Pages

Wednesday, May 23, 2012

திருவிளையாடற் புராணம் - கடவுள் பெரியவனா ? சிறியவனா?


திருவிளையாடற் புராணம் - கடவுள் பெரியவனா ? சிறியவனா?


சிவனின் 64 விளையாடல்களை பற்றிய பாடல்களின் தொகுப்பு திரு விளையாடல் புராணம்.

பரஞ்சோதி முனிவர் எழுதியது.

16 அல்லது 17 ஆம் நூன்றாண்டில் எழுதப்பட்டது. 400 / 500 ஆண்டுகள் ஆகி விட்டது. 

இதில் இருந்து சில இனிய பாடல்களைப் பார்க்கலாம்.

கடவுள்.

அவன் அனைத்திற்குள்ளும் இருக்கிறான்.
அவனுக்குள் எல்லாம் இருக்கின்றன.

அணுவுக்கு அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் என்று மணி வாசகர் சொன்ன மாதிரி.

அவன் எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிறான். அவனுக்குள் எல்லாம் இருக்கிறது என்றால் அவன் எப்படி இருப்பான் ?

பரஞ்சோதி முனிவர் காட்டுகிறார்....

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்

அவன் மிகப் பெரியவன். இந்த அனைத்து அண்டங்களும் அவனுக்குள் அடங்கி இருக்கின்றன.

அவனுக்குள் அடங்கிய பின், அவனுடைய உருவத்தைப் பார்த்தால் இந்த அண்டங்கள் எல்லாம் அணு போல குட்டியாகத் தெரிகின்றன.

அவன் எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிறான்.

அப்படி என்றால் அணுவுக்குள்ளும் இருப்பான் தானே ?

அப்படி அவன் அணுவுக்குள் போன பின்னே, அந்த அணு எல்லாம் அண்டம் மாதிரி பெரிதாகத் தெரியும்.

அவன் இந்த அனைத்து அண்டங்களுக்கும் உள்ளும், புறமும் இரண்டுமாய் இருக்கிறான்.

அப்படி இருந்தாலும், அவன் தனியாக இல்லை. இந்த அண்டங்களை எல்லாம் ஈன்ற அந்த சக்தி அவன் துணையாய் இருக்கிறாள் என்பர் அறிவுடைய நல்லவர்கள்.

அறிவும் இருக்கணும், நல்லவனாகவும் இருக்கணும். அப்பத்தான் அது புரியும்.

அண்டங்கள் எல்லாம் = இந்த உலகம் எல்லாம்

அணுவாக =அணு மாதிரி சின்னதாகத் தெரிய

அணுக்களெல்லாம் = அணுவெல்லாம்

அண்டங்களாகப் = அண்டம் போல் பெரிதாய் தெரிய

பெரிதாய்ச் = பெரிதாகவும்

சிறிதாயினானும் = சிரியாதகவும்

அண்டங்கள் = இந்த உலகங்களுக்கு

உள்ளும் புறம்பும் = உள்ளும் புறமும்

கரியாயினானும் = சான்றாக உள்ளவனும்

அண்டங்கள் = இந்த உலகங்களை

ஈன்றாள் = பெற்றவள்

துணையென்பர் = அவனுக்கு துணை என்று சொல்வர்

அறிந்த நல்லோர் = அறிவுடைய நல்லவர்கள்


4 comments:

  1. எனக்கு அறிவு இல்லை, அல்லது நான் நல்லவன் இல்லை - அதனால்தான் இந்த பாடல் வெறும் புருடா என்று எனக்குத் தோன்றுகிறது!

    ReplyDelete
  2. அண்டங்களை ஈன்று - இரண்டாம் வேற்றுமைத்தொகை. அண்டங்களை உருவாக்கி அதில் ஆட்கொள்ளும் உயிர்கள் அனைத்திற்கும் அவன் என்றும் துணை.--இப்ப‍டியும் பொருள் கொள்ள‍லாமே?

    ReplyDelete
  3. நா.நவராஜ்September 22, 2021 at 12:14 PM

    அணுவுக்கு அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் என்று மணி வாசகர் சொன்ன மாதிரி. என்று உள்ளது. ஔவையாரின் விநாயகர் அகவலில் வரும் வரிபோலத் தெரிகிறது.

    ReplyDelete