Saturday, August 26, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - தெய்வத்தாலே தேறும் வழி

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - தெய்வத்தாலே தேறும் வழி



ஒரு புறம் தன் மனைவியை , கானகத்தில், ஆல மரத்தின் கீழ் இளைப்பாறும் போது கொன்றவன் இந்த வேடன் தான் என்று குற்றம் சுமத்தும் வேதியன்.

நான் கொல்லவில்லை , யார் கொன்றார்கள் என்றும் எனக்குத் தெரியாது என்று சாதிக்கும் வேடன் மறுபுறம்.

இதற்கு அற நூல்கள் என்ன சொல்கின்றன என்று அமைச்சர்களிடம் கேட்டான் பாண்டிய மன்னன்.

அவர்களும் அற நூல்களை ஆராய்ந்தபின், இதை புத்தகம் படித்து அறிந்து சரி செய்ய முடியாது. இது தெய்வத்தால்தான் ஆகும் என்று கூறினார்.

பாடல்

என்னா உன்னித் தென்னவன் இன்னம் இது முன்னூல் 
தன்னால் ஆயத்தக்கது அதை என்றன் தகவிற்று தன் 
அன்னார் அந்நூல் ஆய்ந்து இது நூலால் அமையாது                                                          ஆல் 
மன்னா தெய்வத் தாலே தேறும் வழி என்றார்.


பொருள்

என்னா உன்னித் = என்று எண்ணி

தென்னவன் = பாண்டிய மன்னன்

இன்னம்  இது = இனிமேல் இது

முன்னூல் = முன்பு சொல்லப் பட்ட அற நூல்கள்

தன்னால் = அவற்றின் மூல

ஆயத்தக்கது = ஆராயத் தக்கது

அதை = அதை

என்றன் = எனக்கு

தகவிற்று = உயர்ந்தவர்கள் (அமைச்சர்கள்)

தன் அன்னார் = தன்னைப் போன்றவர்கள்

அந்நூல் = அந்த நூல்களை

ஆய்ந்து   = ஆராய்ந்த பின்னால்

இது நூலால் அமையாது    = இதை நூல் அறிவின் மூலம் தீர்க்க முடியாது

மன்னா  = மன்னவனே

தெய்வத் தாலே = தெய்வத்தால் மட்டுமே

தேறும் வழி  = சரியாகும் வழி

என்றார். = என்று கூறினார்கள்


"தகவிற்று தன் அன்னார் அந்நூல் ஆய்ந்து"

தகவு என்றால் தகுதி உடையவர்.   

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தால் காணப் படும்.


என்பது வள்ளுவம். 

ஒருவன் தகுதி உடையவனா , அல்லது தகுதி இல்லாதவனா என்பது அவனுக்குப் பின் நிற்கும் அவனுடைய புகழோ , பழியோ அதைப் பொறுத்தே அமையும் என்கிறார் வள்ளுவர். 

அது பற்றி விரிவாக இன்னொரு பிளாகில் பார்ப்போம். 

தகுதி உடைய  உடையவர்களை  பாண்டிய மன்னன் அமைச்சர்களாக கொண்டிருந்தான். 

எப்போதும் நல்லவர்களை , நம்மை விட அறிவும் தகுதியும் உள்ளவர்களை நம்மோடு வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல, அவர்கள் சொல்வது எவ்வளவு கடினமாக இருந்தாலும் , அதை கேட்டு நடக்க வேண்டும். 

இடிப்பாரை இல்லா எமரா மன்னன் கெடுப்பார் இன்றியும் கெடும் என்பார் வள்ளுவர். 

நம்மை , நல்லது சொல்லி திருத்தும் நண்பர்கள் இல்லை என்றால், எதிரிகள் இல்லாமலேயே கூட நம் வாழ்வை கெட்டுப் போகும். 

அப்படிப்பட்ட நல்லவர்கள், அற நூல்களை ஆராய்ந்த பின், இந்த சிக்கலுக்கு அந்த நூல்களில் தீர்வு இல்லை. ஆண்டவனிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்கள். 


அறிவின் எல்லையை அவர்கள் அறிந்து இருக்கிறார்கள். 

கல்வியின் பயன் இறைவனைத் தொழுதல் என்பார் வள்ளுவர். 

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாழ் தொழாஅர் எனின். 

அந்த அறிஞர்கள் மன்னனிடம் சொன்னார்கள் "இதற்கு தீர்வு இறைவனிடம் தான் இருக்கிறது " என்று. 

சட்ட புத்தங்களைத் தாண்டி, அற நூல்களைத் தாண்டி , நீதியை தேடி இருக்கிறார்கள். "சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது ..."என்று இந்தக் காலத்தில் நீதிபதிகள் செய்வது போல தீர்ப்பு சொல்லாமல்  இறை அருளை நாடி இருக்கிறார்கள். 

பாண்டியன் கோவிலுக்குப் போகிறான். சிவனிடம் முறையிடுகிறான். 

சிவன் என்ன சொன்னார் ? இந்த வழக்கு எப்படி தீர்ந்தது ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_26.html

Friday, August 25, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொன்று என் பெற வல்லான்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொன்று என் பெற வல்லான் 


ஒரு புறம் மறையவன் தன்னுடைய மனைவியை வேடன் தான் கொன்றான் என்று குற்றம் சுமத்துகிறான்.

இன்னொரு புறம் , வேடனோ, தான் கொல்லவும் இல்லை, கொன்றவரை காணவும் இல்லை என்று சாதிக்கிறான்.

வேறு எந்த சாட்சியும் இல்லை.

பாண்டிய மன்னன் யோசிக்கிறான்.

