Pages

Sunday, April 29, 2012

கம்ப இராமாயணம் - ஓடி ஒளிந்த எமன்


கம்ப இராமாயணம் - ஓடி ஒளிந்த எமன்


கரிய பெரிய அரக்கியான தாடகையை கம்பன் வர்ணிக்கும் அழகே தனி.

அவள் ஒரு பெண்.

மாதரையும், தூதரையும் கொல்லுவது பாவம்.

க்ஷத்ரிய தர்மம் அல்ல. இராமன் தாடகை என்ற பெண்ணைக் கொன்றான் என்ற பழிச் சொல் அவன் மேல் வரக்கூடாது எனபதில் கம்பன் மிகக் கவனமாய் கவி புனைகிறான்.

படிப்பவர்களுக்கு தாடகை ஒரு பெண்ணே அல்ல என்ற எண்ணம் வர வேண்டும்.

அப்படி ஒரு எண்ணம் வந்து விட்டால், இராமன் மேல் பழி வராது.

அதை எப்படி செய்வது என்று கம்பன் சிந்திக்கிறான்...

இந்தப் பாடலை பாருங்கள்...என்ன கற்பனை, என்ன சொல் வளம், அதன் பின்னணியில் இருக்கும் கம்பனின் இராமனைப் பழியில் இருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் புரியும்.....



சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக. அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக. நிலக் கிரிகள் பின் தொடர. வந்தாள்.

தாடகை நடந்து வருகிறாள். அவள் காலில் சிலம்பு அணிந்து இருக்கிறாள். அந்த சிலம்பில் பரல்களுக்குப் பதில் மலைகளை பிடுங்கி போட்டு வைத்து இருக்கிறாள். அப்படி என்றால் அது எவ்வளவு பெரிய சிலம்பாய் இருக்கும், அதை அணிந்த கால் எவ்வளவு பெரிதாய் இருக்கும், அந்தக் காலை உடையவள் எவ்வளவு பெரிய உருவமாய் இருப்பாள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அவள் தரையையை மிதித்து நடக்கிறாள். அதில் தரையில் பள்ளம் விழுகிறது. எவ்வளவு பெரிய பள்ளம் தெரியுமா ? அதில் கடல் தண்ணி வந்து நிறையுமாம். கடல் ஊருக்கு வருகிறது என்றால் எவ்வளவு பெரிய பள்ளம் வேண்டும். அவ்வளவு தூரம் அவள் கால் உள்ளே போகிறது. அப்பா அவள் உடல் எப்படி இருக்கும்.

அவள் வரும்போது, அனல் கக்கும் கண்ணை உள்ள எமனும், ஏதாவது குகைக்குள் சென்று ஒளிந்து கொள்வானாம்

அவள் நடந்து வரும் போது அவள் பின்னால் மலைகள் எல்லாம் தடம் புரண்டு, உருண்டு பிரண்டு வருமாம். 

எவ்வளவு பிரமாண்டமான உருவம்? 

பொருள்:

சிலம்புகள் = சிலம்பு என்றால் மலை என்று ஒரு பொருளும் உண்டு. சிலப்பதிகாரத்தில் இதை வைத்து ஒரு அருமையான இடம் உண்டு.

சிலம்பிடை = அப்படி மலைகள் அவளுடைய சிலம்பில் (கொலுசில்)

செறித்த கழலோடும் = அடர்ந்த (நிறைய மலைகளை போட்டு வைத்து இருக்கிறாள்) காழலோடும்

நிலம் புக மிதித்தனள் = கால் நிலத்துக்குள் போகும் படி மிதித்தாள்

நெளித்த குழி = அப்படி மிதித்தபோது

வேலைச் சலம் புக.= வேலை என்றால் கடல். கடல் தண்ணி புக.

அனல் தறுகண் அந்தகனும் = தீப் பறக்கும் கண்ணை உடைய எமனும்

அஞ்சிப் பிலம் புக. = பயந்து குகைக்குள் ஒளிய

நிலக் கிரிகள் = நிலத்தில் உள்ள மலைகள் (கிரி = மலை) எல்லாம்

பின் தொடர. வந்தாள் = அவள் பின்னால் உருண்டு பிரண்டு பின் தொடர்ந்து வர வந்தாள்.

இவள் பெண்ணா ? இவளுக்கு பெண்ணுக்கு உள்ள நளினம் ஏதாவது இருக்கிறதா ?

தாடகை வதத்தில் இன்னும் கொஞ்சம் அருமையான பாடல்கள் இருக்கின்றன ?

உங்களுக்கு விருப்பம் என்றால், எனக்கு எழுதச் சம்மதம்...உங்கள் விருப்பத்தை "comments box " இல் எழுதுங்கள்.....:)




8 comments:

  1. நல்ல கற்பனைதான். ஏதோ கண் முன் காட்சி எழுவது போல இருக்கிறது.

    இன்னும் எழுதவும்.

    ReplyDelete
    Replies
    1. If I get 5 people asking for it, I will write...:)

      Delete
    2. waiting to read. Please write.

      regards

      4 people

      Delete
  2. தாடகை நடை அழகை கம்பர் வர்ணிப்பாரே அந்த பாடலையும் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அது தாடகை அல்ல, சூர்பனகை. இன்னொரு blog போட்டுட்டோம்ல...

      Delete
  3. மாதரையும், தூதரையும் கொல்லுவது பாவம். க்ஷத்ரிய தர்மம் அல்ல. இதற்கு அறிஞர் அ.ச.ஞா. வின் விளக்கம். கீழ் கோர்ட் தீர்ப்பு சொன்ன பின்னும் மேல் கோர்ட்டிற்கு எப்படி செல்ல முடியும்? முதல் கோர்ட்டு சொன்னதும் சட்டப்படிதான்; மேல் கோர்ட் சொல்ல இருப்பதும் அதே சட்டப்படிதான். இருவருக்கும் ஒரே சட்டம் தானே. இருந்தாலும் மேல் கோர்ட் சொல்ல இருப்பது INTERPRETATION தானே தவிர புது சட்டமல்ல.

    அதன்படி, ராமருக்கு தாடகையை கொல்வதற்கு முன் இந்த க்ஷத்ரிய தர்ம சந்தேகம் வந்த பொழுது, விசுவாமித்திரர் மேல் கோர்ட் செய்வதைப்போல் ‘இவள் பெண் போல் இருந்தாலும், பெண்மைக்குரிய லக்ஷணங்கள் எதுவுவே இல்லாததால் இவளை பெண் என்று கருத முடியாது. எனவே இவளை நீ வதம் செய்யலாம்’ என்று கூறுகிறாராம். பெண்மை லக்ஷணங்கள் ஏன் இல்லை என்பதைத்தான் இப்பாடல் குறிப்பிடுகிறது.

    ReplyDelete
  4. your selection... illustration generate goose bumps.. million thanks dear

    ReplyDelete
  5. அருமை அருமை

    ReplyDelete