Pages

Tuesday, October 16, 2012

நாச்சியார் திருமொழி - அவன் என்னை நேசிக்க


நாச்சியார் திருமொழி - அவன் என்னை நேசிக்க


கடவுளை நாம் விரும்பினால் போதுமா ? அவன் நம்மை விரும்ப வேண்டாமா ?

நாம் பூஜை, புனஸ்காரம், பஜனை, வேண்டுதல், அர்ச்சனை என்று எல்லாம் செய்கிறோம்.

நம்மால் முடிந்தது அவ்வளவு தான். 

ஆண்டாள் ஒரு படி மேலே போகிறாள். 

மன்மதனே, அந்த கண்ணன் என் மேல் காதல் கொள்ளும்படி அவன் மேல் மலர் கணை தொடு என்று மன்மதனை வேண்டுகிறாள். காதல் வயப் பட்டவர்கள், தங்கள் காதலன் பெயரையோ அல்லது காதலியின் பெயரையோ தங்கள் கைகளில் எழுதி மகிழ்வார்கள். அந்த பெயருக்கு முத்தம் தருவார்கள். காதலன் அல்லது காதலியின் பெயரை எழுதுவது, பார்ப்பது என்பது ஒரு சுகமான விஷயம். ஆண்டாள் சொல்கிறாள், " என் மேல் கடல் வண்ணனின் பெயரை எழுதி, உன் மலர்கனையோடு என்னையும் அவன் மேல் எய்" . 

காதலின் உச்ச கட்டம். 

காதல் கனியும் அந்தப் பாடல்:



வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே

சீர் பிரித்த பின்:

வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து வெள் வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா
கள் அவிழ் பூங்கனை தொடுத்துக் கொண்டு கடல் வண்ணன் என்பதோர் பெயர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே 

பொருள் 

வெள்ளை = வெண்மையான 

நுண் மணல் = துகளான மணலைக்

கொண்டு = எடுத்து வந்து

தெரு அணிந்து = தெருவை அலங்காரம் செய்து (அந்த மணலை தெருவுக்கு 
அணிவித்து)

வெள் வரைப்பதன் முன்னம் = சூரியன் வானில் வர்ண ஜாலங்களை 
வரைவதற்கு முன் (காலை வானம் வெயிலின் சூடு இல்லாமல், வெளிச்சமாக, ஏதோ வர்ணம் தீட்டி வைத்தது மாதிரி இருக்கும் அல்லவா)

துறை படிந்து = நீர் துறை (கரை) சென்று குளித்து

முள்ளும் இல்லாச் = முள் இல்லாத

சுள்ளி = காய்ந்த குச்சிகளை எடுத்து வந்து

எரி மடுத்து = ஹோமம் வளர்த்து

முயன்று = முயற்சி செய்து

உன்னை நோற்கின்றேன் = உன்னை வணங்குகின்றேன்

காம தேவா = மன்மதனே

கள் அவிழ் = தேன் வடியும்

பூங்கனை = பூக்களால் ஆன அம்புகளை (மலர்க் கணை)

தொடுத்துக் கொண்டு = உன் வில்லில் பூட்டிக் கொண்டு

கடல் வண்ணன் = கடல் வண்ணன்

என்பதோர் பெயர் எழுதி = என்ற பெயரை எழுதி

புள்ளினை வாய் பிளந்தான் = பகாசுரன் என்ற அரக்கன் கொக்கு உருவமாய் 
வந்த போது, அதன் வாயை பிளந்தானை

என்பதோர் இலக்கினில் = என்ற இலக்கினில்

புக = நான் சென்று அடைய

என்னை எய்கிற்றியே = என்னை எய்வாய்

 

3 comments:

  1. ஆகா, என்ன காதல், என்ன காதல்! சாதாரண பக்திக்கு ஒரு படி மேல் சென்றுவிட்ட பரவசம்! மிக அழகான பாடல்.

    ReplyDelete
  2. It looks like passion, lust rather than love. However, as it is written by revered Aandal, we have to see in better perspective.

    ReplyDelete
  3. வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து endraal, veLLai koala maavinaal koalam poattu endru poruL koLLalaam.

    ReplyDelete