"இந்த வேடனோ தண்டனைக்கு அஞ்சுபவனாய் தெரியவில்லை. அவனுடைய பேச்சு முன்னுக்கு பின் முரணாக இல்லாமல் சரியாக இருக்கிறது. ஆளைப் பார்த்தாலும் கொலை செய்தவனைப் போலத் தெரியவில்லை. எதிரியே, விலங்கோ, பறவையோ என்றால் இவன் வேட்டை ஆடியிருப்பான். இந்த அப்பாவி பெண்ணை கொன்று இவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது. கொல்ல ஒரு முகாந்திரமும் இல்லை"   என்று மன்னன் சிந்திக்கிறான்.

பாடல்

ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் அறைகின்ற 
கூற்றமும் ஒன்றெ கொன்ற குறிப்பு முகம் தோற்றான் 
மாற்றவரேயோ மாவோ புள்ளோ வழி வந்த 
கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான்                                               கொலை செய்வான்.


பொருள்


ஆற்ற = பொறுத்துக் கொள்ள முடியாத

ஒறுக்கும் = தண்டிக்கும்

தண்டமும் = தண்டனைக்கும்

அஞ்சான் = (இந்த வேடன்) அச்சப் படவில்லை

அறைகின்ற = (இவன்) சொல்கின்ற


கூற்றமும் = கூற்றுகள், செய்திகள்

ஒன்றெ = ஒன்றே. முரண் இல்லாமல் ஒரே சீராக இருக்கிறது

கொன்ற குறிப்பு = கொலை செய்ததைப் போல

முகம் தோற்றான் = முகத்தைப் பார்த்தால் தோன்றவில்லை

மாற்றவரேயோ = எதிரிகளோ

மாவோ = கொடிய விலங்குகளோ

புள்ளோ = பறவையோ

வழி வந்த = வழியில் வந்த

கோல் தொடியைக் = பெண்ணை (வளையல் அணிந்த பெண்)

கொன்று = கொலை செய்து

என் பெற வல்லான் = எதை அடையப் போகிறான் ?

கொலை செய்வான் = கொலை செய்வான் (என்று மற்றவர்களால் கூறப் பட்டவன்)

கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம்


"கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான்"


தொடி என்றால் வளையல். கோல் தொடி என்றால் கோலை போல நன்கு பருத்த  வளையல். நல்ல கனமான வளையல் அணிந்து இருக்கும் பெண். 

நேரடியாக அர்த்தம் கொண்டால் "வளையலை கொன்று என்ன பெறப் போகிறான்" என்று வரும். 

வளையலை எப்படி கொல்ல முடியும் ?

அங்கு தான் இலக்கணம் வருகிறது. 

எழுத்துகள் சேர்ந்து வார்த்தை வருகிறது.  சரிதானே. 

வார்த்தைகள் சேர்ந்து வாக்கியம் உருவாகிறது.  சரிதானே ?

இரண்டு வார்த்தைகளை எப்படி இணைப்பது என்பதில் இருக்கிறது  இலக்கணச் சுவை. 

இரண்டு வார்த்தைகளை இணைக்கும் போது , முதலில் வரும் வார்த்தைக்கு நிலை  மொழி என்று பெயர். அதனோடு வந்து சேரும் வார்த்தைக்கு வரு மொழி என்று பெயர். 

இராமன் வந்தான் 

என்பதில் இராமன் என்பது நிலை மொழி. வந்தான் என்பது வரு மொழி. 

புரிகிறது தானே. சிக்கல் இல்லையே ?

அடுத்த கட்டத்துக்கு போவோம். 

இப்படி நிலை மொழியும், வரு மொழியும் சேரும் போது நடுவில் சில வார்த்தைகளை  போடுவோம். இரண்டு பொருளை ஓட்ட வைக்க வேண்டும் என்றால் பசை வேண்டும் அல்லவா அது போல. 

அந்த பசைக்குப் பெயர் "வேற்றுமை உருபு"

உருபு என்றால் சொல் என்று வைத்துக் கொள்ளுங்கள். 

தமிழில் ஆறு வேற்றுமை உருபுகள் இருக்கிறது. அவை 

ஐ (இரண்டாம் வேற்றுமை உருபு)
ஆல் (மூன்றாம்)
கு (நான்காம்) 
இன் (ஐந்து)
அது (ஆறாம்)
கண் (ஏழாம்)

முதலாம் வேற்றுமை கிடையாது. அதற்கு விளி வேற்றுமை என்று பெயர். அதை விட்டு விடுவோம். 

பால் குடித்தான் என்பது பாலைக் குடித்தான் (ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு  வந்துள்ளது) 

அணுக் குண்டு என்பது அணுவால் ஆன குண்டு (ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு) 

இப்படி வேற்றுமை உருபு வந்து நிலை மொழியையும் வரு மொழியையும் சேர்த்து வைக்கும். 

இந்த வேற்றுமை உருபு சில சமயம் வெளிப்படையாக வரும்.  சில சமயம் மறைந்து இருக்கும். 

வெளிப்படையாக வந்தால் அது தொகா நிலைத் தொடர் என்று பெயர். 

மறைந்து (தொக்கி) வந்தால் அதற்கு தொகை நிலைத் தொடர் என்று பெயர். 

பாலக் குடித்தான் என்பதில் ஐ என்ற வேற்றுமை உருபு வெளிப்ப்டையாக வந்து உள்ளது. எது தொகா நிலைத் தொடர். 

பால் குடித்தான் என்பதில் ஐ என்ற வேற்றுமை உருபு தொக்கி (மறைந்து) வந்துள்ளது. 

