Pages

Thursday, May 3, 2012

கம்ப இராமாயணம் - குகனின் கோபம்


கம்ப இராமாயணம் - குகனின் கோபம்


அழுத கண்ணும், தொழுத கையுமாய் பரதன் இராமனைக் காண கானகம் வருகிறான்.

தூரத்தில் அவன் வருவதைப் பார்த்த குகன் மிகுந்த சீற்றம் கொள்கிறான்.

அடடா, அரசை வஞ்சனையால் பெற்றதும் அல்லாமல் இராமனை கொல்வதற்கு படை திரட்டிக் கொண்டு வந்து விட்டான் இந்த பரதன், இவனை விடக்கூடாது.

அப்படி விட்டு விட்டால், இந்த உலகம் என்னை தான் ஏசும் என்று கொந்தளிக்கிறான்.

"ஞ்" என்ற எழுத்து மெல்லினம். "நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்" என்று சூர்பனகையை வர்ணிக்கும் போது அந்த மெல்லின எழுத்தை உபயோகப் படுத்தினான் கம்பன். 

அது சரி. 

இங்கு, குகன் முரடன், கோவம் இல்லாமலே தீபறக்க பார்ப்பவன் குகன். 

இப்போதோ கோவம் வேறு. கட முட என்று வல்லின எழுத்துக்களை போட்டு எழுதினால் அந்த முரட்டு கோவம் வெளிப்படும். 

கம்பன் இங்கும் 'ஞ்" என்ற மெல்லின எழுத்தில் விளையாடுகிறான்....



அஞ்சன வண்ணன்என் ஆர் உயிர் நாயகன்ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய  மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ உமிழ்கின்றனசெல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”  என்றுஎனை ஓதாரோ?

அஞ்சன வண்ணன் = அஞ்சனம் என்றால் கண்ணுக்கு தீட்டும் மை. அது போன்ற கரிய நிறம் கொண்டவன்

என் ஆர் உயிர் நாயகன்    = என் ஆருயிர் நாயாகன் (இராமன்)

ஆளாமே = ஆளாமல்

வஞ்சனையால் அரசு எய்திய = சூழ்ச்சியால் அரசைப் பெற்ற

மன்னரும் வந்தாரே! = மன்னராகிய பரதனும் வந்தானே

செஞ் சரம் = என்னுடைய செம்மையான அம்புகள்

என்பன தீ உமிழ்கின்றன = அவை, தீயை கக்கிக் கொண்டு இருக்கின்றன

செல்லாவோ? = பரதன் மேல் விட்டால், அந்த அம்புகள் போகாதோ ? (போகும் என்பது குறிப்பு)

உஞ்சு இவர் போய்விடின் = இவர்கள் அந்த அம்புக்கு தப்பி போய் விட்டால்

நாய்க்குகன்”  என்றுஎனை ஓதாரோ? = என்னை இந்த உலகம் நாய் குகன் என்று ஏளனம் பேசாதோ ? 


4 comments:

  1. ஞ் என்ற ஒரு வார்த்தைஐ கம்பன் தன் கவித்திறமையால் வேறு வார்த்தைகளோடு சேர்த்து இரண்டு CONTRAST EMOTIONSஐ எவ்வளவு அழகாக காண்பிக்கிறார்.
    வால்மீகி ராம ராவண யுத்தத்தை வருணிக்க ராம ராவண யுத்தத்தை தான் சொல்ல முடியும். அதற்கு நிகர் வேறு இல்லை என்று கூறுகிறார். அதை கம்பர் எப்படி அனுபவிக்கிறார் என்று கூற முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. யுத்த காண்டம் மிகப் பெரிய பகுதி. அதில் இருந்து சில பாடல்களை தேர்ந்தெடுத்து தர முற்சிக்கிறேன்...

      Delete
  2. Thank you very much. No hurry. Whenever you find time please try. Thx again.

    ReplyDelete
  3. "நாய்க்குகன்" என்ற வார்த்தையில்தான் எவ்வளவு கோபம் தெறிக்கிறது! அருமை!

    ReplyDelete