திருவரங்க கலம்பகம் - விடுங்கள், தொழுங்கள்
முதலில் அம்மா தான் எல்லாம் என்று இருந்தோம். இளமை ஏற ஏற அது மாறி மனைவி மேல் மோகம் முற்றத் தொடங்கியது (அல்லது கணவன் மேல்). பின் பிள்ளைகள் மேல் பாசம். அப்பாவின் மேல் அன்பு. நடுவில் பொருளின் மேல், சொத்தின் மேல் பற்று. அதை விரட்டிக் கொண்டு போகிறோம். புகழ், மதிப்பு என்று பேயாய் பறக்கிறோம். நாள் ஆக ஆக, மூப்பு வந்து சேருகிறது. அதன் கூடவே நோய். பின் இறப்பு, பின் பிறப்பு என்று வாழ்க்கை சக்கரம் உருண்டுகொண்டே இருக்கிறது ஒரு இலக்கு இல்லாமல்.
இது தேவையா ? இதை விட்டு பின் என்ன தான் செய்வது ?
பிள்ளை பெருமாள் ஐயங்கார், திருவரங்க கலம்பகத்தில் வழி காட்டுகிறார்.
எல்லாவற்றையும் விட்டு விட்டு அந்த அரங்கனை தொழுங்கள் என்றுரைக்கிறார்.
ஆயினை, மனையை, சேயினை, பிதாவை
அனத்தினை, தனத்தினை, விரும்பும்
பேயினை மறந்து, நோயினை, மூப்பை
பிறப்பினை, இறப்பினை, துடைப்பீர் -
ஆயனை, முளரி வாயனை, எங்கள்
அமலனை, கமலனைப் பயந்த
தாயனை, நெடிய மாயனை, வடபால்-
தரங்கனை, அரங்கனை - தொழுமே''
பொருள்
ஆயினை, = தாயாரை
மனையை, = மனைவியை
சேயினை, = பிள்ளைகளை
பிதாவை = தந்தையாரை
அனத்தினை, = எல்லாவற்றையும்
தனத்தினை, = செல்வத்தினை
விரும்பும் பேயினை மறந்து, = இது போன்று எல்லாத்துக்கும் பேயாகப்
பறக்காமல், அவற்றை விட்டு விட்டு
நோயினை, = நோய்களை
மூப்பை = முதுமையை
பிறப்பினை, = மீண்டும் மீண்டும் பிறத்தலை
இறப்பினை, = இறத்தலை
துடைப்பீர் - = மாற்றுவீர்
ஆயனை, = ஆயர் குலத்தில் தோன்றியவனை
முளரி வாயனை,= புல்லாங்குழலை வாயில் கொண்டவனை
எங்கள் அமலனை, = எங்கள் அமலனை
கமலனைப் = தாமரை மலரில் உள்ள பிரம்ம தேவனை
பயந்த = தந்த
தாயனை, = தாய் போன்றவனை (பிரம்மனை ஈன்றதால் விஷ்ணுவை தாய் என்றார் )
நெடிய மாயனை, = உயர்ந்த மாயக் கள்ளனை
வடபால் தரங்கனை,= பாற்கடலில் பள்ளி கொண்டவனை
அரங்கனை = திருவரங்கத்தில் உள்ள அரங்கனை-
தொழுமே' = தொழுங்கள்
தாயனை is it because he gave birth to brahma or he is like mother to the whole universe/
ReplyDeleteYou should not read the word "தாயனை" separately. It should be read as
Deleteகமலனைப் பயந்த தாயனை,
which means
கமலனை (தாமரையில் ) உள்ளவனை, அதாவது பிரம்மனை, படைத்த தாயானை, உருவாக்கிய தாயனவனை என்று பொருள் கொள்ள வேண்டும்.
இந்த பாடலில் அது அல்ல முக்கியமான விஷயம். மீண்டும் மீண்டும் சலிப்பு தரக்கூடிய விஷயங்களை விட்டு இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் விஷயங்களில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பது பாடலின் சாரம்.
உலகை படைத்ததாலா அல்லது பிரம்மனை படைத்ததாலா அவன் தாயன் என்பதல்ல விஷயம்.
இந்தப் பாடலின் அழகே முதல் நான்கு வரிகளில்தான் என்பது என் கருத்து.
ReplyDelete
ReplyDeleteவெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்க்கு
உள்ளத்து அனையது உயர்வு.
நீர்மட்டம் எவ்வளவு ஆழம் உள்ளதோ அந்த நீளத்திற்கு தண்ணீரின் மேல் பரப்பில் தெரியும் பூக்களின் தண்டு அமையும்.மக்களுக்கு அவர்களின் உள்ளத்தைக் கொண்டு உயர்வு அமையும். இதில் வெள்ளத்து அனைய உள்ளத்தனைய என்பதில் உள்ள அனைய என்பது அதைப் போன்ற என்று பொருள்படும். அதுவே இங்கு கமலனை, தாயனை, என்பது தாமரை போன்ற தாய் போன்ற என்று பொருள்படும்.