சில சமயம் , இந்த வேற்றுமை உருபுகள் நிலை மொழியையும் வரு மொழியையும் சேர்ப்பதோடு அல்லாமல் , சேர்த்த பிறகு அந்த இரண்டு சொற்களையும் கடந்து இன்னொரு சொல்லை சுட்டிக் காட்டும். அதற்கு அன்மொழித் தொகை என்று பெயர். 

அல் + மொழி = அல்லாத மொழி.

வீட்டில் அம்மா , "தம்பி , யாரோ அழைப்பு மணி அடித்திருக்கிறார்கள். யாருனு கொஞ்சம் பாரு " என்று மகனிடம் சொல்வாள். 

மகன் கதவை திறந்து பார்த்து விட்டு "அம்மா பால் வந்திருக்கு" என்பான். 

வந்தது பால் அல்ல. பாலை கொண்டு வரும் ஆள் வந்திருப்பார். 

பால் + வந்திருக்கு   = பாலை கொண்டு வரும் ஆள் 

இங்கே நடுவில் வந்த ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு , பாலைக் குறிக்கவில்லை, வந்த செயலை குறிக்கவில்லை. அந்த பாலைக் கொண்டு வந்த ஆளை குறிக்கிறது அல்லவா . அதற்கு

"வேற்றுமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித் தொகை " என்று பெயர். 

ரொம்ப பெரிய வாக்கியம்தான்...:)

இங்கே 

கோல் தொடி என்றால் , கோலைப் போன்ற தடித்த வளையலை அணிந்த பெண் என்று பொருள். 

அது கோலையும் குறிக்கவில்லை. 
வளையலையும் குறிக்கவில்லை.

அந்த வளையலை அணிந்த பெண்ணை குறிக்கும். 

அப்பாட , ஒரு வழியாக வந்து சேர்ந்து விட்டோம். 


இலக்கணம் படிக்க படிக்க , இலக்கணமும் சுவைக்கும், இலக்கியமும் சுவைக்கும். 

ரொம்ப bore அடித்தால் சொல்லுங்கள். குறைத்துக் கொள்கிறேன். 

Wednesday, August 23, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மெய்யே, யான் அறியேன்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மெய்யே, யான் அறியேன் 


(முன்கதை சுருக்கத்திற்கு , இதற்கு முன்னால் உள்ள ப்ளாகுகளை வாசிக்கவும்).

மறையவன், என் மனைவியை கொன்ற வேடன் இவன் தான் என்று குற்றம் சுமத்தினான் . அரசன், அந்த வேடனைப் பார்த்து, "நீ என்ன சொல்கிறாய்" என்று கேட்டான்.

அதற்கு அவன், "ஐயா நான் கொல்லவும் இல்லை, கொன்றவரை காணவும் இல்லை, இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது " என்றான்.

பாடல்

ஐயே நானும் கொன்றவன் அல்லேன் கொன்றாரைக் 
கையேன் வேறும் கண்டிலன் என்றான் இவள் ஆகத்து 
எய்யேறு உண்ட வாறு என் என்றார் எதிர் நின்றார் 
மெய்யே ஐயா யான் அறியேன் இவ் விளைவு என்றான்.

பொருள்

ஐயே = ஐயனே

நானும் கொன்றவன் அல்லேன் = நான் கொல்லவில்லை

கொன்றாரைக் = யார் இவளைக் கொன்றார்களளோ

கையேன் = கீழ்மையான நான்

வேறும் கண்டிலன் = வேறு யாரையும் காணவும் இல்லை

என்றான் = என்றான்

இவள் ஆகத்து  = இவள் அகத்தில் (உடம்பில்)

எய்யேறு = எய்யப்பட்ட அம்பு

உண்ட வாறு = உள் நுழைந்தது

என் = எப்படி

என்றார் = என்று கேட்டார்

எதிர் நின்றார் = எதிரில் உள்ள அமைச்சர்கள்

மெய்யே ஐயா = உண்மையைச் சொல்கிறேன்

யான் அறியேன் = எனக்குத் தெரியாது

இவ் விளைவு என்றான் = இது எப்படி நடந்தது என்று .

கொன்றவன் இவன் என்று வேதியன் குற்றம் சுமத்துகிறான்.

நான் கொல்லவில்லை . கொன்றாரையும் காணவில்லை என்று வேடன் சொல்கிறான்.

அரசனும் , அமைச்சர்களும் விசாரித்து விட்டார்கள்.

வேறு எந்த சாட்சியும் இல்லை.

காட்டுக்குள் நடந்த சம்பவம்.

கொலை நடந்திருக்கிறது. யாரோ தானே செய்திருக்க வேண்டும் ? யார் செய்தது ?

கதையை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்று பாருங்கள்.


நமக்குத் தெரியும் வேடன் கொல்லவில்லை என்று.  ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள்  அவனை குற்றவாளியாக்குகிறது.  வேறு எந்த சாட்சியும் இல்லை.

மன்னன் என்ன செய்யப் போகிறான் என்று நமக்கு ஒரே ஆவலாக இருக்கிறது.

ஒரு வேளை வேடனுக்கு தண்டனை கொடுத்து விடுவானோ ?  அப்படியே கொடுத்தாலும், அரசன் மேல் குறை சொல்ல முடியாது.

சரி, வேடன் செய்யவில்லை என்று அவனை விட்டு விட்டால், பின் கொலை யார் தான் செய்தது ? வேதியனுக்கு என்ன பதில் சொல்வது ?

