மணிமேகலை - அறியாமலே கழிந்த இளமை
கருத்து வேறுபாடு, இரசனை வேறுபாடு, சண்டை, சச்சரவு, உன் குடும்பம், என் குடும்பம் என்று கணவன் மனைவிக்கிடையே காலம் சென்று விடுகிறது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதே இல்லை. புரிந்து கொள்ள நேரம் இருப்பதும் இல்லை.
வாழ்க்கை மிக வேகமாக ஓடி விடுகிறது. பெற்றோரர்கள் மறைந்து விடுகிறார்கள்.
பிள்ளகைள் வேலை திருமணம் என்று பிரிந்து போய் விடுகிறார்கள்.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் முதல் தடவை பார்ப்பது போல பார்க்கிறார்கள்.
மாணவி சொல்கிறாள்....வாழ்கை பூராவும் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவே இல்லை. உனக்கு அறுபது வயது ஆகி விட்டது. என் கூந்தலும் முற்றும் நரைத்து விட்டது. நம் அழகு எல்லாம் போய் விட்டது. இளமையும் காமமும் எங்கே போய் விட்டன ? இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிக்கிறது. உனக்கும் என்னை பிடிக்கும் என்றே நினைக்கிறேன். இந்த ஜென்மம் இப்படியே போய் விட்டது. இன்னோர் பிறவி இருந்தால் மீண்டும் உன்னோடு சேரவே எனக்கு ஆசை.....
நம்முணா மறிந்திலம் நம்மை முன்னாள்
மம்மர் செய்த வனப்பியாங் கொளித்தன
ஆறைந் திரட்டி யாண்டுனக் காயதென்
நாறைங் கூந்தலும் நரைவிரா வுற்றன
இளமையுங் காமமும் யாங்கொளித் தனவோ
உளனில் லாள எனக்கீங் குரையாய்
இப்பிறப் பாயின்யான் நின்னடி யடையேன்
அப்பிறப் பியான்நின் னடித்தொழில் கேட்குவன்
கொஞ்சம் சீர் பிரிக்கலாம்
நம் உள்ளம் நாம் அறிந்திலம் நம்மை முன்னாள்
மம்மர் செய்த வனப்பு இங்கு யாங்கு ஒளிந்தன
ஆறு ஐந்து இரட்டி ஆண்டு உனக்கு ஆயது என்
நாறும் ஐந்து கூந்தலும் நரை விரவுதல் உற்றன
இளமையும் காமமும் எங்கு ஒளிந்தனவோ
உள்ளம் இல்லாள எனக்கு இங்கு உரையாய்
இப் பிறப்பாயின் யான் நின் அடி அடையேன்
அப் பிறப்பில் யான் நின் அடி தொழில் கேட்குவன்
பொருள்
நம் உள்ளம் = நம் உள்ளத்தை
நாம் அறிந்திலம் = நாம் அறியவில்லை. உன் உள்ளத்தை நான்
அறியவில்லை, என் உள்ளத்தை நீ அறியவில்லை
நம்மை = நம் இருவரையும்
முன்னாள் = அந்த நாளில்
மம்மர் செய்த = மயக்கம் கொள்ளச் செய்த
வனப்பு = அழகு
இங்கு = இப்போது
யாங்கு ஒளிந்தன = எங்கே போய் ஒளிந்து கொண்டது ?
ஆறு ஐந்து இரட்டி = 6 x 5 x 2 = 60
ஆண்டு = ஆண்டுகள்
உனக்கு ஆயது = உனக்கு ஆகி விட்டது
என் = என்னுடைய
நாறும் ஐந்து கூந்தலும் = ஐந்து விதமான வாசனைகளை கொண்ட என் கூந்தலும்
நரை விரவுதல் உற்றன = அங்கங்கே நரை கொண்டு விட்டது
இளமையும் = நம் இளமையும்
காமமும் = காதலும்
எங்கு ஒளிந்தனவோ = எங்கு போய் ஒளிந்து கொண்டனவோ
உள்ளம் இல்லாள = நிலை இல்லாத உள்ளம் கொண்டவனே
எனக்கு இங்கு உரையாய் = எனக்கு சொல்லுவாய்
இப் பிறப்பாயின் = இந்தப் பிறவியில்
யான் நின் அடி அடையேன் = நான் உன்னை அடையவில்லை
அப் பிறப்பில் = அடுத்த பிறவியிலாவது
யான் = நான்
நின் அடி தொழில் கேட்குவன் = நான் நீ சொல்வதை கேட்பேன்
நெடு நாட்களுக்குப் பின் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது இந்தப் பாடல்.
