Pages

Tuesday, May 15, 2012

கம்ப இராமாயணம் - அலையடிக்கும் வார்த்தைகள்


கம்ப இராமாயணம் - அலையடிக்கும் வார்த்தைகள்


பேசுவது ஒரு கலை.

அதுவும் பெரியவர்களிடம் பேசுவது இன்னும் பெரிய கலை.

அறிவு உடையவர்கள் ஒன்று சொன்னால் பத்து புரிந்து கொள்வார்கள்.

அவர்களிடம் சுருங்கச் சொல்ல வேண்டும்.

இங்கே வசிட்டன் கேட்கிறான் தசரதனிடம், "தசரதா, எப்படி இருக்கிறாய்" என்று.

தரசதனுக்கு பிள்ளை இல்லையே என்று ஒரு குறை உண்டு.

அதை எப்படி சொல்லுகிறான் பாருங்கள்....

அறுபதினாயிரம் ஆண்டுகள் இந்த உலகை ஆண்டு விட்டேன். வேற ஒண்ணும் குறை இல்லை (அப்படினா என்னவோ இருக்குனு தான அர்த்தம்), எனக்கு அப்புறம் இந்த உலகை சிறந்தபடி யார் ஆளப் போகிறார்களோ என்று நினைத்து ஒரு மயக்கம் மட்டும் உண்டு என்கிறான்.

அதாவது எனக்கு பிள்ளை இல்லையே என்று அமங்கலமாகச் சொல்லாமல், இந்த உலகை ஆள ஒரு வாரிசு இல்லையே என்று மென்மையாகச் சொல்கிறான்.

சுயநலத்திலும் ஒரு பொது நலம்.


அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற.
உறு பகை ஒடுக்கி. இவ் உலகை ஓம்பினேன்;-
பிறிது ஒரு குறை இலைஎன பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ.

அறுபதினாயிரம் ஆண்டும் = 60000 ஆண்டுகளும் 

மாண்டு உற. = என்னமோ ஓடிப் போச்சு. அந்த ஆண்டுகள் எல்லாம் இறந்து போயின என்று அலுத்துக் கொள்கிறான்.

உறு பகை ஒடுக்கி = உறு என்றால் பெரிய பகை என்று கொள்ளலாம் (சால, உறு, தவ, நனி, கூர், கழி என்று சொற்கள் மிகுதி என்ற பொருளைத் தரும்.

உற்ற பகை, உறுகின்ற பகை, உறும் பகை என முக்காலத்திலும் வரும் பகை என வினைத்தொகையாகவும் கொள்ளலாம்)

இவ் உலகை ஓம்பினேன்; = இந்த உலகை காப்பாற்றினேன்

பிறிது ஒரு குறை இலை = வேறு ஒன்றும் குறை இல்லை

என பின் வையகம் = எனக்கு பிறகு இந்த உலகம்

மறுகுவது = குழப்பம் அடையுமோ (நல்ல அரசன் இன்றி)

என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ. = என்று ஒரு குழப்பம் எனக்கு உண்டு


வசிட்டன் புரிந்து கொண்டான், புத்திர காமேஷ்டி யாகத்திருக்கு ஏற்பாடு செய்தான்..

என்ன அழகான சொற் பிரயோகம்...


4 comments:

  1. தனக்குப் பிள்ளை இல்லையே என்ற குறையை என்ன நாசுக்காக மாற்றி விட்டான்! மிக நன்று.

    ReplyDelete
  2. பேசும் கலையை வால்மீகி ராமாயணத்தில் அனுமனை ராமர் முதன் முதலில் சந்திக்கும் பொழுது நாம் அனுபவிக்கலாம். ராமர், அனுமார் பேசும் அழகை பார்த்து லக்ஷ்மணனிடத்தில் இவன் மிகுந்த அறிவாளி, நிறையப்படிதவன் ஆனாலும் எங்கே எவ்வளவு பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று அறிந்து உள்ளான். இவனிடம் மிகுந்த கவனத்துடன் பேசு என்று கூறுகிறார்.
    Actually the first meeting of Ramar and Anjanya is very educative in Valmiki Ramayana. The etiquette and decorum is maintained through out. Very interesting to read. Can you write this part from Kamba Ramayana?

    ReplyDelete
    Replies
    1. I think I have written couple of poems from that scene in this blog. Can u please check whether that is what you are looking for ?

      Delete
  3. I couldn't find any thing from this part in the earlier ones. துக்காராம் என்ற மகான் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். அவர் பண்டரிபுரம் பாண்டுரங்கனை பற்றி பல பாடல்கள் மராட்டியில் பாடியவர். அந்த பாடல்களுக்கு அபங்கம்(ABHANG) என்று பெயர், அவர் பாண்டுரங்கனுடன் பேசுவாராம். அவர் ஒரு அபங்கத்தில் யாரும் பண்டரிபூர் போகாதீர்கள். அங்கு விட்டல பாண்டுரங்கன் என்ற பூதம் இருக்கிறது. ஒரு முறை அதை பார்த்து விட்டால் அது நம்மை பிடித்து கொண்டு விடும். நம்மால் அதை விட்டு வரவே முடியாது என்று பாண்டுரங்கனின் அழகை, மகிமையை கூறுகிறார். அதை போல் உங்கள் பழைய blog படிக்க ஆரம்பித்தால் திரும்ப வெளியவே வரவே முடியலை. நன்றி நன்றி. எங்களை எல்லாம் அற்புதமான பாடல்களை படிக்க வைத்தமைக்கு.

    ReplyDelete