தான் நிரபராதி என்று நிரூபிக்க வேடனுக்கு  வேறு வழி ஒன்றும் இல்லை

ஒரு அப்பாவி சிக்கிக் கொண்டானே என்று நம் மனம் பதறுகிறது. அவன் மேல் பச்சாதாபப் படுகிறது.

மனைவியை இழந்து, கை குழந்தையோடு  நிற்கும் வேதியன் மேலும் பரிதாபம் வருகிறது.

மன்னன் தவறு செய்து விடக் கூடாதே என்று தவிப்பும் இருக்கிறது.

கதை ஒரு புள்ளியில் நிற்கிறது.  கொஞ்சம் அசந்தாலும் பிரண்டு விடும்.

எப்படி மேலே கதையைக் கொண்டு செல்வது ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_23.html



Tuesday, August 22, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உலை ஊட்டும் கொலை வேல் போல்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உலை ஊட்டும் கொலை வேல் போல் 


மரத்தில் சிக்கி இருந்த அம்பு காற்றில் கீழே விழுந்து , அங்கே தாகத்திற்கு இளைப்பாறிக் கொண்டு இருந்த ஒரு வேதியனின் மனைவியின் வயிற்றில் பாய, அவள் இறந்து போனாள். அவளுக்கு நீர் கொண்டு வரச் சென்ற வேதியன் வந்து பார்க்கிறான். மனைவி அம்பு பட்டு இறந்து கிடக்கிறாள். அருகில் ஒரு வேடன் நிற்கிறான். அந்த வேடன் தான் கொன்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்து , அவனை அரசனிடம் இழுத்துக் கொண்டு போகிறான்.

"என்ன நடந்தது " என்று அரசன் கேட்டான்.

வேதியன் சொல்கிறான்

"என் மனைவியை மரத்தின் அடியில் விட்டு விட்டு நீர் கொண்டு வரச் சென்றேன். நான் வருவதற்கு முன் இந்த வேடன், என் மனைவியை கொன்று விட்டான்" என்று கூறினான்.

பாடல்


இன்றிவ ளைக்கொண் டோர்வட நீழ லிடையிட்டுச்*
சென்றுத ணீர்கொண் டியான்வரு முன்னிச் சிலைவேடன்
கொன்றய னின்றா னென்றுலை யூட்டுங் கொலைவேல்போல்
வன்றிறன் மாறன் செவிநுழை வித்தான் மறையோனால்.


சீர் பிரித்த பின்

இன்று இவளை கொண்டு ஓர் வட நிழல் இடை இட்டு 
சென்று தண்ணீர் கொண்டு  யான் வரு முன் இச் சிலை வேடன் 
கொன்று அயல் நின்றான் என்று உலை ஊட்டும் கொலை வேல் போல் வன் வன் திறல் மாறன்  செவி நுழை வித்தான் மறையோன் ஆல் 


பொருள்


இன்று = இன்று

இவளை = இவளை

கொண்டு = கொண்டு

ஓர் = ஒரு

வட = மர

நிழல் இடை இட்டு = நிழலின் கீழ் இருத்தி விட்டு

சென்று = சென்று

 தண்ணீர் கொண்டு  யான் வரு முன் = நான் நீர் கொண்டு வருவதற்குள்

இச் சிலை வேடன் = இந்த வில்லை ஏந்திய வேடன்

கொன்று அயல் நின்றான் = அவளை கொன்று அயலில் நின்றான்

என்று = என்று

உலை = கொதி உலையில்

ஊட்டும் = இருக்கும்

கொலை வேல் போல் = கொலைத் தொழிலை செய்யும் வேலைப் போல

வன் திறல் மாறன்  = வலிமையான திறமை கொண்ட பாண்டிய மன்னனின்

செவி நுழை வித்தான் = செவியில் சொன்னான்

மறையோன் = அந்த வேதியன்

ஆல் = அசைச் சொல்

"சிலை வேடன்."

வில்லைக் கொண்ட வேடன். இராமனைப் பற்றிக் கூறும் போது , கம்பர் கூறுவார்,  வில்லை கொண்ட இராமனின் தோளின் வலிமையை சொன்னால் போதும் , நிறைய நன்மைகள் கிட்டும் என்பார்.


 நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.


இந்த  வேடன் என் மனைவியை கொன்று விட்டான் என்ற சொல்லே கொல்லன்  உலையில் (தீயில்) கொதிக்கும் கூர்மையான வேலை காதில் நுழைத்தது போல  இருந்ததாம். 

இராமாயணத்தில், கைகேயி இரண்டு வரங்களை கேட்டு விட்டாள் . தயரதன் தவிக்கிறான். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறான். அவள் கேட்ட வரம் அவனை வாட்டுகிறது. எப்படி என்றால், போரில் அடிபட்டு இருக்கும் யானையின் புண்ணில் வேலைப் பாய்ச்சினால் எப்படி இருக்குமோ அப்படி வலியால் துடித்தான் என்கிறான் கம்பன். 


பெண் என உற்ற பெரும்
    பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து
    உயிர்த்து உலாவும்;
கண்ணினில் நோக்கும்; அயர்க்கும்;
    வன் கை வேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும்
    ஆனை போல்வான்.

தன்னுடைய ஆட்சியில் , இப்படி ஒரு கொடுமை நடந்து விட்டது என்ற சொல் காதில் விழுந்த போது , அது கொதிக்கின்ற வேலை காதில் குத்தியது போல இருந்ததாம் அந்த பாண்டிய மன்னனுக்கு. 

அப்படி என்றால், இந்த மாதிரி அநீதி நடப்பது இல்லை என்று அர்த்தம். தினம் ஒரு கொலை, கொள்ளை என்று நடந்தால் , மன்னன் இது ஒரு சாதாரணமான ஒன்று என்று நினைத்து தள்ளி விட்டிருப்பான். எப்போதோ நடப்பதால் , அதை கேட்கும் போது அவ்வளவு வலி. 

