அபிராமி - வளைக் கை
அவளோட கை ரொம்ப அழகா இருக்கும். அதிலும் வளையல் குலுங்கும் அந்த கையை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
எனக்கு சில சமயம் பயமா இருக்கும், மனம் சஞ்சலமா இருக்கும். அவ கிட்ட போய் அமர்ந்து கொள்வேன். அவள் என் கையையை எடுத்து அவள் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, " என்ன கவலை உனக்கு ? என் கிட்ட சொல்ல கூடாதா ? நான் இருக்கேன்ல, பயப்படாதே " என்பாள்.
அப்படியே அவள் தோளில் சாய்ந்து கொள்வேன். அவள் என் தோளில் தட்டி கொடுப்பாள்...எல்லாம் சரியாகிவிடும், கவலைப் படாதே என்பதைப் போல் இருக்கும்.
அவள் குரலே கேட்பதற்கு அவ்வளவு சுகம். பேசும் போது, சிரிக்கும் போது அவ்வளவு இனிமை. அவளிடம் இருந்து இசை வரவில்லை. அவளே இசை வடிவானவள். வீணை இருக்கிறது. அதில் நரம்பு இருக்கிறது. அதில் இசை எங்கு இருக்கிறது என்று கேட்டால் காட்ட முடியாது. அந்த கருவிக்குள்தான் இருக்கிறது. ஆனால் காட்ட முடியாது. அப்படிப்பட்ட இசை போன்றவள். அவளை அனுபவிக்க முடியும். அறிய முடியாது.
இந்த உடலுக்குள் உயிர் குடியிருக்க வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருக்கும். அப்புறம் போய் விடும். உயிரை விட உடலுக்கு மனசு இல்லை. கிடந்து மறுகும். கவலைப் படும். அப்ப அவ வந்து, ஏன் கவலைப் படுற, நான் இருக்கேன்ல என்று அந்த நேரத்திலும் ஒரு ஆறுதல் தருவாள்.
பாடல்:
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.
பொருள்
குரம்பை = சிறு குடில், ஓலை வேய்ந்த குடிசை, நிரந்தரம் இல்லாத ஒரு வீடு
அடுத்து = அந்த வீட்டிற்குள்
குடிபுக்க ஆவி,= குடி புகுந்த ஆவி
வெங் கூற்றுக்கு = வெம்மையான கூற்றுவனுக்கு (உடம்பையும்,
உயிரையும் கூறு பிரிப்பதால் அவன் கூற்றுவன்)
இட்ட = கொடுத்த
வரம்பை = கெடு, எல்லை
அடுத்து = முடிந்து
மறுகும் அப்போது,= தயங்கும், பயப்படும் (வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான், - நாலாயிர திவ்ய பிரபந்தம்)
வளைக்கை = வளையல் அணிந்த கை
அமைத்து, = அமைதி என்று காட்டி, அமைதி என்று அணைத்து
அரம்பை அடுத்து = அரம்பை போன்ற
அரிவையர் சூழ வந்து = உன் தோழிகளான பெண்களுடன் வந்து
அஞ்சல் என்பாய் = அஞ்சாதே என்பாய்
நரம்பை அடுத்து = இசைக் கருவிகளின் நரம்புகளை தாண்டி
இசை வடிவாய் = இசையே வடிவமாக
நின்ற நாயகியே.= உருவமாகி நின்ற நாயகியே
No comments:
Post a Comment