Showing posts with label கம்ப இரமாயணம். Show all posts
Showing posts with label கம்ப இரமாயணம். Show all posts

Saturday, June 6, 2020

கம்ப இராமாயணம் - சயம் கொடு தருவென்

கம்ப இராமாயணம் - சயம் கொடு தருவென்


சீதையை விட்டு விடு என்று இராவணனிடம் இந்திரசித்து கூறினான்.

இராவணன் அதைக் கேட்கவில்லை.

இராவணன், இந்திரசித்திடம் கூறுகிறான்

"இனி போருக்கு போக வேண்டாம். உனக்கு பயம் வந்து விட்டது. தோற்று விடுவோமோ என்று அஞ்சுகிறாய். நீ ஒண்ணும் கவலைப் படாதே. என்னுடைய இந்த வில்லால் அந்த மனிதர்களை வென்று நான் வெற்றியைக் கொண்டு வருகிறேன்"

என்றான்.

பாடல்



இயம்பலும், இலங்கை வேந்தன், எயிற்று இள நிலவு 
                                         தோன்ற,
புயங்களும் குலுங்க நக்கு, ‘போர்க்கு இனி ஒழிதி போலாம்;
மயங்கினை; மனிசன்தன்னை அஞ்சினை; வருந்தல்; ஐய!
சயம் கொடு தருவென், இன்றே, மனிசரைத் தனு ஒன்றாலே.


பொருள்

இயம்பலும் = இந்திரசித்து அவ்வாறு சொன்னவுடன்

இலங்கை வேந்தன் = இலங்கை அரசன்

எயிற்று  = பற்கள்

இள நிலவு  = பிறை சந்திரனைப் போல

தோன்ற, = சற்றே வெளியே தோன்ற

புயங்களும் குலுங்க = தன்னுடைய தோள்கள் குலுங்க

நக்கு = சிரித்து

‘போர்க்கு இனி ஒழிதி போலாம்; = போருக்கு நீ இனி போக மாட்டாய் போல இருக்கிறது

மயங்கினை = அறிவு தெளிவு இல்லாமல் மயக்கம் கொண்டிருக்கிறாய்

மனிசன்தன்னை அஞ்சினை = மனிதர்களை கண்டு அச்சப் படுகிறாய்

வருந்தல்; ஐய! = கவலைப் படாதே

சயம் கொடு தருவென் = வெற்றியைக் கொண்டு வந்து தருவேன்


இன்றே = இன்றே

மனிசரைத் தனு ஒன்றாலே. - மனிதர்களை இந்த வில் ஒன்றினான்


இராவணனின் வீரம் வீறு கொண்டு எழுகிறது.

நீ பயந்தாங்கொள்ளி. விலகிப் போ.  அந்த மனிதர்களை நான் வெல்கிறேன்


என்று கூறுகிறான்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_6.html