அடுத்து என்ன நடந்திருக்கும் ? 

யோசித்துப் பாருங்கள் ?  கதை எப்படி நகர்கிறது என்று புரியும். மன்னன் என்ன செய்திருப்பான் ? 

பெண் இறந்து கிடக்கிறாள். அருகில் ஒரு வேடன் வில்லோடு நிற்கிறான். இறந்தவளின் கணவன் , இந்த வேடன் தான் கொன்றான் என்கிறான். வேறு யாரும் இல்லை அருகில். 

நமக்குத் தெரியும் வேடன் கொல்லவில்லை என்று. மன்னனுக்குத் தெரியாது. 

அவன் என்ன செய்ய வேண்டும் இப்போது ? நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_22.html

Monday, August 21, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - முறையோ முறையோ

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - முறையோ முறையோ 


வேதியன் ஒருவன் மதுரை வரும் வழியில் , கானகத்தில் மனைவியையும் பிள்ளையையும் ஒரு ஆல மரத்தின் கீழ் தங்க வைத்து விட்டு நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த மரத்தின் மேல் என்றோ , யாரோ விட்ட அம்பு ஒன்று தொங்கிக் கொண்டு இருந்தது. அது காற்றில் ஆடி கீழே விழுந்தது. விழுந்த அம்பு, நேரே சென்று அந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் தைத்தது. அவள் இறந்து போனாள் . அதே சமயம் ஒரு வேடன் , நிழலுக்காக அந்த மரத்தின் கீழ் வந்து நின்றான். அதே சமயம் நீர் கொண்டு வந்த வேடன் இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தான். அருகில் இருக்கும் வேடனைப் பார்த்தான். அந்த வேடன் தான் அவளை கொலை செய்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து , அந்த வேடனை இழுத்துக் கொண்டு பாண்டியன் இருக்கும் அரண்மனை வருகிறான்.

தோளில் பசித்து அழும் பிள்ளை. மனதில் மனைவி இறந்த சோகம். கையில் வேடனை பிடித்துக் கொண்டு அரண்மனை வாசலில் நின்று ஓலமிடுகிறான்.

மன்னா, உன் நாட்டில் இப்படி நடப்பது முறையோ முறையோ என்று கதறுகிறான்.


பாடல்

கோமுறை கோடாக் கொற்றவ ரேறே முறையையோ
தாமரை யாள்வாழ் தண்கடி மார்பா முறையையோ
மாமதி வானோன் வழிவரு மைந்தர முறையேயோ
தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.


பொருள்

கோமுறை = கோ + முறை = அரச முறை

கோடாக் = கோட்டம் என்றால் வளைவு.  கோடா என்றால் வளையாத, நேரான.

கொற்றவ ரேறே = கொற்றவ + ஏறே  = அரசர்களில் சிங்கம் போன்றவனே

முறையையோ = இது முறையா ?

தாமரை யாள்வாழ் = தாமரையில் இருக்கும் திருமகள் வாழும்

தண்கடி = குளிர்ந்த மலர் மாலை அணிந்த

மார்பா = மார்பை உடையவனே

முறையையோ = இது முறையோ

மாமதி = பெரிய நிலவு. சந்திரன்

வானோன் = வானில் இருக்கும்

வழிவரு = வழியில் வந்த

மைந்தா = மைந்தனே

முறையேயோ = இது முறையா ?

தீமைசெய் தாய்போற் = தீமை செய்தால் போல

செங்கை = சிவந்த கைகளை

குறைத்தாய் = குறைத்தவனே

முறையேயோ = முறையோ


தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.

என்ற இந்த கடைசி வரிக்கு ஒரு கதை சொல்ல வேண்டி இருக்கிறது.

முன்பொரு காலத்தில் ஒரு பாண்டிய மன்னன் இருந்தான். அவன் நகர் வலம் வரும் போது ஒரு மறையவன் வீட்டின் வாசலில் , நடு இரவு நேரத்தில் பேச்சு சத்தம்  கேட்டது. என்ன என்று , மாறு வேடத்தில் இருந்த மன்னன் ஓட்டு கேட்டான்.

அந்த வீட்டின் பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்

"நீங்கள் ஊரை விட்டுப் போய் திரும்பி வர கொஞ்ச நாள் ஆகும். எனக்கு தனியாக இருக்க பயமாக  இருக்கிறது. நானும் உங்கள் கூடவே வந்து விடுகிறேன் " என்று கூறிக் கொண்டிருந்தாள்.

அதற்கு அந்த மறையவன் " ஒன்றும் பயப்படாதே....பாண்டிய மன்னன் இருக்கிறான். அவன் இருக்கும் வரை , நமக்கு ஒரு தீங்கும் வராது " என்று சொல்லி அவளை தேற்றிக் கொண்டிருந்தான்.

மன்னனுக்கு பெருமிதம். "  அடடா, நம் மக்கள் நம் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்" என்று மகிழ்ந்து சென்றான்.

அன்றிலிருந்து தினமும் அவள் வீட்டை , மாறு வேடத்தில் வரும் போது கவனித்து வந்தான்.

அப்படி இருக்கும் போது ஒரு நாள், திடீரென்று அந்த வீட்டில்  இரவில் பேச்சுக் குரல் கேட்டது.

மன்னனுக்கு  சந்தேகம். கணவன் வெளியூர் போயிருக்கிறான். ஆண் குரல் கேட்கிறது. யாராக இருக்கும் என்று என்று சந்தேகப் பட்டு, வீட்டின் கதவை தட்டினான்.

