முத்தொள்ளாயிரம் - காதலும் நாணமும்
அவன் இப்ப இந்த வழியாகத்தான் போவான்.
வாசல்ல போய் நின்னா பாக்கலாம்.
ஆனா, எவ்வளவு நேரம் நிக்கிறது. யாராவது பார்த்தா என்னை என்ன நினைப்பாங்க?
இப்ப பாக்காட்டி, அப்புறம் சாயந்தரம் அவன் திரும்பி வரும் வரை பார்க்க முடியாது.
அவனை பாக்கனும்னு ஆசையா இருக்கு, ஆனா இன்னொரு பக்கம் தயக்கம்மாவும், வெட்கமாவும் இருக்கு...
இப்ப நான் போகட்டா ? இல்ல போகாம இருக்கட்டா?
இப்படி, காதலுக்கும், நாணத்திற்கும் நடக்கும் போராட்டத்தை படம் பிடிக்கிறது, முத்தொள்ளாயிரம்.
ஒரு ஏழை. மானஸ்த்தன். வறுமை அவனை வாட்டுகிறது. யாரிடமாவது உதவி கேட்டே ஆகவேண்டும். ஆனால் கேட்க தயக்கம். கேட்காமலும் முடியாது.
அப்படி அந்த ஏழை படும் மனநிலையை, காதலுக்கும், நாணத்திற்கும் உள்ள போராட்டத்தோடு ஒப்பிடுகிறார் முத்தொளாயிரக் கவிஞர்.
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவுஅடைத்தேன் நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேரும்என் நெஞ்சு
ஆய்மணிப் = ஆராய்ந்து எடுத்த மணிகளை கொண்டு செய்த
பைம்பூண் = தங்க ஆபரணங்கள்
அலங்கு = (மார்பில்) அசையும்
தார்க் கோதையைக் = மாலை அணிந்த கோதையை (அரசனின் பெயர்)
காணிய சென்று = காண்பதற்காக வாசலுக்கு சென்றேன்
கதவுஅடைத்தேன் நாணிப் = பின், பார்க்காமல் நாணத்தால் கதவை
அடைத்தேன்
பெருஞ்செல்வர் = பெரிய செல்வந்தர்கள்
இல்லத்து = வீட்டில்
நல்கூர்ந்தார் = வறியவர்கள்
போல = போகவும் முடியாமல், போகாமல் இருக்கவும் முடியாமல்
இருப்பதைப் போல
வரும் = வரும்
செல்லும் = பின்னர் செல்லும்
பேரும் = பின் வாங்கும்
என் நெஞ்சு = என் மனம்
இது போல் வருணனையை எங்காவது இரசித்து இருக்கிறீர்களா ?
மிக இனிமை. மிக இனிமை.
ReplyDeleteஆமாம், அது எப்படி "கோதை" என்று ஒரு ஆண் பெயரா?!
சேர மான் கோதை என்பது முழுப் பெயர் - கல் வெட்டில் எல்லாம் இருக்கு
Delete