ReplyDeleteஇத்தனை ஆண்டுகளுக்கு முன் அழுத்திய பாட்டில், இப்படி ஒரு நவீன காலப் (modern) பொருளா?
அற்புதம்.
நெடு நாட்களுக்குப் பின் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது இந்தப் பாடல்.
Deleteஇத்தனை ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாட்டில், இப்படி ஒரு நவீன காலப் (modern) பொருளா?
விளக்கம இல்லாமல் பாடலை புரிந்து கொள்வது எவளவு சிரமமாய் இருக்கிறது. ஆனால் விளக்கம் படித்த பின் "ஓ இதுதான் எனக்கு தெரியுமே" என்பது போல் இருக்கிறது. Thanks for doing such a wonderful job. keep it up!
ReplyDelete"நம்மை ஒருவருக்கொருவர் தெரியாது" என்று சொன்ன மனைவி, ஒரே ஒரு சொல் கணவனைப் பற்றிச் சொல்லுகிறாள்: "உள்ளம் இல்லாள" அல்லது "நிலை இல்லாத உள்ளம் கொண்டவனே". அந்த ஒரு விஷயம் மாத்திரம் அவளால் சொல்ல முடிகிறது! அப்படியானால் அந்த ஒரு குணம் மட்டும் எவ்வளவு ஓங்கி இருந்திருக்கவேண்டும்?!
ReplyDeleteஇந்தப் பாடலைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் படித்தேன். மீண்டும் கண்ணீர் வந்தது. என்ன ஒரு பாடல்!
ReplyDelete"உள்ளம் இல்லாள" என்றால், என் உள்ளம் எனும் இல்லத்தை ஆள்பவனே என்று பொருள் கொள்ள முடியுமோ?
ReplyDeleteஒவ்வொரு முறையும் என்னை அழச் செய்கிறது இந்தப் பாடல்.
"உள்ளம் இல்லாள" - உள்ளமே இல்லாத ஆள் என்று பொருள் கொள்ள முடியுமோ?
ReplyDelete"நிலை இல்லாத உள்ளம் கொண்டவன்" என்ற பொருள் எப்படி வந்தது?
உளனில் லாள எனக்கீங் குரையாய்
ReplyDeleteகதைப்படி, நிலையில்லாத உள்ளம் என்பது சரியாக வரும். முடி நரைத்த பின்னும், மனம் நிலை இல்லாமல் பிரிதொன்றுக்கு ஆசைப் படும் அவன் மனம்...
ஆனால், கதையை விட்டு விட்டு பார்த்தால் நீ சொல்லும் அர்த்தம் சரியாக இருக்கும். உள்ளம் இல்லாதவனே என்பது இன்னும் நன்றாகப் பொருந்துகிறது. அந்த அர்த்தத்தில் ஆழமும் இருக்கிறது. அப்படியே வைத்துக் கொள்வோமே ....
கடவுள்களைப் பற்றிய ஆயிரம் பாடல்களை விட, இந்தமாதிரி மனிதர்களை, அவர்களின் உணர்வுகளைப் பற்றிய பாடல்கள் என்னைப் பன்மடங்கு ஈர்க்கின்றன.
ReplyDeleteநாம் எல்லோருமே இப்படித்தானே ஆகப் போகிறோம்! நம் காமமும், செருக்கும், உடல் உறுதியும், எல்லாம் இழக்கப் போகிறோம். அந்த நேரத்தில், காதலோடு, நட்போடு, அன்போடு நம் மனைவியுடன் வாழ வேண்டும்.
ReplyDelete