"யாரது " என்று குரல் கேட்டது. கேட்டது யாரும் அல்ல, அந்த பெண்ணின் கணவன். போன காரியம் முடிந்து விட்டதால் கொஞ்சம் சீக்கிரம் ஊர் திரும்பி விட்டான்.

மன்னனுக்கு தர்ம சங்கடம். உள்ளே போனால், ஒரு வேளை அந்த வேதியன் தன் மனைவியை சந்தேகப் பட்டு  விடுவானோ என்று பயந்து, வேக வேகமாக  அங்கிருந்து விலகினான். போகிற வழியில் அங்குள்ள எல்லா வேதியர் வீட்டின்  கதவையும்  தட்டி விட்டு சென்றான்.

மறு நாள் , வேதியர்கள்  எல்லோரும் அரண்மனை வந்து, மன்னனிடம் முறையிட்டார்கள். "மன்னா, யாரோ தெரியவில்லை, நடு இரவில் எங்கள் வீட்டின் கதவை  தட்டுகிறார்கள் " என்று முறையிட்டார்கள்.

அப்போது மன்னன், "சரி, அவனை பிடித்து விடலாம். பிடித்தால் அவனுக்கு என்ன  தண்டனை கொடுப்பது " என்று கேட்டான்.

அதற்கு அவர்கள் "இப்படி நள்ளிரவில் வந்து மற்றவர்கள் வீட்டின் கதவை தட்டிய அவன் கையை  வெட்டி விட வேண்டும் " என்று கூறினார்கள்.

மன்னவனும் , "அப்படி தட்டியது வேறு யாரும் அல்ல, நான் தான் " என்று கூறி,  தன் கையை தானே வெட்டிக் கொண்டான்.

நீதி என்றால் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்த மன்னன் அவன்.

அவன் வழியில் தோன்றிய மன்னா, உன் நாட்டில் இப்படி நடக்கலாமா , இது முறையா  என்று இந்த வேதியன் முறையிட்டான்.


தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.


தீமை செய்யவில்லை. செய்தால் போல சிவந்த கைகளை குறைத்தாய் என்று  முன்பு நடந்ததை நினைவு படுத்துகிறான். 

நீதி பரிபாலனம் நாட்டில் அப்படி இருந்தது. 

மக்களை , கண்ணை இமை காப்பது போல மன்னர்கள் காத்தார்கள். 

தவறு , தானே செய்திருந்தாலும், தண்டனை கொடுத்துக் கொண்டார்கள். 

அடுத்து என்ன நடந்தது ?

Sunday, August 20, 2017

திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - உள்ளவா காண வந்தருளாய்

திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - உள்ளவா காண வந்தருளாய் 


நாம் ஒரு வழியில் , ஏதோ ஒரு வேலையாகச் சென்று கொண்டிருப்போம். போகிற வழியில் ஏதோ ஒரு கடையில் நல்ல உணவு சமைக்கும் வாசம் வரும். "அடடா , ஏதாவது சாப்பிட்டு விட்டு போனால் என்ன " என்று தோன்றும் நமக்கு.

போகிற வழியில் , ஒரு குளிர் பானத்தின் விளம்பரம் கண்டால், தாகம் எடுப்பது போலத் தோன்றும்.

அழகான பெண்ணை கண்டால், ஏதேதோ எண்ணம். இப்படி நம் புலன்கள், நம்மை , நாம் செல்ல நினைத்த இடத்துக்கு செல்ல விடாமல் அது வேண்டும்,இது வேண்டும் என்று இழுத்து அலைக் கழிக்கின்றன.

ஆசைப் படுவது தப்பா என்ன ? ஒரு சுவையான, உருசியான பண்டத்தைப் பார்த்தால்  அதை சுவைக்க ஆசைப் படுவது என்ன பாவமா என்றால் இல்லை தான்.

சிக்கல் சுவைப்பதோடு முடிவது இல்லை.

ஒன்றை சுவைத்தால் , இன்னொன்று தேடும். இதே போல வேறு என்ன என்ன இருக்கிறது என்று மனம் தாவும். நிறைய உண்டால் நோய் வரும். அதற்கு மருந்து. அந்த மருந்தின் பக்க விளைவு.  இப்படி வாழ்க்கை எங்கோ  தொடங்கி எங்கோ போய் விடும்.

மனைவிதான், அன்புதான், இனிமைதான் என்று திருமணம் செய்து கொள்கிறான். அதோடு நிற்கிறதா ? பிள்ளைகள், பொறுப்பு என்று ஆயிரம் சிக்கல் கூடவே  வருகின்றன.

முதலில் ஏதோ நமக்கு இன்பம் தருவது போல இழுத்துக் கொண்டு போய் , பின்னால் பெரிய சிக்கலில் மாட்டி விடுபவை இந்த புலன்கள்.


சரி, புலன் இன்பங்கள் முதலில் இன்பம் போல் இருந்தாலும்,  பின்னால் சிக்கல் நிறைய இருக்கிறது என்று புரிகிறது.

அதற்காக இன்பமே வேண்டாம் என்று இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும், அது ஒரு வாழ்க்கையா ? அதற்கு இந்த வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை என்று நாம் நினைக்கலாம்.

மணி வாசகர் சொல்கிறார்,  இன்பங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று புறத்தே , வெளியே இருக்கும் இன்பம். புலன்கள் மூலம் பெரும் இன்பம்.

