Showing posts with label thiru gana sambandhar. Show all posts
Showing posts with label thiru gana sambandhar. Show all posts

Wednesday, August 8, 2012

தேவாரம் - மருண்ட குரங்கு


தேவாரம் - மருண்ட குரங்கு 


திரு ஞானசம்மந்தர் சிறு வயதிலேயே ஞானம் பெற்று இறைவன் மேல் பாடத் தொடங்கியதாக வரலாறு.

சிறு வயதில் பாடினார் என்றால், அவர் பாடிய பாடலுக்கும் மாணிக்க வாசகர், நாவுக்கரசர் போன்றவர்கள் வயதான காலத்தில் பாடியதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ?

இருக்கிறது.

அது ஒரு அழகிய கோயில்.

மாலை நேரம். 

வானெங்கும் மழை மேகங்கள்.

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவன் மேல் பாடல்களை பாடிக் கொண்டே போகிறார்கள்.

கோவிலில் மாலை பூஜை தொடங்கும் நேரம்.

மணி அடிக்கிறது. தம  தம மத்தளம் முழங்குகிறது.

கோவிலில் நந்தவனத்தில் நிறைய மரங்கள் இருக்கின்றன.
குரங்கில்லாத மரமா ?

மணி சத்தையும், மத்தள சத்தத்தையும் கேட்ட குரங்குகள் இடி இடித்து மழை வரப் போகிறதோ என்று மரங்களில் உச்சியில் ஏறி பார்க்கின்றன.

ஞான சம்பந்தர் சின்ன பையன். இந்த குரங்குகள் இப்படி மரமேறி முகில் பார்ப்பது அந்த பாலகனின் மனதை கொள்ளை கொள்கிறது.

பாடல் பிறக்கிறது. கொஞ்சு தமிழ்...அருவி போல் சல சலக்கும் வார்த்தைகள்...

படித்துப் பாருங்கள், உங்கள் மனத்திலும் மழை அடிக்கலாம்....


Thursday, July 12, 2012

தேவாரம் - ஞான சம்பந்தர் கற்பழிக்க சொன்னாரா?


தேவாரம் - ஞான சம்பந்தர் கற்பழிக்க சொன்னாரா?


தேவராத்திலும், நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் பிற மத மற்றும் சமய  துவேஷம் இல்லாமல் இல்லை. 

சைவ வைணவ சண்டை ஊர் அறிந்தது.

தேவாரம் பாடப்பட்ட காலத்தில் சைவ சமண உரசல்கள் உச்சத்தில் இருந்தது.

அரசனின் ஆதரவோடு ஒரு சமயத் தலைவர்கள் மற்ற சமயத் தலைவர்களை கண்டித்ததும் தண்டித்ததும் உண்டு.

இங்கு, சைவ சமயத்தை சேர்ந்த ஞான சம்பந்தர் சமண மதத்தவர்களை வென்ற பின், அம்மத பெண்களை கற்பழிக்க இறைவன் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்.....

என்ன...தூக்கி வாரி போடுகிறதா ? பால ஞானியான ஞான சம்பந்தர் பெண்களை கற்பழிக்க நினைப்பாரா ? அதற்க்கு இறைவனின்  அருளை நாடுவாரா ?

குழப்பமாய் இருக்கிறதா ?

கற்பு என்பதற்கு "கல்வி" என்று ஒரு பொருளும் உண்டு. அவர்களின் தவறான கல்வி அறிவை, அறியாமையை அழிக்க இறைவன் அருளை நாடினார் என்று பொருள் கொள்வாரும் உண்டு.

ஞான சம்பந்தர் போன்ற அருளாளர்கள் மக்களின் அறியாமையை போக்கி, அவர்களை நல்வழி படுத்தும் அருள் கொண்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம். 

படித்துப் பாருங்கள்.

பாடல்: 

Sunday, May 6, 2012

திரு ஞான சம்பந்தர் - பிறவி நோய்க்கு மருந்து


திரு ஞான சம்பந்தர் - பிறவி நோய்க்கு மருந்து


நல்லது நினைத்து தான் எல்லாம் தொடங்குகிறோம்.

நல்லதோடு சேர்ந்து சில அல்லாதனவும் நடக்கத்தான் செய்கிறது.

அமிழ்தம் வேண்டி தான் பாற்கடலை கடைந்தார்கள். 

அமிழ்தோடு சேர்ந்து ஆலகால விஷமும் வந்தது. 

நல்லதை நமக்களித்து, அல்லாததை அவன் ஏற்றுக் கொண்டான்.

