Pages

Tuesday, July 31, 2012

கம்ப இராமாயணம் - இராமன் இன்னொரு பெண்ணை தீண்டினானா ?


கம்ப இராமாயணம் - இராமன்  இன்னொரு பெண்ணை தீண்டினானா  ?


இராமன் ஏக பத்தினி விரதம் பூண்டவன். 

'இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்" என்ற விரதம் பூண்டவன். 

அவன் இன்னொரு பெண்ணை தீண்டி இருப்பானா ? அதுவும் காலால் ?

அகலிகை சாப விமோசனம் பெற்றது இராமன் திருவடி தீண்டியதால் என்று வால்மீகி குறிப்பிடுகிறார். 

ஆனால், கம்பன் அப்படி சொல்லவில்லை. இராமனின் கால் இன்னொரு பெண்ணின் மேல் படுவதை அவனால் ஒப்பு கொள்ள முடியவில்லை. 

அவன் காலில் இருந்த ஒரு துகள் (தூசு) பட்டதால் அகலிகை சாப விமோசனம் பெற்றாள் என்று கூறுகிறான். 

கௌதமன் சாப விமோசனம் பெற அகலிகைக்கு சொன்ன பாடல் ...


பிழைத்தது பொறுத்தல் என்றும்
    பெரியவர் கடனே என்பர்,
‘அழல் தரும் கடவுள் அன்னாய்!
    முடிவு இதற்கு அருளுக ‘என்னத்,
‘தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
    தசரத ராமன் என்பான்
கழல் துகள் கதுவ, இந்தக்
    கல் உருத் தவிர்தி‘ என்றான்.


பிழைத்தது = தவறுகளை, செய்த பிழைகளை

பொறுத்தல் என்றும் = பொறுத்து கொள்வது

பெரியவர் கடனே என்பர், = பெரியவர்களின் கடமை என்று சொல்லுவார்கள்
‘அழல் = தீ, நெருப்பு

 தரும் கடவுள் அன்னாய் = தருகின்ற கடவுளைப் போன்றவனே (சிவனைப் போன்றவனே)

முடிவு இதற்கு அருளுக ‘என்னத், = (இந்த சாபத்திற்கு) ஒரு முடிவு என்ன (சாப விமோசனம்) என்று அகலிகை கேட்டாள்

தழைத்து வண்டு இமிரும் = வண்டுகள் மொய்க்கும்

தண் = குளிர்ந்த

தார்த் = மாலையை அணிந்த

தசரத ராமன் என்பான் = தசரத இராமன் என்பவன்

கழல் = திருவடி

துகள் கதுவ = துகள் உன்னை பற்ற (உன்மேல் பட)

இந்தக்     கல் உருத் தவிர்தி‘ என்றான். = இந்த கல் உருவமான சாபத்தில் இருந்து நீ விடுபடுவாய் என்றான்

(கதுவ = பற்றுதல், அபகரித்தல், செதுக்குதல்)

3 comments:

  1. வால்மீகி ராமாயணத்தை சொல்லும்போது சிலர் அகலிகை கல்லாக இருந்த நிழல் மேல் தான் ராமன் கால் வைத்தார் என்று கூறுவதை நான் கேட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  2. ராமனுக்கு ஒரு மனைவிதான் என்பது தவறான கருத்து. ராமன் பட்டத்து ராணியாக அரியணையில் தனக்குப்பக்கத்தில் சீதையைத் தவிர வேறு எந்த மனைவியையும் அனுமதித்ததில்லை, அந்த ஒரு விஷயத்தில்தான் அவர் ஏகபத்தினிவிரதன். வால்மீகி ராமாயணத்தின் படி ராமனுக்கு நிறைய மனைவிகளும் வைப்பாட்டிகளும் கூட உண்டு, இந்த விஷயத்தில் அவர் தனது தந்தையைப் பின்பற்றியவர்தான். கம்பர், இராமாயணக் கதையை உள்வாங்கி அதில் தனது சொந்த கருத்துக்களையும் திணித்து மெருகேற்றியுள்ளார், அவ்வளவே! அகலிகை மேல் கால்படவில்லை என்னும் வாதமெல்லாம் ராமன் ஏகபத்தினிவிரதன் என்னும் தவறான கோணத்தில் பார்க்காமல், அகலிகை இன்னொருவரது மனைவி என்னும் கோணத்தில் பார்த்தால் புரியும். "கழல் துகள் கதுவ" என்பதம் மூலம் கம்பர், ராமன் பிறன்மனை நயவாதவர் என்னும் கருத்தை உணர்த்த விழைகிறார்.

    ReplyDelete
  3. வால்மீகி ராமாயணம் பற்றிநித்திலன் சொல்வது பற்றி நான் கேட்டதில்லை. அது சரியானால் வியப்பான விஷயம்தான்.

    ReplyDelete