இன்னொரு இன்பம் இருக்கிறது. அது உள்ளுக்குள் இருந்து வரும் இன்பம்.  அதற்கு புலன்கள்  வேண்டாம். வெளி உலக பொருள்களோ , மாற்றார்களோ வேண்டாம். உள்ளே இருந்து ஊற்றெடுக்கும் இன்பம் ஒன்று இருக்கிறது. அது வற்றாத இன்பம். திகட்டாத இன்பம்.

அதை நாம் அவ்வப்போது அனுபவித்து இருக்கிறோம். நமக்கு அது கோடி காட்டி விட்டுப் போகிறது.

ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு நல்ல இசையை கேட்கிறீர்கள். உங்களை அறியாமலேயே உங்கள் கண்கள் மூடும். ஏன் ? காதுதானே கேட்கிறது. கண் ஏன் மூடுகிறது ? சிந்தித்துப் பார்த்தால் தெரியும், அந்த இனிய இசையின் இன்பம், உங்களுக்குள் இருக்கிறது.

இல்லை, அந்த இசையில் தான் இருக்கிறது என்றால், எப்போதும் அது இன்பம் தர வேண்டும் அல்லவா ? எல்லோருக்கும் இன்பம் தர வேண்டும் அல்லவா ?

ஒரு துண்டு லட்டை வாயில் போடுங்கள்....உங்களை அறியாமலேயே கண்கள் மூடும், அந்த இன்பத்தை நீங்கள் உள்ளுக்குள் அனுபவிப்பீர்கள்.

ஆனால், அந்த இன்பம் லட்டு கரைந்து தொண்டையை தாண்டும் வரை தான்.

வெளியில் இருந்து வரும் இன்பங்கள்....சீக்கிரம் மறைந்து விடும்.

ஆனால், உள்ளுக்குள் இருக்கும் இன்பம், மறையவே மறையாது.

நீங்கள் அந்த இன்பத்தை கண்டு விட்டால், அனுபவித்து விட்டால், அதற்குப் பிறகு வெளியில் உள்ளவைகளும் உங்களுக்கு நீங்காத இன்பத்தைத் தரும்.

உள்ளும் வெளியும் ஒன்றாகக் கலந்து , ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடும்.


மாணிக்க வாசகர் சொல்கிறார்,

மாறி நின்று, வஞ்சகம் செய்து என்னை சிக்கலில் ஆழ்த்தும் ஐந்து புலன்களின் வழியை அடைத்து, என்னுள்ளே தோன்றும் இன்பமே , சிவனே, நீ என் அன்பானவன் என்று.


பாடல்

மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே
ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்:
தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!


பொருள்

மாறி நின்று = என் எண்ணங்களுக்கு, என் நோக்கங்களுக்கு , என் குறிக்கோளுக்கு மாறி நின்று

என்னை மயக்கிடும் = என்னை மயக்கம் செய்யும்

வஞ்சப்  = வஞ்சகமான

புலன் = புலன்கள்

ஐந்தின் = ஐந்து புலன்களின்

வழி அடைத்து = வழியை அடைத்து

அமுதே ஊறி நின்று; = எனக்குள் அமுதமாக ஊறி நின்று

என் உள் எழு பரஞ்சோதி! = எனக்குள்ளே எழும் உயர்ந்த ஜோதியே

உள்ளவா = உள்ளவனே

காண வந்தருளாய் ன்= நான் உன்னை வெளியே காணும்படி வந்து அருள்வாய்


தேறலின் தெளிவே! = தேனின் தெளிவே

சிவபெருமானே! = சிவ பெருமானே

 திருப்பெருந்துறை உறை சிவனே! = திருப்பெருந்துறை என்ற தலத்தில் வசிப்பவனே

ஈறு இலாப் = இறுதி இல்லாத

பதங்கள் = நிலைகள்

யாவையும் = எல்லாவறையும்

கடந்த இன்பமே! = கடந்த இன்பமே

என்னுடை அன்பே! = என்னுடைய அன்பே


எத்தனையோ பட்டங்கள். ஒவ்வொரு பட்டத்திலும் ஒரு இன்பம்.

மகள், கன்னிப் பெண், மனைவி, தாய்,  பாட்டி

மகன், பையன், வாலிபன், கணவன், தந்தை, தாத்தா

என்று ஒவ்வொரு கட்டமாக வாழ்வில் பல பட்டங்கள்.  பதங்கள் . ஒவ்வொன்றிலும் ஒரு இன்பம். இவை அனைத்தையும் கடந்த இன்பம் இறைவன் தருவது.


இறைவன் என்பவன் ஏதோ ஒரு ஆள் அல்ல. அவன் அன்பின் மொத்த குறியீடு. அன்பு  என்னவெல்லாம் செய்யுமோ அதுவே இறைவன் செயல்பாடு.

வெளி உலக இன்பங்கள் மறையும் போது , உள்ளே ஊறும் அமுத ஊற்று போன்றவன் அவன்.

ஆனந்தமாய் , என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் என்பார் அபிராமி பட்டர்


ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே

தித்தித்தது இருக்கும் அமுது கண்டேன்....இந்த உலகையே மூழ்க வைக்கும் பரம ஆனந்த சாகரம் என்பார் அருணகிரிநாதர் 


பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.


அந்த இன்பத்தை அறிந்து கொண்டால், பின் உலக இன்பங்கள் ஒன்றும் பெரிதாக இருக்காது. 

இனிப்பான ஒரு பலகாரத்தை தின்றபின் காப்பி குடித்தால் அது கசக்கும் அல்லவா ? அது போல அந்த உள்ளுறை இன்பத்தை அறிந்து கொண்டால் இந்த உலக இன்பங்கள் ,  இன்பங்கள் போலவே தோன்றாது. துன்பம் போல இருக்கும். 

