கம்ப இராமாயணம் - செருப்புக்கு ஈந்தான்
இராமன் திருவடி உயர்ந்தது.
அவன் திருவடியை தாங்கிய பாதுகை அதனினும் உயர்ந்தது.
அவன் காலைப் பற்றியதால் அந்த பாதுகை அரியணை ஏறியது.
பதினான்கு ஆண்டு காலம் அரசாண்டது.
பதினான்கு ஆண்டு காலம் கழிந்து இலக்குவனும் பரதனும் சந்திக்கிறார்கள்.
இலக்குவன் பரதன் காலில் விழுகிறான்.
வீரக் கழல் அணிந்தவன் இந்திரன்.
அவனை வென்றவன் இந்திரசித்து.
அந்த இந்திரசித்தை வென்றவன் இலக்குவன்.
அப்படிப்பட்ட இலக்குவன் பரதன் காலில் விழுந்தான்.
பரதன் யார் ? யானை, தேர், குதிரை போன்ற படைகளை உடைய நாட்டின் ஆட்சியை ஒரு தோலால் செய்த செருப்புக்கு (இராமனின் பாதுகைகளுக்கு) அளித்தவன்.
புரிகிறதா கம்பனின் கவித்திறம்.
இந்திரன் பெரிய ஆள். அவனை வென்றவன் இந்திரசித்து. அவனை வென்றவன் இலக்குவன். இலக்குவன் பரதன் காலில் விழுகிறான். அந்த பரதனோ ஒரு செருப்பினை பூசிக்கிறான். அப்படியென்றால் அந்த செருப்பை அணிந்தவன் எப்படி பட்டவனாய் இருக்க வேண்டும் ?
பாடல்
அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன் - படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான்
பொருள்
அனையது ஓர் காலத்து = அப்படிப்பட்ட ஒரு காலத்தில்
அம் பொன் சடை முடி அடியது ஆக= அழகிய பொன்னால் செய்யப்பட்ட மகுடம் அணிந்த முடி (பரதன்) காலில் பட
கனை கழல் = வீரக் கழல் (ஆடவர் அணியும் கொலுசு போன்ற அணிகலன்)
அமரர் கோமாற் = அமரர்களின் தலைவன் (இந்திரன் )
கட்டவன் - படுத்த = வென்றவனை (இந்திரசித்து) வெற்றி கொண்ட
காளை, = இலக்குவன்
துனை பரி, கரி, தேர், ஊர்தி = காலாட் படை, குதிரை, யானை, தேர், மற்ற துணைகள்
என்று இவை பிறவும், = அது மட்டும் அல்லாமல், மற்றவற்றையும்
தோலின் = தோலால் செய்த
வினை = செயல் (இங்கு ஆட்சி என்று கொள்ளலாம்)
உறு = சிறந்த, பெரிய
செருப்புக்கு = செருப்புக்கு
ஈந்தான் = தந்தவன் (பரதன்)
விரை மலர்த் தாளின் வீழ்ந்தான் = அவனுடைய திருவடியில் வீழ்ந்தான்