க, மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்.

சைவம் ஒரு துறை. வைணவம் ஒரு துறை. கிறித்துவம் ஒரு துறை.

அறத்தின் ஏதோ ஒரு துறையைப் பற்றிக் கொள்ள வேண்டும். அது தான் நமக்குத் துணை.

நாம் எதை துணை என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். 

Wednesday, May 3, 2017

பழமொழி - தாம் தர வாரா நோய்

பழமொழி - தாம் தர வாரா நோய் 


பழமொழி என்பது அனுபவத்தின் சாரம். பட்டு , தெளிந்து சொன்னது. பழைய மொழிதானே , இந்த காலத்துக்கு ஒத்து வருமா என்று நினைத்து ஒதுக்கி விடக் கூடாது. ஆராய்ந்து பார்த்து அதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்வதில் ஒன்றும் தவறு இல்லை அல்லவா.

ஏதாவது துன்பம் வந்தால், எனக்கு மட்டும் ஏன் இப்படி துன்பம் வருகிறது, நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கே இந்த மாதிரி துன்பங்கள் ஏன் வருகிறது என்று நொந்து கொள்பவர்கள் பலர்.

ஏதோ தாங்கள் ஏதோ தவறே செய்யாதவர்கள் போல.


"தாஅம் தரவாரா நோய்." என்கிறது பழமொழி.

அப்படினா என்ன ?

நாமே  நமக்கு துன்பம் செய்து கொள்வது அல்லாமல் வேறு யாரும் நமக்கு துன்பம் செய்வது இல்லை

என்று அர்த்தம்.

அது சரியா என்று யோசித்துப் பார்ப்போம்.

பெரியவர்கள், படித்தவர்கள், அறிஞர்கள் சொல்வதை கேட்டிருக்க மாட்டோம். எனக்குத் தெரியாதா என்று மனம் போன வழியில் சென்றிருப்போம். அது எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போய் , இறுதியில் துன்பத்தில் தள்ளி விடும்.

தவறான வழியில் செல்பவர்கள் தங்களுக்கு தாங்களே துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

"வந்திருப்பவன் சாதாரணமான ஆள் இல்லை. அவன் கேட்கும் மூன்றடி நிலத்தை தானமாக கொடுக்காதே " என்று குருவான சுக்கிராச்சாரியார் கூறினார். "நான் எவ்வளவு பெரிய அரசன். எனக்குத் தெரியாத " என்று குரு வார்த்தையை மீறி மூன்றடி நிலம் தானம் கொடுக்க ஒத்துக் கொண்டான் மாவலி சக்ரவர்த்தி. இருந்த சொத்தெல்லாம் இழந்து, பாதாளத்தில் அழுந்தினான் .

பெரியவர் சொல் கேளாமல், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவ போக்கில் சென்றதனால் தேடிக் கொண்ட வினை அது.

பாடல்

ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே
தாஅம் தரவாரா நோய்.

பொருள்

ஆஅம் = ஆம்

எனக்கெளி தென்றுலகம் = எனக்கு எளிது என்று உலகம்

ஆண்டவன் = ஆண்டவன் (மாவலி)

மேஎந் துணையறியான் = மேவும் துணை அறியான்

மிக்குநீர் = மிகுந்த நீர்

பெய்திழந்தான் = பெய்து இழந்தான்

தோஓ முடைய = குற்றம் உள்ள காரியங்களை

தொடங்குவார்க் கில்லையே = தொடங்குவார்க்கு இல்லையே

தாஅம் = தாமே

தர = தருவதைத் தவிர

வாரா நோய் = (வேறு) நோய் வராது  . (நோய் = துன்பம்)


நல்லவர்களை, படித்தவர்களை , அனுபவம் உள்ளவர்களை துணையாகக் கொள்ள வேண்டும்.

அவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.

எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவ போக்கு துன்பத்தில் முடியும்.

பழைய மொழி தான். சிந்தித்துப் பார்ப்போம். சரி என்றால் எடுத்துக் கொள்வோம்.




Monday, May 1, 2017

திருக்குறள் - எதை கேட்க வேண்டும்

திருக்குறள் - எதை கேட்க வேண்டும் 


எதை கேட்பது ?

செய்திகளும் , சேதிகளும் நம் காதுகளில் அருவி போல் கொட்டிக் கொண்டே இருக்கின்றன.

எதை எடுப்பது, எதை விடுவது என்று புரியாமல் எல்லாவற்றையும் நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அந்த செய்திகள் நமக்குள் விளைவிக்கும் விளைவுகளை அறியாமல் எல்லாவற்றையும் உள்ளே வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

வள்ளுவர் சொல்கிறார் எதை கேட்க வேண்டும், எவ்வளவு கேட்க வேண்டும்.

அவர் சொல்வதை கேப்டப்போமா ?

பாடல்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.

