Pages

Monday, May 21, 2012

நந்திக் கலம்பகம் - மழைக் காலம்


நந்திக் கலம்பகம் - மழைக் காலம்


Balcony இல் உட்கார்ந்து வெளியே பார்க்கிறாள்.

அருகில் ஒரு பூங்கா.

மழை லேசாகப் பெய்கிறது.

பூங்காவில் உள்ள மலர்கள் எல்லாம் மழையில் குளித்து பளிச்சென்று இருக்கின்றன.

அங்கு ஒரு மயில் மழையில் நனைந்து தோகை ஈரமாகி, குளிரில் உடல் வெட வெடக்க நிற்கிறது.

அவளுடைய காதலனை நினைக்கிறாள்.

அவன் அருகில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஏங்குகிறாள்.

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளை கடந்து நம் மனதில் மழை அடிக்கும் அந்தப் பாடல்....


மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியும் காலம்
மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம்
கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம்
கொகனக நகைமுல்லை முகைநகைக்கும் காலம்
செங்கைமுகில் அனையகொடைச் செம்பொன்பெய் காலம்
தியாகியெனும் நந்தியருள் சேராத காலம்
அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம் 
அவரொவருவர் நாமொருவர் ஆனகொடுங்காலம்


மங்கையர்கண் = பெண்களின் கண்கள்

புனல்பொழிய = கண்ணீர் பொழிய (புனல் = நீர்)

மழைபொழியும் காலம் = மழை பெய்யும் காலம்

மாரவேள் = மன்மதன் (இன்னொரு வேள் உண்டு. அது செவ்வேள்.முருகனை குறிக்கும். செவ்வேள் ஏறிய மஞ்சை வாழ்க என்பார் அருணகிரி)

சிலைகுனிக்க = (கரும்பு) வில்லை வளைக்க

மயில்குனிக்கும் = மயில் வளைந்து ஆடும் (குனித்தல் = வளைந்தல். "குனித்த புருவமும், கொவ்வை செவ்வாயில் குமின் புன் சிரிப்பும்" என்பது நாவுக்கரசர் வாக்கு)

காலம் = காலம்

கொங்கைகளும் =

கொன்றைகளும் = கொன்றைப் பூக்களும்

பொன்சொரியும் காலம் = கொன்றை மலர் பொன் நிறத்தில் மஞ்சளாக இருக்கும். அது பூத்து குலுங்கி உதிர்வது பொன் சொரிவது போல இருக்கும். அது சரி. கொங்ககைகள் ? தெரியவில்லை.

கொகனக = பொன் போன்ற

நகைமுல்லை = சிரிக்கும் முல்லைப் பூ

முகைநகைக்கும் காலம் = மொட்டுகள் மலர்வது வாய் விட்டு சிரிப்பது போல இருக்கிறது. அப்படி முல்லை மொட்டுகள் மலரும் காலம்

செங்கை = சிவந்த கை (கொடுத்து கொடுத்து)

முகில் அனைய = மழை தரும் மேகத்திற்கு முகில் என்று பெயர். அந்த முகில் போன்ற

கொடைச் = அந்த முகில் தன்னலம் பாராது தரும் கொடை போல

செம்பொன்பெய் காலம் = (நந்தி) செம்மையான பொன்னை மழை போல் தானமாகத் தரும் காலம் (தருவது இல்லையாம், மழை போல் பெய்வாணாம்)

தியாகியெனும் = பலன் கருதாமல் தரும் தியாகி என்ற

நந்தியருள் சேராத காலம் = நந்தி வர்மனோடு ஒன்றாக இருக்க முடியாத காலம்

அங்குயிரும் = என் உயிர் அங்கும் (அல்லது என் உயிரான அவன் அங்கும்)

இங்குடலும் = இங்கு உடலும்

ஆனமழைக் காலம் = ஆகிவிட்ட இந்த மழைக் காலம்

அவரொவருவர் = அவர் ஒருவர் (தனியாக)

நாமொருவர் = நான் ஒருவள் என்று இருவரும் தனியாக இருக்கும்

ஆனகொடுங் காலம் = ஆன கொடுமையான இந்த கார் காலம்

இளம் பெண், கார் காலம், காதலனை பிரிந்து ஏங்கும் ஏக்கம், உருக்கம் நம்மையும் உருகச் செய்கிறது அல்லவா?




1 comment:

  1. சும்மா கடைசி இரண்டு வரிக்கே காசு! மற்றது எல்லாம் போனஸ்!

    ReplyDelete