கம்ப இராமாயணம் - பசையற்ற பாலை நிலம்
இராமனும், இலக்குவனும், விச்வாமித்ரனும் பாலை நிலம் வழியே செல்கிறார்கள். வறண்ட பூமி. ஈரப் பதம் எள்ளளவும் இல்லை.
கொஞ்சம் கூட ஈரம் இல்லை, பசை இல்லை என்று சொல்ல வேண்டும். அதற்க்கு எதை உதாரணமாய் காட்டலாம் என்று கம்பன் நினைக்கிறான்.
பற்றற்ற ஞானிகளின் மனமும், விலை மகளிரின் மனமும் எப்படி இருக்குமோ, அது போல் பசை அற்று இருந்தது என்கிறான் கம்பன்.
அது என்ன பசை ?
பசை என்ன செய்யும். இரண்டு பொருட்களை ஒன்றொன்று ஒட்டச் செய்யும். பிணைக்கும். ஒன்றோடு ஒன்றாக பிணைக்கும்.
ஈர நிலம் தாவரங்களை நிலத்தோடு பிணைக்கிறது. உயிர் வாழ வழி வகுத்து மக்களையும், விலங்குகளையும் ஓரிடத்தில் ஒன்று படுத்துகிறது.
பாலை நிலத்தில் ஈரம் இல்லை. செடி கொடிகள் இல்லை. உயிர்கள் இல்லை. தனந் தனியே ஒரு வித பற்றும் இல்லாமல் கிடக்கிறது. எதோடும் ஒட்டாமல் தானே தனியே இருக்கிறது.
ஞானிகள் எதோடும் யாரோடும் ஒட்டுவதில்லை. இறை சிந்தனை, முக்தி என்று சிந்தித்து இருப்பார்கள். இந்த உலகோடு அவர்களுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.
விலை மகளிரும் அப்படித்தான். அன்போடு , நட்போடு இருப்பதை போல் அவர்கள் பழகினாலும், அவர்களுக்கு யார் மேலும் ஒட்டும் உறவும் கிடையாது.
பாடல்
தா வரும் இரு வினை செற்றுத் தள்ளரும்
மூவகைப் பகை அரண் கடந்து முத்தியில்
போவது புரிபவர் மனமும் பொன் விலைப்
பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே.
பொருள்
தா வரும் = தாவி வரும்
இரு வினை = நல் வினை, தீ வினை என்ற இரு வினைகளும்
செற்றுத் = அழித்து, அமுக்கி, வென்று
தள்ளரும் = தள்ள + அரும் = தள்ள முடியாத
மூவகைப் பகை = மூன்று வகை பகைகளை (ஆணவம், கன்மம், மாயை
என்ற மூவகை பகைகளை)
அரண் கடந்து = அவற்றின் மதில்களை கடந்து
முத்தியில் = முக்தி வழியில்
போவது = போகும்
புரிபவர் மனமும் = முனிவர்கள், ஞானிகளின் மனமும்
பொன் விலைப் = பொருளை விலையாகக் கொண்டு தங்களை விற்கும்
பாவையர் மனமும் = பெண்களின் மனமும்
போல் = போன்றதே
பசையும் அற்றதே. = பசையும் அற்றதே. பசை அற்றதே என்று சொல்லி
இருக்கலாம். பசையும் என்று ஒரு "உம்" சேர்த்ததன் மூலம், கம்பர் பசை மட்டும் அல்ல மற்றவையும் இல்லை என்று சொல்கிறார். "உம்" என்ற ஒரு வார்த்தை, எவ்வளவு அர்த்தம்.
அந்த "உம்" முலமாக வேறு எதைக் குறிக்க வருகிறார்?
ReplyDeleteபசையும் இல்லை என்றால்,
Deleteஈரமும் இல்லை, நிழலும் இல்லை, குளிர்ந்த காற்று இல்லை, உயிரினங்கள் எதுவும் இல்லை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்.
பணம் இல்லை என்றால் பணம் மட்டும் இல்லை என்று பொருள் தரும். மற்றவை இருக்கலாம், இல்லாமல் போகலாம்.
பணமும் இல்லை என்றால் அதோடு சேர்ந்து வீடும் இல்லை, மனைவி மக்களும் இல்லை, சொத்தும் இல்லை, நல்ல பேரும் இல்லை என்று பொருள் தரும்.
இந்த உணவை நாய் தின்னாது என்றால், நாய் மட்டும் தின்னாது.
இந்த உணவை நாயும் தின்னாது என்றால், நாய் மட்டும் அல்ல வேறு எதுவும் தின்னாது என்று பொருள் வருகிறது அல்லவா ?
இழிவு சிறப்பு உம்மை
Speechless mr Rethin. I am speechless for your writing and explanation.
ReplyDelete