பொருள்

எனைத்தானும் = எவ்வளவு சிரியதாயினும்

நல்லவை கேட்க = நல்லவற்றை கேட்க

அனைத்தானும் = கேட்ட அளவுக்கு

ஆன்ற = நிறைந்த

பெருமை தரும் = பெருமை தரும்


நல்லவற்றை கேட்டால் பெருமை தரும். அவ்வளவுதானே ? இது என்ன பெரிய பெரிய விஷயம். இது தான் எல்லோருக்கும் தெரியுமே என்று நினைக்கலாம்.

சற்று ஆழ்ந்து சிந்தித்தால் அதில் உள் அடங்கி இருக்கும் பொருள் விளங்கும்.

எனைத்தானும் = எவ்வளவு சிறிதாயினும். சிறியது என்பது கேட்கும் பொருளாக இருக்கலாம், கேட்கும் கால அளவாக இருக்கலாம்.

ஒவ்வொரு நாளும், 5 நிமிடம், 10 நிமிடம் கூட போதும். நல்லதை கேட்க வேண்டும்.

நல்லவை கேட்க = நல்லவற்றை கேட்க வேண்டும். அது தான் சிக்கல். எது நல்லது ? எப்படி கண்டு பிடிப்பது ? டிவி செய்திகள், யார் யாரை கொலை செய்தார்கள், யாரை யார் ஏமாற்றினார்கள், சீரியல்கள், ஒன்றுக்கும் உதவாத திரைப்படங்கள், நகைச்சுவை என்ற பெயரில் கொட்டப்படும் குப்பைகள்...இவை எல்லாம் நல்லவையா ?

நல்லது என்பதற்கு இரண்டு பரீட்சை உண்டு. அதில் தேறினால் அது நல்லது.

அது, ஒரு செய்தி நமக்கு இம்மைக்காவது அல்லது மறுமைக்காவது அல்லது இரண்டுக்கும் பயனுள்ளதாக இருக்குமா ?

ஒன்றை கேட்பதனால் இந்தப் பிறவியில் ,இந்த வாழ்க்கையில் ஏதாவது பயன் இருக்குமா ? பிறவி முடிந்த பின் , மறு உலகில் நன்மை பயக்குமா ? என்று அறிய வேண்டும்.

மறு பிறப்பு, சொர்கம் இவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. இந்த வாழ்க்கைக்கு நன்மை பயக்குமா ? நன்மை என்றால் எந்த விதத்தில் நன்மை என்று அறிந்து கொண்டு கேட்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 5 நிமிடம் நல்ல விஷயங்களை கேட்டால் என்ன பெரிய பலன் வந்து விடும் என்று நாம் நினைக்கலாம்.

சிறு சிறு மழைத் துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாய் மாறி பலன் தருவது போல , சின்ன சின்ன நல்ல விஷயங்கள் பின்னாளில் பெரிய நனமை பயக்கும்.


ஆன்ற = ஆன்ற என்றால் அகன்ற , பெரிய என்று பொருள். ஆன்றோர். கொஞ்சம் கொஞ்சம் கேட்டால் கூட, கேட்ட அளவுக்கு  மிகுந்த பெருமை தரும் என்கிறார்.

இதில் மறைந்து கிடைக்கும் பொருள் எது என்ன என்றால், நல்லதை கேட்டால் ஆன்ற பெருமை தரும் என்றால், தீயதை கேட்டால் ?

தீயனவற்றை கேட்டால்  பெரிய தீமை வந்து சேரும் என்பது உணர பட வேண்டிய ஒன்று.

நல்லது எல்லாவற்றை கொஞ்சம் கேட்டாலும் அந்த அளவுக்கு ஆன்ற தீமையை தரும்.

நல்லது அல்லாதவற்றை கேட்கவே கூடாது.

சரி வள்ளுவர் கேட்பதை மட்டும்தானே சொல்லி இருக்கிறார் ? பார்ப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. படிப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. தீயதை படிக்கலாமா ?

பார்ப்பதை தவிர்க்க இமை இருக்கிறது. கண்ணை மூடிக் கொண்டால் பார்க்காமல் இருந்து விடலாம்.

படிப்பதை எளிதாக நிறுத்தி விடலாம்.

காதுக்கு ஒரு மூடி இல்லை. காதில் விழுவதை நம்மால் தடுக்க முடியாது.

எங்கிருந்து தீய சொற்கள் வருகின்றனவோ, அங்கிருந்து விலகி விடவேண்டும். அங்கேயே இருந்தால் அவை காதில் விழுந்து கொண்டே இருக்கும். தடுக்க முடியாது. தீயவர்கள் இருக்கும் இடம் விட்டு உடனே விலகி விட வேண்டும். டீவியை உடனே நிறுத்தி விட வேண்டும். மாறாக அதிக சப்தம்  வைத்து கேட்டுக் கொக்ண்டிருக்க கூடாது.

நல்லதைக் கேளுங்கள். எவ்வளவு கொஞ்சமாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் ஒரு சுவை வந்து விட்டால், மேலும் மேலும் கேட்கத் தூண்டும்.

நல்லதை, கேட்க கேட்க நல்லதுதான்.