கம்ப இராமாயணம் - தாயாரை நினைத்த இலக்குவன்
இலக்குவன் சினந்து வரும் போது, அனுமன் ஏன் தாரையை அவன் முன் அனுப்பினான்?
விதவை கோலத்தில் இருக்கும் தாரையை பார்த்தவுடன் இலக்குவனுக்கு தன் தாய் நினைவுக்கு வருவாள்.
அப்படி நினைக்கும் போது, அவன் சீற்றம் குறையும் என்பது அனுமன் எண்ணம்.
அனுமன் சொல்லியபடி, தாரை, இலக்குவன் முன் வந்து, "இராமனை பிரியாத நீ, தனியாக வந்ததன் காரணம் என்ன" என்று கேட்கிறாள்
கேட்டது யார் என்று பார்க்கிறான் இலக்குவன்.
வெண்ணிலவு பூமிக்கு வந்தது மாதிரி நிற்கிறாள் தாரை.
ஏன் வெண்ணிலவு ?
அவள் விதவை கோலத்தில் வெண்ணிற ஆடை உடுத்து இருந்தாள் என்பதாலா ?
வெண்ணிலவு போல குளிர்ச்சியாக, நிர்மலமாக, இருப்பதாலா?
வால்மீகியில், சுக்ரீவன் தாரையையை தன் மனைவியாக்கி கொள்கிறான்.
கம்பன் அப்படி சொல்லவில்லை. அங்கு கூட தமிழ் கலாசாரத்தை கொண்டு வருகிறான் கம்பன்.
ஆர் கொலோ உரை செய்தார்?' என்று
அருள் வர, சீற்றம் அஃக,
பார் குலாம் முழு வெண்திங்கள், பகல்
வந்த படிவம் போலும்
ஏர் குலாம் முகத்தினாளை, இறை
முகம் எடுத்து நோக்கி,
தார் குலாம் அலங்கல் மார்பன்,
தாயரை நினைந்து நைந்தான்.
ஆர் கொலோ = யார் அது
உரை செய்தார்?' என்று = சொன்னது என்று
அருள் வர = அருள் பொங்க
சீற்றம் அஃக = சீற்றம் அடங்க
பார் குலாம் = பார்பதற்கு சிறந்து விளங்குகின்ற
முழு வெண்திங்கள் = முழுமையான வெண்மையான நிலவு
பகல்வந்த = பகலில் வந்த
படிவம் போலும் = உருவம் போலும்
ஏர் குலாம் = அழகிய (ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம், திருப்பாவை)
முகத்தினாளை = முகம் உடைய தாரையை
இறை முகம் எடுத்து நோக்கி = தன் முகத்தை சற்றே எடுத்து நோக்கி
தார் குலாம் = மாலை சூழ்ந்த
அலங்கல் மார்பன் = அகன்ற மார்பை உடைய இலக்குவன்
தாயரை நினைந்து நைந்தான் = தன்னுடைய தாய்மார்களை நினைத்து நைந்தான்
தன் தாய்மார்களும் இப்படித் தானே விதவை கோலத்தில் இருப்பார்கள் என்று நினைத்து வருந்தினான்
தாரையை, இலக்குவனின் தாய் மார்களுக்கு இணையாக கூறுவதன் மூலம், தாரையை பற்றி உயர்ந்த எண்ணத்தை உருவாக்குகிறான் கம்பன்.
இலக்குவனின் கோவம் தணிகிறது. தாரை அவனை சமாதனப் படுத்துகிறாள்.
வீரர்களை அனுப்பிய செய்தியை கூறுகிறாள்.
இலக்குவன் சாந்தமாகி திரும்பி போகிறான்.
இலக்குவனை சமாதனப் படுத்துதல், தாரையின் கற்பு நெறி என்று எல்லாவற்றையும் ஒரு சில பாடல்களில் புரிய வைக்கிறான் கம்பன்.
இந்த இடத்தை விட்டால் வேறு இடம் இல்லை தாரையின் நிலையை விளக்க.
இப்படி ஒரு கதா சூழ்நிலையை உருவாக்கி அதை சாதிக்கிறான் கம்பன்.
மிக அருமையான பாடல். இலக்குவன் தன் ஒரு தாயை மட்டும் அல்ல, "தாயரை", எல்லாத் தாய்களையும், நினைத்து நைந்தானாம்.
ReplyDeleteநிலவு பகலில் வந்ததும் அருமை.
சிறந்த விளக்கம் எழுதி, இப்பாடலை எம்முன் தந்தமைக்கு நன்றி!