Pages

Friday, October 26, 2012

கம்ப இராமாயணம் - கைகேயின் பாதம்

கம்ப இராமாயணம் - கைகேயின் பாதம்

தாமரை மலர் பார்த்து இருப்பீர்கள் தானே ? அது எப்படி இருக்கும் ? மெல்லிய சிவப்பு, மென்மையான மலர் இதழ்கள், பார்க்கும் போதே ஒரு புத்துணர்ச்சி தரும் ஒரு தோற்றம், காற்றில் அது அசையும் போது ஒரு சிலிர்ப்பு, நீரின் மேலேயே இருப்பதால் ஒரு ஜில்லிப்பு....

இது எல்லாம் தாமரை மலருக்கு எப்படி வந்தது தெரியுமா ?

கைகேயின் பாதம் அந்த மாதிரி இருந்ததாம். 

அந்த தாமரை மலர் தன் தண்டு என்னும் ஒற்றை காலில் தவம் இருந்ததாம், கைகேயின் பாதம் போல் தானும் ஆகவேண்டி.  

இராமனுக்கு முடி சூட்ட முடிவு ஆகிவிட்டது. ஊரெலாம் ஒரே கோலாகலம். கைகேயி படுக்கையில் படுத்து இருக்கிறாள். கூனி வருகிறாள். 

கைகேயின் பாதம் தொட்டு எழுப்புகிறாள் கூனி


பாடல்

எய்தி, அக் கேகயன் மடந்தை, ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்
செய்த பேர் உவமைசால் செம் பொன், சீறடி.
கைகளின் தீண்டினள் - காலக் கோள் அனாள்.


பொருள் 

எய்தி, = அடைந்து 

அக் கேகயன் மடந்தை,= அந்த கேகய நாட்டின் பெண் (கைகேயி)

ஏடு அவிழ் = இதழ் மலரும்

நொய்து அலர் தாமரை  = மென்மையாக மலரும் தாமரை

நோற்ற நோன்பினால் செய்த  = செய்த தவத்தால்

பேர் உவமைசால் = உவமை சொல்லும்படி பெருமை பெற்ற

செம் பொன் = சிறந்த பொன் போன்ற

சீறடி = சிறிய அடி, சீரான அடி, சிறந்த அடி.

கைகளின் தீண்டினள் = கையால் தீண்டினாள்  

காலக் கோள் அனாள்.= துன்பம் தரும் இராகு கேது போன்ற கோள்கள் போன்றவளான கூனி


தீண்டியது என்பது பொதுவாக ஒரு தீய செயலை விளைவிக்க தொடுவது என்ற பொருளில்தான் வருகிறது. பாம்பு தீண்டியது என்கிறோம். அது போல் கூனி தீண்டினாள். கைகேயின் மனத்தில் நஞ்சு ஏறப் போகிறது.

2 comments:

  1. உவமை எல்லாம் இருக்க வேண்டியதுதான். ஆனால் இது கொஞ்சம் overஆ தெரியல?

    ReplyDelete
  2. புவனா, ஓவரா இருப்பதுதான் கவிதை!

    ReplyDelete