அவன் திருவடி பணிந்தால் இந்த பிறவி என்னும் நோய் தீரும் என்கிறார் திரு ஞான சம்பந்தர்

திரு ஞான சம்பந்தர் - உள்ளம் கவர் கள்வன்

திரு ஞான சம்பந்தர் - உள்ளம் கவர் கள்வன்

இவர் ஏழாம் நூன்றாண்டில் வாழ்ந்த நாயன்மார். 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

சீர்காழி இவர் பிறந்த ஊர். இவருக்குப் பின் வந்த ஆதி சங்கரர், அவருடைய சௌந்தர்ய லஹரியில் ஞான சம்பந்தரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பெரிய புராணத்தில் பாதி இவரைப் பற்றி பேசுகிறது. அதனால், பெரிய புராணத்தை பிள்ளை புராணம் என்று கூட கூறுவார்கள்.

இவர் எழுதிய பாடல்களின் தொகுப்புக்கு திருகடைகாப்பு என்று பெயர். பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் இவர் எழுதியது. 

இவர் குழந்தையாக இருந்த போது, இவரின் தந்தை இவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். குழந்தையை குளத்தின் படியில் இருத்திவிட்டு அவர் நீராடச் சென்றார்.

குழந்தை பசியால் அழுதது. 

குழந்தையின் பசி போக்க, உமா தேவி சிவனுடன் வந்து குழந்தைக்கு தன் மார்போடு அனைத்து பசி ஆற்றினாரம். 

தந்தை குளித்து வந்து பார்த்த போது, குழந்தையின் வாயின் ஓரம் பால் வடிந்து கொண்டு இருந்தது. 

யார் உனக்கு பால் தந்தது என்று கேட்ட போது வானை நோக்கி கை காட்டி, கீழ் கண்ட பாடலைப் பாடினார்.

மிக மிக அற்புதமான பாடல். 

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி 
காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முன்னை நாள் உன்னை ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே


தோடுடைய செவியன் = தோடு என்பது பெண்கள் காதில் அணியும் அணிகலன். அது எப்படி சிவனின் காதில் வரும் ? வந்தது அர்த்த நாரீஸ்வரர். ஆணும் பெண்ணும் கலந்த உருவம். தோடுடைய செவியன் என்றால் அது அர்த்த நாரியான சிவனை மட்டும் தான் குறிக்கும். என்ன ஒரு அழகான பதப் பிரயோகம்.

விடையேறியோர் = எருதின் மேல் ஏறி. ஒரு....

தூவெண்மதிசூடிக் = தூய்மையான வெண்மையான நிலவை சூடி

காடுடையசுட லைப்பொடிபூசி = காடு உடைய சுடலை பொடி பூசி = சுடு காட்டில் உள்ள சாம்பலை உடல் எங்கும் பூசி

யென் னுள்ளங்கவர் கள்வன் = என் உள்ளம் கவர் கள்வன். 

என் உள்ளத்தை கவர்ந்த கள்வன். 

இவரோ குழந்தை. இறவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. 

இறைவனை அடைய இவர் ஒன்றும் முயற்சி செய்யவில்லை. 

ஆனால் இறைவனே வந்து இவர் உள்ளத்தை கவர்ந்து சென்று விட்டான். 

திருடன் கேட்டு கொண்டா வந்து பொருளை எடுத்துச் செல்வான் ? கள்வன். 

"அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர்.

"யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே தர வேலவர் தந்ததினால்" என்பார் அருணகிரியார்

ஏடுடையமல ரான் = ஏடு உடைய மலரான் = இவர் பாடிய அந்த இடம் சீர்காழி. அதற்க்கு இன்னொரு பெயர் பிரமபுரம். பிரமன் சிவனை வழிபட்ட இடம். ஏடுடைய மலர் தாமரை. அதில் உள்ளவன் பிரமன்.

முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த = அவன் உன்னை முன்பு பணிந்து 

ஏத்த (புகழ). 

அருள் செய்த =அருள் செய்த 

பீடுடைய = பெருமை உடைய

பிரமாபுரம் மேவிய = பிரமாபுரத்தில் உள்ள

பெம்மா னிவனன்றே. = பெம்மான் இவனன்றே = பெம்மான் = பெரிய + அம்மான்.

அவன் அன்றே என்று சொல்லி இருக்கலாம். செய்யுள் தளை தட்டி இருக்காது. அவன் என்றால் எங்கோ இருப்பவன் என்று பொருள் படும். அவன் சேய்மைச் சுட்டு. 

இவன் அன்றே என்றால் இதோ இங்க இருக்கானே இவன் தான் என்று அருகில் இருப்பவரை கூறுவது. இவன் அண்மைச் சுட்டு.