Pages

Thursday, June 28, 2012

திருவாசகம் - கடவுள் உங்களை தேடிக் கொண்டு இருக்கிறார்


திருவாசகம் - கடவுள் உங்களை தேடிக் கொண்டு இருக்கிறார்


குழந்தையை பெற்ற தாய்மார்களுக்குத் தெரியும்...குழந்தைக்கு பால் தரவில்லை என்றால், அந்தப் பால் மார்பில் கட்டிக் கொள்ளும்.

அந்த கட்டியையை பின் அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற முடியும். 

அன்பும் அது போலத்தான், வெளிபடுத்தாத அன்பு உடலுக்குள் நஞ்சாகி விடும். 

கடவுள் அளப்பெரும் அன்புடையவன்.

அவன் அந்த அன்பை யாரிடம் போய் தருவான்?

பக்தர்களை தேடி தேடித் போய் தன் கருணையை பொழிவான்.

மீனவன் வலை வீசி மீனைப் பிடிப்பதைப் போல, இறைவன் பக்தர்களை தேடிக் கொண்டு இருக்கிறான் என்று மாணிக்க வாசகர் சொல்கிறார்.


பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.


பாரார் = பாரில், இந்த உலகில், உள்ளவர்கள்

விசும்புள்ளார் = விசும்பு என்றால் வானம். வானுலகில் உள்ளவர்கள்

பாதாளத் தார் = பாதாள உலகில் உள்ளவர்கள்

புறத்தார் = இதற்குப் புறத்தும் உள்ள உலகில் உள்ளவர்கள்

ஆராலுங் = யாராலும்

காண்டற் கரியான் = காண்பதற்கு அரியவன்

எமக்கெளிய = எமக்கு எளிய

பேராளன் = பெரிய அன்பு உள்ளவன்

தென்னன் = தென்னாடுடையவன்

பெருந்துறையான் = திருப் பெருந்துறையில் உள்ளவன்

பிச்சேற்றி = நமக்கு அவன் மேல் பித்தை ஏற்றி

வாரா = திரும்பி இந்த உலகத்திருக்கு வந்து பிறக்காமல் இருக்கும் (திரும்பி வரமால்)

வழியருளி = வழியை தந்து அருளி

வந்தென் = அவனே வந்து

உளம்புகுந்த = என் உள்ளம் புகுந்து

ஆரா அமுதாய் = தீராத அமுதமாய்

அலைகடல்வாய் = அலை கடலில்

மீன்விசிறும் = மீன் பிடிக்கும் மீனவன் போல

பேராசை வாரியனைப் = பேராசைக் காரனை (பக்தர்களை வல போட்டு பிடிக்கும்)

பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை (சொக்கட்டான் மாதிரி ஒரு ஆட்டம்) பாடி ஆடுவோம்


2 comments:

  1. அருமையான பாடல். முதல் பகுதியில் கடவளின் பெருமையைக்கூறி அப்பேர்பட்டவன் நம்மைத்தேடுகிறான் என்று பிற்பகுதியில் கூறி ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறார் மாணிக்க வாசகர். நன்றி மாணிக்க வாசகர்க்கும், உங்களுக்கும்.

    ReplyDelete
  2. இறைவன் நம்மை எப்பொழுதும் தேடிக் கொண்டிருக்கிறான். ஆனால் நாம்தான் இதை உணராமல் இருக்கிறோம். மிக அருமையான பாடல். இதை எல்லோரும் படித்தால் நலமாக இருக்கும்.

    ReplyDelete