அந்த பரம ஆனந்தத்தை சுவைத்து விட்டால் கரும்பு துவர்க்கும் , செந்தேன் புளிக்கும் என்கிறார் அருணகிரிநாதர் 


பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!


உள்ளுக்குள் இருக்கும் ஆனந்தத்தை அறிந்து கொண்டார் மணிவாசகர். 

இந்த உலகை என்ன செய்வது. இந்த உலகில் உள்ள பொருள்கள், மனிதர்கள்  இவற்றோடு எவ்வாறு ஒன்றுவது. இந்த உலகில் எப்படி செயல்படுவது ? எல்லாவற்றையும்  விட்டு விட்டு ஓடி விடுவதா ?

இல்லை, இந்த இன்பத்தை எனக்கும் வெளியிலும் காண அருள் புரிவாய் என்று வேண்டுகிறார். 


"உள்ளவா காண வந்தருளாய்"

வெளியிலும், மற்ற உயிரிகளிலும் உன்னை காண அருள் புரிவாய் என்று வேண்டுகிறார். 

இந்த உரையை மறந்து விடுங்கள். 

பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 

ஏதோ தோன்றுகிறதா ? அது தான் அர்த்தம்.


http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_20.html

Friday, August 18, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மன்னவன் ஆணை

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மன்னவன் ஆணை


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் , அவனுடைய மனைவி மற்றும் கை குழந்தையோடு மதுரை வரும் வழியில் உள்ள கானகத்தில் , மனைவியின் தாகம் தீர்க்க நீர் கொண்டு வரும் வேளையில், அவர்கள் இளைப்பாறிய ஆல மரத்தில் முன்பு எப்போதோ சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் அசைந்து கீழே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது.

அதனால் அவள் இறந்து போனாள் . அப்போது , அந்தப் பக்கம் ஒரு வேடன் வந்தான். அவன் நிழலுக்கு அதே ஆல மரத்தின் கீழ் வந்து நின்றான்.

அப்போது ,  நீர் கொண்டு வரச் சென்ற வேதியனும் நீரோடு வருகிறான். 

ஒரு புறம் இறந்து கிடக்கும் மனைவி. இன்னொரு புறம், கையில் வில்லோடு நிற்கும் வேடன். 

மனைவியைப் பார்த்து கதறுகிறான். பிள்ளை ஒரு புறம் பாலுக்கு அழுகிறது. கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு ஒரு சோகமான காட்சி என்று புரியும்.

கொஞ்சம் தேறி, யார் இந்த கொடுமையான காரியத்தை செய்திருப்பார்கள் என்று சுற்றும் முற்றும் பார்க்கிறான்.

அங்கே நின்ற வேடனைப் பார்க்கிறான். வில்லும் கையுமாக முரட்டுத் தனமாக இருக்கும் இந்த வேடன் தான் இவளை கொன்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான். அவனிருக்கும் இடத்தில் யார் இருந்தாலும் அப்படித் தான் நினைத்திருப்பார்கள் அல்லவா ?

"மன்னவன் ஆணை , வா நீதி மன்றத்திற்கு " என்று அவனை இழுத்துக் கொண்டு போகிறான்.

பாடல்


என்ன மதித்தே ஏடா வேடா என் ஏழை
தன்னை வதைத்தாய் நீயே என்னா அழல் கால் கண்
மின்னல் எயிற்றுக் குற்று என வல் வாய் விட்டு ஆர்த்து
மன்னவன் ஆணைப் பாசம் எறிந்து வலித்து ஏகும்.


பொருள்

என்ன மதித்தே = இவன் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்து

ஏடா வேடா = ஏண்டா வேடனே

என் ஏழை தன்னை  =  பாவம்,என் மனைவியை

வதைத்தாய் நீயே = கொலை செய்தாய் நீயே

என்னா = என்று

அழல் = தீ. சிவந்த

கால் = காற்று. அனல் வீசும்.

கண் =கண்கள்

மின்னல் எயிற்றுக் = மின்னல் போல வெண்மையான பற்கள்

குற்று என = கூற்று என (கூற்றுவன் என்றால் எமன் )

வல் = வலிமையாக, ஓங்கி

வாய் விட்டு ஆர்த்து = வாய் விட்டு சொல்லி. ஆர்த்து என்ற வார்த்தையை பற்றி கீழே விரிவாகப் பார்ப்போம்

மன்னவன் ஆணைப் = மன்னன் மேல் ஆணை

பாசம் = கயிறை

எறிந்து =எறிந்து

வலித்து ஏகும் = இழுத்துக் கொண்டு போனான்


ஆர்த்து என்றால் கொடுத்து, நிறைவு செய்து, ஊட்டி, அனுபவிக்கச் செய்து  என்று பொருள்.

ஆர்த்த பிறவி என்பார் மணிவாசகர். நல் வினை, தீ வினை என்ற கயிற்றால் கட்டி பிறவி என்ற பெரும் கடலுள் உயிர்கள் செலுத்தப் படுகின்றன என்பதால் ஆர்த்த பிறவி.

நம் பாவங்களை போக்க நமக்கு தீர்த்தமாக தன்னைத் தானே ஊட்டுவதால் , "ஆர்த்தாடும் தீர்த்தன்"

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

கதைக்கு வருவோம்.

டைரக்டர் cut சொல்லி, காட்சியை மாற்றுவதைப் போல, காட்சி மாறுகிறது.

காமிரா காட்டில் இருந்து அரண்மனைக்குப் போகிறது.

அங்கே என்ன நடக்கிறது. ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_18.html