Pages

Thursday, April 5, 2012

கம்ப ராமாயணம் - ஆத்தோரம் செல்லக்குட்டி

இந்த காலத்துல பசங்க, பொண்ணுங்கள சைட் அடிக்கனும்னா பஸ் stand , பீச், பெண்கள் கல்லூரி என்று நிறைய இடங்கள் இருக்கு.

கம்பர் காலத்தில் இது எல்லாம் ஏது ? பொண்ணுங்க குளிக்க ஆத்துக்கு வருவாங்க. பசங்க அந்த ஆத்தங்கரை ஓரம் நின்னு சைட் அடிச்சுட்டு போவாங்க. ஏதோ ஒன்ணு இரண்டு பேரு இல்ல. பெரிய கும்பலே இருக்குமாம். சொன்னா நம்ப மாட்டீங்க, இந்த பாடலைப் பாருங்க.


------------------------------------------------------------------------------------------------------------
புதுப்புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த
கதுப்பு உறு வெறியே நாறும் கருங் கடல் தரங்கம்; என்றால்,
மதுப் பொதி மழலைச் செவ் வாய், வாள் - கடைக் கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும், அன்னார் மிகுதியை விளம்பலாமோ?
---------------------------------------------------------------------------------------------------------

ஆற்றில் குளிக்கும் பெண்களின் கூந்தலில் உள்ள பூவும், அவர்கள் பூசும் மஞ்சளும் ஆற்றில் கரைந்து கலந்து கடலுக்குப் போய் சேருகிறது. அதனால் அந்த கடல் நீரே நறுமணமாய் இருக்கிறது. அப்படி குளிக்கும் பெண்களின் அழகை ரசித்துப் பார்க்கும் ஆண்களின் எண்ணிக்கையை சொல்ல முடியாது.

புதுப்புனல் = புதிய புனல், அதாவது ஆறு. குளத்தில் பழைய நீர் தானே இருக்கும்.

குடையும் மாதர் = குளிக்கும் பெண்கள்.

பூவொடு = அவர்கள் தலையில் உள்ள பூக்களோடு

நாவி பூத்த = நறுமண பொருட்கள் நிறைந்த

கதுப்பு = கூந்தல்

உறு வெறியே நாறும் = மிகுந்த மணம் கமழும்

கருங் கடல் தரங்கம் = கரிய அலைபாயும் கடல் (தரங்கம் என்றால் அலைவீசும் கடல். தரங்கம்பாடி என்று ஒரு ஊர் உண்டு)

என்றால், = அப்படி என்றால்

மதுப் பொதி = மதுவை பொதிந்து வைத்த

மழலைச் செவ் வாய் = குழந்தை போல் பேசும் சிவந்த இதழ்கள்

வாள் - கடைக் கண்ணின் = வாள் போன்ற கூரிய கண்களை உடைய பெண்களை

மைந்தர் = நம்ம பசங்க

விதுப்பு உற நோக்கும் = விருப்பத்துடன் நோக்கும்

அன்னார் மிகுதியை விளம்பலாமோ? = அவங்க எத்தனை பேருன்னு சொல்ல முடியுமா

(ஜொள்ளர்களின் எண்ணிக்கை சொல்ல முடியாது )


இதுக்கு கொஞ்சம் வேற அர்த்தமும் சொல்லலாம்.

அப்படி பார்க்கப் படும் பெண்களின் எண்ணிக்கை அல்லது அழகின் மிகுதியையை சொல்லவும் முடியுமோ என்று. உங்களுக்கு எது சௌகரியமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்....

எல்லாமே அழகுதான்.

2 comments: