முத்தொள்ளாயிரம் - கூடு காத்த அன்னை
ஒரு வேடன் காடை என்ற பறவையை பிடிக்க அதனை துரத்தி சென்றான்.
அந்தப் பறவை அங்கு எங்கு அவனை அலைக்கழித்து கடைசியில் ஒரு மரப் பொந்தில் நுழைந்து கொண்டது.
வேடன் விடவில்லை. எப்படியும் வெளியே தானே வரணும்..வரும் போது பிடித்துக் கொள்ளாலாம் என்று இருந்தான்.
ஆனால் அந்தப் பறவையோ வேறு வழியில் சென்று விட்டது. அது போல....
அவளுக்கு அவன் மேல் ரொம்ப காதல். அவனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறாள்.
ஆனால் அவளுடைய தாயோ அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைக்கிறாள்.
அவளுக்குத் தெரியாது, அவள் பூட்டி வைத்தது வெறும் உடம்பை மட்டும் தான், மனம் எப்பவோ அவனிடம் சென்று விட்டது.
கோள் தேங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என்
வேட்டு அங்குச் சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறும் கூடு காவல் கொண்டாள்
கோள் = கொத்து கொத்தாக, குலை குலையாக காய்த்து தொங்கும்
தேங்கு = தென்னை மரங்கள்
சூழ் கூடல் = சூழ்ந்த மதுரை மாநகரத்தின்
கோமானைக் கூட = தலைவனை கூட
என் வேட்டு = என் காதல்
அங்குச் சென்ற = அவனிடம் சென்ற
என் நெஞ்சு அறியாள் = என் மனத்தை என் தாய் அறிய மாட்டாள்
கூட்டே = கூட்டை விட்டு
குறும் = சிறிய
பூழ் = காடை, கவுதாரி போன்ற பறவை
பறப்பித்த = பரந்து போன பின் பார்த்துக் கொண்டு இருந்த
வேட்டுவன்போல் = வேடனைப் போல்
அன்னை = என் தாய்
வெறும் கூடு காவல் கொண்டாள் = என் உடல் என்னும் வெறும் கூட்டை மட்டும் காவல் கொண்டாள்
("வேலிக்கு வெளியே செல்லும் என் கிளைகளை வெட்டும் தோட்டாகாரனே,
வேலிக்கு கீழே செல்லும் என் வேர்களை என்ன செய்வாய்" என்ற மு. மேத்தாவின் வரிகள் ஞாபகம் வருகிறது)
அழகான பாடல், அருமையான விளக்கம். தமிழை அனுபவிக்க உதவி பண்ணுவதற்கு நன்றி. i wish We can reward you for your wonderful effort. அந்த காலத்து ராஜாவா இருந்தா பாதி நாட்டை கொடுத்து விடலாம்.
ReplyDeleteமிக அற்புதமான பாடல். அருமையான விளக்கம். மிக நன்றி.
ReplyDelete