Pages

Saturday, August 11, 2012

குறுந்தொகை - பூ உதிரும் ஓசை


குறுந்தொகை - பூ உதிரும் ஓசை


அவளுக்குத் தூக்கம் வரவில்லை.

இரவெல்லாம் விழித்துக்கொண்டிருந்தாள்.

ஊரெல்லாம் தூங்கி விட்டது. 
எங்கும் நிசப்தம். 

அவன் இரவு வருவதாய் சொல்லி இருந்தான்.

அவள் மிக மிக உன்னிப்பாக அவன் வரும் காலடி சப்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டு இருந்தாள். 

அவள் வீட்டுக்கு வெளியே சின்ன தோட்டம்.

அந்தத் தோட்டத்தில் உள்ள செடியில் இருந்து மலர் உதிர்கிறது.

அந்த சப்தம் கூட அவளுக்கு கேட்கிறது. 

அவ்வளவு ஆர்வம். 


கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே
 எம் இல் அயலது ஏழில் உம்பர்,
 மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
 அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
 மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

கொன் ஊர் = பெருமை வாய்ந்த ஊர்

துஞ்சினும், = தூங்கினாலும்

யாம் துஞ்சலமே = நான் தூங்க மாட்டேன் (நாங்கள் தூங்க மாட்டோம். நானும், அவனும்)

எம் இல் = எங்க வீட்டுக்கு

அயலது  = வெளியே

ஏழில் உம்பர்,= உம்பர் என்றால் சின்ன குன்று. எழில் உம்பர் என்றால் ஒரு 
சின்ன குன்று என்று வைத்துக் கொள்ளாலாம்

மயில் அடி = மயிலில் பாதம் போல் - சிவந்து, மென்மையாய் உள்ள

இலைய = இலைகளை கொண்ட

மாக் குரல் நொச்சி = பெரிய கரிய நொச்சி செடியின்

அணி மிகு = அழகு மிக்க

மென் கொம்பு = மெல்லிய காம்பு

ஊழ்த்த = உதிர்த்த

மணி  = நீல மணி போன்ற

மருள் பூவின் பாடு = மயங்கும் பூவின் பாடு

நனி கேட்டே.= மிகவும் (துல்லியமாக) கேட்டேன் 

காத்திருந்தால், பூ உதிரும் ஓசை கூட கேட்கும்

1 comment:

  1. இது ஏதோ வைரமுத்து பாட்டு மாதிரி இருக்கு!

    ReplyDelete