தேவாரம் - கப்பல் கவிழும் நேரம்
அது ஒரு அழகிய கப்பல்.
கடலின் மேல் ஆடி ஆடி சென்று கொண்டு இருக்கிறது.
திடீரென்று ஒரு பெரிய பாறையில் மோதி உடைந்து விடுகிறது.
அந்த கப்பலில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளிக்கிறார்கள்.
நீந்தி கரை சேர முடியுமா ?
இன்னொரு கப்பல் வந்து அவர்களை காப்பாற்றுமா ?
அதுவரை உயிர் வாழ முடியுமா ?
அது என்ன கப்பல் ? மனம் என்ற கப்பல்.
எப்படி அது சென்றது ? நம் புத்தி என்ற துடுப்பால் துழாவி அதை செலுத்துகின்றோம்.
அதில் என்ன இருக்கிறது ? சினம் என்ற சரக்கு இருக்கிறது.
அது எங்கே போகிறது ? வாழ்கை என்ற அடர்ந்த கடலில் செல்கிறது
அப்ப என்ன ஆச்சு ? - காமம் என்ற பாறை தாக்கியது
அப்புறம் ? - ஒண்ணும் தெரியாமல் தத்தளிக்கிறோம்
அந்த நேரத்திலாவது, ஒற்றியூர் என்ற ஊரின் தலைவனாகிய சிவனே, உன்னை நினைக்கும் புத்தியை தருவாய் என்று வேண்டுகிறார் நாவுக்கரசர்.
மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
கொஞ்சம் சீர் பிரிக்கலாம்
மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது
மனன் எனும் பாறை தாக்கி, மறியும் போது அறிய ஒண்ணாது
உன்னை உன்னும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே
பொருள்
மனம் எனும் தோணி பற்றி, = மனம் என்கின்ற தோணியை பற்றி
மதி எனும் கோலை ஊன்றி = புத்தி என்கின்ற துடுப்பை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி, = அந்த தோணியில் சினம் என்ற சரக்கை ஏற்றி
செறி கடல் ஓடும் போது = அடர்ந்த கடலில் ஓடும் போது
மனன் எனும் பாறை தாக்கி, =மன்மதன் என்ற பாறை தாக்கி
மறியும் போது அறிய ஒண்ணாது = மூழ்கும் போது அறிய முடியாது
உன்னை உன்னும் = அந்த சமயத்தில் உன்னை நினைக்கும்
உணர்வை நல்காய் = உணர்வை தருவாய்
ஒற்றியூர் உடைய கோவே = திரு ஒற்றியூர் என்ற ஊரின் தலைவனான (சிவனே)
No comments:
Post a Comment